அரியலூர் பேருந்து நிலையத்தில் நடந்துக் கொண்டிருந்தேன். கொட்டை வடிநீர் சாப்பிடுவோமா பொறியாளரே?‘ , என்று குரல் வந்தது. திரும்பிப் பார்த்தேன், அண்ணன் பெருநற்கிள்ளி நின்று கொண்டிருந்தார். பள்ளிப் பருவத்தில் பார்த்தது, கல்லூரி முடித்த சில ஆண்டுகள் கழித்த இடைவெளியில் சந்திக்கிறேன். அது 1992ம் ஆண்டு. சமூகப் பணியில் தீவிரமானவர். தமிழ் ஆர்வலர். உரையாடல் நீண்டது. அவர் ஆங்கிலம் கலவாத தமிழிலேயே பேசினார். கல்லூரிக் காலம் முடிந்து வந்திருந்த நான் சற்று சிரமப்பட்டே போனேன், அவருக்கு தனித் தமிழில் பதிலளிக்க.
ஆண்டிமடம் கிராமத்தில் அரசுப் பள்ளியில் படிப்பு, தமிழ் வழியில். அப்போதைய தென்னாற்காடு மாவட்டத்தின் எல்லையில் இருக்கும் ஊர். அதனால் வேர்கடலையை ‘மல்லாட்டை’ என்றழைக்கும் நடுநாட்டு தமிழ் புழங்கும் அங்கு. 30 கிலோமீட்டரில் தா.பழூர். கொள்ளிடம் ஆற்றை ஒட்டிய பகுதி. ஆற்றுக்கு அந்தப் பக்கம் தஞ்சை மாவட்டம். அதனால் அங்கு புழங்கும் வார்த்தைகள் சில வேறுபடும். 55 கிலோமீட்டரில் அரியலூர், அங்கு பயன்படுத்தும் பல வார்த்தைகள் புரியாது.
இந்த நிலையில் தான் கல்லூரிப் படிப்பிற்கு சிதம்பரம் சென்றேன். அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பொறியியல் துறை. கல்லூரி துவங்கிய முதல் வாரம். அறைக்கு வெளியே இருக்கும் நடைபாதையை ஒட்டிய கட்டையில் ஒரு மாணவர் தளர்ச்சியாக அமர்ந்திருந்தார். உதவி தேவையோ என,‘ என்ன ஆச்சி?’, என்றேன்.
‘ கிறக்கமாயிட்டு வரு’, என்றார். எனக்குப் புரியவில்லை. மீண்டும் கேட்டேன்,‘என்ன செய்யிது?’. அவர் மீண்டும் சொன்னார்,‘ கிறக்கமாயிட்டு வரு’. அர்த்தம் புரியாமல் அவர் அறையில் இருந்தவரை அழைத்தேன். அவர் வந்து கேட்டுவிட்டு சொன்னார்,‘ அவனுக்கு மயக்கமா வருதாம். அது கன்னியாக்குமரித் தமிழ். கொஞ்சம் மலையாளமா இருக்கும்’ . அதற்குப் பிறகு சிவில் துறை பினோதாஸிடம் வலியப் பேசி, கன்னியாக்குமரித் தமிழை ரசிப்பது வழக்கமாகிப் போனது.
அறை நண்பர் செந்தில் வெளியில் கிளம்பும் போது, ‘சிவா, செருப்ப தொட்டுகிட்டு வந்துடறேன்’, என்றார். திரும்பி நின்று ஆர்வமாகப் பார்த்தேன், என்ன செய்கிறார் என்று. செருப்பை அணிந்து வந்தார். ‘அது என்ன தொட்டுகிட்டு வர்ரன்னுட்டு போட்டுகிட்டு வர்ற?’, என்றுக் கேட்டேன். ‘ நாங்க வீட்ல அப்புடித் தான் சொல்வம்’, என்றார். திருச்செங்கோடு அருகில் கவுண்டம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர். கொங்குத் தமிழ்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இப்படி பல வட்டாரத் தமிழ்களை அறிமுகப்படுத்தியது.
இன்னொரு நண்பர் சங்கர் பேசியதோ தமிழையே மறக்கடித்தது. ஆற்காடு தமிழ், தெலுங்கு கலந்தது. ‘இன்னா, துன்னப் போறியா?’ ,என்றாலே நம்மை திட்டுவதுப் போலத் தோன்றும். இன்னும் வலியது சென்னைத் தமிழ். சென்னை மாணவர்கள் பயன்படுத்திய ஒரு வார்த்தை, மற்ற தமிழகத்து மாணவர்களுக்கு ஒவ்வாத ஒன்று. நெருக்கமாக பேசும் போது, சகஜமாக பயன்படுத்துவார்கள். முதல் நாள் என்னிடம் பேசும் போது, ஒரு நண்பர் அந்த வார்த்தையை பயன்படுத்த சட்டையையே பிடித்து விட்டேன்.
பொறியியல் கற்றது ஆங்கில வழியில். பிறகு பணி செய்ய பெங்களூரு சென்ற போது கன்னடம், தெலுங்கு பேச வந்தது. அப்புறம் அப்படி, இப்படி மலையாளமும், ஹிந்தியும். பிறகு பொதுவாழ்க்கை சூழலில் எனது பேச்சில் ஆங்கிலக் கலப்பு குறைய ஆரம்பித்தது. மீண்டும் தமிழ் ஆர்வலர் அண்ணன் கிள்ளி அவர்களுடன் பணியாற்றும் சூழல். நாங்கள் பேசிக் கொள்ளும் போது, ஆங்கிலம் கலவாமல் தனித் தமிழில் பேசிக் கொள்வோம். ஆனால் பொதுவெளியில் பேசுவது சிரமமாகத் தான் இருக்கிறது.
‘கபாலி’ திரைப்படம் வெளிவந்த உடன் ஒரு நண்பர் அலைபேசியில் அழைத்தார். ‘நீங்க அடிக்கடி சொல்ற வசனத்தை ரஜினி படம் முழுசும் பேசறாரு’. ‘ அப்படியா, என்ன வசனம்?’. ‘மகிழ்ச்சி’. மகிழ்ச்சி, அவருக்கு வசனமாகிப் போனது. அவருக்கு தெரிந்ததெல்லாம் சந்தோஷம், தமிழுக்கு தான் தோஷம். இப்போது கபாலிக்கு பிறகு எங்கு சென்றாலும் பிரயோகிக்கப்படும் வார்த்தை ‘ மகிழ்ச்சி’ தான். இதுவே மகிழ்ச்சி தான். இயக்குநர் ரஞ்சித்துக்கு நன்றி. வழி எதுவோ, தமிழ் கொண்டாடப் படுகிறது, பயன்பாட்டுக்கு வருகிறது. மகிழ்ச்சி !
செப்டெம்பர், 2016.