யாறு நீர் கழிந்தன்ன இளமை!

யாறு நீர் கழிந்தன்ன இளமை!
Published on

முன்பொரு சந்தர்ப்பத்தில் சொல்லி இருக்கிறேன், சிறுவயதில் எம் ஊர் போன்ற சிற்றூர்களில் மாதம் ஒரு முறையே தோசைக்குப் போடுவார்கள்  என்று,

இன்று, wet grinder வந்த பிறகு, நகரங்களில் பல வீடுகளில் இராப்பலகாரம் தோசையாக இருக்கிறது. அதுவும் தோசை மாவு, அரைத்து, புளிக்க  வைத்து, குடிசைத் தொழிலாகப் பைகளில் விற்பனைக்கு வந்து விட்டது. அலுவலகம் சென்று திரும்புவோர்
முன்பு bread பாக்கெட் வாங்கி நடந்தது போல், இன்று தோசை மாவு பாக்கெட்டுடன் நடக்கிறார்கள். ஒரு கிலோ தோசை மாவில் எத்தனை தோசை வார்க்கலாம் என்ற கணக்கும் வந்துவிட்டது.  மாநகரங்களின் உள் தெருக்களில் இரவு எட்டுமணி போல நடந்தீர்களேயானால் தெருவே தோசை மணக்கும், என்னுடைய நெருங்கிய உறவினர், அண்மையில் திருமணப் பொன்விழா கொண்டாடினார், அவர் ஐம்பது ஆண்டுகளாக, எல்லா இரவுகளிலும் தோசை தான் தின்கிறார். ஒரு வேளை, தொட்டுக்கொள்ளும் சட்னி மாறுமாக இருக்கும், அந்தத் தம்பதியர் திருமண வைர விழா காண வாழ்த்துகிறேன். இதில் உள்க்குத்து எதுவும் இல்லை,

காலையிலேயே 'நாலுக்கு ஒண்ணு' என்ற கணக்கில் புழுங்கலரிசியும் உடைத்த உளுத்தம்  பருப்பும் தனித்தனியே ஊற வைத்து மாலையில் தோசைக்கு அரைப்பார்கள், தனித்தனியாக அரைத்து உப்புப் போட்டு கலந்து வைக்க வேண்டும், ஊறப்போடும் போது, ஒரு கை வெந்தயமும் போட்டு ஆட்டினால், தோசை மணக்க மணக்கச் சிவக்கும், இட்லிக்கு மட்டும் என்றால் வெந்தயம் கட்டாயம் இல்லை. ஆனால் ஒரு காரியம், உளுந்தைப் பொங்கப் பொங்க அரைக்க வேண்டும், வீட்டில் தோசைக்குப் போட்டிருக்கிறாள் அம்மா என்றால் குதூகலமாகிவிடும். நான்கு முழு டிக்கெட்டுகள், ஏழு அரை டிக்கெட்டுகள் எவ்வளவு ஊற வைத்து அரைக்க வேண்டும் என்பது யோசித்தால் உமக்கு எட்டாது, அம்மா ஒற்றை ஆளாக ஆட்ட வேண்டும். சில சமயம் ஆட்டியோ ஒதுக்கியோ கொடுப்பேன், மூத்த பிள்ளை என்பதால்.

தோசைக்கு மாவாட்டிய அன்று இரவே, மாவு புளிக்குமுன் சுடும் தோசைக்குப் புளியாத் தோசை என்று பெயர். அடுத்த நாள் காலையில் மாவு புளித்துவிடும். அதில் அவிப்பது இட்டிலி. பெரும்பாலும் அம்மாசி அல்லது ஒடுக்கத்திய வெள்ளி ஆகிய தினங்களுக்கே தோசை பாக்கியம் எங்களுக்கு. அன்று பள்ளி இருக்குமானால், வழக்கமாக மதியத்துக்குப் பழைய சோறும் உப்புப்பரல்களும், நார்த்தங்காய், எலுமிச்சை அல்லது நெல்லிக்காய் ஊறுகாயும் கொண்டு போகும் எம்மனோர் நடையில் துள்ளல் இருக்கும், அதுவும் உமக்கு இன்று அர்த்தமாகாது.

