மதுரையில் கழுவேற்றப்பட்டவர்கள் ஆசீவகர்களே

நேர்காணல்: முனைவர் க.நெடுஞ்செழியன்
மதுரையில் கழுவேற்றப்பட்டவர்கள் ஆசீவகர்களே
Published on

சங்க இலக்கியத்தில் பெரும்பாலானவைகள், சிலப்பதிகாரம், பதிணெண்கீழ்கணக்கு நூல்களில் பெரும்பாலான நூல்கள் ஆசீவகத் துறவிகளால் இயற்றப்பட்டவை. தமிழகத்தில் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் தமிழக மூவேந்தர்களாலும், மக்களாலும் பின்பற்றப்பட்ட சமயமாக ஆசீவகம் இருந்துள்ளது. ஆசீவக ஆதரவு மன்னர்களாக கோப்பெருஞ்சோழன், கரிகாலன், தலையானங்கானத்துச் செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியன், இருந்துள்ளனர். ஆசீவகப் புலவர்களில் நக்கீரர் முக்கியமானவர்”- இது தமிழகத்தில் தோன்றி வளர்ந்த சிந்தனை மரபை ஆய்வு செய்தவரான  ஓய்வுபெற்ற பேராசிரியர் முனைவர் க.நெடுஞ்செழியனின் கருத்து. தனது ஆய்வின் மூலம் பல வரலாற்று நம்பிக்கைகளை கேள்விக்குள்ளாக்கும் இவரிடம் பேசினோம்

 ஆசீவகம் என்பது என்ன?

பதில்: ஆசீவகம் என்பது மூன்று கொள்கைகளை உள்ளடக்கிய சமயம். அணுவியல், தற்செயலியல், ஊழியல் என்னும் இயற்கை விதி ஆகிய மூன்று. இந்த ஆசீவகத்தைத் தோற்றுவித்ததாகக் கூறப்படும் மற்கலி கோசாலரை வட நாட்டவர் என்றும் ஓர் அடிமையின் மகன் என்றும் வீடுதோறும் சென்று இரந்துண்ணும் வாழ்க்கையை மேற்கொண்டிருந்தவர் என்றும் சமண, பௌத்த இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. ஆனால், இவர் புத்தர், மகாவீரர் போல ஓர் அரச மரபைச் சார்ந்தவர் என்பதை முதன்முதலாகச் சொன்னவர் பண்டிதர் அயோத்திதாசர். இக்காரணங்களை புறநானூற்றில் 395-வது பாடலில் உறுதியாகிறது. திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள இன்றைக்கு திருப்பட்டூர் என அழைக்கப்படும்  ஊர் சங்க காலத்தில் திருப்பிடவூர் என அழைக்கப்பட்டது. இந்த திருப்பிடவூரை ஆண்ட குறுநில மன்னர் மரபில் வந்தவரே ஆசீவகத்தை உருவாக்கிய மற்கலி. கலியன் என்பது அவரது குலப்பெயர். சாத்தன் என்பது அவருக்கு சூட்டிய பெயர். மற்கலி என்ற பெயர் போர்க்கலையில் வல்லவர் என்பதன் அடையாளம். அந்த ஊர் ஐயனார் கோயிலில் உள்ள கல்வெட்டில் இவர் அவ்வூரில் பிறந்தவர் என்பதை “திருமன் தவம் செய்த நாயனார்” என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

 இதனை எதன் அடிப்படையில் நிறுவுகிறீர்கள்? ஆசீவகத்தின் தொடர்ச்சியாக தற்போது அடையாளங்கள் ஏதாவது உள்ளதா?

