மச்சி, குளோஸ் த பாட்டில்!

மச்சி, குளோஸ் த பாட்டில்!
Published on

திமுக தலைவர் கருணாநிதி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு கொண்டுவருவோம் என்று அவரது பாணியில் அறிவித்தாலும் அறிவித்தார், தமிழ்நாட்டில் மதுவிலக்குக்காக நீண்டநாளாகப் போராடிவரும் ஆர்வலர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

பள்ளிப் பிள்ளைகள், சிறுகுழந்தைகள் மது அருந்தும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளிவந்து சமூகத்தின் மனச்சாட்சியை உலுக்கியதே திமுகவின் இந்த முடிவுக்குக் காரணம் என்று கொள்ளலாம். அல்லது மக்கள் மனநிலையில் மதுவிலக்குக்கு ஆதரவான திருப்பம் இருக்கிறது, இதைப்பயன்படுத்தினால் தேர்தல் சமயத்தில் வாக்குகள் விழும் என்று நினைப்பதாக இருக்கலாம்.

இன்னொரு யூகமும் உள்ளது. அதிமுக தலைமை, தேர்தல் நெருங்கிய சமயத்தில் டாஸ்மாக்கை மூடி நல்லபெயரை தாய்மார்களிடம் எடுக்கத் திட்டமிட்டிருப்பதை மோப்பம் பிடித்து முன்கூட்டியே செய்த ராஜதந்திர அறிவிப்பாக இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டின் முக்கிய கட்சி என்ற முறையில் இந்த அறிவிப்பு கவனிக்கத்தக்க ஒன்றாக இருக்கிறது.

தமிழர்கள் குடிக்க ஆரம்பித்தது எப்போது?

சங்ககாலத்தில் இருந்தே குடித்துவந்திருக்கிறான். குடிக்காதே என்று சமூகம் கள்ளுண்ணாமை பேசி தடுத்தும் வந்திருக்கிறது. இந்திய விடுதலைக்குப் பின் தமிழன் அரசு அனுமதியுடன் குடிக்க ஆரம்பித்தது கருணாநிதி 1971-ல் செய்த கைங்கர்யம்தான். ஆனால் அவர் 1974ல் கடைகளை மூடிவிட்டார். அதன் பின்னர் அவர் ஆட்சியில் இல்லை. எம்ஜிஆர் முதல்வர் பொறுப்பை ஏற்று சில ஆண்டுகள் கழித்து 1983-ல் மதுவிலக்கை ரத்து செய்ததும், அதன் பின்னர் ஜெயலலிதா மதுவை அரசே விற்பது என்ற முடிவுக்கு வந்ததும், கருணாநிதி ஓசையின்றி அதைப் பின் தொடர்ந்ததும் கடந்தகால வரலாறு. 1983-ல் இருந்து தமிழன் அரசின் அனுமதியுடன் தொடர்ந்து குடிக்கிறான். எந்த பழக்கமும் ஒரு தலைமுறையில் சின்ன அளவில் தொடங்கினால் அடுத்த தலைமுறையில் பரவலாகும். இப்போது ஒரு தலைமுறை குடிக்க ஆரம்பித்து அடுத்த தலைமுறையும் குடித்துத் தீர்க்கிறது. பொறுப்புடன் குடித்தல் என்கிற பழக்கம் இல்லை. இதன் விளைவுகளைக் கண்கூடாகப் பார்ப்பதால்தான் மதுவிலக்கு வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் அரசியல் கட்சிகளும் கூற ஆரம்பித்துள்ளன. காங்கிரஸ், தேமுதிக, பாமக, மதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட எல்லா கட்சிகளும் சொல்ல ஆரம்பித்து இந்த குரல் உச்சஸ்தாயியை அடைந்த நிலையில் திமுக தலைவரும் இதை ஆமோதித்து ஆளும் அதிமுகவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார் என்று கூறலாம்.

மற்ற மாநிலங்களில் குடிப்பவர்களைவிட தமிழ்நாட்டில் குடிப்பவர்கள் சாலை ஓரங்களில் ‘பள்ளி கொள்வதும்’, விரைவில் உடல்நலம்குன்றிப் போவதும் அதிகம். அதிகம் குடிக்க சமூகக் காரணங்கள் இருந்தாலும் தரமற்ற மதுவையும் அரசு  மது அதிகம் விற்பதைக் குறிக்கோளாக வைத்து அதன் மூலம் நிர்வாகம் நடத்த விழைவதையும் காரணம் காட்டமுடியும்.