அரைத்த இரவில் புளியாத் தோசை, அடுத்த நாள் புளித்த மாவில் இட்டிலி, விரதம் என்பதால் அன்று இரவில் தோசை, இதுவே வழமை. எனினும் மூன்றாம் நாள் காலை புளித்த தோசை மாவு மிச்சம் கிடக்கும். அந்த மாவில் சுடுவதே தேங்காய்த் தோசை, புளித்த மாத்தோசையின் புளிப்பு மாற்றவே, இந்தத் தேங்காய்ப்பூ பிரயோகம். சின்ன உள்ளியை பொடிப் பொடியாக அரிந்து செய்தால்  உள்ளித்தோசை. இரண்டு செய்திகள் நான் தோசை என்று சொல்வது ரோஸ்ட் அல்ல, கல்தோசை  என்றால் ஏகதேசமாக இருக்கும். எனக்கொரு கேள்வியும் உண்டு ! எல்லாத் தோசையுமே கல் தோசைதானே? தோசையை இட்டிலி கொப்பரையிலா வைத்து அவிப்பார்கள்? இரண்டாவது செய்தி, தேங்காய்த் தோசை அல்லது உள்ளித்தோசை என்பது, தோசைமாவில் தேங்காய்ப்பூ அல்லது அரிந்த வெங்காயம் அள்ளிப்போட்டுக் கலக்குவதல்ல.

அன்றெல்லாம் விறகடுப்பு. செங்கோட்டை அடுப்பு என்பார்கள், 'கோடு உயர் அடுப்பு' என்னும் புறநானூறு. பக்கவாட்டில் கோட்டைபோல் உயர்ந்த சுட்டமண் அடுப்பு, தோசைக் கல்லிலும் செங்கோட்டை கல் சிறப்பு. செங்கோட்டை அடுப்பில் தீப்பெருக்கி, செங்கோட்டை கல் ஏற்றி, கல் சூடானவுடன், கல்லின் பரப்பில் சள சளவென எண்ணெய் தடவி அதில் பெரிய
சிரட்டைத் தவியால், புளித்த தோசை மாவை வார்த்து அதன் மீது இளம் தேங்காயின் திருவிய பூவைக் கணிசமாகப் பரத்தினாற்போல தூவி, அதன் மேல் மெல்லிய ஆடை போர்த்தினாற் போல மறுபடியும் தோசைமாவைப் பரப்பி வெந்து கொண்டிருக்கும் தோசையில் வட்டமான ஓரங்களில் நல்லெண்ணெய் சொரிந்து, ஓரங்கள் இளம் அரக்குச் சிவப்பில் முறுகும் போது திருப்பிப் போட்டு, திருப்பிய தோசை முதுகிலும் சில துளிகள் நல்லெண்ணெய் தெளித்து, முறுக வெந்தவுடன் தோசையைக் கல்லில் இருந்து எடுக்க வேண்டும்.

தேங்காய்த்தோசைமுயல்வோர்கவனத்துக்கு, துருவும்தேங்காய், வரிமுற்றியநெற்றுக்காயாகஇருத்தல்ஆகா, அவியலுக்கு, தயிர்கிச்சடிக்குஅரைக்கும்இளம்பருவத்துக்குக்காய்ஆதல்வேண்டும், அல்லதுதேங்காய்ப்பால்பிழியும்பருவத்திலானபூ.

தேங்காய்த் தோசைக்கு சேர்க்கை மிளகாய் பொடி, நல்லெண்ணெய். ஏன் சட்டினி, சாம்பார் கூடாதா என்று கேட்டால், கூடாது என்று இ.பி.கோ எதுவும் இல்லை, என்றாலும் ஆப்பத்துக்கோ, இடியாப்பத்துக்கோ தேங்காய்ப்பால், புட்டுக்கு கடலைக்கறி, பூரிக்கு ஆம்ரஸ், வடா பாவுக்கு லசூன் சட்னி, புழுங்கிய கப்பைக்கு  மிளகாய் நுணுக்கியது, அடைக்கு அவியல், வெல்லம், வெண்ணெய் என்பது போல் ஒரு ஒத்திசைவு. தயிர்சோறு எனும் எளிய உணவுக்கு வாய்ப்பாக எத்தனை இருக்கின்றன? நாரத்தை, எலுமிச்சை, நெல்லி, மாவடு, ஆவக்காய், பூண்டு, இஞ்சி ஊறுகாய்கள் தொட்டுக்கொள்ள. மோர் மிளகாய் கடிக்கலாம், பச்சை மிளகாய்,
சின்ன உள்ளி, பூண்டுப் பல் ஆகலாம், தீயல், காரக்குழம்பு, வத்தக்குழம்பு, சுண்டக்கறி, சாம்பார் கூட தொட்டுக்கொள்ளலாம். இஞ்சிப்பச்சடி, புளி இஞ்சி, மாங்காய் கோசு, உப்பிலிடு, நார்த்தங்காய் பச்சடி சேரும். புளித்துவையல், கொத்துமல்லி துவையல், எள்ளுத்துவையல், வேப்பிலைக் கட்டி, நாரத்தை, அல்லது எலுமிச்சை இலைத்துவையல், புதினாத்துவையல், தேங்காய்த்துவையல், இஞ்சித் துவையல், நெல்லிக்காய் துவையல் சேரும், மா இஞ்சி, மாகாளிக்கிழங்கு ஊறுகாய்   அமோகம். முழு மாம்பழம் வைத்துக்கொள்வார் உண்டு, வெறும் உப்புப்பரல் சேர்த்து பிசைந்தாலும் போதும். மேளகர்த்தா ராகங்கள், ஜன்ய ராகங்கள் என எத்தனை இல்லை.