 பிராகிருத மொழியில் உள்ள சமண நூலான பகவதி சூத்திரம், இவரை மற்கலி, மஸ்கரின் என்று குறிக்கிறது. பௌத்த தமிழ் நூலான மணிமேகலை இவரை மற்கலி என்று குறிக்கின்றது. நீலகேசி இவரை அரிகரபுத்திரன் என்றும் ஆசீவக நிறுவனர் என்றும் அவரை வணங்கக் கூடாதென்றும் தடை விதிக்கிறது. பௌத்த இலக்கியங்கள் ஆசீவகம் பற்றி ஓரளவு விரிவாகவே சொல்லுகின்றன. ஆசீவகத்தில் அதன் படிநிலைகளை சுட்டக்கூடிய  ஒரு கோட்பாடு இருந்துள்ளது.  நிறங்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்த அந்த கோட்பாட்டை பாலி இலக்கியங்கள் வண்ணக் கோட்பாடுகள் என்று சுட்டுகின்றன. அவற்றை பாலி இலக்கியங்கள் அபிஜாதி கொள்கை எனச் சுட்டுகின்றன. அந்தக் கொள்கையின்படி பசும்பிறப்பு, கரும்பிறப்பு, கருநீலப்பிறப்பு, செம்பிறப்பு, பொன்பிறப்பு, வெண்பிறப்பு முதலான ஆறு படிநிலைகளைக் கடந்து கழிவெண் பிறப்பு நிலையை அடைந்தவர்களே வீடடைவார்கள் என்று மணிமேகலை சொல்லுகிறது. அவ்வாறு வீடடைந்தவர்களாக மற்கலி, பூரணர், நந்தவாச்சா, ஆகிய மூவரை பாலி இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

கழிவெண் பிறப்பை பாலி இலக்கியங்கள் பரமசுக்க நிலை என்று சுட்டுகின்றன. கழிவெண் பிறப்பை தமிழ் இலக்கியங்கள் நல்வெள்ளை என குறிப்பிடுகின்றன. நல்வெள்ளை அடைமொழியோடு மூன்று புலவர்களை சங்க இலக்கியங்கள் சுட்டுகின்றன. அவர்கள் நல்வெள்ளையார், மதுரை ஓலைக் கடையத்தனார் நல்வெள்ளையார், முக்கல் ஆசான் நல்வெள்ளையார் இம்மூவரையுமே பாலி மரபும் தமிழ் மரபும் இணைந்த பரம ஐயனார்களாக தமிழ் மக்கள் வணங்கி வருகின்றனர். பரமசுக்க நிலை அடைந்தவர் என்ற நிலையே இங்கே பரம ஐயனாராக உருமாறியுள்ளார்கள் என்பது வெளிப்படை.

ஐயனார் ஆசிவகத்துக்கு உரியவர் என்று எதை வைத்து குறிப்பிடுகிறீர்கள்?

 நீலகேசி சமண சமயத்தைப் போற்றுவதற்காக எழுதப்பட்ட ஒரு  நூல்.  சமண சமயத்துக்கு எதிரான பிற சமயங்களும் விளக்கப்பட்டு அவற்றின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி அவர்களை நீலகேசி என்னும் சமணப் பெண் துறவி வாதத்தில் வெற்றிகொள்வதாக அந்நூல் அமைந்திருக்கிறது.

இதில் ஆசீவகம் பற்றி அமைந்துள்ள பகுதியில் ஆசிவகனுக்குரிய பள்ளியில் ஐயனாராகிய சாத்தனின் சிலை இருப்பதாக நீலகேசி குறிப்பிடுகிறது. ஆசீவக நிறுவனர்களாகிய அறப்பெயர் சாத்தனை (அரிகரபுத்திரன்) வணங்கக்கூடாது என்று நீலகேசி தடை விதிக்கிறது. அதன் அடிக்குறிப்பில் இவர்கள் ஆசீவக நிறுவனர்கள் என்று குறிப்பிட்டுள்ளது. அதனால், ஐயனார்தான் ஆசீவகத்தைத் தோற்றுவித்தவர் என்பது உறுதியாகிறது.

அந்த மூன்று ஐயனார்கள் ஒன்று மற்கலி, இரண்டு பூரணர், மூன்றாவது பாலி மொழியில் நந்தவாச்சா எனக் குறிப்பிடப்படுகிறார். இவர் மதுரை மீனாட்சிபுரம் கற்படுக்கையில் உள்ள கல்வெட்டில் குறிக்கப்படும் கணிநந்தாகிய இயக்கன் ஆவார். கல்வெட்டில் நந்தாகிய இயக்கன் என்ற சொல் நந்தவாச்சா என பிரிந்தது.

இந்த ஐயனார் வழிபாட்டை மக்கள் ஆசீவகம் என்று தெரிந்துதான் பின்பற்றுகிறார்களா?

