“யாரும் இவன்கிட்ட கிளாப்பை வாங்க கூடாது!”

“யாரும் இவன்கிட்ட கிளாப்பை வாங்க கூடாது!”
Published on

முதல் படத்திலேயே நாயகனாக விஜய் சேதுபதி, தனக்கென தனித்த திரைமொழி என தமிழ் சினிமாவிற்குள் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் ‘முகிழ்' திரைப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுவாமிநாதனை அவருடைய அலுவலகத்தில் சந்தித்துப் பேசினோம். அவரின் திரைப்படம் போலவே அவரும் மென்மையாகப் பேசத் தொடங்கினார்.

பதினோராம் வகுப்பு சேர்ந்த  முதல்நாள்  வகுப்பு டீச்சர்  மாணவர்கள் அனைவரையும் கட்டுரை ஒன்று எழுதச் சொன்னார். அந்த சமயத்தில், கிருஷ்ணா நதி நீரை சென்னைக்கு கொண்டு வருவதற்காக பைப் லைன் பள்ளங்களை எடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்த பள்ளங்கள் பன்னிரண்டு அடி ஆழத்திற்கும் மேலிருக்கும். அதை வைத்து சிறிய கதை ஒன்று எழுதினேன்.

நாய்க்குட்டி ஒன்று அந்த பைப் லைன் பள்ளத்தில் விழுந்துவிடும், அதைக் காப்பாற்ற நானும் பள்ளத்தில் குதிப்பேன். பிறகு தான் தெரியும், நானும் அந்தப் பள்ளத்தில் மாட்டிக் கொண்டேன் என்று. அதிலிருந்து மேலே வருவதற்காக நானும் நாய்க்குட்டியும்

சேர்ந்து கத்துவோம், எங்களின் அலறல் சத்தத்தைக் கேட்டவர்கள் எங்களை வந்து காப்பாற்றுவது போன்று, அந்தக் கதையை எழுதியிருந்தேன்.'' என்றவர் தாடியைத் தடவிக் கொண்டே பேச்சைத் தொடர்ந்தார்.

‘‘அந்தக் கதையைப் படித்த டீச்சர், ‘யார் எழுதினது இந்த கதையை... நீயா?' என்றார்.

‘‘ஆமாம் டீச்சர், நான் தான் எழுதினேன்'' என்றேன்.

‘‘உண்மையில் நடந்த கதையா...? சும்மா எழுதின கதையை..?'' என்றார்.

‘‘சும்மா தான் டீச்சர் எழுதினேன்'' என்றேன்.

‘சூப்பரா எழுதியிருக்க' என்றவர், என்னை நன்றாக படிக்கும் பையன் என்று நினைத்துக் கொண்டார். தேர்வு முடிவுகள் வந்தவுடன் தான் அந்த டீச்சருக்கு அதிர்ச்சி. நான் அந்த தேர்வில் பெயிலாகிட்டேன்.

‘‘கதை எழுதியதை பார்த்துட்டு நீ நல்லா படிப்பேனு நினைச்சேன்'' என ஆதங்கப்பட்டார்.

பதினோராம் வகுப்பில் சயின்ஸ் குரூப். எனவே மேல்நிலைப் பள்ளியை ரொம்ப கஷ்டப்பட்டு முடித்தேன். இனி சயின்ஸ், கணக்கு போன்ற சப்ஜெட்டுகள் இல்லாத துறையைத் தான் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும் என நினைத்தேன்.

எனக்கு ஜர்னலிசம் படிக்க வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. அந்த  ஆசை ஏன் வந்ததென்றெல்லாம் தெரியாது. அதனால், எஸ்.ஆர்.எம் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேசன் சேர்ந்தேன். அப்போது என்னுடைய சீனியர் ஒருத்தர் குறும்படம் ஒன்று எடுத்திருந்தார். அந்தப் படம் எனக்கு ரொம்ப பிடித்துப் போனது. அது தான் எனக்கு ஃபிலிம் மேக்கிங் மீதான ஆர்வத்தை தூண்டியது எனலாம்.

