மாசிலா உண்மைக்காதலே மாறுமோ..

மாசிலா உண்மைக்காதலே மாறுமோ..
Published on

பக்திப் பட காலத்திலிருந்து பக்கங்கள் காணாமல் போகிற படம் வரை, பாபனாசம் சிவன் தொடங்கி யுக பாரதி வரை எத்தனை பாடலாசிரியர்கள், எத்தனை காதல் பாட்டுக்கள். ஒரு கதாநாயகன் சீக்கிரமே செத்து அவன் ‘ஈ’ யாகக் கூட மாறலாம், ஆனால் காதல் சொட்டும் பாடல்கள் இல்லாமலிருக்க முடியாது. ஒரு கதாநாயகி மட்டுமே வரும் படத்தின் ஃபார்முலாப்படி  மூன்று காதல் பாட்டுக்கள் மினிமம் கியாரண்டி. சிலப்பதிகாரம் தொடங்கி ஒரு நாயகனுக்கு இரண்டு நாயகிகள், இரண்டு நாயகிகளுடன் தலா இரண்டு பாடல் என்று நான்கு பாடல்கள். சமயத்தில் நாயகர்கள் மூன்று முகம் கொண்டு தோன்றுவார்கள், அல்லது இரண்டு வேடத்திற்கு மூன்று கதாநாயகிகள், ஆக ஆறு லவ் டூயட்டுகள். இவ்வளவு காதல் பாட்டுகளுக்கும் ‘மேட்டர்’கிடைப்பது ஒரு அதிசயம்தான்.

உத்தம கதாநாயகர் ஒருவரின் உடல் வாசனை, உள்ளுக்குள்ளிருக்கும் திரவ வாசனை இரண்டும் பி.கண்ணாம்பாவை இரண்டடி தள்ளி நின்றே காதல் செய்ய வைத்த காலங்கள் ஒன்று உண்டு. பாகவதர், ரஞ்சனுடன் இழைந்து இழைந்து நடித்த ராஜகுமாரிகளும் உண்டு. பானுமதி தென்னிந்திய சினிமாவின் ஒரு ஆளுமை மிக்க நடிகை. அவரை முழங்கைக்கு மேல் தொட்ட நடிகர்களே மூன்று மொழியிலும் கிடையாது.“மாசிலா உண்மைக்காதலே.....” என்று பாடிய பானுமதி - எம்.ஜி.ஆர். ஜோடி, நடித்த படம் ஏழெட்டு இருந்தாலும், பாடிய டூயட் இரண்டுக்கு மேலிருக்காது. “என்னைச் சுற்றிப் பறந்த வண்டு/சும்மா நீ போகாதே/புத்தம் புது மலரின் தேனை சுவைத்துப் போவாயே...” என்று பண்டரி பாய், சிவாஜி கணேசனிடமிருந்து பத்தடி தள்ளி நின்றுதான் பாடுவார்.. நாயகனும் நாயகியும்  “முகத்தில் முகம் பார்க்க நினைத்தால்,”  திரை முழுக்க இரண்டு தாமரையோ ரோஜாவோ முத்தமிட்டுக்கொள்ளும். சிட்டுக் குருவிமுத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே என்று சரோஜாதேவியும் சிவாஜி கணேசனும் ஃப்ரேமுக்குக் கீழே போய் முத்தம் கொடுத்ததாகப் பாவனை செய்து உதட்டைத் துடைத்துக் கொள்வார்கள். கமல்ஹாசன் முத்தமிடாத நடிகைகளே இல்லை எனலாம். அதிலும் கௌதமி என்றால் கொண்டாட்டம்தான்...சோகத்தில் அழுது கரையும் துன்பம் நேரும் போது கூட யாழெடுத்து இன்பம் சேர்க்காமல் இதழோடு இதழ் சேர்த்து முத்தம் கொடுப்பார். இது காதல் இளவரசனின் கதை. அவருக்கு முன்னால் காதல் மன்னனாயிருந்த ஜெமினி கணேசன், பைஜாமா அணிந்தாலும் சரி பேண்ட் சட்டை போட்டாலும் சரி, இடுப்பில் கை வைத்து டூயட் பாடுவார். இவரை எப்படி காதல் மன்னனாகப் பட்டம் சூட்டினார்கள் என்று தெரியவில்லை.  நிஜவாழ்க்கையில் காதல்மன்னனாகத் தான் இருந்திருக்கிறார்(இளைய ஆதீனமும்). சிவாஜி- பத்மினி, எம்.ஜி.ஆர்- சரோஜாதேவி,ஜெமினி-சாவித்திரி காதல் காட்சிகளின் ரசாயனம் காலம் கடந்தும் நன்றாய்த்தான் இருக்கிறது. இதன் பாதிப்பை அறிய வேண்டுமென்றால் ஐம்பது-அறுபதுகளில் வாலிபர்களாய் இருந்து இப்போது வயோதிகம் எய்திவிட்ட அன்பர்களின் வீடுகளில் ஒரு பப்பியோ, சாவித்ரியோ இல்லாமல் இருக்க மாட்டார்கள்.குறைந்த பட்சம் அது குழந்தைகளின் செல்லப் பேராகவாவது இருக்கும்.