தெரிந்துதான் பின்பற்றுகிறார்களா என்று தெரியவில்லை. ஆனால், பாலி, சீனம், திபெத்தியம் ஆகிய மூன்று மொழிகளில்  உள்ள பௌத்த இலக்கியங்களில் ஆசீவக நிறுவனர்கள் பற்றி சொல்லப்பட்டுள்ள செய்திகள் மக்கள் வழக்காற்றில் அப்படியே இடம் பெற்றுள்ளன.

உதாரணமாக ஆசீவகத் துறவிகள் கையில் தடிக்கம்புகளை வைத்திருப்பார்கள் என்பது ஒன்று. தமிழ்நாட்டில் உள்ள பல ஐயனார் கோயில்களில் குறிப்பாக புதுக்கோட்டையில் உள்ள ஐயனார் கோயிலில் உள்ள ஐயனாரை தடிகொண்ட ஐயனார் என்று அழைக்கின்றனர். ஆசீவகத்தில் கழிவெண் பிறப்பு நிலையடைந்த மூவருள் இரண்டாமவரான பூரணரை ஏரியில் மூழ்கி இறந்தவராக திபெத்திய இலக்கியங்கள் குறிக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை ஒட்டியுள்ள ஒரு ஐயனார் இந்த பூரணரே. ஏரியில் உள்ள சேற்றில் மூழ்கி இறந்தாரென்றும் அதனால், அவரை உளைப்பிடி அய்யனார் என்று மக்கள் அழைக்கின்றனர். இந்த நிகழ்ச்சிகளில் உள்ள வரலாறு நினைக்கப்பட வேண்டியவை அல்லவா?

இது திபெத் வரை பரவியது என்றால், இது இந்தியா முழுவதும் பரவியிருந்ததா?

ஆமாம்! இது இந்தியா முழுவதும் பரவியிருந்தது. புத்த சமயத்தைத் தழுவிய அசோகனும் அவனுடைய பேரன்களில் ஒருவனும் ஆசீவகத் துறவிகளுக்கு கற்படுக்கைகளை அமைத்துக் கொடுத்துள்ளனர். ஆசீவகம் தோன்றிய அதே கால கட்டத்தில் கிரேக்கத்திலிருந்து பல அறிஞர்கள் தமிழகம் வந்து ஆசீவகத்தைக் கற்றுச் சென்றுள்ளனர். உலக நாடகத் தந்தை என்று போற்றப்படும் சொஃபக்கிள்ஸ் இதில் ஒருவர். இவரது நாடகத்தில் ஆசீவகத்தின் அடிப்படைக்கொள்கைகளில் ஒன்றான ஊழியலை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு கிரேக்க நாடகங்களில் உள்ள தமிழ்ச் சொற்கள் இந்த வரலாற்றுக்கான அகச் சான்றுகளாகும். அன்றைய இத்தாலியில் பெரும் செல்வாக்கு பெற்ற ஒரு மெய்யியல் ஸ்தாயிக் மெய்யியல் ஆகும். இம்மெய்யியல் ஆசீவகக் கோட்பாட்டின் முழுமையான வடிவமாகும். கிறிஸ்தவத்தின் தொடக்க நாளில் கிறிஸ்தவ துறவிகளுக்கு ஸ்தாயிக் மெய்யியல் மிகப்பெரிய சவாலாக விளங்கியது என்பதை பைபிளில் காணலாம்.

 இப்படி பரவலாக இருந்த ஆசீவகம் காணாமல் போனதுக்கு காரணம் என்ன?

