சென்னையிலிருந்து மிஜோரம் மாநிலத்துக்கு செல்லவே மூன்று நாட்கள் ஆகிவிடுகின்றன. மியன்மாருக்குப் பக்கத்தில் இந்திய வரைபடத்தில் வடகிழக்கே இருக்கும் இம்மாநிலம் அதிகம் தென்னிந்தியர்களால் அறியப்படாத கன்னிநிலம்.
சென்னையிலிருந்து கொல்கத்தாவுக்கு விமானப் பயணம். அங்கிருந்து ஜஜால் வரை விமானப் பயணம். அங்கிருந்து 400 கிமீ தூரத்தில் உள்ள சைஹா என்ற ஊரை நான் சென்றடைய வேண்டும். செல்லும் வழியில் தென்ஜால் என்ற ஊரைக் கண்டேன். அது மிஜோரத்தின் பாரம்பரிய நெசவுத் தொழில் மையம். இவ்வூரைச்
சுற்றிய இடம் சமவெளியாக உள்ளது. நல்ல விளைநிலங்கள். இங்குதான் மிஜோரத்தின் மிக உயரமான நீர்வீழ்ச்சி உள்ளது. 750 அடி உயரம். மூங்கில் காடுகளின் வழியாகச் சென்றால் கண்முன்னே வீழ்கிறது அருவி. அதன் ஓசையைக் காட்டிலும் வண்டுகளின் ரீங்கார ஓசை அதிகம். அந்த நீர்வீழ்ச்சியின் பெயர் வந்தாங்க்! நான் வர்ரேனுங்க என்றவாறு கிளம்பினேன்.
எனக்கு வேலை சைஹாவில்தான். இந்த மாவட்டத்தின் தெற்கிலும் மேற்கிலும் மியான்மர் உள்ளது. பர்மியர்களும் இங்கே வசிக்கின்றனர்.
சைஹாவுக்கு அருகில் உள்ளது லொங்தலாய் மாவட்டம். இங்குதான் ப்ளூ மவுண்டைன் எனப்படும் மிஜோரத்தின் உயர்ந்த மலை உச்சி உள்ளது. இதன் உயரம் கடல்மட்டத்தில் இருந்து சுமார் 2200 அடி. அங்கு
செல்லும் வழியில் சங்காவ் என்ற இடத்தில் இரவு தங்கினேன். இதுதான் அந்த மலையின் அடிவாரத்தில் உள்ள நகரம்.
அன்று மாலை நாலரை மணிக்கு சூரியனின் மறைவு என்னைக் கவிஞனாக்க முயற்சித்தது. வடகிழக்கு மாநிலங்களில் சூரியன் மாலை ஐந்து மணிக்கே மறைந்துவிடுகிறது. காலை ஐந்துமணிக்கே எழுந்துவிடுகிறது. அதனால்தான் கடிகாரத்தை ஒரு மணி நேரம் முன்கூட்டியே வைக்கலாமா என்று விவாதம் அங்கே நடக்கிறது.
காலையில் தட்லாங் என்ற இடம்வரை காரில் பயணம். அங்கிருந்து மலையில் கால்நடையாக ஏறத் தொடங்கினோம். ஐந்தாறு கிலோ மீட்டர் சென்றால் ’ஃபார்பாக்’. அங்கிருந்து இன்னுமொரு ஐந்தாறு கிமீட்டர் தூரத்தில் ’ஃபான்புய்’ எனப்படும் மலையுச்சி. இதற்கு அர்த்தம் மாபெரும் புல்வெளி என்பதாகும். எல்லாவிதமான புற்களும் நிறைந்த புல்வெளி. ஃபார்பாக் நோக்கி மலையேறுகையில் ஃபான்புய் தேசிய பூங்காவின் அழகை ரசித்தேன். வாழைமரங்கள், மூங்கில்காடுகள், பைன் மரங்கள் என கடல் மட்ட உயரத்திற்கேற்ப அடுக்கடுக்காய் இணைந்து வளர்ந்த காடுகள். புலியும் கரடியும் இருப்பதற்கான எச்சரிக்கை பலகையைக் கண்டேன். ஆனால் அவற்றைக் காணவில்லை.
ஒரு வழியாக ஐந்து மணி நேரம் கழித்து ஃபார்பாக் வந்தடைந்தேன். மலையின் மீது ஒரு சமதளம். நீலவானமும் அதன் கீழ் பசுமரங்களும் அதன்கீழ் மஞ்சள் புல்வெளியும்.... மாபெரும் புல்வெளி ஆரம்பமாகி இருந்தது. உள்ளூர் இலக்கியங்களிலும் கதைகளிலும் இந்த மலைக்கு பெரும் இடம் உண்டு.
மிஜோராமில் பார்த்தவற்றில் முக்கியமாகக் குறிப்பிடவேண்டியது லுங்க்தார் என்ற இடத்தில் பாயும் நதி ஏற்படுத்தி இருக்கும் கற்சிற்பங்கள். இந்நதி கலடான், கொலொடைன், சிம்த்துய்புரய் என பலபெயர்களில் அழைக்கப்படுகிறது. மியான்மாரில் தொடங்கி மிஜோரத்தில் பாய்ந்து மீண்டும் மியான்மாருக்குள் செல்லும் நதி. பல இடங்களில் நதிக்கு மறுகரை மியான்மார்.
நதியின் இருபுறமும் பாறைகளின் மென்மையான பாகங்களை நதி அரித்து, நீளவாக்கிலும் உயரவாக்கிலும் கோட்டை மதில்களைப் போலவும் பொம்மைகளைப்போலவும் பலவிதங்களில் பல உருவங்களில் செதுக்கியிருந்தது. மிக மிக அழகு. கோட்டைச்சுவர்கள் போலவும் கோவில்கள்போலவும் உருவாகி இருந்த அமைப்புகள் இருபுறமும் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தன. அவற்றின் பிரதிபலிப்பு நீரில் விழ, அருமையான புகைப்படப் பதிவுகள் கிடைத்தன. மிஜோரத்தின் தென்கோடியில் இருப்பதால் இயற்கையின் இந்த அற்புதங்கள் இன்னும் அதிகம் பிரபலமடையவில்லை. நதியில் மீன்பிடித்து மூங்கில் தண்டில் வேகவைத்து உண்டது இன்னொரு ருசி அனுபவம்.
பிப்ரவரி, 2014.