யாராவது உற்றுப்பார்த்தாலே எனக்குக் கூச்சமாக இருக்கும்! - நடிகர் இளவரசு

யாராவது உற்றுப்பார்த்தாலே எனக்குக் கூச்சமாக இருக்கும்! - நடிகர் இளவரசு
Published on

நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல்வேறு வேடங்களில் நடித்திருக்கும் நடிகர் இளவரசுவை அந்திமழைக்காகச் சந்தித்தோம். விரிவாகப் பேசினார்.

“எனக்குப் பதினாறு வயதாகும்போது நண்பர்களாக இருந்ததெல்லாம் என்னைவிட இருபது வயது மூத்தவர்கள்தாம். ஆசிரியர், வழக்குரைஞர் என்று என்னுடைய நண்பர்கள் பட்டாளம் பெரிது. அவர்களோடு உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பது, பெரும்பாலும் அவர்கள் பேசுவதைக் கவனித்துக்கொண்டிருப்பது என்று என்னுடைய காலம் போய்க்கொண்டிருந்தது. அவர்களோடு சேர்ந்ததில் எனக்கு வாசிப்புப்பழக்கம் வந்தது. அவர்களுக்காக மேலூரிலிருந்து மதுரை போய்ப் புத்தகங்கள் வாங்கிவருவேன். இதனால் இலக்கிய ரசனை, இடதுசாரிச்சிந்தனை ஆகியன எனக்குள் இருந்தன. அந்தக்காலத்தில் என்னுடைய அக்கா ஒருவர், ஜெயகாந்தன் புத்தகங்கள் கல்கி, மஞ்சரி, கலைமகள் ஆகிய புத்தங்களைத் தொடர்ந்து வாங்குவார். அதனால் எனக்கு படிக்கும் பழக்கம் அதிகரித்தது. இதனால் எனக்குக் கொஞ்சம் பக்குவம் வந்தது. 19 வயதிலேயே ஒரு மேதாவித்தனமும் வந்துவிட்டது. உலகத்தில் எல்லாமே தப்பாக இருக்கிறது. நாம் மட்டும்தான் சரியாக இருக்கிறோம். இதை எப்படிச் சரிசெய்யப்போகிறோம் அல்லது இதற்குள் எப்படி வாழப்போகிறோம் என்றெல்லாம் யோசித்துக்கொண்டிருப்பேன். அந்த நேரத்தில் ஒருநாள், நிழல்கள் படம் பார்த்துவிட்டு வந்த என்னுடைய புரொபசர் கேவிக்கேவி அழுதார். நிழல்கள் படத்தின் கதாபாத்திரம் அவரை அந்த அளவுக்குப் பாதித்தது. அதைப்பார்த்தவுடன் எனக்குள் உடனடி மாற்றம் ஏற்பட்டுவிட்டது. அதுவரை சினிமா பற்றி எந்தக்கவனமும் இல்லாமல் இருந்த நான் சினிமாவைக் கவனிக்கத் தொடங்கினேன். 

சினிமா பற்றி ஆர்வம் வந்ததும் சினிமாவுக்குள் போகவேண்டும் என்கிற எண்ணமும் வந்துவிட்டது. அப்போது சினிமாவில் இருந்த எடிட்டர் வெள்ளைச்சாமி எங்க ஊர்ப்பக்கம். அவரோடு போய் இருக்கிற வாய்ப்புத் தேடிவந்தது. சினிமாவுக்குள் போகணும்னு நினைக்கும்போதே அந்த வாய்ப்பு வந்தது எனக்காகத் தான் இருக்கும். அப்போது சென்னையில் ஓவியராக இருந்த என் மாமா கே.சி.முருகேசன் அவருடைய சினிமா நண்பர் பலராமனிடம் என்னை அனுப்பினார். அவர்தான் கதை வசனம் எழுதவது என்பதை விட தொழில்நுட்பரீதியாக சினிமாவுக்குள் இருப்பது நல்லது என்று சொல்லி என்னை ஸ்டில்ஸ் ரவியிடம் உதவியாளராகச் சேர்த்துவிட்டார். 1981-இல் அவரிடம் சேர்ந்தேன். ஓராண்டுதான் அவரோடு இருந்தேன். அதற்குள் எனக்குப் பலவகையான அனுபவங்கள். எல்லாப் பிரபலங்களையும் பக்கத்திலிருந்து பார்த்தேன். அவ்வளவு பேரையும் பார்த்து அவர்கள் பேசுவதையெல்லாம் கேட்கிற நேரத்தில் எனக்கு எதுவுமே தெரியவில்லை; நாம் கற்றுக்கொள்ளவேண்டியது நிறையஇருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டேன்.