பக்தி இயக்கம் வளரத்தொடங்கிய நாளில் பக்தி இயக்கங்களுக்கு  குறிப்பாக சைவ சமயத்திற்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது ஆசீவகமே. அதனால், ஆசீவகத்தை சைவம் தழுவ முயன்றது. அதன் காரணமாகவே ஐயனாரை சிவனின் மகனாகக்கூட நாயன்மார்கள் போற்றியுள்ளனர். அப்படி இருந்தும் ஆசீவகத்தை வெற்றிகொள்ள முடியவில்லை. அதனால், சைவம் வன்முறையைக் கையிலெடுத்தது. அதன் விளைவுதான் சிவன் யானை உரி போர்த்தவனாக பாராட்டப்படுவதாகும். இதில் யானை என்பது ஆசீவகத்தின் குறியீடு, ஐயனாரின் வாகனம், ஐயனாரின் சின்னம் ஆகும். கும்பகோணம் அருகேயுள்ள பழையாறில் யானையின் காலால் மிதித்துக்கொல்லப்பட்ட ஆயிரம் அமணர்கள் ஆசீவர்களே. மதுரையில் கழுவேற்றப்பட்ட எண்ணாயிரம் அமணர்களில் பெரும்பான்மையோர் ஆசீவகர்களே. பிற்காலச் சோழப் பேரரசர்கள் சைவத்தை தங்கள் அரசு சமயமாக ஏற்றுக்கொண்டார்கள். அதனால், ஆசீவகர்கள் மீது கடுமையான வரிகளை விதித்தனர். சாதாரண மக்களுக்கு ஒரு மடங்கு வரி என்றால், ஆசீவகர்களுக்கு 20 மடங்காக விதிக்கப்பட்டது. அதை கட்டத் தவறினால் 40 மடங்கானது.

இவ்வாறு வன்முறையாலும் வரிவிதிப்பாலும் ஆசீவகம் ஒடுக்கப்பட்ட நிலையில் வைணவம் ஆசீவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது. அதன் அடையாளமே திருமால் முதலையிடமிருந்து யானையைக் காப்பாற்றியதாகச் சொல்லப்படுகிறது. இங்கு முதலை சைவ சமயக் குறியீடு. யானை ஆசீவகக் குறியீடு.

அப்போது நீங்கள் குறிப்பிடும் அமணர்கள் என்ற வார்த்தை சமணர்கள் இல்லையா?

அமணர் என்ற சொல் வேத மறுப்பாளர்களைச் சுட்டிய ஒரு பொதுப் பெயர். அந்த வகையில் புத்தர், மகாவீரர், மற்கலி அனைவருமே அமணர்களாகத்தான் சொல்லப்படுகின்றனர். ஆனால் பௌத்தர்கள் தங்களை பௌத்தர்களாகவே அழைத்துக்கொண்டனர். சமணர்கள் தங்களை ஜீனர்களாகவே அழைத்துக்கொண்டனர். ஆனால், ஆசீவர்கள் மட்டுமே தங்களை அமணர்கள் என்று அழைத்துக்கொண்டனர். அமணன் ஆசீவகம் என்பது நிகண்டு.

வரலாற்றாய்வாளர்கள் பெரும்பாலும் கற்படுக்கைகள் சமணர்களுக்கு  உரியது என்றல்லவா குறிப்பிட்டுள்ளார்கள்?

 கி.மு. ஆறாம் நூற்றாண்டில் ஆசீவகம் தோன்றிய பிறகுதான் கற்படுக்கை அமைக்கும் முறை தோண்றுகிறது.  பீகார் மாநிலத்தில் புத்த கயா அருகே 20 கி.மீ தொலைவில் வராபரா குகைக் கற்படுக்கைகளை அமைத்தவன் அசோகன். அந்த கற்படுக்கைகள் அமைத்ததற்கான காரணம் மழை, வெயில், புயல் இவற்றிலிருந்து ஆசீவகத் துறவிகளைக் காக்க அமைத்திருப்பதாக அந்த கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது.

சமணம் தொடங்கிய காலத்திலும் சரி அதற்கு பின்னரும் சரி அவர்களுக்காக கற்படுக்கைகள் அமைத்ததாக எங்கும் செய்திகள் இல்லை. தமிழ்நாட்டில் சைவ சமையம் எழுச்சிகொண்ட போது ஆசீவகமும், ஆசீவகப் பாழிகளும் சிதைக்கப்பட்டதன் விளைவாக ஜைனர்கள் அந்த இடங்களைப் பயன்படுத்தத் தொடங்கினர். அதுவும் கி.மு ஒன்பதாம் நூற்றாண்டுக்கு பிறகே. மிகவும் பிற்காலத்தில் பொறிக்கப்பட்ட சமணர்களின் எழுத்துப் பொறிப்புகளைக்கொண்டு அக்கற்படுக்கைகள் சமணர்களுக்கு உரியது என்று கூறுவது வரலாற்றுப் பிழையாகும்.