'கஞ்சிக்குக் காணம் கொண்டாட்டம், அந்தக் கதை கெட்ட மூளிக்கு கோவம் கொண்டாட்டம்,' என்றொரு சொலவம் உண்டு. காணம் என்பது காணத்துவையல். காணத்தின் மாற்றுப் பெயர்கள் கொள்ளு, முதிரை, என்பன, அதுபோலவே தேங்காய்த் தோசைக்கு  ‘மொளகாப்பொடி நல்லெண்ணெய்' கொண்டாட்டம்'. மருந்துக்கு மோளச் சொன்னால்,மண்ணில் மோள்பவரை நாம் ஒன்றும் செய்வதற்கில்லை.

வாழையிலை துண்டில்,தோசைக்கல்லில் இருந்து நேராக வந்து விழும் தேங்காய்த் தோசையின் மையப்பகுதியில் & 'உலகத்தோடு ஒப்ப மய்யம் என்றே எழுதிவிட்டுப் போவோமே' -மய்யப்பகுதியில் கணிசமாக  இட்லி மொளகாப் பொடி, அதில் நடுப்பகுதியைக் குழித்துப் பண்ணை கட்டி, விளிம்பு கரையாமல் நல்லெண்ணெய் ஊற்றிக் குழைத்து தேங்காய்த் தோசையை ஓரங்களில் இருந்து பிட்டுத் தின்பதே மதி. வட்டமாகச் சுற்றிப் பிய்த்துத் தின்றபின், எண்ணெயும், மிளகாய்பொடியும் ஊறிக் கறுத்து மினு மினுக்கும் நடுப்பகுதியை இரண்டு வாயாகத் தின்னலாம். சின்னவயதில், சகோதரனுடன் கூடியிருந்து தின்னும் போது, மய்யப்பகுதிக்கு வரும் போது சற்று கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். இந்திய தேசத்து அமலாக்கத் துறையினர் போன்று. அல்லது கூட்டத்தில் ஒருவன், பொட்டென ஓர் கணத்தே எல்லாம் போகத் தொலைத்ததுபோல் சடக்கென்று நடுப் பகுதியை பறித்தெடுத்து வாயில் அமுக்கி விட்டு ஓடி விடுவான். பிறகென்ன செய்ய இயலும், பாம்பின் வாய்த்தவளையை ? அமைச்சன் விழுங்கிய ஆயிரம்  கோடியை எப்படி மீட்டெடுக்க இயலாதோ இந்திய மக்களாட்சியில், அதுபோன்றே இதுவும்! ஐயா என்றாலும் வராது, ஆத்தா என்றாலும் வராது.

எதற்குச் சொல்ல  வருகிறேன் என்றால், மிளகாய்ப்பொடியும், நல்லெண்ணெயும் புரண்ட அந்தத் தேங்காய்த் தோசையின் மையப்பகுதி அத்தனை சுவையாக இருக்கும். ஒவ்வொரு தோசைக்கும் தனித்தனியாகக் குழைத்துக் கொள்ள வேண்டும். ஐயமிருப்போர் ‘திருநெவேலி ‘ பற்றிப் பரணி, கலம்பகம், சதகம், தூது, உலா, அந்தாதி, பிள்ளைத்தமிழ் பாடும் எழுத்தாளர்களைக் கேளுங்கள் ஐயா! இந்தியத் திருநாட்டில் பிரதேச மொழிப் பிரிவினைகள் போல மொளகாப்பொடிக்கும் உண்டு. எதுமேல், எது கீழ் எனும் கேள்வியே மூடத்தனம். அவரவர் மொழி அவரவர்க்கு உயிர். மற்றவர் மேல் அதிகாரம் செய்யவந்தால் அது மயிர்!

