மக்களே எதிர்க்கட்சி

Published on

மாமன் செத்தா  Hair ஆச்சு... மாமன் கம்பளி நமக்காச்சு...என்கிற கதையாய் கூடங்குளத்தில் அணு உலை வந்து எவன் செத்தா என்ன? நமக்குக் கரண்ட் கிடைச்சா சரி என்கிற மன நிலை பிசகிய நிலையில் சிலர் இருக்க ஓராண்டைத் தாண்டி  தொடர்ந்து கொண்டிருக்கிறது தென் தமிழக   மக்களின் போராட்டம். உலையை ஓடவிட்டு விலையாகப் பெறும் அந்தக் கம்பளியும் சாதாரணக் கம்பளி அல்ல கணக்கற்றோரைக் காவு கேட்கும் கதிரியக்கக் கம்பளி என்பதுதான் அவலத்தின் உச்சம். 

ஒரு மில்லிமீட்டர் அளவுகூட வன்முறைக்கு இடங்கொடுக்காமல் பல்லாயிரக்கணக்கான மக்கள்  கட்டுக்கோப்பாக போராடிக் கொண்டிருப்பது என்பது நாம் இந்தியா விலேயே, இதுவரை  கண்டிராத அதிசயங்களில் ஒன்று.

தி.மு.க - அ.தி.மு.க...

காங்கிரஸ் - பி.ஜே.பி...

இடது - வலது...

தி.க - இந்து முன்னணி...

எனச் சகலரும் இதில் வெட்கம் கெட்டு ஓரணியில் இணைந்திருக்க மக்கள் மட்டும் எதிர்க் கட்சியாய் ஒன்றுபட்டு நிற்கிறார்கள்.

பன்றித்தொழுவ  ஜனநாயகம் எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதற்கு இந்த ஓ உதாரணமே போதும். எண்ணிக்கைக்குள் அடக்கிவிட முடியாத  இம்மக்களது ஒட்டுமொத்த கூக்குரலையும் மீறி அணு   உலை நிறுவப்பட்டு நாளை ஏதேனும் படுபயங்கர ஆபத்து ஏற்படுமாயின், அது வெறும் விபத்தல்ல. திட்டமிட்ட படுகொலை. அதுவும் அப்பட்டமான இனப்படு

கொலை. சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டிய மாபெரும் குற்றச் செயல்.

அப்பாடடக்கர் ஆலோசனை -1

சென்னை எப்ப வருவார்? கொடநாடு எப்பப் போவார்? என்று கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் கூட பதில் சொல்லமுடியாத இந்தக் கேள்விக்கு பதிலாக  மார்ச் முதல் ஆகஸ்ட் வரை ஆறு மாதம் கொடநாட்டை தலைநகரமாகவும் செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை ஆறு மாதம் சென்னையை தலை நகரமாகவும்.

அறிவித்து ஏன் ஆட்சி நடத்தக்கூடாது?

அப்பாடடக்கர் ஆலோசனை -2

ஈழம்... ன்னும் சொல்ல முடியாம... தமிழ்...ன்னும் தோள் தட்டமுடியாம ஙேன்னு முழிக்கும் திமுக தலைவர் பேசாம ஏன் லயன்ஸ் கிளப்புக்கோ ரோட்ராக்ட் கிளப்புக்கோ தலைவரா ஆகக்கூடாது?

லைலா மஜ்னு, அம்பிகாபதி அமராவதி, ஷாஜகான் மும்தாஜ் ஜோடிகளுக்குப் பிறகு அமரத்துவம் பெற்ற மற்றொரு ஜோடி மீண்டும் இணையப் போகிறதாம். காலத்தின் கோலத்தால் பிரிந்த இந்த ஜோடியை மீண்டும் இணைத்துவிட்டால் தமிழகத்தைப் பீடித்திருக்கிற சகல சாபமும் சட்டென விட்ட கன்றுவிடுமாம். இதற்காக பெரும் முயற்சியில் இறங்கி யிருக்கிறாராம் சுப்பாராவோ... அப்பாராவோ என்கிற  ஒரு மகான்.

ஹிஸ்ட்ரி... ஜாகரபி... சோசியாலஜி... கெமிஸ்ட்ரி... என  சகல சமாச்சாரமும் ஒத்துப்போகும் அந்த அதிசய ஜோடி வேறு யாருமல்ல. நம்ம சிம்பு - நயன்தாராதான். அப்புறம் என்ன அதுக மட்டும் சேர்ந்தாச்சுன்னா தமிழகத்தோட விலைவாசி ஏற்றம்... மின் வெட்டு... எல்லாம் தீர்ந்தது. கவலைய விடுங்கப்பு.

எலேய்... இங்க அவனவன் சோத்துக்கு சிங்கியடிச்சுக்கிட்டு சீக்கியடிச்சுட்டு கெடக்கான். உங்குளுக்கு இதுக்கு மத்தியிலும் ஒரு கிளுகிளுப்பு கேட்குதோ?

சாமீ...எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்... சாமீ...

உலகத் திரைப்பட விழாக்கள் கோவா, திருவனந்தபுரம் என பல மாநிலங்களில் தூள் கிளப்பிக்கொண்டிருக்க தமிழ்நாட்டில் மட்டும் மன்மோகனின் மந்த நிலையில் இருக்கிறதே என்ன காரணமாக இருக்கும்? ஒருவேளை தமிழகத்திலும் உலகத் திரைப்படங்கள் திரையிடப்பட்டு மக்களும் அதை அமோகமாகப் பார்க்கத் தொடங்கிவிட்டால் சுட்ட பழம் எது?  சுடாத பழம் எது என்று தெரிந்துவிடும் என்பதனால் இருக்கலாமோ?

செப்டெம்பர், 2013.

logo
Andhimazhai
www.andhimazhai.com