ரத்தன் டாடா – போராடி வென்றவர்

உலகம் உன்னுடையது
ரத்தன் டாடா – போராடி வென்றவர்
Published on

டாடா ஸ்டீலின் எம்.டி யான முத்துராமன் அலுவலக வேலையாக ஹாங்காங்கில் பயணம் செய்து கொண்டிருந்த போது ரத்தன் டாடாவிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு “கோரஸ் நிறுவனம் விலைக்கு வருவதாக கேள்விப்பட்டேன். அதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”

சிறிது யோசனைக்கு பின் முத்துராமன்,“ நாம் வேண்டுமானால் அந்த நிறுவனத்தின் ஒரு பகுதி பங்கினை வாங்கலாம்” என்றார்.

“நாம் கோரஸ் நிறுவனத்தை வாங்க வேண்டும். யோசித்துப் பாருங்கள்” போனை வைத்தார் ரத்தன்.

இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான டாடா ஸ்டீலை விட கோரஸ் நான்கு மடங்கு பெரிய கம்பெனி. வாங்குவதற்கான பணத்தை ஏற்பாடு செய்வது சவாலான ஒன்று . இரவு முழுவதும் தீவிர யோசனையில் இருந்த முத்துராமன் மறு நாள் காலை ரத்தனை அழைத்து “சரி நாம் வாங்கலாம்” என்றார்.

அதன் பிறகு நடந்த தொடர் போராட்டங்களுக்கு பின் 2007ல் டாடா கோரஸ் நிறுவனத்தை வாங்கியது. விலை 12 பில்லியன் டாலர் , இன்றைய நிலவரப்படி கிட்டத்தட்ட 67,200கோடி ரூபாய். பொருளாதார பத்திரிக்கைகள் பக்கம் பக்கமாக பாராட்டின.

எழுபதுகளின் இறுதியில் ரத்தனிடம் கிட்டதட்ட மூடக்கூடிய நிலையிலிருந்த டாடாவின் எம்பரஸ் மில்ஸ் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பு கொடுக்கபட்டது. மிகச் சிரமப்பட்டு ஒவ்வொரு தப்பையும் சரி செய்த ரத்தன் நஷ்டத்திலிருந்த மில்லை ஓரளவு லாபகரமாக மாற்றி டிவிடண்ட் கொடுத்தார். மில்லை நவீனப்படுத்தி வெற்றிகரமாக மாற்றியமைக்க ஐம்பது லட்ச ரூபாய் தேவைப்பட்டது. ரத்தன் திட்ட வரைவை ஒப்புதலுக்கு அனுப்பினார்.

நானி பால்கிவாலா தலைமையிலான டாடாவின் மூத்த இயக்குநர்கள் ஒப்புதல் மறுத்துவிட்டு, நிறுவனத்தை மூடுவது உத்தமம் என்றனர். 1986ஆம் ஆண்டில் எம்பரஸ் மில் மூடப்பட்டது. நொந்து போன ரத்தன் தனது நிறுவனத்தின் மோசமான நிர்வாக முடிவால் அப்பாவி பணியாளர்கள் பாதிக்கப்பட்டதாக பின்னர் குறிப்பிட்டார்.

1991ம் ஆண்டு டாடா குழுமத்தின் தலைமைப்பொறுப்பை ரத்தன் ஏற்கும் போது அக்குழுமத்தின் மொத்த வருவாய் 14000 கோடி, இருபது ஆண்டுகள் கழித்து 2012ல் 4,75,721 கோடியாக வருவாய் உயர்ந்துள்ளது. 2012 - 2013ல் தமிழக அரசின் எதிர்பார்க்கபடும் வருவாய் 98,793கோடிகள்.

தூரத்தில் இருந்து பார்க்கும் பொழுது எளிதாக தோன்றும் ரத்தனின் பயணம் இடியாப்ப சிக்கல்களும் ஏற்ற இறக்கங்களும் நிறைந்தது.