 83 ஆம் ஆண்டு நான் ஒளிப்பதிவாளர் கண்ணன்சாரிடம் உதவியாளராகிறேன். எடிட்டர் லெனின் சார் இயக்கிய எத்தனைகோணம் எத்தனைபார்வை படம்தான் நான் முதலில் உதவியாளராக வேலை செய்த படம். அதன்பின்னர் பாரதிராஜா படங்கள். அங்குபோய் ஒளிப்பதிவு உதவியாளர் என்றில்லாமல் எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருந்தேன். டிரைவர் வரவில்லையென்றால் டிரைவர், புரொடக்‌ஷன் பாய் வரவில்லையென்றால் அந்த வேலை என்று எல்லா வேலைகளையும் செய்வேன். முதல்மரியாதை படத்தில் புரொடக்‌ஷன் மேனேஜர் வேலை பார்த்தேன். இப்படிப் பல வேலைகளைச் செய்ததால் எனக்குப் பல்வேறு அனுபவங்கள் கிடைத்தன. நிறைய வேலைகள் செய்தாலும் அது எனக்குச் சிரமமாகத் தெரிந்ததில்லை எல்லாவற்றையும் விரும்பிச்செய்தேன்.

89 ஆம் ஆண்டு அதியமான் இயக்கத்தில் தயாரான ருக்குமணி வண்டிவருது படத்தின் பாடலாசிரியர் மற்றும் வசன கர்த்தாவாக சீமான் எனக்கு அறிமுகம். அப்போதிருந்து இருவரும் நிறையப் பேசிக்கொண்டிருப்போம். அவருடைய கதைவசனத்தில் உருவான பசும்பொன் படத்திலும் நான் வேலை செய்தேன். 95 ஆம் ஆண்டு அவர் பாஞ்சாலங்குறிச்சி படத்தை இயக்கினார். அந்தப்படத்தில் நான் ஒளிப்பதிவாளரானேன். 95-ல் தொடங்கிய அந்தப்படம் 96 தீபாவளியன்று வெளியானது. அடுத்து சீமான் உடன் இருந்த செல்வபாரதி இயக்கிய நினைத்தேன் வந்தாய் படத்துக்கு ஒளிப்பதிவு செய்தேன்.  இவை நான் தேடிப்போகாமலே எனக்குக் கிடைத்த வாய்ப்புகள்.

அப்புறம் சுபாஷ் இயக்கத்தில் சபாஷ், லவ் மேரெஜ், ஆயிரம் பொய் சொல்லி, சர்வாதிகாரி ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தேன். இவற்றில் இரண்டுபடங்கள் வரவில்லை. சிவச்சந்திரன் இயக்கத்தில் வந்த ‘மனம் விரும்புதே உன்னை’ படம் எனக்கு மாநிலஅரசின் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை வாங்கிக்கொடுத்தது.

நான்தான் எந்த வேலைக்கு ஆள் வரவில்லையோ அந்த வேலையைச் செய்பவனாயிற்றே. அப்படித்தான் பாரதிராஜா சார் படங்களில் சின்னச்சின்ன வேடங்களில் நடித்தேன். அந்தக்குழுவிலிருந்து வெளியே வந்து நான் நடித்த படம் சேரனின் பொற்காலம். அவரும் மேலூர்காரர். எங்கள் பக்கம் துபாய் போய்விட்டு வருகிறவர்களைப் பார்க்க பேருந்து நிலையத்தில் பெரும்கூட்டம் கூடும் என்றால் நீங்கள் நம்பித்தான் ஆகணும். அந்தக்கூட்டத்தில் நானும் இருந்திருக்கிறேன். சேரன் சாரும் இருந்திருக்கிறார். அவர்கள் வந்தவுடன் இங்கிருப்பவர்களை ஏளனமாகப் பார்ப்பதும் எல்லோருக்கும் இலவசமாக அறிவுரைகளை அள்ளி வழங்குவதையும் பார்த்து வளர்ந்திருக்கிறோம் என்பதால் பொற்காலம் படத்தில் அதுபோன்றதொரு வேடத்தில் நடிக்க என்னை அழைத்தார். எனக்கும் அது மிகவும் தெரிந்தவிசயம் என்பதால் ஒத்துப்போனது. எனவே நடித்தேன். அந்தப்படம் என்னை நடிகனாக அடையாளப்படுத்தியது.

