மனிதனின் எதிர்காலம் குறித்து மூன்றுவிதமான கருதுகோள்கள் சொல்லப்படுகின்றன. பிரெஞ்சு எழுத்தாளர் காமத் (Jacques Camette), தன்னுடைய ஙிச்ணஞீஞுணூடிணஞ் ணிஞூ ஏதட்ச்ணடிtதூ நூலில் மூன்று வாய்ப்புகளைக் குறிப்பிடுகிறார். ஒன்று, இயந்திரங்கள் மனிதர்கள் போல் ஆகக்கூடும்; இரண்டு: மனிதர்கள் இயந்திரங்கள் போல ஆவார்கள். மூன்றாவது மனிதர்களுக்கு எல்லாமே கிடைக்கும். எதையும் அவர்கள் சாதித்துவிடலாம். ஆகவே அவர்களுக்கு வாழ்க்கையில் ஆசைகளே இல்லாமல் போய் சலித்துவிடும் என்கிறார். ஆங்கில எழுத்தாளர் ஆல்டஸ் ஹக்ஸ்லி (Aldous Huzley ) சொன்னது போல் இந்த மூன்றாவது விஷயத்தில் ஆசைகள், விருப்பங்களுக்காக தனி அரசுப்பிரிவையே ஏற்படுத்தும் நிலை ஏற்படும். மனிதர்களுக்கு என்ன தேவை என்று ஆராய்ந்து அதை நிறைவேற்ற கமிஷன்கள் அமைக்கப்படும். இன்னொரு எழுத்தாளர் அனுபவங்களைத் தருகிற இயந்திரங்கள் உருவாக்கப்படும் என்கிறார். அதாவது உங்களுக்கு என்ன அனுபவம் தேவைப்படுகிறதோ அதை அந்த இயந்திரம் தரும். உதாரணம் புத்தர் ஞானநிலை அடைந்தபோது என்ன உணர்ந்திருப்பார்? அதை அந்த இயந்திரம் தரும். இது விற்கப்படும். ஆக எல்லா விஷயங்களும் விற்பனைக்கு என்றால் அவற்றின் ஈர்ப்பு குறைந்துவிடும் என்பது இதுதொடர்பாக வைக்கப்படும் ஒரு முக்கியமான வாதம். மக்கள் இந்த இயந்திரங்களை வாங்குவதை நிறுத்திவிட்டு உண்மையான சுயமான அனுபவம் தேடுவார்கள். இப்போதே அப்படித்தான். இணையத்தில் மெய்நிகர் உலகில் வாழ்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் இதெல்லாம் மனிதனின் பிரச்னையைத் தீர்க்கப்போவதில்லை.
சிங்குலாரிட்டி என்பது அமெரிக்காவில் உள்ள அறிவியல் அறிஞர்களின் குழு. பில்கேட்ஸ் கூட அதில் உறுப்பினர் என்று நினைக்கிறேன். இவர்கள் எல்லா பிரச்சனைகளுக்கும் மென்பொருள் தயாரிப்பு, மரபுப்பொறியியல், நேனோ டெக்னாலஜி போன்ற தொழில் நுட்பங்களால் தீர்வு காணமுடியும் என்று நம்புபவர்கள். இதெல்லாம் இணைந்தால் மனிதனுக்கும் இயந்திரத்துக்குமான இடைவெளி, வேறு-பாடு குறையும். முன்பே சொன்னதுபோல மனிதன் இயந்திரம் ஆவான்.
அதாவது ஒரு அதிமனிதன் உருவாவான் என்பது இவர்களின் வாதம். இதற்குப்பின்னால் மூர்ஸ் விதி என்ற ஒரு தத்துவம் உள்ளது. உதாரணத்துக்கு ரேடியோ கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் வீடுகளின் அத்தியா-வசியப் பொருள் ஆவதற்கு 50-70 ஆண்டுகள் ஆயின. ஆனால் தொலைக்காட்சிக்கு அவ்வளவு நாட்கள் தேவைப்-படவில்லை. சுமார் 25 ஆண்டுகளிலேயே அது வீடுகளின் அத்தியா-வசியப் பொருள் ஆகிவிட்டது. ஆனால் இதை விட பாதி ஆண்டுகளில் இணையம் அத்தியாவசியப் பொருள் ஆகிவிட்டது. விலையும் பார்த்தீர்கள் என்றால் வீழ்ச்சி அடைந்துகொண்டே உள்ளது. ஒருகாலத்தில் பணக்காரர்கள், பிரபுக்கள் பந்தாவுக்காக வைத்திருந்த சாதனங்கள் இன்று எல்லோரிடமும் உள்ளன. ஒரு காலத்தில் மேல்தட்டுக்காரர்களிடம் இருந்தது செல்போன். இன்று ரிக்ஷாக்காரர்களும் வைத்துள்ளார்கள். அமெரிக்க எழுத்தாளர் மற்றும் எதிர்காலவியலாளர் ரே குர்ஸ்வயில் (Ray Kurzweil ) The singularity is near என்ற நூலில்கூட இந்த விஷயங்கள் பற்றிச் சொல்லியிருக்கிறார். இயந்திரங்கள் புத்திசாலி ஆவது பற்றி எவ்வளவோ அறிவியல் புதினங்கள், படங்கள் வந்துள்ளன.எனவே இதுபற்றி நான் எதுவும் கூறவேண்டியதில்லை.