ஆசீவகத்தை எதிர்த்த சோழ அரசர்கள் சமணத்தின் மீது பரிவு காட்டினார்கள். சமண நூலான சீவகசிந்தாமணியை மிகவும் போற்றினர். குலோத்துங்கனின் கலிங்க வெற்றியைப் பாடிய ஜெயங்கொண்டார் ஒரு சமணர். சமணத்துக்கு கன்னடத்திலும் தமிழகத்திலும் ஆதரவான நிலை தொடர்ந்தது. ஆசீவகத் துறவிகளை இழந்து நின்ற கற்படுக்கைகளை சமணர்கள் தமதாக்கிக்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது. அதற்கான சிறந்த அடையாளம் திருவண்ணாமலை மாவட்டம், திருமலையிலுள்ள குந்தவை ஜீனாலயம் ஆகும். குந்தவை ராஜராஜனின் தமக்கையாவாள்.

 உங்களுடைய சித்தன்னவாசல் குகைக்கோயில் பற்றிய ஆய்வு குறிப்பிடத்தக்கதாக கருதப்படுகிறது. அதைப் பற்றி சொல்லுங்கள்.

 ஆசீவகம் பற்றி விரிவான ஆய்வுகள் மேற்கொண்ட ஏ.எல்.பாஷம், அவருடைய ஆய்வு நூலில் ஆசீவக போற்றுநரான மற்கலியின் இறுதி நாட்களை விரிவாக விளக்குகிறார். அதில் ஒரு நிகழ்ச்சி மாங்கொட்டை பற்றியதாகும். அடிமதிக்குடி ஐயனார் பிள்ளைத்தமிழ் என்னும் ஒரு நூல் (சென்னைப் பல்கலைக்கழக வெளியீடு) அதில் “வாகைதனில் மாங்காய் வரச் செய்தோன் வருக வருகவே!” என்று பாடுகிறது. இந்நிகழ்ச்சிதான் சித்தன்னவாசல் ஓவியத்தில் மூன்று மாங்கனிகளைக்கொண்ட ஒரு கொத்தாக வரையப்பட்டுள்ளது. அதைப் போலவே ஏ.எல்.பாஷம் ஆசீவகத் துறவிகளில் பெரும்பான்மையோர் வைணவத்தை தழுவிக்கொண்டனர் என்பார். அவர் கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் சித்தன்னவாசலில் உள்ள குகைக்கோயில் கருவறையில் மூன்று துறவிகளுக்கு நடுவே தென்கலை நாமமும் வடகலை நாமமும் பொறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள கீழக்குயில்குடியில் மலையடிவாரத்தில் ஐயனார் கோயில் ஒன்று உள்ளது. இக்கோயில் கருவறைக்கு முன் உள்ள மண்டபத்தில் திருமால் முதலையிடமிருந்து யானையைப் பாதுகாப்பதும் திருமகளோடு கூடியிருப்பதுமாக இரண்டு காட்சிகள் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. அந்த ஓவியங்கள் எதன் காரணமாக வரையப்பட்டுள்ளனவோ, சித்தன்னவாசல் கருவறையில் பொறிக்கப்பட்டுள்ள நாமங்களுக்கும் காரணம் அதுவே.

அப்போது சித்தன்னவாசல் சமணர்களுக்கு உரித்தானது இல்லையா?

நிச்சயமாக இல்லை. சமணத் துறவிகளுக்கான தலையாய விரதங்களில் ஒன்று நீராடாமை. அதனை அஸ்ஞானம் என்பர். ஆனால், சித்தன்னவாசல் கோயில் ஓவியத்தில் 3 துறவிகளும் குளத்தில் உள்ளனர். குளிக்காதவர்களுக்கு குளத்தில் என்ன வேலை? பிறகு சமணத் துறவிகளின் தலையிலோ, முகத்திலோ முடி இருக்கக் கூடாது. ஆனால், சித்தன்னவாசல் ஓவியத்தில் உள்ள மூன்று துறவிகளின் தலைமுடிகள் கருகருவென வாரிவிடப்பட்டுள்ளன. ஓவியத்திலுள்ள தலைமுடியைப் போன்றே கோயில் சிற்பங்களின் தலைமுடிகளும் வாரி முடிக்கப்பட்டுள்ளன. ஓவியத்தில் உள்ள 3 துறவிகளும் கோவணம் அணிந்துள்ளனர். சமணத் துறவிகள் கோவணம் அணிந்துகொள்வது வழக்கமில்லை. இவ்வாறு சமண சமயத்தவருக்கு மாறுபட்ட வகையில் சித்தன்னவாசல் ஓவியங்களும் அமைந்துள்ளன.