படிப்பு முடித்தவுடன், அண்ணா பல்கலைக்கழகத்தில் எடிட்டிங் படிப்பதற்கு சேர்ந்தேன். அப்போது தான் எனக்கு சயின்ஸ் மீதான ஆர்வம் வந்தது. மேல்நிலை வகுப்பில் சயின்ஸ் குரூப் எடுத்துப் படித்தது நல்லதென்று, அப்போதுதான் நினைத்தேன். எல்லாவற்றிற்கும் ஏதோ ஒரு காரணம் இருக்கின்றது என்பதை அதன் மூலம் உணர்ந்து கொண்டேன்.

எடிட்டர் ஆண்டனி ஒரு முறை எங்களுக்கு வகுப்பு எடுத்தபோது அவர் எடிட் செய்த டைட்டன் விளம்பரத்தை மாணவர்கள் அனைவரும் தனித்தனியாக எடிட் செய்திருந்தோம். என்னுடைய எடிட்டிங்கை பார்த்தவர்,

‘‘இதுக்கு முன்னாடி இந்த விளம்பரத்தை பார்த்துட்டீயா  நீ'' என்றார்.

‘‘இல்லை'' என்றேன்.

‘‘நீ பார்த்திருக்க.... நான் எடிட் செய்திருப்பது போலயே இருக்குது.... ஒரு ஷாட் மட்டும் தான் மாறியிருக்குது'' என்றார்.

 அப்போது,  எனக்குள் நானே நினைத்துக் கொண்டேன், நமக்குள்ளும் எடிட்டர் ஒருத்தன் இருக்கின்றான் என்று.

இயக்குநர் ஜீவா சாரிடம் உதவி இயக்குநராக

சேர்வதற்கு முயற்சி செய்தேன். அவர் நேரில் வந்து பார்க்கச் சொன்னார். அவர் வர சொன்னதற்கு முன்னாள் இரவு எடிட்டிங் வேலை பார்த்ததால்  மறுநாள் காலை பத்து மணி வரை தூங்கிவிட்டேன். அவர் என்னை வர சொன்னது பத்து மணிக்கு. பிறகு என்ன செய்வதென்றே தெரியாமல் ஒரு மாதம் கழித்து, நேராக அவருடைய அலுவலகத்திற்கே சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்.

 ‘‘யோவ், உன்னை ஒரு மாசத்துக்கு முன்னாடி வர

சொன்னேன்...நீ இன்னைக்கு வந்திருக்க...'' என்றார்.

பதில் ஏதும் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்தேன்.

‘‘நீ எடிட் செய்ததைக் காட்டு'' என்றார்.

 நான் அவரிடம் எடிட்டிங்கிற்கு வாய்ப்பு கேட்பதாக  நினைத்துக் கொண்டிருந்தார். அந்தசமயத்தில், ஜீவா சார் என்னை ஒரு எடிட்டராக பார்த்தது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஆனால், என்னுடைய விருப்பம் உதவி இயக்குநராக சேர்வது தான்.  அதை  அவரிடம் சொன்னேன்.

‘‘தெளிவா சொல்லு... எடிட்டரா சேரப்போறியா?... அசிஸ்டெண்ட் டைரக்டராக சேரப்போறியா''என்றார்.

‘‘அசிஸ்டெண்ட் டைரக்டர் தான் சார்'' என்றேன்.

‘‘சரி மணி வருவார், அவர் கிட்ட பேசிக்கோ'' என சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

எனக்கு ஒரே குழப்பம். ஆனால், என்னை

அசிஸ்டெண்ட் டைரக்டராக சேர்த்துக் கொண்டுவிட்டார் என்பதை பிறகு தான்  தெரிந்துகொண்டேன்.

