கி.ராவின் எழுத்துக்கள் என்னை எப்போதுமே ஆச்சரியப்படுத்துவனவாகவே இருந்திருக்கின்றன. அவரை சந்தித்தபோது ஒரு மனிதராகவும் அவர் ஆச்சரியப்படுத்தும் குணாதிசயங்களைக் கொண்டிருந்தார்.
எல்லோரும் சாலையில் செல்கிறோம். எதிரே வரும் மனிதர்களை வாகனங்களைக் காண்கிறோம். ஆனால் கி.ரா. மட்டும் தான் காணும் எல்லாவற்றிலும் ஒரு கதையைக் காண்பவராக, ஒரு வாழ்க்கையைக் காண்பவராக இருந்தார் என்பது உண்மை.
ஜூனியர் விகடனில் எண்பதுகளில் நாங்கள் அரசியல், சமூக, கிரைம் மற்றும் பரபரப்புச் செய்திகளின் நடுவே இளைப்பாறுதல் போல் ரசனைக்குரிய தொடர்களை வெளியிடுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தோம். அப்படித்தான் அப்துல்ரகுமானையும் தொடர் எழுத வைத்தோம். அவரது தொடர் முடியும் தருவாயில் வேறு யாருடைய எழுத்துக்களை இடம்பெற வைக்கலாம் என்று விவாதித்தபோது அதுவரை சிறுபத்திரிகைகளில் அதிகம் எழுதியவராக இருந்த கி.ரா.அவர்களிடம் கேட்கலாம் என்று முடிவு செய்தோம்.
விகடன் ஆசிரியர் பாலசுப்ரமணியம் அவர்களிடம் கி.ரா. எழுதிய கதவு என்று சிறுகதையை அளித்தேன். அவர் படித்துவிட்டு இவ்வளவு அற்புதமான எழுத்தா என்று அதிர்ந்துபோனார். எப்படியாவது இவரது தொடரை இடம் பெறச்செய்யவேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். கதவு உண்மையிலேயே மிக அற்புதமான சிறுகதை! கிராமங்களில் இருக்கும் வீடுகளில் கதவு என்பது மிக முக்கியமானது. அந்தக் கதவுகளில் ஏறி ஆடாத குழந்தைகளே கிடையாது. ஒரு வீட்டின் மானத்தைக் காப்பவையாக கதவுகள் இருந்தன. அந்தக் கதை, கடன் கட்டத்தவறிய குடும்பத்தின் வீட்டுக்கதவை வங்கி ஜப்தி செய்து எடுத்துச் சென்றுவிடுவதைப் பற்றிய கதை! அது ஆசிரியருக்குப் பிடித்துப்போனதில் ஆச்சரியமே இல்லை!
உடனே கி.ரா.வுக்கு கடிதம் எழுதினோம். அவரிடமிருந்து உடனே பதில் வந்தது. ஏதோ வேலையாக சென்னைக்கு வருவதாகவும் அங்கே சந்திக்கலாம் என்று! திருவல்லிக்கேணியில் பிள்ளையார் கோயிலுக்குப் புகழ்பெற்ற ஒரு தெருவில் அவர் தன் துணைவியாருடன் தங்கி இருந்தார். நான் அவரைச் சந்திக்கப்போனேன். என்னைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தவர், எதிரே இருந்த வீட்டைச் சுட்டிக்காட்டி, அதைப் பார்த்துவிட்டு வாருங்கள் என்றார்! ஆச்சரியமாக இருந்தது. அவர் சுட்டிக்காட்டிய வீடு உ.வே. சாமிநாதய்யர் வசித்த வீடு!
உவேசா பற்றிய சுவாரசியமான தகவல்களை அவர் சொல்லிக்கொண்டிருந்தது ஞாபகம் இருக்கிறது! பின்னர் உங்கள் அலுவலகத்துக்கு வருகிறேன் என்றார். அதன் பின் மறுநாளே துணைவியார் சகிதம் அலுவலகம் வந்தார்.