கிட்டத்தட்ட மதுவிற்பனைத் தொழில் பெரும் அரசியல் எதிரொலிகளைக் கொண்டதாகவும் ஆட்சியில் இருக்கும் கட்சியினருக்கு அடிப்படைத் தொண்டன் முதல் மேல்மட்டம் வரை நிதி தரும் வழியாகவும் உருவெடுத்துள்ளது.

 கல்வி போன்ற அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்தாமல் மதுவிலக்கில் கவனம் செலுத்துவது அவசியமற்றது என்று அந்திமழையிடம் கருத்துத்தெரிவிக்கிறார் எழுத்தாளர் சாருநிவேதிதா.

சட்டப் பஞ்சாயத்து இயக்கப் பொதுச் செயலாளர் செந்தில் ஆறுமுகம், ‘தமிழ்ச்சமூகத்தை மீட்டெடுக்க மதுவிலக்கு மிகவும் அவசியம்’ என்கிறார். இருவரின் கருத்துகளும் இந்தக் கட்டுரையில் தனியே கொடுக்கப்பட்டுள்ளன.

பொதுவாக தமிழ்ச் சமூகம் சினிமா கலாச்சார சமூகம் என்பதால் திரைப்படங்களில் டாஸ்மாக் காட்சிகள் சித்திரிக்கப்படுவதும் வில்லன்களைச் சித்திரிக்க குடிகாரர்களாகக் காட்டிய நிலைபோய், நாயகர்களைக் குடிகாரர்களாகக் காட்டும் நிலை வந்திருப்பதும் குடிப்பழக்கத்தைப் பிரபலப்படுத்த முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.

அம்பேத்கர் ஆகட்டும், பெரியார் ஆகட்டும், மதுவிலக்கு என்ற பெயரில் வரும் கட்டுப்பாடுகளை ஆதரித்தவர்கள் இல்லை. ஆனால் இன்றைய சூழலில் தமிழ்நாட்டின் நிலையைப் பார்த்தால் அவர்கள் கருத்து என்னவாக இருக்கும்? அழுகிய கட்டியை அறுக்க கத்தியை எடுக்கத்தான் சொல்வார்கள்.

குறைந்த பட்சம் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறைந்து மதுவால் வரும் நிதி மூலம்தான் அரசு நிர்வாகம் நடப்படுகிறது என்ற நிலை மாறினால் நிஜமான மக்கள் நல அரசு உருவாகிறது என்று பொருள். 2016 தேர்தல் அதற்கு வழிகாட்டட்டும்!

மதுவிலக்கு கொண்டுவருவது பிரச்னையை திசை திருப்புவதாகும்! - சாரு நிவேதிதா, எழுத்தாளர்

எனக்கு தீவிரமான கருத்துகள் உண்டு. பக்கத்திலேயே கர்நாடகா, ஆந்திரா, கேரளா என்று பல மாநிலங்களில் மதுவிலக்கு இல்லை.

சவுதி அரேபியா போன்ற சில நாடுகளைத் தவிர்த்து எல்லா நாட்டிலும் குடிக்கிறார்கள். ஆனால் எங்கும் தமிழர்களைப் போல் குடித்துவிட்டு சாலையோரத்தில் விழுந்துகிடப்பதில்லை. இதற்குக்காரணம் மிகப்பெரிய பொருளாதார ஏற்றத்தாழ்வு நிலவுவதுதான். கர்நாடகாவில் இல்லையா இந்த ஏற்றத் தாழ்வு? ஆனால் இங்கேதான் மதுவை வாங்கத் தூண்டுகிறார்கள். தெருவுக்குத் தெரு திறந்து வைத்திருக்கிறார்கள். பள்ளி மாணவர்கள் குடிக்கிறார்கள் என்றால் ஏன் அவனுக்கு கடையில் கொடுக்கிறார்கள்? அடல்ட்ஸ் ஒன்லி படத்தை குழந்தைகளுக்குப் போட்டுக்காட்டுவோமா?

இங்கே பிரச்னை ஒழுங்கீனம்தானே தவிர குடிப்பது அல்ல.

