வன்னியின் தலைநகர் கிளிநொச்சி நகரத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் யுத்தத்தின் நடுவே புலிகளோடு இருக்கும் வாய்ப்பு கிடைத் தது. அது கடுமையான நேரம் தான்.
சிங்களத்தின் ‘கிபீர்’ விமானங்களும் ‘ஷெல்’களும் தமிழின படுகொலைகளுக்குச் சாட்சியங்களாக அமைந்தன. நான் விடுதலைப்புலிகளின் ஊடகப்பிரிவு செயலாளர் கேணல் சேரலாதன் வீட்டில் தங்கியிருந்தேன். பக்கத்து வீடுகள் எல்லாம் இடம் பெயர்ந்து கொண்டிருந்தனர். மூட்டை முடிச்சுகளோடு வன்னியிலிருந்து விசுவமடு, உடையார்பாளையம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு என்று இடம் பெயர்ந்து கொண்டிருந்தார்கள்.
பக்கத்து வீட்டு மாட்டு வண்டி வீட்டைக் காலிசெய்து விட்டு கிளம்பத் தயாராகிக்கொண்டிருந்தது. வண்டியில் அப்பா, அம்மா, அப்பம்மா, அம்மம்மா எல்லோரும் ஏறிவிட்டார்கள். வண்டி கொஞ்ச தூரம் போய் நின்றது. அந்த மாட்டு வண்டியிலிருந்து 7வயது பெண்பிள்ளை ஒன்று இறங்கி அந்த வீட்டை நோக்கி ஓடியது. காலி செய்யப்பட்ட அந்த வீட்டில் ஏதாவது மறந்து போய் இருக்கும். அவளுடைய விளையாட்டுப் பொம்மையோ அல்லது புத்தகமாகவோ என்று நான் அந்த பெண்பிள்ளையையே பார்த்துக்கொண்டிருந்தேன். போனவள் சுவரில் மாட்டப்பட்டிருந்த தமிழீழ தேசத்தின் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களது புகைப்படத்தை எடுத்து கக்கத்தில் வைத்து மாட்டு வண்டியை நோக்கி ஓட்டம் பிடித்தாள். மறந்து போனது தலைவர் படத்தைத்தான் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
கிளிநொச்சி நகரம் விரைவில் எதிரியிடம் சிக்கிவிடும் அப்போது தலைவரின் புகைப்படம் கூட எதிரிவசம் மாட்டிவிடக்கூடாது என்று தான் நேசிக்கிற தலைவரின் புகைப்படத்தை பாதுகாத்து எடுத்து சென்றாள் அந்த சிறுமி. அப்படி மண்ணை நேசிக்க கூடிய மக்களும் போராளிகளும் இருக்கக் கூடிய புனித மண்ணுக்குத்தான் நடிகர் ரஜினிகாந்த் பயணிக்க திட்டமிருந்தார். ‘லைக்கா’ சுபாஷ்கரன் அவரது தாயார் ‘ஞானம் பவுன்டேசன்’ ஏற்பாட்டில் அங்கு கட்டப்பட்டுள்ள வீடுகளை ஈழத்தமிழ் மக்களுக்கு கையளிக்க ரஜினிகாந்தை அழைத்திருந்தனர்.
இந்தப் பயணத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ரஜினி அவர்களுக்கு ஈழ மண்ணிலிருந்தும் தமிழ் மண்ணிலிருந்தும் கோரிக்கை எழுந்தன. கோரிக்கையை ஏற்று பயணத்தைத் தவிர்ப்பதாக ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டு, பயணத்தை அரசியலாக்க வேண்டாம் என்று வேண்டுகோளும் விடுத்துள்ளார். ரஜினிகாந்த் வன்னி நிலப்பரப்புக்கு செல்ல முனைந்ததற்கு எந்த உள் அரசியலும் இருப்பதாக சந்தேகப்படவில்லை. மாறாக, அழைத்தவர்களைத்தான் சந்தேகிக்கிறோம். இந்தியாவின் உதவியோடு கட்டப்பட்டுள்ள அந்த வீடுகள் வவுனியா பகுதி தமிழர்களுக்கு கொடுக்கப்படவுள்ளன. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் போனார்கள், திறந்து வைத்தார்கள். இப்படி இருக்கும்போது ‘லைக்கா’ நிறுவனம் மூலமாக நடிகர் ரஜியையை வைத்துத் திறப்பதன் உள் நோக்கம் என்ன என்கிற கேள்வி தான் எழுகிறது.