இந்த எதிர்காலக் கணிப்புகள் வாதங்கள் எல்லாம் எனக்கு இத்தாலியில் 1907-ல் எழுதப்பட்ட Futuristic manifesto வை நினைவூட்டுகின்றன. அதில் பல விஷயங்கள்
சொல்லப்-பட்டன. எல்லா கண்டுபிடிப்புகள் பற்றியும் கணிக்கப்பட்டு, இருபதாம் நூற்றாண்டு தொழில்-நுட்பவியலின் நூற்றாண்டு இந்த நூற்றாண்டில் வாழ்வதே மிகப்பெரிய விஷயம் என்றுசொல்லப்பட்டது. முழுக்க முழுக்க நேர்மறையான கருத்துகளைக் கொண்டிருந்தது. ஆனால் அந்தோ பரிதாபம்! இது எழுதப்பட்ட முப்பது ஆண்டுகளில் இரண்டு உலகப்போர்கள் நடைபெற்றன. இதுதான் எதிர்காலவியலின் முடிவு.
இப்போது மீண்டும் எதிர்காலம் பற்றி பல கணிப்புகள் வருகின்றன. வரலாற்றை சுலபமாக மறந்துவிட்டுப் பேசு-கிறார்கள்.
இயந்திரங்கள் சமூகத்தில் ஏன் உருவாயின? அடிமைகளும் வேலைக்காரர்களும் தேவைப்படும் சமூகத்தில்-தான் இயந்திரங்களுக்குத் தேவை உருவாகிறது. வேலைக்காரர்களை வைத்துக்கொள்வது எளிதாக இல்லை; மலிவாக இல்லை என்கிறபோது அதைவிட மலிவாகத் தேடியதில் உருவானவையே இயந்திரங்கள். எதிர்காலத்தில் இயந்திரங்கள் மனிதர்களை விட புத்தி சாலித்தனத்தில் குறைவானவையாக நீடித்தால் சரி. ஆனால் இயந்திரங்களுக்கு புத்திக்கூர்மை குறைவாக இருந்தால் அதுவும் பிரச்னைதான். வேலைக்காரன் முட்டாளாக இருந்தால் என்ன சூழல் உருவாகுமோ அது-போல. இயந்திரங்களை புத்திக்கூர்மை உடையவை ஆக்கவேண்டுமெனில் அவற்றை நாம் மனிதர்கள் போல ஆக்கவேண்டும். மேலும்மேலும் அவை பயன்பட அவை மேலும்மேலும் மனிதர்கள் போல் ஆகவேண்டும். அதைச் செய்வதற்காக மானுடவியல் கூறுகள் சேர்க்கப்படவேண்டும். அப்படியெனில் அவையும் உழைப்பை வெறுக்க ஆரம்பிக்கும். உழைப்பதுபோல நடிக்க ஆரம்பிக்கும். ஆகவே இது ஒட்டுமொத்த நோக்கத்-தையும் சீர்குலைத்துவிடும். ஏனெனில் இதன் ஒரே நோக்கம் கீழ்ப்படிந்து நடக்கக்கூடிய அடிமைகளை உருவாக்குவதே.
இந்த முழு வாதத்தையும் உழைப்புக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்து புரிந்துகொள்ளலாம். இயந்திரமும் மனிதனும் ஒரே மாதிரி ஆகிவிட்டால் வளர்ச்சி, அறிவியல், நாகரிக வளர்ச்சி ஆகியவற்றுக்கு என்ன அர்த்தம்?
ஆக மீண்டும் முன்பே சொன்ன விஷயத்துக்கு வருகிறேன். நம் சமூகம் ஆண்டான் - அடிமை, முதலாளி-வேலைக்காரன் என்ற கட்டுமானத்துக்கு வந்தபோது இயந்திரங்களின் தேவை உருவானது. இதற்குப் பதிலாக நட்பு, துணை என்ற அடிப்படையில் சமூகம் உருவானால் மனித வாழ்வு மேம்படும். இப்பூமியில் மனித வாழ்வின் தரம் மனிதன் சகமனிதனுடன் கொண்டிருக்கும் உறவின் தரத்தைப் பொறுத்துள்ளது. எனவே நாம் எந்த விதத்தில் இருந்தாலும் சரி; முதலாளி-வேலைக்காரன் என்கிற கட்டமைப்பைத் தகர்த்தால்தான் இந்த இயந்திரங்கள், ரோபோட்கள் போன்றவற்றின் தேவை மனித சமூகத்துக்கு இருக்காது. வர்க்க வேறுபாடுகள் கொண்ட சமூகத்தால் உழைப்பு உருவானது; உழைப்பால் வர்க்கவேறுபாடு கொண்ட சமூகம் உருவானது. இதனால்தான் மனிதனின், இயந்திரங்களின் எதிர்காலம் என்ன? இயந்திரம் இல்லாவிட்டால் என்ன? இருந்தால் என்ன போன்ற கேள்விகளே எழுகின்றன.
நம்மை நாமே இத்தருணத்தில் கேட்டுக்கொள்ளவேண்டிய முக்கிய கேள்வி: நம் வாழ்வின் முக்கிய அம்சமாக இருக்கவேண்டியது என்ன? உழைப்பு, வேலை அல்லது மனித உறவுகள், இயற்கையுடனான உறவு, கொண்டாட்டம்- இதில் எது?
(கங்காதின் லோஹார் ஜெர்மனியில் பணிபுரியும் பேராசிரியர். அவர் அந்திமழையிடம் பேசியதிலிருந்து இது தொகுக்கப்பட்டது)
டிசம்பர், 2012.