இதை வாசிக்கும் எவரும் முனகலாம், இவனெப்போதும் தன் பிரதேசப் புகழ்பாடும் குலப்பாடகன் என்று. மாதத்திற்கு ஒரு நாளே தோசை தின்ற  1960-ம் ஆண்டு சிறுவனின் அனுபவம் இது. ஏன் தேங்காய்த் தோசைக்கு மொளகாப்பொடி
நீங்கலாக வேறேதும் ஆகாதா என்று கேட்பவருக்கு ஒரு சொல். ஏன் சோற்றில் புளிசேரி ஊற்றிப் பிசைந்து, அதன் மேல் வருக்கைச் சக்கைப் பிரதமனும் ஊற்றி எவரும் வாரித் தின்பதில்லை?

இன்றும் காலை ஆறுமணிக்கு ரயில் பிடிக்கும் எனது காலை உணவுக்காக, ஒரு தேங்காய்த்தோசை பொதிந்து கொள்கிறேன், ஆனாலும் அறிக நீர் ஒன்று, தோசை தண்ணீர் வாங்கும், தேங்காய்த்தோசை வாங்கு வாங்கென்று வாங்கும்.

சமீபத்தில் விளம்பரம் ஒன்று வாசித்தேன். கும்பமேளா போல, ஒரு ஓட்டலில் தோசை மேளா என்று. 99 வகையான தோசை என்று குறிப்பிட்டிருந்தார்கள். சாத்தியம்தான். ஆனால் வள்ளியம்மை ஆத்தா பட்டியலில் புளியாத்தோசை, புளித்த மாத்தோசை, குருணைத்தோசை, முழு உளுந்து தோசை, சோளத்தோசை, மரச்சீனி தோசை, கோதம்புத்தோசை, பயத்தந்தோசை, பச்சரிசி தோசை, அடைத்தோசை, உள்ளித்தோசை, தேங்காய்த்தோசை, கருப்பட்டித்தோசை என சில உண்டு. ஆத்தாளுக்கு எல்லாத்தோசைக்கும் ஆதாரம், தாணுச்செட்டியார் என்ற எண்ணெய் வாணியர் தலைச்சுமடாகக் கொண்டுவரும் மரச்செக்கு நல்லெண்ணெய்.

இதற்குள் வள்ளியம்மை ஆத்தா யாரென்று நீங்கள்  கேட்டிருக்க வேண்டும், எங்கள் அப்பனைப் பெற்ற ஆத்தாள்; பறக்கை, நெடுந்தெருக்காரி. வள்ளியம்மை தோசை சுட்டால் அரை அங்குல கனம் இருக்கும், நல்லெண்ணெயில் நன்கு முறுகி, பிய்த்தால் அறையறையாகத் தெரியும், மடித்தால் இரண்டாக நான்காக ஒடியும், வள்ளியம்மை கொஞ்சம் வாயாரி. இரண்டு பெண்மக்களுக்கும் ஆதரவு, எனவே அம்மையும் சித்தியுமாக கூடிப்பேசி, நான்கு வீடுகள் தாண்டி ஆத்தாளைத் தனிக்குடித்தனம் வைத்தனர். செலவுக்கு, சமபங்கு கொடுத்து விடுவார்கள், அதிலும் மிச்சம் வைத்து மகளுக்குக் கொடுப்பாள் என்ற குற்றச்சாட்டுமிருந்தது.