முதல் நாள் ஷூட்டிங்கிற்கு சென்றபோது, கிளாப் அடிக்க சொன்னார்கள்.  நான் சரியாக அடிக்கவில்லை என்பதால், இன்னொரு உதவி இயக்குநர் ஓடி வந்து கிளாப்பை பிடுங்கிக் கொண்டார். அன்றிலிருந்து கிளாப் அடிப்பதென்றாலே பயம். மறுபடியும் ஒரு நாள் அதே சம்பவம் நடக்க, ஜீவா சார் ஒரு  நிமிடம் ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு எனக்கு கிளாப் அடிக்கச் சொல்லிக் கொடுத்தார்.

‘‘யாரும் இவன் கிட்ட இனி கிளாப்பை வாங்கக்கூடாது..'' என்றவர், என்னை பார்த்து ‘நீதான்  இனிமே கிளாப் அடிக்க வேண்டும்' என்று  சொல்லிவிட்டார். இதனால், மேலும் பயம் கூடிவிட்டது. ஆனால் என்னமோ அன்றிலிருந்து கிளாப் அடிப்பது சுலபமாகிவிட்டது.

அவரிடம் இரண்டு படங்களில் வேலை பார்த்தேன் ‘உன்னாலே உன்னாலே',  ‘தாம் தூம்.  அவரிடம்,

சினிமாவைக் கற்றுக் கொண்டதை விட வாழ்க்கையைத் தான் கற்றுக் கொண்டேன். அவர்  போன்ற குரு கிடைத்தது எனக்கு  மிகப் பெரிய விஷயம்.

‘தாம் தூம்' திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக ரஷ்யாவில் இருந்த போது காட்சி ஒன்றை எடிட் செய்திருந்தேன். அந்தக் காட்சியில் ஜெயம் ரவியை கைது செய்துவிடுவார்கள். அதிலிருந்து அவர் தப்பித்துவிடுவார். அது தொடர்பான செய்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும். அதை எடிட் செய்யலாம் என்று முடிவெடுத்து, நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் ரஷ்ய மொழியில் செய்தி ஒன்று  ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது, அதை  ரெக்கார்ட் செய்து, அதில் ஜெயம் ரவியின் புகைப்படத்தை வைத்து, ஒரு முழுமையான செய்தி தொகுப்புக் காட்சியாக அதை எடிட் செய்தேன். அன்றைக்கு படப்பிடிப்பு ரத்தாகி இருந்ததால் ஜீவா சார் கடுமையான கோபத்திலிருந்தார். அவரிடம் எடிட் செய்த வீடியோ கிளிப்பிங் பாக்குறீங்களா என்று கேட்டோம். வீடியோவை பார்த்தவர் ரொம்ப சந்தோஷமாகிவிட்டார். அது எனக்கு மிகப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது.

ஜீவா சார் இறந்துவிட்ட பிறகு, யாரிடமும் அசிஸ்டெண்டாக சேர்வதற்கு தோன்றவில்லை. அதுவரை கிடைத்த அனுபவங்களே போதுமானதாக தோன்றியது. பிறகு ஒரு நிமிடம் அளவுக்கு சமூக விழிப்புணர்வு குறும்படம் ஒன்று எடுத்திருந்தேன். அந்த குறும்-படத்தை தியேட்டரில் ஒளிபரப்ப வேண்டும் என விரும்பினேன். அப்போது ‘வெண்ணிலா கபடி குழு' படம் வந்திருந்தது. அந்த படத்தின் எடிட்டர் எனக்குத் தெரிந்தவர் என்பதால், அவரிடம் என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்தேன். அவர் படத்தின் தயாரிப்பாளரிடம் பேசி, ‘வெண்ணிலா கபடி குழு' படத்தின் இடைவேளையில்  என்னுடைய குறும்படத்தைப் போடுவதற்கு அனுமதி வாங்கினார். அந்த குறும்படத்தை தியேட்டரில் சென்று பார்த்த அனுபவம் மேலும் எனக்கு உத்வேகத்தைக் கொடுப்பதாக இருந்தது. அதே விளம்பரம் காஞ்சிபுரம் என்ற படத்திலும், விஜய் டிவியிலும் ஒளிபரப்பானது.