ஆனால் அப்போது அதை நான் நம்பவில்லை. நிறையப் படங்களில் நடிக்கக்கேட்டு அழைப்பார்கள். கிண்டல் செய்கிறார்கள் என்று நினைத்து அதைத் தட்டிக்கழித்திருக்கிறேன். நடிக்கக்கூப்பிடுகிறார்கள் என்றால் சிரிப்புவரும். முழுநேர நடிகனாவேன் என்கிற நம்பிக்கை கொஞ்சம்கூட இருந்ததில்லை. அதற்குக் காரணமும் இருக்கிறது. நான் ஒளிப்பதிவாளராக இருந்ததால், அதுதான் உயர்வானது நடிப்பு என்பதெல்லாம் ரொம்ப எளிமையானது என்கிற எண்ணம் எனக்குள் இருந்தது. நடிகன் என்பதால் கிடைக்கும் புகழும் என்னை ஈர்க்கவில்லை. ஏனெனில் நான் பாரதிராஜா சாரிடம் இருக்கும்போதே எல்லாப்புகழையும் பார்த்துவிட்டேன். அவருக்குக் காரோட்டிக்கொண்டு போகும்போது அவருக்குக் கிடைக்கும் பாராட்டுகளையெல்லாம் எனக்குக் கிடைத்ததாகவே எண்ணி சந்தோசப் பட்டிருக்கிறேன். அதனால் நான் ஏற்கெனவே புகழ்பெற்றவன் எனக்கு இனிமேல் புதிதாக பாப்புலாரிட்டி தேவையா என்று கூட யோசித்திருக்கிறேன். இவற்றைவிட முக்கியமான விசயம், என்னை யாராவது உற்றுப்பார்த்துவிட்டால் எனக்குக் கூச்சம் வந்துவிடும். நான் ஆரவாரம் இல்லாமல் இருக்க ஆசைப்படுகிறவன். இப்போது கூட படப்பிடிப்புகளுக்காக வெளியூர்களுக்குச் சென்றால் கூட என்னைவிடப் பெரியநடிகர்கள் இருந்துவிட்டால் தப்பித்தேன், நான்தான் அந்தக்குழுவில் தெரிந்த நடிகன் என்கிற நிலையில் என்னைத் தேடிவந்து மக்கள் பேசும்போதும் என்னையே பார்த்துக்கொண்டிருக்கும்போதும் அவ்வளவு கூச்சமாக இருக்கும்.

லவ் மேரேஜ் படத்தின் படப்பிடிப்புக்காக ஸ்விட்சர் லாந்து போயிருந்தோம். அந்தப்படத்தில் விஷாலின் அண்ணன்தான் ஹீரோ. விஷால்தான் தயாரிப்புநிர்வாகம். அவர் மட்டும் செல்போன் வைத்திருப்பார். அப்போது செல்போன் ரொம்பக் காஸ்ட்லியானது. எனவே மொத்தப்படப்பிடிப்புக்குழுவிலும் விஷாலிடம் மட்டும்தான் ஒருபோன்தான் இருந்தது. அந்தப்போனில் என்னைக் கூப்பிட்டார் தவசி படத்தயாரிப்பாளரும் இப்போது நல்லநடிகர் என்று பெயர் பெற்றிருக்கும் ஜெயப்பிரகாஷ் சார். எனக்கு போனா? என்று ஆச்சரியத்துடன் போனை வாங்கிப்பேசினால் தவசி படத்தில் ஒரு முக்கியமான கேரக்டர் இருக்கு அதில் நீங்கள்தான் நடிக்கவேண்டும் என்றார். நான் ரோமிங்கட்டணம் அதிகமாகும்; இரவு பேசுகிறேன் என்று சொல்லி உடனே போனை வைத்துவிட்டேன். இரவு பேசியபோது நான் படப்பிடிப்பு முடித்துவர நாளாகும்

நீங்கள் வேறு யாரையாவது நடிக்கவையுங்கள் என்று சொல்லிவிட்டேன். நீங்கள் வரும்போது படப்பிடிப்பு வைத்துக்கொள்ளலாம் வாருங்கள் என்று சொல்லிவிட்டார்கள். எனக்கோ நடிப்பதில் ஆர்வம் இல்லை என்பதோடு சென்னை திரும்பியதும் தாணு சார் தயாரிப்பில் ரத்னகுமார் இயக்கும் என்னசொல்லப்போகிறாய்? படத்தின் படப்பிடிப்பு இருக்கிறது. படம் தொடங்கும்போதே வேறு ஒளிப்பதிவாளரை வைத்து ஒளிப்பதிவு செய்யச் சொல்லமுடியாது. என்ன செய்வதென்று தெரியவில்லை. இதை இயக்குநர் ரத்னகுமாரிடமும் தாணுசாரிடமும் எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை.