அவரை மதன் தன் அறையில் அமர வைத்து வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தார். நான் உடன் அமர்ந்து கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தேன். அவர்
சொல்வதை கவனமாகக் கேட்கிறோமா என்பதில் அவர் நாட்டம் கொண்டிருந்தார். வெகுசனப் பத்திரிகை என்றால் விற்பனையில்தான் குறியாக இருப்பார்கள்! ரசனை உள்ளவர்களாக இருப்பார்களா என்று உள்ளூர ஐயம் கொண்டிருப்பார் போலிருக்கிறது! மதனின் விசாலமான அறிவையும் என் கூர்மையான கவனிக்கும் வழக்கமும் அவருக்குப் பிடித்திருக்கவேண்டும். தொடர் எழுத சம்மதம் தெரிவித்தார். பின்னர் ஆசிரியருடன் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, எங்களுடன் உணவு சாப்பிட்டார்! அப்புறம் உடனே தொடருக்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று ஆசிரியர் குழுவில் கலந்து ஆலோசித்தோம். அப்போது இளம் உதவி ஆசிரியராக இருந்த வேலுச்சாமி கரிசல் காட்டுக்கடுதாசி என்று தலைப்பு தந்தார்!
கிரா எழுதப்போகும் தொடருக்கு வித்தியாசமாக, அதே சமயம் அவர் எழுதும் மனிதர்களின் குணாதிசயங்களை வெளிப்படுத்தும் ஓர் ஓவியரை அணுகவேண்டும் என்று விரும்பினோம். ஓவிய மேதை ஆதிமூலத்திடம் நேரம் வாங்கிச் சென்று சந்தித்தோம். இங்கும் மதனும் அவரும் உலக ஓவியர்கள் பற்றிப் பேசிக்கொண்டிருக்க, நான் வழக்கம்போல் அமைதியாக அவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தேன். ஆதிமூலம் படங்கள் வரைய ஒப்புக்கொண்டார்! அதை உடனே கி.ரா.வுக்குத் தெரியப்படுத்தினோம். அப்படித்தான் கரிசல் காட்டுக்கடுதாசி ஜூனியர் விகடனில் ஆரம்பமானது. ஓர் ஆண்டு தொடர் வெளிவந்தது! வாசகர்கள் ஆர்வத்துடன் அதை ரசித்துப்படித்தார்கள். வேறுபட்ட மனிதர்கள் பற்றிய உண்மை மற்றும் கற்பனைச் சம்பவங்கள் நிறைந்ததாக, தனக்கே உரிய நகாசு வேலைகளும் பதிவுகளும் கொண்ட மொழியில் அவர் எழுதினார். பயன்பாட்டில் இருந்து விலகிச் சென்றிருந்த சொலவடை போன்ற வட்டாரச் சொல் வழக்குகளுக்கு உயிர் கொடுத்தார்! அவருக்கு ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் எழுத்துக்கான அன்பளிப்புத் தொகைப் போய்ச்சேரும்! அதை அவர் ரசித்தார்! விகடனில் இருந்து செவ்வாய்க்கிழமை பணம் வரும் என்று துணிந்து காத்திருக்கலாம்! அது மாறவே மாறாது என்றுகூட அவர் வெளிப்படையாக ஒருமுறை குறிப்பிட்டார்! பெரிய இயக்குநரும் சூப்பர் ஸ்டாருமான ஒரு நடிகரும் இணைந்து நடிக்கும் சினிமாபோல் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது அந்த தொடர்!
அந்தத் தொடரில் ஒரு வாரம் அவர் எழுதியிருந்தது இன்றும் எனக்கு ஞாபகம் உள்ளது. ஒரு கிராமத்தில் காளிகோயில் தாண்டி ஒரு வேப்பமரம். அங்கே பேய் இருக்கிறது என்று யாருமே போகமாட்டார்கள்! ஆனால் அக்கிராமத்தைச் சேர்ந்த ஒரு சமூக சிந்தனை உள்ள இளைஞனுக்கு அதில் நம்பிக்கை இல்லை! அவன் சவால் விட்டு தனியே அங்கே சென்று வேப்பமரத்தில் ஏறுகிறான்! அவன் அதைத் தாண்டிப் பார்க்கும்போது வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த காதலர் ஜோடி அங்கே மெய்மறந்திருக்கிறது! அவன் இதுபோன்ற காதல்களுக்கு இந்த இடம் உதவியாக இருக்கவேண்டுமானால் பேய் இருக்கிறது என்ற நம்பிக்கை தேவை என்று முடிவு செய்கிறான்! நண்பர்கள் பார்வையில் பேயால் அடிபட்டதுபோல் பொத்தென்று விழுந்துகிடக்கிறான்!
இதுபோல் எவ்வளவோ கதைகள்.. சம்பவங்கள்! கி.ரா. அவர்களுக்கு 95 வயது ஆகிறது என்கிறார்கள்! அவரது கதைகளுக்கும் படைப்புகளுக்கும் வயது என்று ஒன்று இல்லவே இல்லை! அவருக்கு மட்டும் ஏது?
செப்டெம்பர், 2017.