ராஜபக்சேவின் மகன் நிமல்பக்சேவின் பங்கு நிறுவனம்தான் இந்த லைக்கா என்கிறார்கள். ஆகவே ‘லைக்கா’ பல காண்ட்ராக்ட்கள் மூலமாக இலங்கையில் வீடுகள் கட்டும் பணியில் அரசோடு இணைந்து செயல்படுகிறது. திரைத்துறையில் தற்போது எந்திரன் 2 படத்தை தயாரித்துள்ள இந்த நிறுவனத்தின் மூலமாக, உலக அளவில் விற்பனை செய்வது என்பதோடு, ஈழத்தமிழ்மக்களுக்கு சிங்களம் எல்லாமே சிறப்பாக செய்கிறது என்பதையும் பறை சாட்டுவதுதான் இந்த திட்டத்தின் நோக்கம். அதாவது இலங்கை நடத்திய இனப்படுகொலை குறித்த விசாரணை ஜெனீவா மனித உரிமை அமர்வில் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. மனித உரிமை ஆணையர் திரு.அல்ராத் உசேன் இலங்கை மீது கடும் அதிருப்தியும் விமர்சனங்களையும் முன் வைத்துக் கொண்டிருக்கும் சூழலில் தான் இன்னும் இரண்டாண்டுகள் விசா ரணையை தள்ளி போட வேண்டும் என்று சிங்கள தலைமையின் சார்பில் மங்கள சமரவீரர ஜெனிவாவில் கோரியிருந்தார்.
இனப்படுகொலை குறித்த சர்வதேச விசாரணையை தள்ளிப்போடவும், உலக நாடுகளை ஏமாற்றவுமே தொடர்ந்து இலங்கை அரசு முயற்சித்து வருகிறது. வன்னிப்பகுதியில் நிலைகொண்டுள்ள ராணுவ ஆக்கிரமைப்பை அகற்ற வேண்டும். போரில் காணாமல் போனவர்கள் குறித்த விசாரணையை உடனே நடத்த வேண்டும். தமிழர்களின் நிலங்களை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இவை தான் தமிழர்களின் குறைந்தபட்ச கோரிக்கைகள். ஆனால், இலங்கை அரசு ஜெனீவா மனித உரிமை அவையில், எல்லாம் சிறப்பாக நடப்பதாக பொய்யை அள்ளிவிட்டது. இதற்கு இந்திய அரசும் ஒத்து ஊதி வருகிறது. இப்படியான சூழலில்தான் ரஜினிகாந்தை சிங்கள அரசு அழைத்திருக்கிறது.
புகழ்பெற்ற ஒரு நடிகரை வைத்து வீடுகளை திறப்பது போல உலகுக்கு காட்டுவதன் மூலம், இலங்கையில் தமிழர்களுக்கான புணரமைப்பு வேலைகள் சிறப்பாக நடக்கிறது என்று உலகை ஏமாற்றுவதற்காகதான். இந்த பின்னணியெல்லாம் தெரிந்து தான் ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் நடிகர் ரஜினிக்கு எதிர்ப்பு வலுத்தது.