    சென்னை விமானநிலையத்தில் இறங்கியதுமே நேராகத் திருநீர்மலையில் தொடங்கிய படப்பிடிப்புக்கு என்னை அழைத்துச்சென்றுவிட்டார்கள். மெதுவாக இயக்குநரிடம் விசயத்தைச் சொன்னேன். அவரோ அப்படியானால் நீங்கள் போய் நடியுங்கள் என்று சொல்லி விட்டார். ஆனால் தாணு சாரிடம் எப்படிச் சொல்வது? சரி மாலை படப்பிடிப்பு முடிந்ததும் அவரைப் போய்ப்பார்க்கலாம் என்று இயக்குநர் சொல்லியிருந்தார். மாலையில் அவருடைய அலுவலகத்துக்குப் போவதற்கு முன்பே விஜயகாந்த் சார் அலுவலகத்திலிருந்து தாணுசாருக்குப் போன் செய்து இளவரசுவை அனுப்பிவையுங்கள் என்று சொல்லவே ரொம்ப சிம்பிளாக அந்தச்சிக்கல் முடிவுக்கு வந்துவிட்டது.  விஜயகாந்த் தேதியைக் கூட எளிதாக வாங்கிவிட்டோம் உங்களைப் பிடிக்கத்தான் ரொம்பக்கஷ்டப்பட்டுவிட்டோம் என்று சொல்லிக் கிண்டல் செய்தார்கள். 2001 தீபாவளியன்று அந்தப்படம் வெளியானது. அப்போதிருந்து நான் முழுநேர நடிகனாகிவிட்டேன்.

சினிமாவுக்குள் பல ஆண்டுகள் இருந்தாலும் ஒளிப்பதிவாளனாகவே இருந்தாலும் நடிப்பதற்காக கேமிரா முன்பு நின்றபோது கூச்சமாகவும் பயமாகவும்தான் இருந்தது. என்னை ஒளிப்பதிவாளராக எல்லோருக்கும் தெரியும்.

செட்டுக்குப் போனால் ஏற்கெனவே இங்கே ஒளிப்பதிவாளர் இருக்கிறாரே இவர் எதற்காக வந்திருக்கிறார் கேமிராமேனை மாற்றிவிட்டார்களோ என்கிற பேச்செல்லாம் வந்துவிடும்.

    தொடக்கத்தில் வட்டாரவழக்கில் பேசியே சமாளித்துவிட்டேன். போகப்போக நடிப்பு பற்றி தெரியத் தொடங்கியதும் பயம் வந்துவிட்டது. எப்படி நடிக்கப்போகிறோம் என்கிற பயம் அப்போதும் -இப்போதும் இருக்கும். நடிகனின் வெற்றி என்பது அவனது பயத்தை மறைத்துக்கொள்வதுதான் என்று சொல்வார்கள். நான் எனக்குள் இருக்கும் பயத்தைத் வெளியே தெரியாமல் பார்த்துக்கொள்கிறேன்.

    பாரதிராஜா சாரிடம் நடிப்பது ரொம்பக் கஷ்டம். முதலில் அவர் சொல்வதைப் புரிந்துகொள்ளவே கஷ்டப்படுவேன். நடிக்கும்போது வசனத்தை எந்த இடத்தில் நிறுத்திப்பேசவேண்டும் என்பது ரொம்ப முக்கியம். அது எனக்கு முதலில் பிடிபடாமல் இருந்தது. பாரதிராஜா சார் அதைச் சரியாகச் சொல்லிக்கொடுப்பார். அதை நுட்பமாக கவனித்து உள்வாங்கிக்கொண்டேன்.

நடிக்கப்போன இடத்தில் அவசரத் தேவைக்காக ஒளிப்பதிவு செய்கிற வேலையும் ஓரிரு இடங்களில் அமைந்திருக்கிறது. அந்த நேரம் இரண்டையும் சமாளிக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டிருக்கிறேன்.

 நடிகனாக நூறுபடங்களுக்கு மேல் நடித்துவிட்டேன். நகைச்சுவை, வில்லன், குணச்சித்திரம், எல்லா வகையான வேடங்களிலும் நடித்துவிட்டேன். இப்படி எல்லாவித வேடங்களிலும் நடிக்கத்தான் நான் விரும்புகிறேன். இப்போது எல்லாவற்றையுமே பொழுதுபோக்காகப் பார்க்கிறார்கள். ஆழமான கதைகளுக்கு இடமில்லாமல் இருக்கிறது. திருட்டு விசிடி, கேபிள்டிவில் புதுப்படம் போடுவது ஆகியன நின்றால்தான் ஆழமான படங்களை எடுக்கமுடியும்.

    என் அப்பா மலைச்சாமி. 67-71 ஆம் ஆண்டில் மேலூர்வடக்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர். அப்பா அரசியலில் இருந்தாலும் எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை. நான் சினிமாவுக்கு வருகிற நேரத்தில் ஏதாவது ஒரு விசயத்தை உருப்படியாகச் செய்தால் போதும் என்பதால் அதற்கு ஒத்துக்கொண்டார் என் அப்பா.”

மே, 2015.

logo
Andhimazhai
www.andhimazhai.com