என்னுடைய திருமணத்திற்குப் பிறகு, என் எழுத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. பல விஷயங்கள் புரிய ஆரம்பித்தது. குழந்தை பிறந்த பிறகு அது மேலும் அதிகரித்தது. அதனுடைய தாக்கம் தான் ‘முகிழ்' திரைப்படம். மனைவி மற்றும் குழந்தைகளைப் புரிந்து கொள்வதில் குடும்பம் என்ற சூழல் முக்கியமானது. இப்போது , ‘முகிழ்' படம் எடுத்ததற்கு திருமண வாழ்வில் கிடைத்த அனுபவம் பிரதானமானது. ஒவ்வொரு மனித வாழ்விலும் குடும்பம் முக்கியமான அங்கம். குடும்பம் நம்மை ஒரு சமநிலையில் வைத்திருக்கும். என்னுடைய பலம் என் குடும்பத்தினரும் என் நண்பர்களும் தான்.

2011ஆம் ஆண்டு ‘இடைவேளை' என்ற குறும்படம் எடுத்திருந்தேன். அந்த குறும்படத்தைப் பார்த்த விஜய் சேதுபதி படத்தை வாங்கிக் கொண்டார். அந்த குறும்படத்தை இந்த வருடம் பிப்ரவரி மாதம்  அவருடைய யூடியூப் சேனலில் வெளியிட்டார்.

இதற்கிடையே ‘ச்சே' என்ற குறும்படத்தை எடுத்தேன். அதில் பக்ஸ், ராஜ்குமார்  நடித்திருந்தனர்.

விஜய் சேதுபதியை சந்திக்கும்போதெல்லாம்  குறும்படத்திற்கான கதை எதாவது இருந்தால்  சொல்லுங்கள், நானே படத்தைத் தயாரிக்கிறேன் என்பார். அப்படித்தான் 'முகிழ்'கதையை அவரிடம்  சொன்னேன். கதையைக் கேட்டவர் உடனே நடிப்பதற்கும் ஒப்புக்கொண்டார். அதேபோல், ரெஜினா இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது படத்திற்கு மிக பெரிய பலமாக அமைந்தது.

படப்பிடிப்பிற்காக விஜய் சேதுபதியிடம் இரண்டு நாள் தான் கால்ஷீட் கேட்டிருந்தேன். ஆனால், அவருடைய காட்சிகளை இரண்டு நாட்களில் எடுக்க முடியவில்லை. இதனால், ஐந்து நாள் கொடுத்தார்.  இந்தப் படம் ஒரு சுயாதீன திரைப்படம்.

படத்தில் அயர்ன் கடைக்காரராக நடித்திருப்பவர் என்னுடைய நண்பர். அவர் ‘அசுரவதம்' என்ற படத்தின் இயக்குநர். அதேபோல், ஸ்ரீஜா யாரென்று தெரியும். படத்தில் அவர் நடிக்கவேயில்லை, படத்தில் இருப்பது போன்று தான் அவருடைய குணமே. அவர் எப்படி இருப்பாரோ அதே போல் தான் இந்த படத்திலும் இருந்தார். படத்தில் நிறையக் காட்சிகள் அப்படித் திட்டமிடப்படாமல் நடந்தவை, என்றவர், படத்தில் பணியாற்றிய இசையமைப்பாளர், படத்தொகுப்பாளர், ஒளிப்பதிவாளர்களைப் பற்றி சிலாகித்துப் பேசினார்.

 ‘சினிமா எனக்கு பிடித்திருந்தது. எந்த இடத்திலும் எனக்கு அது  அவநம்பிக்கையைக்  கொடுக்கவில்லை. முகிழ்  படத்தில் நான் என்ன கற்றுக் கொண்டேன் என்பது என்னுடைய அடுத்த படத்தில் தான் தெரியும். முழு நீள திரைப்படத்திற்கான கதை தயாராக இருக்கின்றது. என்னுடைய சினிமா வாழ்க்கையில் ‘முகிழ்' நல்ல ஒரு தொடக்கம்,' என்றார் நம்பிக்கையுடன்.

நவம்பர், 2021.

logo
Andhimazhai
www.andhimazhai.com