கசப்பான வேலையா செய்கிறீர்கள்? இதயம் சொல்வதைக் கேளுங்கள். அதாவது ஜஸ்ட் பாலோ யுவர் ஹார்ட்! மனசுக்குப் பிடித்த வேலைக்காகச் செய்யும் தியாகங்கள் வெற்றியைத் தரும். தொலைக்காட்சி நிறுவனமான நெட்வொர்க் 18 குழுமத்தின் நிறுவனத் தலைவர் ராகவ் பெஹல் வாழ்க்கை சொல்வது இதுதான்.
தினமும் காலையில் முதல் வேலையாக பேக்ஸ் ஆபரேட்டரைக் கூப்பிட்டு எனக்கு ஏதாவது பேக்ஸ் வந்திருக்கிறதா என்று கேட்பதுண்டு. வாரத்தில் மூன்று , நான்கு நாட்களுக்கு இல்லை என்ற பதில் வரும்.
ஆம் என்றால், பிபிசியா அல்லது ஸ்டாரா என்று கேட்பேன். உடனே யாரையாவது அனுப்பி அதை வாங்கிக் கொள்வேன்’ என்று பழைய நாட்களை நினைவு கூறுகிறார் ராகவ். இவர் சிஎன்என்ஷஷ ஐபிஎன் உட்பட பல டிவி சேனல்களையும் , பத்திரிகை, இணையதளங்களையும் நடத்தும் நெட்வொர்க் 18 குழுமத்தின் நிறுவனத் தலைவர்.
ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் மகனாகப் பிறந்து எம்பிஏ படித்துவிட்டு ஏ. எஃப் பெர்கூசன் என்ற ஆடிட் நிறுவனத்தில் பணியாற்றிவிட்டு பன்னாட்டு வங்கியான அமெரிக்கன் எக்ஸ்பிரஸில் சேர்ந்தார் ராகவ் .
இது நடுத்தரக் குடும்பங்களின் கனவு வேலை, அது தரும் சொகுசு வாழ்க்கை. அதிலிருந்து விடுபட யாராவது விரும்புவார்களா? ராகவ் விரும்பினார்.
பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் மேடைப்பேச்சு மற்றும் விவாதங்களில் பங்கு பெறுவது ராகவிற்குப் பிடித்த மான ஒன்று . கல்லூரி நாட்களில் தூர்தர்௸ஷனின் யூத் போரம் நிகழ்ச்சிகளில் பங்குபெற்ற அனுபவம் உண்டு.
எண்பதுகளின் இறுதியில் இந்தியாடுடே நிறுவனம் நியூஸ்ட்ராக் என்ற வீடியோ செய்தி பத்திரிகையை ஆரம்பித்தது. அதன் தயாரிப்பாளர்களில் ஒருவரான வினோத்திற்கு ராகவ் தூர்தர்ஷ௸ன் காலத்திலிருந்து பழக்க மானவர். இதில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக வருகிறாயா என்று வினோத் கேட்க, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வேலையை முடித்துவிட்டு மாலை வேளைகளிலும் , சனி ஞாயிறுகளிலும் வேலை செய்வதென்றால் வருகிறேன் என்றார் ராகவ் . அங்கே இப்படி பகுதி நேர பணியில் மூன்று ஆண்டுகாலம் பயணித்த ராகவுக்கு வேறொரு சிந்தனை.
மனதிற்குப் பிடித்த நியூஸ் வேலையை முழு நேரமாக செய்தால் என்ன? அதிக சம்பளம், சமூகத்தில் உயரிய மரியாதை தரும் பன்னாட்டு வங்கிவேலையை விடுவதா ? என்ற சிந்தனைகளுக்குள் சிக்கி தவித்தார் ராகவ்.
பிடித்த வேலையை செய் என்று மனதிற்குள் மணி அடித்தது. வங்கி வேலையை ராஜினாமா செய்துவிட்டு வீடியோ பத்திரிகையில் முழு நேரம் பணியாற்றினார்.
தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் இந்தியாவில் சாட்டிலைட் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு சரியாக முறைப்படுத்தப்படாத நேரம் . ஈராக்கில் யுத்தம் நடந்து கொண்டிருந்தது. ஈராக்கில் குண்டு விழுவதையும்
எதிர் தாக்குதல் நடத்தப்படுவதையும் இந்தியர்கள் சி.என்.என் தொலைக்காட்சியின் மூலம் உடனுக்குடன் பார்க்கும் வாய்ப்பு உருவானது.