எங்கள் மாமா ஒருவர் இருந்தார். அவரை அன்போடு வளர்த்ததெல்லாம் அவரது அப்பாவின் இரண்டாவது மனைவியான முத்தம்மாச் சித்திதான். மாமா, தன் பெண் குழந்தைகளுக்கு அம்மாவின் பெயரான அறம் வளர்த்த நாயகியையும், சித்தியின் பெயரான முத்தம்மாவையும் பெயராய் வைத்தார். இரண்டு பெயரையும் கூப்பிட முடியாத அத்தைக்காக லல்லி, பப்பி, என்று செல்லப் பேரும் சூட்டிக் கொண்டார். நல்ல வேளை அத்தை மூன்றாவது ஆண் பிள்ளை பெற்றார். ராகினி பெயர் தப்பித்தது. ஆனால் அவனுக்கு தாத்தாவின் பெயரான கணேசன் வாய்த்துவிட்டது. அது ஜெமினி கணேசனா, சிவாஜி கணேசனா மாமாவுக்குத்தான் வெளிச்சம்.

இன்றைக்கு த்ரிஷா, ஹன்சிகாமோத்வானி, அனுஷ்கா, காஜல் அகர்வால், தமன்னா, அமலா பால், ஆண்ட்ரியா, சமந்தா (ரீமாசென்னை ஏன் விடுகிறாய் என்று மனக்குறளியின் குரல்) பெயரை தங்கள் ஒற்றைக் குழந்தைகளுக்கு யாராவது வைக்கிறார்களா தெரியவில்லை. குஷ்புவுக்குக் கோயில் கட்டியவர்கள் கூட குழந்தைகளுக்கு அவர் பெயரை வைத்ததாகத் தெரியவில்லை.

ஜெமினி- சாவித்ரி ரசாயனத்தை விட, சாவித்ரி சிவாஜியுடன் வடிவுக்கு வளைகாப்பு, ரத்ததிலகம், படங்களில் காட்டும் நெருக்கம், பயோ- கெமிஸ்ட்ரி. ’எல்லாம் உனக்காக’ படத்திலும் நெருக்கமாய் நடித்திருப்பார். ஆனால் பாசமலர் படத்திற்கு அடுத்து வந்ததால் அந்தக் காதலை தமிழ்மனம் ‘சாத்திரோக்தமாய்’ புறந்தள்ளி விட்டது. மகாதேவிக்குப் பிறகு, ஏழு வருடங்களுக்குப் பின் எம்.ஜி.ஆருடன் ஜோடி சேர்ந்த சாவித்ரி, ‘பரிசு’, ’வேட்டைக்காரன்’ படங்களில் அநியாயத்திற்கு நெருக்கமாய் நடித்திருப்பார். பரிசு படத்தில் சில காதல் கட்சிகளில் ரசிகர்கள் சந்தோஷமாய் சத்தமிடு-வார்கள்.. “வாத்தியாரே, ஜெமினி கணேசன் வாரான்..”என்று. வேட்டைக்காரன் முதல்க் காட்சி முடிந்து வருகையில் கேட்ட மெஜாரிட்டி குரல்கள்,“செத்தான் ஜெமினி கணேசன்”. ‘போலீஸ்காரன் மகள்’ படத்தில், விஜயகுமாரி பாலாஜி நெருக்கத்தின் போது. “ஏல, எஸ்.எஸ்.ஆர் வாராருலே..” என்று கூச்சல் வரும் பூமி டிக்கெட்டிலிருந்து.