வள்ளியம்மை எங்கள் தாத்தாவுக்கு இரண்டாம்தாரம். தாத்தா சுப்பிரமணியர் (சாதிப் பின்னொட்டு, சில குற்றச்சாட்டுகளுக்காகத் தவிர்க்கப்படுகிறது.
சாதி அவருக்குப் பெயரில் இருந்தது, குற்றம் சாட்டுபவர் மனதில் வண்டி வண்டியாக இருக்கிறது) தனது பதினைந்து வயதில் மூலைக்கரைப்பட்டி அருகிலிருக்கும் முனைஞ்சிப்பட்டியில் இருந்து பசிக்கு அஞ்சி ஊரைவிட்டு ஓடிவந்தவர். எனவே அவர் முனைஞ்சிப்பட்டிப் பண்ணையார் இல்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது. நாஞ்சில் நாட்டின் சிற்றூர் ஒன்றை அண்டி, மாடு மேய்த்து, தொழுவத்தில் உறங்கி, பிறகு அந்த ஊரிலேயே தென்னை ஓலைக்குடிசை ஒன்று ஒத்திக்குப் பிடித்து, பணகுடி அத்தை மகளை மணந்து, இரண்டு ஆண்மக்களைப் பெற்று அவள் இறந்து போக, இரண்டாந்தாரமாக சொந்த சாதி அல்லாத பறக்கை வள்ளியம்மையை மணம் முடித்தார். என் அம்மை நெடுமங்காட்டுகாரி, என் மனைவி திருவனந்தபுரத்துக்காரி, என் மருமகள் ஸ்ரீகாகுளம், எனக்கு பலமுறை தோன்றுவதுண்டு, என் மகன் என்ன சாதி, அவன் முனைஞ்சிப்பட்டியா, வீரநாரயணமங்கலமா, பறக்கையா, நெடுமங்காடா, திருவனந்தபுரமா என்று, எனக்கு நல்ல போத்தியம் உண்டு. எழுத்தாளன் திமிர், உண்மைத்திமிர், நேர்மைத்திமிர் அன்றி, சாதித்திமிர் அல்ல. பஞ்சம் பிழைக்க ஓடிவந்து,மாடு மேய்த்து, குடிசையில் வாழ்ந்த வம்சாவளிக்கு வேறு என்ன வாய்க்கும், அது கிடக்கட்டும், குறுக்குச் சால்.

பறக்கை எனும் ஊர், சுசீந்திரத்தில் இருந்து, தெற்கு மண்ணில் இறங்கி, தெற்கு நோக்கி நடந்தால், நெடுங்குளம் தாண்டி வருவது. பத்துப் பன்னிரண்டு வயது வரைக்கும், பறக்கை நெடுந்தெருவில் இருந்த ஆத்தாவின் தம்பி, எங்க அப்பாவுக்குத் தாய்மாமன் வீட்டில் வந்து சில நாட்கள் நின்றிருக்கிறேன், சுசீந்திரத்தில் தாணுமாலயப் பெருமாள் எனில் பறக்கையில் மதுசூதனப் பெருமாள். முன்னவர்
சிவன் பின்னவர் திருமால்.

எம் வயது ஒத்தவர்க்கு, கம்பராமாயணப் புலவர், பறக்கை பரமார்த்தலிங்கம் பிள்ளை பெயர் நினைவுக்கு வரலாம், சிலருக்கு நாட்டார் வழக்காற்றியல் அறிஞர், பேராசிரியர், முனைவர் அ.கா.பெருமாள் ஞாபகம் வரலாம். The hindu ஆங்கில நாளிதழின் பத்திரிகையாளர் நா.கோலப்பன் தெரிந்திருக்கலாம், திரைப்பட இயக்குநரும் நடிகருமான அழகம் பெருமாளை அறிந்திருக்கலாம், பறக்கை நெடுங்குளமும் நஞ்சை வயல்வெளிகளும் மற்றெந்த திருமால் கோயில்களிலும் கிடைக்காத மதுசூதனப் பெருமாளின் மாம்பால் பிரசாதமும் எனக்கு என்றும் கவர்ச்சிதான். மதுசூதனப்பெருமாள் பெயர் அல்லது பறக்கை எனும் தலத்தின் பெயர் நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் எங்கெனும் குறிக்கப் பெற்றுள்ளதா என இனிமேல் தான் தேட வேண்டும்.

பறக்கை நெடுந்தெரு வள்ளியம்மையின் மூத்தமகன் எங்கள் அப்பா. வள்ளியம்மை பெயர் சொல்லிக்கொண்டு எங்கள் குடும்பத்தில் சில வள்ளியம்மை, வள்ளி வேலு உண்டு. அடுத்த தலைமுறையில் அது அழிந்து போகும். என்னுடன் சுப்பிரமணியமும் இல்லாமலாகும். என் அப்பா, அவரது 55 &வது வயதில் இறந்து போன பிறகும் சில ஆண்டுகள் வாழ்ந்திருந்தாள், வள்ளியம்மை. நடை தாழ்ந்து, பற்கள் விழுந்து, பாம்படக்காதும் பல்லில்லா வாயுமாக, தோல் சுருங்கி, ஒடுங்கி, பங் கொண்டை சிக்கு விழுந்து, என்றுமே ஜாக்கெட் அணிந்திராத இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலையோடு...