இக்குகைக்கோயிலின் மூன்று கருவறைச் சிற்பங்களைப் போல மலையடிவாரத்தில் மூன்று ஐயனார் கோயில்களும் அமைந்துள்ளன. அதனால், அது எந்த நிலையிலும் சமண சமயத்துக்கு உரியன அல்ல.

கல்வெட்டுகள் ஏதாவது உள்ளதா?

சித்தன்னவாசல் கோயிலில் வலதுபுறத்தில் மலையடிப் பகுதியில் அண்மையில் ஒரு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதனை படித்தறிவதற்காக பேராசிரியர் ராஜவேலுடன் செல்லக்கூடிய வாய்ப்பு எனக்கு அமைந்தது. அந்த கல்வெட்டில் விதிவலி தரைக்குளம் என்று உள்ளது. விதி வலியது என்னும் பொருளில் அமைந்த அந்தத் தொடர் ஆசீவகத்தின் ஊழ்க்கோட்பாட்டை விளக்குவதாகும். இந்தியச் சிந்தனை மரபில் ஊழை அடிப்படையாகக்கொண்டு உருவான ஒரு சமயம் ஆசீவகம்.  சிலப்பதிகாரமும் ஆசீவகக் காப்பியமே. அதனால்தான், ஊழ்வினை உறுத்து வந்தூட்டும் என்ற ஊழ்க் கோட்பாட்டை அடித்தளமாகக் கொண்டு அமைந்துள்ளது. எனவே, ஊழ்வினையின் வலிமையை உணர்த்தக்கூடிய வகையில் அமைந்த விதிவலி தரைக்குளம் என்ற தொடர் ஆசீவகத்தின் முழுமையான அடையாளமாக உள்ளது.

அதேபோல, அங்கு படியெடுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று அண்ணல் வாயில் அறிவர் கோயில் என்று குறிப்பிடுகிறது. சிலப்பதிகாரத்தில் ஆசீவகத் துறவிகள் அண்ணலும் பெருந்தவத்து ஆசீவகர்கள் என்று பாராட்டப்படுகிறார்கள். அதைப் போன்றே அறிவர் என்ற தமிழ்ச்சொல் மூன்று காலங்களையும் அறிந்து உரைப்பவர்கள் என்பதாகும். இவர்களைக் கணியன் என்றும் மூன்று காலங்களையும் கணித்துச் சொல்பவர்கள் என்பதும் வரலாறாக உள்ளது. சமண சமயம் ஆசீவகர்களுக்கு உரிய இக்கணியத்தை படிக்கவும், படித்து பயன்படுத்தவும் தடைசெய்துள்ளது. கல்வெட்டில் உள்ள தொடர் அண்ணல் வாயில் அறிவர் கோயில் என்று இருப்பதால் அந்த அறிவர்கள் கணியர்களாக இருப்பதாலும் கணியம் ஆசீவகத்துக்கு உரியதென்பதாலும் அக்கல்வெட்டு ஆசீவகர்களுக்கு உரியன என்பது உறுதியாகிறதல்லவா?

ஆனாலும், ஆய்வாளர்கள் இதனை சமணர்களுக்கு உரியது என்றல்லவா கூறிவருகிறார்கள்?

உண்மை என்பது மேகத்தில் புதைந்த கதிரவனாக மறைந்துவிட்டது.  சித்தன்னவாசல் மலையடிவாரத்தில் உள்ள ஐயனார் கோயில் கல்விட்டங்களை அகழாய்வு செய்தால் மேலும், பல உண்மைகளை வெளிக்கொணரலாம். திறந்த மனத்துடன் ஆய்வாளர்கள் இதை அணுகுமாறு அழைக்கிறேன்.

ஜூன், 2015.

logo
Andhimazhai
www.andhimazhai.com