ரத்தம் தோய்ந்த பக்கங்கள்

ரத்தம் தோய்ந்த பக்கங்கள்
Published on

மாவோரி மொழிபேசும் மக்களைத் தெரியுமா?

நியூசிலாந்தின் பூர்வகுடி மக்கள். உலகம் முழுக்க பூர்வகுடி மக்களை அழித்து, அவர்களின் நிலத்தைச் சுரண்டி ஐரோப்பியர்கள் குடியேறியதுதான் கடந்த சில நூற்றாண்டுகளின் வரலாறு. ஆஸ்திரேலியா- நியூசிலாந்து நாடுகளில் கிரிக்கெட் உலகக் கோப்பை நடக்கும் இந்நேரத்தில் கிரிக்கெட் போட்டிச் செய்திகளுக்கு இடையில் இன்னொரு செய்தியும் கவனத்தைக் கவர்ந்தது. மாவோரி பூர்வ குடிகளுக்கு இழப்பீடுத்தொகையை நியூசிலாந்து அரசு வழங்குகிறது என்பதே அது. இவர்களில் ஒரு பிரிவான காய் டுஹோ என்ற பழங்குடியினருக்கு 128 மில்லியன் அமெரிக்க டாலர்களும் அவர்களின் சொந்த இடமாகக் கருதப்படும் ஒரு காட்டுப்பகுதியை நிர்வகிக்கும் பொறுப்பையும் நியூசிலாந்து அரசு அளித்துள்ளது.  இதுபோல பல மவோரி பழங்குடி இனக்குழுக்களுடன் நிதி மற்று நில ஒப்பந்தங்களை அந்நாட்டு அரசு செய்துவருகிறது. அதில் ஒன்றுதான் இது.

இதைக்குறித்த ஐநா ஆய்வு அறிக்கையும் வெளியாகி உள்ளது. ‘இந்த உதவி நடவடிக்கைகள் முழுமையானதாக இல்லை என்றாலும் பூர்வகுடி மக்களின் வரலாற்று ரீதியான மற்றும் தற்போதைய பிரச்னைகளை எதிர்கொள்ளும் முக்கியமான முயற்சி இது” என்று அது குறிப்பிட்டுள்ளது.

பூர்வ குடி மக்களும் சமூக அரசியல், பொருளாதார ரீதியில் மாவோரி அல்லாத பிற நியூசிலாந்து குடிமக்களுக்கு இணையாக வளர நிறைய செய்யவேண்டி உள்ளது என்றும் குறிப்பிடுகிறது.  மாவோரி மக்கள் நியூசிலாந்து மக்கள் தொகையில் 15சதவீதம் உள்ளனர். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உள்ள 120 இடங்களில் அவர்களுக்கு ஏழு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சில ஆண்டுகளுக்கு முன் நியூசிலாந்து கிரிக்கெட்டில் ஆடம் பரோரே என்ற வீரர் ஆடினார். அவர் மாவோரி. தற்போதைய அணியில் உள்ள ட்ரெண்ட் பௌல்ட், ஜெஸி ரைடர்,  டக் ப்ரேஸ்வெல் போன்றவர்களும் மாவோரி வம்சா வளியினரே.

ஆங்கிலேயருக்கும் மாவோரி குடியினருக்குமான ரத்தம் தோய்ந்த போர் 150 ஆண்டுக்கு முந்தைய வரலாறு. நியூசிலாந்துக்குப் போகும் அரசியல் தலைவர்கள் மூக்கை அங்கிருக்கும் பூர்வகுடியினரின் மூக்குடன் உரசுவதைப் பார்த்திருக்கலாம்( இதுதான் பிரச்னையில் மூக்கை நுழைப்பதா என்று கேட்கக்கூடாது!).மூக்கை மூக்கால் தொடுவது மாவோரி மக்களின் வரவேற்பு அளிக்கும் முறை! 

ஏப்ரல், 2015.

logo
Andhimazhai
www.andhimazhai.com