இங்கே விற்கப்படும் மதுவும் மிகக்கொடுமையானது. விஷ மது. பாண்டிச்சேரியில் குடிக்கும் சரக்குக்கும் இங்கே குடிக்கும் அதே சரக்குக்கும்தான் எவ்வளவு வித்தியாசம்? தமிழ்நாட்டில் குடித்தால் மறுநாள் காலை முதுகுவலி பின்னி எடுத்துவிடும். இங்கிருப்பது மது மாபியா!

நான் சொல்வது டாஸ்மாக் கடைகளை முடிந்த அளவுக்குக் குறைத்துவிட்டு, கள்ளுக்கடைகளைத் திறந்துவிடுங்கள். உழைப்பாளர்கள் 20 ரூபாய்க்குக் குடித்துவிட்டு நிம்மதியாய் இருப்பார்கள். விற்கும் மதுவை தரமானதாகக் கொடுங்கள். மதுவிலக்கு கொண்டுவந்தால் என்ன ஆகும்? கள்ளச்சாராயத்தைக் குடித்துவிட்டு ஆயிரக்கணக்கில் செத்துப்போவான்.

ஒரு சமூகத்துக்கு அடிப்படைத் தேவை கல்வி. மதுவிலக்கு அல்ல. வீட்டில் வேலை செய்யும் தொழிலாளியின் குழந்தை மட்டமான பளளியில் படிக்கிறது. அப்பிள்ளை படித்து நல்ல நிலைக்கு வருவது இன்றைக்குச் சிரமம். பணக்காரர் வீட்டுப்பிள்ளை நல்ல பள்ளியில் படிக்கிறது. மேலும் மேலும் உயர்ந்துகொண்டே போகிறது. எல்லோருக்கும் ஏற்றத் தாழ்வற்ற கல்வியைக் கொடுப்பதுதான் அடிப்படைத் தேவை. இதைப் பற்றிப்பேசாமல் மதுவிலக்கைப் பற்றிப் பேசுவது உண்மையான பிரச்னையைப் பேசாமல் திசை திருப்புவதாகும். இன்றைக்குப் பள்ளி மாணவன் குடிக்கிறான் என்ற பிரச்னையில் சிக்கும் பையன் யார்? மட்டமான பள்ளியில் தரங்கெட்ட கல்வியைப் பயில்பவன் தான். விதிவிலக்குகளைச் சேர்க்க முடியாது. மதுவிலக்கு கொண்டுவா என்கிறவன் இலவசத்தை நிறுத்திவிட்டு, சுயச்சார்புள்ள வாழ்க்கையை உருவாக்கித் தருவேன் என்று உரக்கச் சொல்வது இல்லை. ஒரு மனிதனுக்கு புற்று நோய் பீடித்திருக்கிறது. அவனுக்கு அதற்கு மருத்துவம் செய்யாமல் அவனது முடிக்கு ஷாம்பு போட்டுவிடுகிறேன் என்று சொல்வார்கள் பாருங்கள். அதுபோல்தான் மதுவிலக்கு என்பதும். இவர்கள் நம்நாட்டில் மக்களை தெருநாய்களைப் போல் நடத்துகிறார்கள். அப்படி இருக்கையில் இப்படித்தான் குடித்துவிட்டு தெருவில் கிடப்பார்கள். செழிப்பான வாழ்க்கை இருந்தால் இந்த பிரச்னை இருக்காது!

நல்ல அரசு நிர்வாகம் மதுவிலக்கால் உருவாகும்: செந்தில் ஆறுமுகம்/ சட்டப் பஞ்சாயத்து இயக்கம் - செந்தில் ஆறுமுகம் பொதுச்செயலாளர், சட்டப்பஞ்சாயத்து இயக்கம்

தமிழ்நாட்டில் தனிமனிதன், குடும்பம், சமூகம், அடுத்த தலைமுறை இந்த நான்குமே மதுவால் பாதிக்கப்பட்டிருக்கும் மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளது. ஜனநாயகரீதியாக சிந்திக்கமுடியாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. ஆட்சியாளர்களுக்கு தேர்தல் சமயத்தில் வாக்காளர்களின் சிந்திக்கும் திறனை மழுங்கடிக்கும் ஆயுதமாகவும் மது பயன்படுத்தப்படுகிறது.

பெருமைக்குரிய பாரம்பரியத்துக்குரிய தமிழ்ச்சமூகத்தின் அடிப்படையே சிதைந்துள்ளது. குடிகாரர்கள் மீது பொதுவாக ஒரு சமூக விலக்கு இருந்து வந்திருக்கிறது. ஆனால் கடந்த பத்தாண்டுகளில் இந்த நிலை தலைகீழாக மாறி இருப்பது உண்மை.

