போராளியின் வாழ்க்கை

Published on

மிகுந்த மனச்சோர்வுடன் என் பதிப்பக அலுவலகத்தில் உட்கார்ந்திருந்த மதியப் பொழுது அது. மனச்சோர்வுக்கு தனிப்பட்ட காரணங்கள் ஏதுமில்லை.  பத்திரிகை செய்தி உண்மை என்று மிக வெகுளியாய் நம்பி என் பதிப்பக புத்தகங்களை நூலக ஆணைக்கு அனுப்பிவைத்து நிமிரும் போது ஐந்து பேரின் நான்கு நாட்களின் முழு உழைப்பும் ஒரு லட்சத்து முப்பத்தியிரண்டாயிரம் செலவும் ஆனதால் ஏற்பட்டிருந்த சோர்வு. அறுபத்தி ஐந்து மதிக்கத் தக்க பெரியவர் ஒருவர் என் அலுவலகம் ஏறி வருகிறார். ஐம்பது வயது மதிக்கத் தக்க உடல்வாகு. வெளுத்து மெலிந்த சிரிப்பைத் தாங்கின முகம். கையில் ஒரு மஞ்சள் பை. அதில் சில பாலித்தீன் கவர்களுக்குள் கவிதைகள். பலரிடம் ஏறி இறங்கி சலித்துப் போன ஒரு சிரிப்பு. அப்படியே பேச ஆரம்பிக்கிறார்.

“மேடம் கொஞ்சம் கவிதைகள் எழுதியிருக்கிறேன். பவா சார்கிட்ட பேசினேன். உங்களப் பாக்கச் சொன்னார்”. இப்படி ஆரம்பித்த போதே எனக்கு எப்போதும் வரும் சலிப்பு ஏனோ இவரிடம் வரவில்லை. பதிப்பக அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு கவிதை புத்தகங்களை நிராகரிப்பது மாதிரியான வேலை மிகுந்த மனச் சோர்வைத் தரக்கூடியது.

“என் கவிதைகளைக் கொஞ்சம் பாருங்களேன்.” அவர் எடுத்துத் தந்த கவிதைகளை லேசாகப் புரட்டிய நான் நிமிர்ந்து உட்காருகிறேன். முழுக்க முழுக்க கனல் வரிகளாய் பாரதியின் அக்னிக் குஞ்சொன்று அங்கே பத்திரமாய் அடைகாக்கப்பட்டிருந்தது. மேலும் மேலும் வாசிக்கிறேன். அப்படியே அவரிடம் பேசுகிறேன்.

“எனக்கு புத்தகம் போட வசதியில்லம்மா. ஒரு தனியார் கல்லூரியில செக்யூரிட்டியா இருக்கேன். நானே ரொம்ப சிரமப்பட்டு ஒரு சின்ன புத்தகம் போட்டேன். எப்படியோ எங்க கல்லூரியில அதை வெளியிட ஒப்புகிட்டாங்க. ஆனா வெளியீட்டு விழா முடிஞ்ச உடனே பிரச்சனைகள் அதிகமாயிடிச்சு. இவன் ஒரு செக்யூரிட்டி, இவன் மேடையில் உட்கார நாம இவனுக்கு பொன்னாடை போத்தி மரியாதை செய்ய வேண்டி வந்திடிச்சேன்னு எங்க பிரின்சிபால் ரொம்ப மனசு வெதும்பிட்டாரு. அதே சமயம் தமிழ் துறையில இருக்கிற ஒரு புரொஃபசருக்கும் என்னைப் பிடிக்கல. நாமளே லைப்ரரிக்கு போறதில்ல, செக்யூரிட்டியா இருக்கற இந்தாளு ரெண்டு கார்டு வச்சு புக் எடுத்து படிக்கிறானேன்னு நேரம் கெடக்கும்போதெல்லாம் மேனேஜ்மெண்ட்ல என்னப் போட்டு குடுக்க ஆரம்பிச்சார்ம்மா.

அந்த நேரத்தில் இவருக்கு சின்னதாக ஒரு விபத்து ஏற்பட்டு காலில் அடிபட அதைக் காரணம் காட்டி வேலையிலிருந்து பணிநீக்கம் செய்திருக்கிறது நிர்வாகம்.  எதிர்பார்த்த விஷயம்தான் என்பதால் அதிக சிரமப்படாமல் ஆனால் மிகுந்த வேதனையுடன் நூலக அட்டையை மட்டும் கொடுத்துவிட்டு வெளியேறியிருக்கிறார்.

“சார் உங்க வீட்டில எப்படி எடுத்துக்கிட்டாங்க?”

“எனக்கு அஞ்சு பொண்ணும்மா, எல்லாரையும் நல்லா படிக்கவச்சு கல்யாணமும் பண்ணி குடுத்துட்டேன். பொண்டாட்டிக்கு நான் எழுதறதும் படிக்கறதும் பிடிக்கல. உங்கூட இனிமே வாழவே முடியாதுன்னு மகளோட போயிட்டாங்க. கொஞ்சம் நிலம், சொந்த வீடெல்லாம் இருந்தது. எல்லாம் பசங்கள படிக்க வக்க வித்துட்டேன்.         வாழ ஏதாவது செஞ்சுக்கலாம். அதெல்லாம் பிரச்சனையில்ல.  ‘போராளியின் வாழக்கைன்னு  ஒரு புக் எழுதிகிட்டிருக்கேன், இன்னும் முடிக்கல, அத முடிசிட்டா செத்திடுவேன். அதுக்குமேல ஒண்ணும் வேலை இல்ல”

சிரித்துக்கொண்டே சொன்னவரிடம் என்னால் பதிலுக்கு சிரிக்க முடியவில்லை. உறைந்து போகிறேன்.

மொத்த படைப்புகளையும் வாங்கி என்னால் பதிப்பிக்க முடியவில்லை. ஆனால் என்னை மீட்டெடுத்து நான் சொல்கிறேன். “ஐயா உங்கள் படைப்புகளை என்னால் பதிப்பிக்க முடியாத பண நெருக்கடியில் நான் இருக்கிறேன், ஆனால் சில நண்பர்களிடம் கொஞ்ச கொஞ்சமாக பணம் வாங்கியாவது உங்கள் புத்தகத்தை நான் பதிப்பிக்கிறேன்”

சொன்னவள் கொஞ்சம் காஃபி குடிக்கலாம் இருங்கள் என்று சொல்லிவிட்டு என் அலுவலகத்தோடு கூடவேயிருக்கும் வீட்டிற்குள் செல்கிறேன். காஃபி கப்புகளோடு வரும்போது அவர் போய்விட்டிருந்தார். சிலர் இப்படித்தான் தடயங்களை மட்டும் விட்டுவிட்டு மறைந்து விடுகிறார்கள். பறவையின் உதிர்ந்த சிறகின் அதிர்வோடு அது நமக்குள் கிடந்து கனக்கிறது.

(கட்டுரையாளர் ஒரு மொழிபெயர்ப்பாளர்)

மார்ச், 2016.

logo
Andhimazhai
www.andhimazhai.com