மக்கள் ஆதரித்தால் தப்ப முடியும்

மக்கள் ஆதரித்தால் தப்ப முடியும்
Published on

வேலூரைச் சேர்ந்த மனுக் கண்ணன் திரைப்படத் துறையைச் சேர்ந்தவர் அல்லர். திரைத்து¬றையின் மீது ஆர்வம் கொண்டவரும் அல்லர். பட்டமேற்படிப்பு படித்துவிட்டு துபாய் போய் மாதம் பல இலட்சங்கள் சம்பளம் வாங்குகிற நல்லபணியில் இருந்தவர். இந்தியாவில் தகவல்அறியும் உரிமைச்சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்ட பிறகு திருச்சியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர், அதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறார் என்கிற செய்தியைப் பத்திரிகைகளில் பார்த்துவிட்டு இதையே ஒரு கதையாக்கித் திரைப்படம் எடுத்தால் வெகுமக்களுக்குச் சென்றுசேருமே என்கிற நல்லெண்ணத்தில் செய்கிற வேலையை விட்டுவிட்டு மும்பையிலுள்ள ஒரு திரைப்படக்கல்லூரியில் ஆறுமாதங்கள் இயக்குநர் பயிற்சி எடுத்துக்கொண்டு தமிழகம் வந்து அங்குசம் என்றொரு படத்தை எடுத்துமுடித்துவிட்டார்.

    ஊழலைத் தடுக்கிற வழிகளில் ஒன்று தகவல்அறியும்உரிமைச்சட்டம். ஆனால் அது சம்பந்தப்பட்ட படத்திற்கு அரசாங்கத்தின் வரிவிலக்கைப் பெற கையூட்டு கொடுக்கவேண்டியிருக்கிறது என்று இயக்குநர் மனுக்கண்ணன் பத்திரிகைகளில் பேட்டி கொடுத்திருந்தார். அதன்விளைவு அந்தப்படத்திற்கு வரிவிலக்குக் கொடுக்கப்பட்டுவிட்டது. அதோடு இயக்குநர் மீது மானநஷ்டவழக்கும் தொடுக்கப்பட்டுவிட்டது. இதனால் இந்தப்படம் தமிழகஅரசுக்கு எதிரான படம் என்று அவர்களாகவே முடிவு செய்து இந்தப்படத்தைத் திரையிட மறுத்தார்களாம். பெரும் போராட்டத்துக்குப் பிறகு திரையரங்குகள் ஒப்பந்தம் ஆகியுள்ளன. பிப்ரவரி 21 ஆம் நாள் படம் வெளியாகும் என்று சொல்லப் பட்டது. அப்போதும் வரவில்லை.

இப்போது மார்ச் முதல்வாரத்தில் படம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இந்தநிலையில் மனுக்கண்ணனைச் சந்தித்து, படவெளியீடு தள்ளிக்கொண்டே போகிறதே? என்றதும், இந்தப்படம் தகவல்அறியும்உரிமைச்சட்டம் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துகிற நோக்கத்தில் எடுக்கப்பட்ட படம். அரசாங்கம் என் மீது வழக்குப் போட்டுவிட்டது என்றதும் பலரும் இந்தப்படத்தைத் திரையிடப் பயந்தார்கள். அதனால் தாமதமானது. இப்போது அந்த பயத்தைப் போக்கி படத்தில் தமிழகஅரசையோ முதல்வரையோ தாக்கி எதுவும் இல்லை என்பதை விளக்கிப் படத்தை வெளியிடுகிறோம்“ என்கிறார்.

   “இந்த வேலையில் ஏன் இறங்கினோம் என்று நினைக்கிறீர்களா?” என்று கேட்டதற்கு, நான் தனிப்பட்ட முறையில் இன்னும் எவ்வளவு சோதனை களையும் தாங்குவேன். ஆனால் என் குடும்பத்தினர் இதனால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர் என்பதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. நிறையக்கடன் வாங்கியிருக்கிறேன். அவை என்னை நெருக்குகின்றன. இந்தப்படத்தை மக்கள் ஏற்றுக்கொண்டு வெற்றிப்படமாக்கினால் நான் தப்பமுடியும். இம்மாதிரி நல்லமுயற்சிகளுக்கு ஆதரவு கொடுக்கமாட்டோம் என்று சொல்லி விட்டார்கள் என்றால், வேறுவழியில்லை நான் மறுபடி வேலைக்குப் போகவேண்டியதுதான்” என்கிறார் மனுக்கண்ணன்.

பிப்ரவரி, 2014.

logo
Andhimazhai
www.andhimazhai.com