இதன் பின்னணியில் மிகப்பெரிய அரசியல் உலவுகிறது. தகவல் அறியும் சட்டப்படி நாங்கள் பெற்ற மதுஆலை அதிபர்கள் விவரத்தை ஆராய்ந்தோம். அதில் 31 சதவீதம் திமுக ஆதரவாளர்களிடம் பெறப்ப்படுகிறது.  மிடாஸ் 20 சதவீதம் அளிக்கிறது. மீதி 51 சதவீத மது வழக்கமான, ஆரம்பத்திலிருந்தே மது உற்பத்தி செய்யும் பொதுவான ஆலைகளிடம் இருந்து பெறப்படுகிறது. அதேபோல் ஒரு மாநில அரசுக்கு வரி வசூலில் விற்பனை வரி முக்கியமானது. தமிழ்நாட்டின் சொந்த வரிவருவாய் 96,000 கோடி. இதில் 30,000 கோடி ரூபாய் மதுமூலம் வருகிறது. மொத்த விற்பனை வரி வசூல் 72,000 கோடி ரூபாய். மதுமூலம் இதில் கிடைக்கும் பங்கு 22,000 கோடி ரூபாய். மற்ற துறைகள் மூலம் கிடைக்கும் விற்பனை வரி, 50,000 கோடி மட்டும்தான். மது மூலம் பெருமளவு வரி கிடைப்பதால் மற்ற வரிவசூல் வழிகளில் அரசு மெத்தனம் காண்பிக்கிறது என்று நாங்கள் குற்றம் சாட்டுகிறோம். அல்லது அதில் ஊழல் நடக்கிறது. மதுவிலக்கைக் கொண்டுவந்து இதன்மூலம் கிடைக்கும் வருமானம் நின்றுபோனால் தானாகவே ஒழுங்காக பிறதுறைகளில் வசூலாகவேண்டிய விற்பனை தன்னால் வசூலாகிவிடும்! ஆக சிறந்த அரசு நிர்வாகத்துக்கும் மதுவிலக்கு அவசியம்.

 பொறுப்பாக குடிப்பவர்கள் இருந்தால் மதுவிலக்குத் தேவை இல்லை என்று ஒருவாதம் கூறப்படுகிறது. பெருவாரியான மக்கள் நன்மைக்காக மதுவிலக்கு கொண்டுவரப்பட வேண்டியது அவசியமாகும். பிற இடங்களில் இருப்பதுபோல் இங்கே பொறுப்பான குடி இல்லை. அத்துடன் அரசு வருவாயைப் பெருக்குவதற்காக மதுவிற்பனையைப் பெருக்க நினைக்கிறது. திருச்சியில் ஒரு திருவிழாவுக்காக, தாற்காலிகமாக இரண்டு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. திருவிழா என்றால் போலீஸ், மருத்துவம், ஆம்புலன்ஸ், மின்சாரம், குடிநீர் என்று ஏற்பாடு செய்யவேண்டிய அரசு, முன்கூட்டியே சாராயக்கடைகளைத் திறக்கிறது என்றால் பார்த்துகொள்ளுங்கள். ஐஏஎஸ் அதிகாரிகளை நாம் இந்தியன் ஆல்கஹாலிக் சர்வீஸ் அதிகாரிகளாக மாற்றி வைத்திருக்கிறோம். ரேஷன் கடைகளில் பருப்பு இருக்காது, சர்க்கரை இருக்காது. டாஸ்மாக் கடைகளில் பாருங்கள். எதற்கும் திண்டாட்டமே இராது. அங்கே விற்கப்படும் மதுவின் தரமோ மிக மோசம். சமீபத்தில் ஒரு குறிப்பிட்ட நிறுவனத் தயாரிப்பை ஆய்வு செய்தோம். அதில் குறிப்பிட்டிருப்பதை விட 3 சதவீதம் அதிக ஆல்கஹால் இருந்தது. இதற்கெல்லாம் ஒரே வழி மதுவிலக்குதான். நாங்கள் 2016 ஆம் ஆண்டை மதுவிலக்கு ஆண்டாக அறிவித்து செயல்பட்டு வருகிறோம். இப்போது இந்த விவாதம் நல்லதே.

ஆகஸ்ட், 2015.

logo
Andhimazhai
www.andhimazhai.com