பரிசு,வேட்டைக்காரன் இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு எம்.ஜி.ஆர் காதல் மன்னனாகி விட்டார். கிட்டத்தட்ட இதே நேரத்தில் சரோஜாதேவி ஜோடி நின்று போக ஆரம்பித்தது. அப்புறம் எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா, சிவாஜி -கே.ஆர் விஜயா,ஜோடி.இருவருமே ஜெய்சங்கர், ரவிச்சந்திரனுடன் அதிக இயல்பான காதல் நடிப்பை வெளிப்படுத்தினார்கள் என்றே சொல்ல வேண்டும். இந்த நுணுக்கத்தை உன்னிப்பாக ‘அவதானிப்பது’ எங்கள் பொறாமையான பொழுது போக்கு. ‘நான்’, ‘நீ’, ‘யார் நீ’ போன்ற படங்கள் பார்க்கும் போது எங்கள் ஜோலியே இதுதான்.ஜெய்சங்கரை லக்ஷ்மி, எல்.விஜயலட்சுமி, பாரதி என பல நடிகைகளுக்கு உள்ளூரப் பிடிக்குமோ என்று நினைக்கிற மாதிரி அவரது காதல் காட்சிகள் இருக்கும்.

மஞ்சுளா இரண்டு பெரிய திலகங்களுடனும் காதலை வாரி வழங்கினார்.இவர்கள் போக அவ்வப்போது ராதா சலூஜா, ஜரீனா வகாப் போல் இந்தி நட்சத்திரங்கள் தோன்றி மறைவார்கள்.இதயக்கனி படத்தில் “இன்பமே.....” பாடலில்,“கை விரல் ஓவியம் காண காலையில் பூமுகம் நாண...” என்று பாடுகிறபோது எம்.ஜிஆர், ராதாசலூஜாவின் மார்பு மேட்டில் விரல்களை ஓட விடுவதைப் பார்க்க, உடனேயே அடுத்த காட்சிக்கு வரிசையில் நின்றனர் நண்பர்கள்.கொஞ்ச நாளில் அது வெட்டப் பட்டு விட்டது. இப்போது தொலைக்காட்சியில் காணக் கிடைக்கிறது.எம்.ஜி.ஆரும் சரி சிவாஜியும் சரி வைஜயந்தி மாலாவை விட உயரம் குறைந்தவர்கள். இன்றைய அனுஷ்கா, சமிரா ரெட்டி என்றால் மேஜை மீது ஏறித்தான் டூயட் பாட வேண்டும். பாரதிராஜாவின் வெண்ணிற தேவைதைகளுக் கிடையே இளையராஜாவின் மகத்தான பாடல்களைப்பாடி காதல் செய்தவர்கள் இன்று ஹாரிஸ் ஜெய்ராஜ் தாமரை பாடல்களுக்கு வசீகரமாய் காதலிக்கிறார்கள். குத்துப் பாட்டுப் பாடி கெட்ட ஆட்டம் ஆடி பப்புக்குப் போகச்  சொல்லி ஆற்றுப் படுத்துகிறார்கள். மாசிலா உண்மைக் காதல்மாறி விட்டதோ...

பிப்ரவரி, 2013.

logo
Andhimazhai
www.andhimazhai.com