அப்பாவின் கிழமை முறைகளுக்கு, மூலைக்கு வைத்து அழுத பயறும் தோசையும் ஆசையாகத் தின்பதைப் பார்த்து, ஆற்றாமையுடன் உறவினர்கள், அவள் காது பட, ‘பெத்த மகனுக்கு கெழமைக்கு வைத்து அழுத தோசையும் திங்கக் கொடுத்து வெச்சுருக்கு' என்று சொன்னதைக்
கேட்டுக் கண்ணீர் வடித்து... புத்திர சோகம் என்பது இராவணனுக்கு மட்டுமேயா?

தனிகுடித்தனம் இருந்த வள்ளியம்மை வீடும் கூரை வீடுதான், வீடெனக் கொளலும் ஆகா! கட்டை மண் வைத்துக் கட்டி, தென்னையோலை வேய்ந்தது. ஒரு கதவு, ஒரு சன்னல், நீண்ட மண் படிப்புரை. வீடென்பதே எட்டுக்கு இருபதடி நீளமான புரைதான். ஒரு ஓரத்தை அடுக்களை, மறு ஓரத்தை அரங்கு, நடுவில் இருப்பதைத் திண்ணை எனலாம், திண்ணை என்றால் இங்கு படிப்புரை என்று பொருளல்ல,ஹால் எனக் கொள்க.

கணவர் பெயர் என்பதால் என்னைப் பெயர் சொல்லிக் கூப்பிடமாட்டாள், அவர் பெயர் சுப்பிரமணிய பிள்ளை. சுப்பையா என்பார்கள், ஆத்தா சுப்பு, உப்பு, குப்பு, அப்பு, பப்பு எனும் சொற்களை உச்சரிக்க மாட்டார். உப்பை கரைக்கப்பட்டது என்பாள், என்னை முருகா என்பாள், முருகன் என்றால் அழகுதானே ! அமாவாசை ஒடுக்கத்திய வெள்ளிக்கிழமைகள் விரதநாட்கள் என்பதால் அவளும் தோசைக்கு போடுவாள், ஆழாக்கு உளுந்தம்பருப்பு, உரி புழுங்கலரிசி, கைப்பிடி வெந்தயம் , உப்புப்போட்டு அரைத்தல் ஆகா. அவளே மாவாட்டுவாள், மாவு சேர்க்கும் போது பரல் உப்புப்போட்டு பிசைந்து வைப்பாள். எனக்கு வாய்க்கும் போது, படிப்புரையில் பதித்திருந்த ஆட்டுரலின் குழவியை நான் ஆட்ட, அவள் மாவை ஒதுக்குவாள்.

வேகமாக நான் குழவியை ஆட்டும் போது, ஒரு நாள் ஆத்தா விரல் நைந்து விட்டது. ‘ஏகாலனாப் போவான்... எதுக்கு இந்த வெப்ராளம்'  என்று வைதாள், ஆத்தா வைதாலும் வாழ்த்துதான். முருகன் மட்டும்தானா, ‘வைதாரையும் அங்கு வாழவைப்பான்?' அமாவாசை அன்று ஆத்தாவின் காலைப் பலகாரம் ஆகும். மாதத்தின் பிற நாட்களின் காலைக்கஞ்சியை மதிய  விருந்தாகக்கூட உட்கொள்வாள். ஆனால் விரத நாட்களில் குளிக்காமல் அடுப்பில் தீப்பெருக்குவதில்லை. தனக்கு சுட்டுக்கொண்டது போக, எனக்கும் ஒன்று சுட்டு, தோசைக்கல்லிலேயே அரிவட்டி போட்டு மூடி வைத்திருப்பாள். மாலை பள்ளி விட்டு வந்தவுடன் காக்கித்துணியில் தைத்த புத்தகப்பையைத் தூக்கிக் கடாசி விட்டு ஆத்தா வீட்டுக்கு போவேன். ஒரே நோக்கம், ஏதேனும் மிச்சம் மீதி தின்னக்கிடைக்கும் என்பதே.! பசி, திராவிடக்கட்சிகள் போல் ஆட்சிசெலுத்திய காலம்.