ரஜினி வெளியிட்ட அறிக்கையில், புனிதப்போர் நடந்த இடத்தை பார்வையிட இருந்ததாகவும் அந்த மக்களுக்கு ஆறுதல் சொல்ல இருந்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார். சிங்களர்களுக்கு எதிராக தமிழர்கள் நடத்தியது புனிதப்போர் என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டிருந்தது பாராட்டுக்குரியது தான். அதே நேரத்தில் அழைப்பின் உள்நோக்கத்தையும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் தமிழர்களின் வேண்டுகோள். காலம் கடந்தாவது ஈழ உறவுகளைப் பார்க்கத் துடிக்கும் ரஜினிகாந்த், முதலில் ஈழ விடுதலைப் போராட்டம்குறித்தும், அந்த மக்களின் விடுதலை வேட்கை குறித்தும் தெரிந்து கொள்வது நல்லது.
அங்கே இன்னமும் விடுதலை வேட்கையுடன் தான் இளைஞர்களும் மாணவர்களும் உலவுகிறார்கள். அவர்களுடைய கோரிக்கைகள் இன்னமும் கேட்பாரற்று கிடக்கின்றன். அந்தக் கோரிக்கைகளுக்காக ரஜினி அவர்கள் தமிழக மண்ணிலிருந்து குரல் எழுப்பலாம். அங்கு போய் தான் குரல் எழுப்ப வேண்டும் என்பது அவசியமல்ல. தமிழக மண்ணிலேயே ஏராளமான கொடுமைகள் நடந்தேறி வருகின்றன. அதற்காகவும் குரல் எழுப்பலாம். ஐ.நாவின் பெண்களுக்கான பாலின சமத்துவத்துக்கான இந்திய தூதராக ரஜினியின் மகள் ஐஸ்வர்யா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பொறுப்பு மிக உயர்ந்த பொறுப்பு. இந்தியாவில் பெண்கள் பெண்களாகப் பிறந்ததற்காகவே தினம் தினம் கொலை செய்யப்படுகிறார்கள். காதலித்து திருமணம் செய்ததற்காக கவுரவ படுகொலைகள் நடந்து வருகின்றன. இவையெல்லாம் பாலின சமத்துவத்திற்கு எதிரான வன்கொடுமைகள். இது குறித்தெல்லாம் மகள் ஐஸ்வர்யா அவர்களை ஐ.நா. மனித உரிமை அவையில் பேசச்சொல்லியிருக்கலாம்.
2001ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தந்திற்கு பிறகு, தமிழகத்திலிருந்து அரசியல் தலைவர்கள் சினிமா பிரபலங்கள் விருந்தினர்களாக வன்னிக்கு அழைக்கப்பட்டனர். கொழும்பிலிருந்து ஏ9 சாலை வழியாக கிளிநொச்சிக்கு செல்லும் முன்பு புளியங்குளம் என்னும் இடத்தில் விடுதலைப்புலிகளின் சுங்கச் சாவடி ஒன்று உள்ளது. அங்கு எல்லோருமே பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுவர். அப்போது யாரும் தமிழகத்திலிருந்து சினிமா சம்பந்தப்பட்ட படங்களோ, சிடிக்களோ எடுத்துச்செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஏனென்றால் தமிழீழ விடுதலைப்புலிகள் தணிக்கை பிரிவு ஒன்றை உருவாக்கி சினிமாவை தணிக்கை செய்த பிறகுதான் தமிழீழத்தில் வெளியிடச்செய்தார்கள். சினிமா விடுதலை வேட்கையை சிதைத்துவிடும் என்று விடுதலைப்புலிகள் உறுதியாக நம்பினார்கள். இப்படி உறுதியான நிலைப்பாட்டில் சினிமாக்காரர்கள் குறித்தும் சினிமா குறித்தும் அந்த மக்களுக்கு வழிகாட்டி இருக்கும்போது, சினிமாக்காரர்களை வைத்து இளைஞர்களை திசை திருப்பத்தான் சிங்கள பேரினவாதம் முயற்சி செய்கிறது. இதையெல்லாம் புரிந்து கொண்டு தமிழகத்தின் சினிமா பிரபலங்கள் அமைதியாக அவர்களது தொழிலில் கவனம் செலுத்துவது நல்லது. விடுதலை மண்ணை மலடாக்காமல் இருந்தாலே போதும்.
(வன்னி அரசு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்).
மார்ச், 2017.