1937ல் டிசம்பர் 28ல் மும்பையில் பிறந்த ரத்தனின் இளமைக் காலம் ராஜ சொகுசானது. பள்ளிக்கூடத்திற்கு ரோல்ஸ் ராய்ஸ்  காரில் பயணம். கல்லூரிப் படிப்பிற்காக அமெரிக்கா  சென்றவர் 1962ல் கார்னல் பல்கலையில் கட்டடக் கலையில் இளநிலை பட்டம் பெற்றார். பின்னர் இந்தியா திரும்பியவர் ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா ஸ்டீலில் சாதாரண வேலையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். பத்தாண்டுகள் சாதாரண பணிகளைச் செய்துவந்த அவருக்கு 1971ல் சிக்கலான நிலையிலிருந்த நெல்கோ நிறுவனத்தின் இயக்குனராக அதை முன்னேற்றும் பொறுப்பு கொடுக்கப்பட்டது.

நெல்கோவின் பொறுப்பேற்கும் போது நிறுவனத்தின் மொத்த டர்ன் ஓவரில் நாற்பது சதவிகித அளவிற்கு நஷ்டம். சந்தையில் பெற்றிருந்த இடமோ இரண்டு சதவிகிதம்தான். மிகப்பெரிய போராட்டத்திற்கு பின் சந்தைப் பங்களிப்பு இருபது சதவிகிதமாக உயர்ந்தது. அடுத்த கட்டத்திற்கு நிறுவனத்தை எடுத்துச் செல்ல பணம் தேவைப்பட்டது. இதற்கான கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. அந்த காலகட்டத்தில் எமர்ஜென்சியும், தொழிலாளர்கள் போராட்டமும் வந்தன. தடுமாறிய நிறுவனம் மூடப்பட்டது.

சோர்ந்து போன ரத்தனுக்கு கொடுக்கப்பட்ட அடுத்தபணி கட்டுரையில் முதலில் குறிப்பிட்ட ‘எம்பரஸ் மில்ஸ்’ ன் தலைமைப் பொறுப்பு. எம்பரஸ் மில்ஸுக்கும் மூடுவிழா. தொடர் தோல்விகள் ரத்தனின் தன்னம்பிக்கையை தகர்த்துவிடவில்லை.

1981-ல் ஜேஆர்டி டாடா, தலைமைப் பொறுப்பிலிருந்து விலகி ரத்தனை அந்த இடத்தில் நியமித்தார். இது திடீர் முடிவு.

அவருக்கு ஆச்சரியம்.  சில டாடா நிறுவனங்களின் இயக்குனராக இருந்த ரத்தன், தான் டாடா குழுமத்தின் தலைவராக பதவியேற்போம் என்று ஒரு போதும் நினைத்திருக்க வில்லை. குழுமத்தின் முக்கியப் பொறுப்புகளை வகித்த நானி பால்கிவாலா அல்லது ருசி மோடி தான் குழுமத்தின் தலைவராக வருவார்கள் என்பது அவரது கணிப்பு.

ஆனால் ஜேஆர்டி தனது வாரிசாக ரத்தனைத் தேர்ந்தெடுத்து 1991ல் குழுமத் தலைவராக நியமித்தார். தகுதிக்கு மீறிய பதவி என்று குழுமத்திற்குள் பலத்த முணுமுணுப்பு. பல்வேறு டாடா நிறுவனங்களின் தலைவராக இருந்தவர்கள் குழுமத் தலைவரோடு ஒத்துழைக்க மறுத்தனர். ருசி மோடி வெளிப்படையாகத் தன் அதிருப்தியைப் பத்திரிகைகளுக்கு பேட்டிகளாக வெளியிட்டார்.

தன்னைவிட வயதிலும் அனுபவத்திலும் மூத்த பெருந்தலைகளை எப்படிச் சமாளிப்பது என்ற யோசனைகளில் மூழ்கினார் ரத்தன்.

ஒருமுறை டாடா ஸ்டீலின் தலைவரான ருசிமோடியின் தலைமையிலான போர்டு மீட்டிங். “ஏன் இப்படி டாடா ஸ்டீலிற்கு எதிராக பத்திரிகைகளில் பேட்டி தருகிறீர்கள், தலைவரான நீங்களே இப்படி செய்யலாமா?” என்று ரத்தன் கேள்வி எழுப்பினார்.

“இந்தக் கேள்வி எழுப்பப்பட்டதற்காகவே நான் வெளியேறுகிறேன்” என்று கூறிவிட்டு ருசி மோடி போர்டு மீட்டிங்கிலிருந்து வெளியேறினார்.

ருசிமோடியில் ஆரம்பித்து அடங்க மறுத்த பழங்குதிரைகள் ஒவ்வொன்றாக டாடாவின் லாயத்திலிருந்து வெளியேற்றப்பட்டன.