"தோசைக் கல்லிலே மூடி வெச்சுருக்கேன், எடுத்துத் திண்ணு'' என்பாள். அம்மியில் நுணுக்கிய மிளகாய்ப் பொடி இருக்கும். மிளகாய்ப்பொடி என்பது இன்று போல், மிக்சியில் அரைக்கப்படுவதில்லை, உரலில் இடிக்கப்படுவது, அல்லது அம்மியில் நுணுக்கப்படுவது. என்ன வேறுபாடு என்பீர்கள். இன்ஸ்டண்ட் காபிக்கும், ஃபில்டர் காபிக்கும் உள்ள வித்தியாசம்தான். ஆத்தா காலையில் சுட்டு ஆறிக்கிடக்கும் தோசையை, மிளகாய்ப்பொடியின் தயவு இன்றியே நிக்கர் பாக்கெட்டில் நான்காக மடித்து திணித்து விளையாட போனால் அங்கு இரண்டு பேர் தோசையில் பங்கு கேட்பார்கள்.

ஊரில் எவரும் இறந்து போனால், காடாத்து தொடங்கி பதினாறு அடியந்திரம் முடியும் வரை ஞாயிறு, வியாழன், கிழமை முறைகளில், இறந்தவருக்காகப் பலகாரங்கள்  சுட்டு வைத்து அழுவார்கள். பெரும்பாலும் வேகவைத்த பெரும்பயிறு, கொண்டைக்கடலை, தோசை, முறுக்கு, முதலானவை. தோசைக்கிழமை, முறுக்குக் கிழமை, என்பார்கள். தோசைக் கிழமை எனில் வெறும் தோசைதான், மிளகாய்பொடி, நல்லெண்ணெய்,
சட்னி, சாம்பார், துவையல் எதுவும் கிடையாது, சற்று
யோசித்து பாருங்கள், 120 வீடுகள் கொண்ட கிராமத்தில் வீட்டுக்கு இரண்டு என்று 240 தோசை, மற்றும் வெளியூர்களில் இருந்து துட்டி கேட்டு வந்தவர்களுக்கும் விளம்ப வேண்டும், குறைந்தது நானூறு தோசைகள் சுட்டு அடுக்கி இருப்பார்கள். எல்லாம் விற்றுத் தீர்ந்தும் போகும்.

அந்தத்தோசைக்கு ‘எழவு வீட்டுத்தோசை' என்று பெயர். எழவூட்டுத்தோசை என்றால் ருசி குறைந்தது என்பதல்ல. வெந்தயம் மணக்க, நல்லெண்ணெய் மணக்க இருக்கும். அம்மை சுட்டாலும், சித்தி சுட்டாலும், வள்ளியம்மை சுட்ட தோசைக்கு அப்புறம்தான். பத்தங்குல விட்டம், அரையங்குல கனம். இன்று ஒரு தோசை தின்னவே நமக்கு விதி. அன்று சுட்டுப்போட்டால் ஏழு தின்பேன். என் தம்பியொருவன், கால் நொந்து, கை சலித்து எத்தனை சுட்டுப்போட்டாலும் எழுந்திருக்காமல், அக்காகாரி கண்ணீர் மல்க, கை கூப்பி, ‘‘எலே..! போதும் லே. ! எந்தி'' என்று கெஞ்ச வைத்தான்.

இன்று தோசைக்கல்லில் எண்ணெய் தேய்க்க என்று மரத்தில் அல்லது உலோகத்தில் உபகரணம் வாங்க கிடைக்கிறது. அன்று நைந்த துணி, கத்தரிக்காய் காம்பு, அல்லது வாழைக்காய் காம்பு. வேலை முடிந்ததும் தூக்கி எறிந்தும் விடலாம்.

சொன்னால் நீங்கள் நம்ப வேண்டும்! எனக்கு இந்த வயதிலும் தொடர்ந்து வரும் கனவுகள் இரண்டு, ஒன்று படமெடுத்த பெரும் பாம்பு & நாகம், அரவம்& மாசுணம்&உரகம்& சேடன் & துரத்தித் துரத்தி வருவது. இன்னொன்று & பெரிய என்று
சொன்னாலே போதும், ஒரு கெத்துக்காக சொல்கிறேன், மகா மகாப் பெரிய & தோசை ஒன்றை வைத்துக்கொண்டு தின்ன மாட்டாமல் தின்று கொண்டிருப்பது.. கனவுகளின் பலன்
சொல்லும் இந்நாட்டு மேனாட்டு ஞானிகள் என்ன
சொல்வார்களோ !

