2001ஆம் வருடம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் எழும்பூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டார் பரிதி இளம்வழுதி. அவரை எதிர்த்து அதிமுக ஆதரவுடன் போட்டியிட்டார் ஜான்பாண்டியன். இரு தரப்புக்கும் அவ்வபோது நடந்த மோதல்கள் காரணமாக தொகுதி பரபரப்பாகவே இருந்தது. இந்த நிலையில் பரிதியின் பிரச்சாரத்தை பார்த்து எழுதும் நோக்கில் ஒரு நாள் மதியம் புரசைவாக்கம் மூக்காத்தாள் தெருவில் இருக்கும் அவரது அலுவலகத்திற்கு சென்றேன். அப்போது மதியம் இரண்டு மணி இருக்கும். அலுவலகத்தின் வாசலில் பரிதியுடன் பேசிக் கொண்டிருந்தேன். அந்த சமயம் பார்த்து வேறு ஒரு கட்சிப் பிரமுகர் வரவே அவரை உள்ளே அழைத்துச் சென்றார் பரிதி. நீங்கள் போங்கள், நான் டீ சாப்பிட்டு விட்டு வருகிறேன் என்று ஐம்பதடி தூரத்திற்குள் இருந்த கடைக்குச் சென்றேன்.
ஒரு நிமிடம் கூட ஆகியிருக்காது. பின்னால் ஏதோ சலசலப்பு, திரும்பி பார்த்தால் பரிதி அலுவலக வாசலில், காரிலிருந்து எதிரணியினரின் ஆட்கள் இறங்கினர். அதில் சிலர் கையில் அரிவாள், சவுக்கு கட்டை போன்ற ஆயுதங்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் தாக்குதல் துவங்கியது. முதலில் பரிதியின் கார் அடித்து நொறுக்கப்பட்டது. அடுத்து அந்த கும்பல் அலுவலகத்தின் உள்ளே பாய்ந்தது. அடுத்த ஐந்து நிமிடம் “ஐயோ, அம்மா..விடாதே, வெட்டு” என்ற குரல்கள் தான் கேட்டன. பின்பு வெளியே வந்த அந்த கும்பல் காரில் ஏறிப் பறந்து விட்டது. நான் பரபரப்பாக உள்ளே சென்று பார்த்தேன். மூன்று, நான்கு பேருக்கு ஆழமான வெட்டுக்காயங்கள். அவர்கள் ரத்தம் வழிய வழிய முனகிக் கொண்டிருந்தனர். நல்ல வேளையாக பரிதி, மதில் சுவர் ஏறிக்குதித்து நாஞ்சில் மனோகரன் வீட்டில் ஒளிந்து கொண்டதால் தப்பித்தார். பரிதியின் பேச்சைக் கேட்டு நானும் அலுவலகத்தின் உள்ளே சென்றிருந்தால் எனக்கு என்னாகியிருக்குமோ? இதை எழுதும் போது கூட ஒரு சின்ன நடுக்கம் ஏற்படத்தான் செய்கிறது.
2004ம் வருடம் ஆந்திராவில் சட்டமன்ற தேர்தல் நடந்தது. தமிழகத்தை ஒட்டியிருந்த நகரி தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி சார்பாக போட்டியிட்டார் நடிகை ரோஜா. அவர் வேட்பு மனு தாக்கல்செய்து, பிரச்சாரத்தை துவக்கிய அன்று அவருடன் நான் நகரி தொகுதிக்குச் சென்றேன். முன்னால் சென்ற காரில் ரோஜா, அவரது கணவர் செல்வமணி ஆகியோர் இருந்தனர். பின்னால் சென்ற காரில் நான், எங்கள் புகைப்படக்காரர், மற்றும் ரோஜாவின் உதவியாளர் ஆகியோர் இருந்தோம். மூன்று மணி நேர பயணத்துக்கு பின் நகரிக்குள் நுழைந்தோம். கடைத்தெரு வழியாக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்றது கார். திடீரென்று இரு பக்கத்திலிருந்தும் கார்களின் மீது பெரும் கருங்கற்கள் சரமாரியாக வீசப்பட்டன. போதாதற்கு தடிகளாலும் கார்களை தாக்கினார்கள். காரின் முன்புற பின்புற கண்ணாடிகள் உடைந்தன. நாங்கள் இருக்கைக்கு அடியில் ஒளிந்து கொண்டோம். இரு கார்களின் ஓட்டுனர்களும் தங்களுக்குள்ள ஆபத்தையும் அலட்சியப்படுத்திவிட்டு, மிக சாமர்த்தியமாக வட்டாட்சியர் அலுவலகத்தை அடைந்தார்கள். ரோஜா உள்பட யாருக்கும் எந்த பாதிப்பு இல்லை. படபடப்பு, பயத்துடன் காரின் இருக்கைக்கு கீழ் ஒளிந்திருந்த அந்த திகில் நிமிடங்களை மறக்கவே முடியாது. அந்த தாக்குதலை நடத்தியது ரோஜாவை எதிர்த்து போட்டியிட்டவர் தரப்பு ஆட்கள்தான்.