குழுமத்தலைவராக பதவியேற்றதும் மொத்த நிர்வாகத்தை தன் கைப்பிடிக்குள் கொண்டுவர ரத்தனுக்கு நான்கு ஆண்டுகள் பிடித்தன.

எல்லாம் கைப்பிடிக்குள் வந்த பின் பல ரிஸ்க்குகளை எடுக்க துணிந்தார் . முக்கியமானது டிரக்குகளை தயாரித்து வந்த டாடா மோட்டார்ஸை கார் தயாரிப்பில் இறங்கச் செய்வது என்பதாகும். இது வேலைக்கு ஆகிற காரியமல்ல; தயவு செய்து ஒதுங்கி விடுங்கள் என்பது அவருக்கு வேண்டியவர்களின் ஆலோசனை. முயன்று மோதி பார்த்து விடலாம் என்று ரத்தன் களத்தில் இறங்கினார். புதிய முயற்சி என்பதால் திட்டச் செலவு 1700கோடியாக எகிறியது. முதன் முறையாக ஐந்நூறு கோடி நஷ்டத்தை டாடா மோட்டார்ஸ் சந்தித்தது. தடங்கல்களை தாண்டி 1998ல் இண்டிகா விற்பனைக்கு வந்தது. வந்த புதுதில் சிக்கல்கள் இருந்தாலும் பின் சக்கைபோடு போட்டது இண்டிகா. பத்து இலட்சத்திற்கு மேலான கார்கள் விற்று சாதனை புரிந்துள்ளது.

ரத்தனின் வாழ்வில் இறக்கங்களும் உண்டு, மேற்கு வங்கத்தில் நேனோ கார் ஆலை அமைப்பதற்கான இடம் வாங்குவதில் பிரச்னை. ஆப்பிரிக்காவின் தான்சானியாவில் சோடா ஆஷ் ஆலை அமைக்கும் போது பிளமிங்கோ பறவைகளுக்குத் தீங்கு என்பதால் எதிர்ப்பு, ஒடிசாவின் கப்பல் தளம் அமைப்பதில் உள்ள சிக்கல் என்று பல பிரச்சனைகள் உண்டு. ஆனால் அதையெல்லாம் கழித்துப் பார்த்தால் கூட அவரது சாதனை பிரமாண்டமானது.

ஜாகுவார் காரின் XK120 மாடல் காரை 1940களில் இந்தியாவில் வாங்கியவர்கள் ஐந்து பேர். அதில் ஒருவர் ரத்தனின் தந்தை. 2008ல் உலகப் பிரசித்திபெற்ற ஜாகுவார் கார் நிறுவனம் விற்பனைக்கு வந்தபோது அதை வாங்குவதில் முனைப்பு காட்டினார். நஷ்டத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த ஜாகுவாரை வாங்குவது சரியல்ல என்று பலரும் பயங்காட்டினர். ரத்தன் துணிந்து வாங்கினார். 2.3 பில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து. இன்றைய நிலவரப்படி 12900 கோடி ரூபாய். பொருளாதாரப் பத்திரிகைகள் விமர்சித்தன.

2012ன் நிலவரம் வேறு விதமாக இருக்கிறது எல்லாரும் பாராட்டிய கோரஸ் தடுமாறிக் கொண்டிருக்கிறது. விமர்சித்த ஜாகுவார் லாபத்தில் கொழித்துக் கொண்டிருக்கிறது.

“வெற்றியின் உச்சத்திலிருக்கும் போதே அவரது வாரிசுக்கான தேடுதல் வேட்டை ஆரம்பித்தது. ஓய்வு பெறுவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னே குடும்பத்துக்கு வெளியே இருந்து வந்த வாரிசை உலகத்திற்கு அறிமுகப்படுத்தி, உடன் செயல்பட்டு சொன்னபடி ஓய்வு பெற்றிருக்கும் ரத்தன் டாடாவை நமது அரசியல்வாதிகள் பின்பற்றினால் எவ்வளவு நன்றாக இருக்கும்?” என்று என்னிடம் ஒரு சக பத்திரிகையாளர் கேட்டார்.

நன்றாகத்தானிருக்கும். ஆனால் நடக்குமா..?

என்றும் உங்கள்,

அந்திமழை இளங்கோவன்

ஜனவரி, 2013 அந்திமழை இதழ்

logo
Andhimazhai
www.andhimazhai.com