தொலைக்காட்சியின் மூலம் நேரடியாக பார்க்கும் வாய்ப்பை இந்தியர்கள் ஒரு வித சிலிர்ப்புடன் அனுபவித்தார்கள். நியூஸ்ட்ராக்கில் இரண்டு ஆண்டுகள்
பணியாற்றிவிட்டு பிஸினஸ் இந்தியா டெலிவிஷனின் பிஸினஸ் பற்றிய வீடியோ பத்திரிகையில் வேலை செய்த ராகவ், நேரடி சாட்டிலைட் தொலைக்காட்சி, வீடியோ பத்திரிகைக்கு சாவு மணி அடித்துவிட்டதை உணர்ந்தார்.
அப்போது மற்றொரு கதவு திறந்தது.
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான நிகழ்ச்சியைத் தயாரித்துத் தர முடியுமா என்று தெரிந்தவர்கள் மூலம் ராகவிற்கு அழைப்பு வந்தது.
தொழில் தெரிந்த நால்வரை கூட்டணியாக வைத்துக் கொண்டு சுமார் இரண்டு லட்சம் ரூபாய் முதலீட்டில் ராகவ் இரண்டு பைலட் நிகழ்ச்சிகளைத் தயாரித்தார்.
த இந்தியா ஷோ, என்ற நிகழ்ச்சி ஹாங்காங்கில் உள்ள ஸ்டார் டிவிக்கும் த இந்தியா பிசினஸ் ரிப்போர்ட் என்ற நிகழ்ச்சி பிபிசிக்கும் அனுப்பப்பட்டன.
இரண்டு நிகழ்ச்சிகளும் ஹிட் ஆயின.
வாழ்க்கையின் அடுத்த அத்தியாயம் ஆரம்ப மானது. டிவி18 என்ற புதிய நிறுவனத்தை சிலரோடு சேர்ந்து பார்ட்னர்ஷிப்பில் ஆரம்பித்தார் ராகவ். 1993ல் பத்து நபர்களைக் கொண்டிருந்த டிவி 18 குழு,
1997ல் நூறைக் கடந்தது. ஸ்டார் டிவி , பிபிசி தவிர ஜீ டிவி மற்றும் சோனி டிவிக்கும் நிகழ்ச்சிகளை தயாரித்தது. இந்த காலகட்டத்தில் அமெரிக்க நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஆசியா பிசினஸ் நியூசுக்கும்(ஏபிஎன்) டிவி18 வாரத்திற்கு மூன்றிலிருந்து நான்கு நிகழ்ச்சிகளை தயாரித்துக் கொடுத்தது.
எல்லாம் சீராகச் சென்று கொண்டிருந்த தருணத்தில் வேறொரு வாய்ப்பின் கதவு திறந்தது.
ஏபிஎன் நிறுவனம் இந்தியாவில் தொலைக்காட்சி ஆரம்பிக்க விரும்பியது. அதுவும் டிவி 18னுடன் கூட்டணி சேர்ந்து தொடங்க விரும்பியது. நல்ல வாய்ப்புதான், ஆனால்வாய்ப்புடன் இரண்டு சிக்கல்களும் ஒட்டிக்கொண்டு வந்தன.
ஏபிஎன்னுடன் கூட்டுத் தொழில் ஆரம்பிக்க வேண்டு மென்றால் மிகப்பெரிய பணபலம் தேவைப்பட்டது. டிவி18 தொலைக்காட்சி நிறுவனம் ஆரம்பிப்பதென்றால் அப்போது செய்து வந்த நிகழ்ச்சி தயாரிப்புகளை தொடர முடியாது என்பது இரண்டாவது சிக்கல். அதிகப்படியான பணம் தேவைப்படுகிற பொழுதில், இருக்கின்ற வருவாயை துறக்க வேண்டிய சூழல்.