தோசைக்கு, கோயில் ஒன்றுக்கு, அரிசி, உளுந்து, எண்ணெய் வழங்கப்பட்டதாக, கிருஷ்ணதேவராயர் கல்வெட்டு ஒன்று கூறுவதாக 'தமிழர் உணவு'  எனும் நூலில் பேராசிரியர் சே.நமச்சிவாயம் குறிப்பிடுகிறார். வெளியீடு, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம். எத்தனை ஆயிரம் ஆண்டுகளாக தோசை தமிழர் உணவாக இருந்தது என்பதைச் சொல்வது ஆய்வாளர் வேலை. நாங்குநேரி வானமாமலைப் பெருமாள் கோவிலில் தோசை ஒரு பிரசாதம்.

 தோசை வைத்தே சிலருக்கு பட்டப்பெயர் உண்டு. கருப்பட்டி தோசை, சோளாந்தோசை, எழவூட்டுத்தோசை என்று. எழவு வீட்டில் வாங்கிய தோசை எட்டுப்பத்தை வெகு பிரியமாகத் தின்றிருப்பார் போலும்.

தேங்காய்த் தோசை, வீட்டில் தோசைக்குப் போடும் ஒவ்வொரு முறையும் -அநேகமாக ஆண்டுக்கு முப்பது முறைக்கு மேல் போகாது - சாத்தியம். கருப்பட்டித் தோசை ஆண்டுக்கு இரண்டு மூன்று முறைதான். சினை இட்டிலி போல் எப்போதாவது நிகழும். இலைப்பணியாரம்   ஒவ்வொரு திருக்கார்த்தியலுக்கும். இடையில் பலாப்பழ பருவ காலத்தில், சக்கைப்பணியாரம்.

எதற்குத் தேங்காய்த்தோசையை நினைக்கும் போது வள்ளியம்மைக் கிழவி ஞாபகம் வரவேண்டும்? நாஞ்சில் நாட்டில் அவள் ஒருத்திதான் தேங்காய்த் தோசை சுட்டாளா? அல்லது அவள் சுட்ட தேங்காய்த்தோசைதான் ஆகச்சிறந்த தேங்காய் தோசையா?

அப்படியெல்லாம் இல்லை, ஆனால் எல்லா மாந்தருக்கும் சில பண்டங்களைத் தொடர்புபடுத்தித் தம் உறவுகளை நினைவு இருக்கும். நினைவுகளைப் பேணுங்கள். சந்ததியினருக்கும் சொல்லுங்கள். ஏனெனில் 1973ம் ஆண்டு, பம்பாயில், அன்றைய விக்டோரியா டெர்மினஸ் பக்கவாட்டுச் சாலையில் இருந்த, times of india கட்டடத்தை அடுத்திருந்த இசுலாமிய உயர் நிலைப்பள்ளியில் ஜே.கிருஷ்ணமூர்த்தி உரையாற்றினார். நாற்பத்தைந்து ஆண்டுகள் கடந்தும், அவர் சொற்பொழிவில் எனக்கு நினைவிருக்கும் விடயம் ஒன்றுண்டு. உலகின் கடைசி மனிதனின் நினைவில் ஒருவன் இருக்கும்வரை, அவனுக்கு மரணமில்லை என்பது. எனது புத்தகங்கள் வாசிக்கப்படும் வரை, எனக்கு மரணமில்லை.

அப்பா 1976 ஏப்ரலில் இறந்தார். ஒன்றிரண்டு ஆண்டுகள் சென்று, எனது பம்பாய் அலுவலக முகவரிக்கு ஒரு உள்நாட்டுத் தபால் வந்தது, செய்தி, வள்ளியம்மை ஆத்தாள் காலமானார் என்பது. அப்பா செத்ததற்கே மூன்றாம் நாள்தான், காடாத்தம் முடிந்த பிறகு, போய்ச் சேர்ந்தேன். அதுதான் நம் கைப்பொருள் உறுதி. ஆத்தா செத்ததற்கு எங்ஙனம் போவது? அலுவலகத்தில் இருந்து, தங்கு அறைக்கு வந்ததும் குளித்தேன். தலையின் இழிந்த நீரில் சில துளிக் கண்ணீர் கலந்து வடிந்திருக்கும்.

இன்று எனக்கும் முதுமை வந்து சேர்ந்து விட்டது. ‘யாறு நீர் கழிந்தன்ன இளமை' என்கிறார் நாலடியார். ஆற்று நீர் வடிவதைபோல இளமையும் வடிந்து போகும் என்பது பொருள்.

பிப்ரவரி, 2019.

logo
Andhimazhai
www.andhimazhai.com