திமுக தலைவர் கருணாநிதியின் தேர்தல் பிரச்சார கூட்டங்கள் பலவற்றைப் பார்த்து எழுதியிருக்கிறேன். 1999ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அவருடைய வாகன வரிசையில் இடம்பெற்று பயணத்தை கவர் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அன்று பிரச்சாரத்தை துவக்கிய இடம் சைதை தேரடி. அந்த தேர்தலில் முதல் முறையாக பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தது தி.மு.க. எனவே சிறுபான்மையினர் ஆதரவு திமுகவுக்கு கிடைக்குமா என்று விவாதங்கள் அடிபட்டுக்கொண்டிருந்தன. அன்று மேடைக்கு கருணாநிதி வரும் வழியில் சிறுபான்மையோர் ஆதரவு திமுகவுக்கு உண்டு என்பதை வெளிப்படுத்தும் வகையில் நீண்ட வெள்ளை அங்கியுடன் கிறித்துவ பாதிரியாளர்களும், தொப்பியுடன் முஸ்லிம் பெரியவர்களும் நிறுத்தப்பட்டிருந்தனர். நல்ல அடர்த்தியான கூட்டம். “ சென்னையில் நிறுத்தப்பட்டிருக்கின்ற மூன்று வேட்பாளர்களுமே மிஸாவில் சிறை சென்றவர்கள். எனவே உங்கள் ஓட்டை அவர்களுக்கு ‘மிஸ்’ ஆகாமல் போடுங்கள்” என்று கருணாநிதி சொன்னபோது கூட்டத்தில் மெலிதான சிரிப்பலை.
அடுத்து பல்லாவரம், தாம்பரம் என்று வாகனவரிசை விரைந்தது. செங்கல்பட்டில் கருணாநிதி வேனில் தயாளு அம்மாள், மகள் செல்வி ஆகியோர் சேர்ந்து கொண்டார்கள். கூடவே கருணாநிதியின் செல்ல நாயும். மதுராந்தகம், திண்டிவனத்தில் கூட்டம். விக்கிரவாண்டியிலிருந்து கோலியனூர் போகும் வழியில் ஓரம் கட்டப்பட்டது. கருணாநிதி உதவியாளர் பத்திரிகையாளர் வேனுக்கு வந்து தேநீர் கொடுக்கப்பட்டதா என்று விசாரித்துச் சென்றார். நாங்கள் சிலர் கருணாநிதியின் வேனுக்கு சென்று அவருடன் பேசினோம். “பண்டாரம், பரதேசி என்றெல்லாம் பாஜகவை தாக்கிவிட்டு இப்போது கூட்டணி எப்படி?” என்ற கேள்வி முக்கியமாக கேட்கப்பட்டது. “ இந்த கேள்விக்கான பதிலைத் தான் என் பேச்சில் சொல்லி வருகிறேனே” என்று சாமர்த்தியமாக எங்களை டிஸ்போஸ் செய்தார் கருணாநிதி. பண்ருட்டி, மேல்பட்டாம்பாக்கம் என்று பேசிவிட்டு கடைசியில் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் கருணாநிதி மைக்கை பிடிக்கும்போது மணி 9.45. ஆறு மணி நேர பயணம், அவரிடம் எந்த அயற்சியையும் ஏற்படுத்தவில்லை. அதே கர, கர குரலில் கோடை மழையாக, குற்றாலச் சாரலாக, குடைய வைக்கும் கிண்டலாக உடன்பிறப்புகளை குளிர வைத்தது அவரது பேச்சு.
எனது தேர்தல் பிரச்சார கவரேஜ் அனுபவத்தில் ஆண்டிப்பட்டி தொகுதி, மயிலாடும்பாறை குருவம்மாவை மறக்க இயலாது. காவல் நிலையத்தில் துப்புரவு தொழிலாளியான அவர் பாசத்துடன் எங்களுக்கு டீ வாங்கி கொடுத்துவிட்டு சொல்லுக்கண்ணு.... யாருக்கு ஓட்டு போடறது? என்று வழிந்தோடும் அன்புடன் முகவாய் கட்டையை பிடித்தபடி கேட்டதை எப்படி மறக்க முடியும்?
பிப்ரவரி, 2016.