மிகப்பெரிய சவால்களை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தமிருந்தாலும் தொலைக்காட்சி ஆரம்பிக்கவே விரும்பிய ராகவ் தன்னிச்சையாக முடிவெடுக்க விரும்பவில்லை. டிவி 18 அங்கத்தினரிடம் தனித்தனியாக வும் , மொத்தமாகவும் அழைத்து ஆலோசனை நடத்தினார். ஒட்டு மொத்தமாக அனைவரும் தொலைக்காட்சி ஆரம்பிக்கவேண்டுமென வாக்களிக்க காரியத்தில் இறங்கினார் ராகவ். நிறுவனத்தின் ஷே௸ர்களை அடமானம் வைப்பது , கடன் வாங்குவது என்று பல்வேறு சோதனைகளைக் கடந்து ஏபிஎன்:டிவி 18 கூட்டு நிறுவனம் 51:49 சதவிகித பங்கீட்டில் ஆரம்பிப்பதற்குஅனைத்து வேலைகளும் முடிந்த நிலையில் மிகப்பெரிய தடங்கல் அரசின் ரூபத்தில் வந்தது.
வெளிநாட்டு நிறுவனங்கள் தனியார் தொலைக்காட்சி ஆரம்பிப்பது குறித்த சரியான வழிமுறைகளை (கொள்கை) மத்திய அரசு ஏற்படுத்தாத காலகட்டம்.
அந்த காலத்தில் (97- 99) ஒரு நிச்சயமற்ற சூழலில் மத்திய அரசு இருந்தது. ஆட்சிகள் கவிழ்வதும் வருவதுமாக மூன்று ஆண்டில் மூன்று அரசுகள் இருந்தன. வெளிநாட்டு நிறுவனத்துடன் சேர்ந்து இந்திய நிறுவனம் கூட்டாக தொலைக்காட்சி தொடங்குவதற்கு தேவையான அனுமதி கிடைக்காமல் திண்டாடிப் போய்விட்டார் ராகவ். அரசாங்கத்தின் அனுமதி கிடைக்காவிட்டால் நூற்றி ஐம்பதிற்கும் மேற்பட்ட பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு நிறுவனத்தை திண்டுக்கல் பூட்டு போட்டு பூட்ட வேண்டிய நிலையிலும், ‘தம்’ கட்டிப் போராடினார் ராகவ்.
நிச்சயமின்மை போய் ஒரு வழியாக 98-99 ஆம் ஆண்டு மத்தியில் நிலையான ஆட்சி ஏற்பட்டது. புதிய தொலை தொடர்பு அமைச்சரான சுஷ்மா சுவராஜிடம்
மீண்டும் முறையிட்டார் ராகவ். தொடர் முயற்சிகளுக்கு பின் ஒரு வழியாக அனுமதி கிடைக்க புதிய தொலைகாட்சி உதயமானது.
அதற்கு பின் நெட்வொர்க் 18 பல சேனல்களை ஆரம்பித்ததும் உச்சத்திற்குப் போனதும் எல்லாருக்கும் தெரிந்த கதைதான்.
வெற்றி பெற்ற அனேகரும் கனவுகளை துரத்தும்போது உறுதியான ஏதோ ஒன்று துறந்து விட்டு போராட வருகிறார்கள். பத்னி கம்ப்யூட்டர் நிறுவனத்தின்
ஜெனரல் மேனேஜர் வேலையை நாராயண மூர்த்தி ராஜினாமா செய்ததால் இன்போசிஸ் கிடைத்தது. அரசாங்க கண்டக்டர் வேலையை சிவாஜிராவ் ராஜினாமா செய்ததால் ஒரு சூப்பர் ஸ்டார் கிடைத்தார்.
மூணு நிமிஷ௸ பாட்டில் முன்னுக்கு வர முடியுமா ? என்பது தமிழ் சினிமாவை பகடி செய்வதற்காக அடிக்கடி கேட்கப்படும் கேள்வி.
ராகவின் பிஸினஸ் பயணத்தையோ , கண்டக்டர் டூ சூப்பர்ஸ்டார் கதையையும் மூன்று பக்கக் கட்டுரையாகவோ , முன்னூறு பக்க புத்தகமாகவோ எழுதலாம் ... ஏன் மூணு நிமிடஷத்தில் முன்னுக்கு வரும் சினிமா பாட்டாகவும் எடுக்கலாம்.
நம்புங்க பாஸ் ... முயற்சி செய்தால் முன்னேறலாம்.
செப்டெம்பர், 2012.