போராட்ட முதல்வர்கள்!

போராட்ட முதல்வர்கள்!
Published on

டெல்லியின் முதலமைச்சராக அர்விந்த் கெஜ்ரிவால் பொறுப்பேற்றதில் இருந்து செய்திக்கும் பரபரப்புக்கும் பஞ்சமே இல்லை. டெல்லி மாநில அரசிடம் காவல்துறைப் பொறுப்பை ஒப்படைக்கக்கோரி அவரும் அவரது பிற  அமைச்சர்களும் தொண்டர்களும் சேர்ந்து நாடாளுமன்றம் அருகே நடுசாலையில் அமர்ந்து நடத்திய போராட்டம் டெல்லியைக் குலுக்கிவிட்டது. சட்டம் ஒழுங்கு கெடுவதற்கு ஒரு முதல் அமைச்சரே காரணமாக இருக்கலாமா என்று கடுமையான விவாதம் நடக்கிறது.

மத்திய அரசுக்கு எதிராகத் தெருவில் இறங்கிப்போராடிய முதல் முதல்வர் இவர் மட்டும் அல்ல. இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில்  முதல்வர்கள் இப்படி தெருவுக்கு வந்திருக்கிறார்கள். அவர்களின் பலம், டெல்லியில் உள்ள உறவு ஆகியவற்றைப் பொறுத்து அவர்கள் நினைத்ததை நடத்திக் காட்டியிருக்கிறார்கள்; அல்லது சாதிக்கமுடியாமல் அரைகுறையாக தங்கள் போராட்டங்களை முடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

2011-ல் எண்டோசல்பான் என்ற பூச்சி மருந்தை தேசிய அளவில் தடைசெய்யக்கோரி கேரளத்தின் முதல் அமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தன் ஒரு நாள் முழுக்க உண்ணாவிரதம் இருந்தார். மக்கள் பிரதிநிதிகள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் அவருடன் கலந்துகொண்டிருந்தனர். அந்த தினம் எண்டோசல்பான் எதிர்ப்பு தினமாக மாநிலத்தில் கடைபிடிக்கப் பட்டது. ஜெனிவா சர்வதேச மாநாட்டில் எண்டோசல்பானுக்கு தடைவிதிக்கக் கோரி இந்தியா வலியுறுத்தவேண்டும் என்று அச்சுதானந்தன் இப்போராட்டத்தில் இறங்கினார். 2005-ல் இருந்து எண்டோ சல்பான் கேரளத்தில் தடை செய்யப்பட்டிருக்கிறது. காசர் கோடு பகுதியில் முந்திரிவிவசாயத்தில் இது பயன்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட கோரமான விளைவுகளுக்குப் பலர் பலியானதால் இந்த தடை கொண்டுவரப்பட்டிருந்தது. தேசிய அளவில் இம்மருந்தைத் தடைசெய்ய கேரளம் கோரிவந்தது.

இதற்கு முன்பாக 2008-ல் அமைச்சர்களுடன் டெல்லி சென்ற அச்சுதானந்தன் ஜந்தர் மந்தரில் மத்திய அரசு கேரளாவைப் புறக்கணிக்கிறது என்று கூறி ஒரு போராட்டத்தையும் நடத்தியிருந்தார்.

தமிழக முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் 1983-ஆம் ஆண்டு பிப்ரவரி 9-ஆம் தேதி மத்தியத் தொகுப்பில் கூடுதல் அரிசி ஒதுக்கீடு கோரி ஓர்நாள் உண்ணாவிரதம் இருந்தார்.  கூடுதல் அரிசி ஒதுக்க மறுக்கும் இந்திரா தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்து உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துவிட்டு போராட்டத்தில் இறங்கினார். சென்னை கடற்கரையில், அண்ணா சமாதி முன் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அவர் உண்ணாவிரதம் இருந்தார்.  அவரது அரசு சத்துணவுத் திட்டத்தை ஆரம்பித்திருந்தது. அதனால் பெருமளவில் அரிசி தேவை இருந்தது. இந்திரா காந்தி கோபத்தின் உச்சிக்கே சென்றார் என்று கூறப்பட்டாலும் அரசியல், கூட்டணி நிர்ப்பந்தங்களால் அன்றே இந்திரா அதிகமான அரிசி ஒதுக்கீடு செய்து அறிவித்தார்.

அது நவம்பர் 1, 1988. ஆந்திரபிரதேச மாநிலம் உருவாகி 30-வது ஆண்டுதினம். விழாக் கொண்டாட்டங்களை முடித்துவிட்டு வீட்டுக்குப் போவதாக இருந்த ஆந்திரமுதல்வர் என்.டி.ராமராவ் நேரடியாக தலைமைச்செயலகம் வந்தார். காலை 11.20க்கு நடு சாலையில் துண்டை விரித்து உட்கார்ந்துகொண்டார். கடந்த நான்குமாதங்களாக காங்கிரஸ் தலைமையில் ராயலசீமா கூட்டு நடவடிக்கைக் குழுவினர் தங்கள் பகுதிக்கு பல வளர்ச்சித் திட்டங்களைக் கேட்டு அங்கு போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். போராட்டக் குழுத் தலைவர் ராஜசேகர ரெட்டி. அக்குழுவினரிடம் பேச அன்றைக்கு நேரம் கொடுத்திருந்தார் ராமராவ். நடுசாலையில் அவர் உட்கார்ந்ததும் காங்கிரஸ் காரர்கள் திகைத்தனர். அவர் உள்ளே போக வழி விட்டனர். ஆனால் ராமராவ் அடுத்தகட்டமாக அறிவித்ததுதான் பயங்கர ஸ்டண்ட். “ராயலசீமா சகோதார்களுடன் இந்த இடத்திலேயே உட்கார்ந்து பேச விரும்புகிறேன்”.

தங்கள் போராட்டத்தை ராமராவ் தனக்கு சாதகமாகத் திருப்பி பெயர் எடுக்க விரும்புகிறார் என்று உணர்ந்த காங்கிரசார், ‘முடியாது. பேசுவதற்கு ஒதுக்கித் தந்த குறிப்பிட்ட நேரமான 12.30க்கு தலைமைச் செயலகம் உள்ளேதான் பேசுவோம்’ என்று கூறிவிட்டனர். போராட்டகாரர்களுடன் பேச முயன்ற ராமராவ், முடியாமல் போகவே நடு சாலையிலேயே படுத்து ஒரு தூக்கமும் போட்டார். மாலைவரை இந்த பஞ்சாயத்து தொடர்ந்தது. காங்கிரஸ்காரர்கள் கடைசியில் கல்லெறிய ஆரம்பிக்க, வன்முறை வேணாமென்று ராவ் தன் ‘எதிர்’ போராட்டத்தைக் கைவிட்டார். மறுநாள் செய்தித்தாள்களில் அவர் சாலையில் படுத்துத் தூங்கும் படமே வெளிவந்தது. அடுத்த சிலநாட்கள் கழித்து காங்கிரஸ்காரர்கள் ராயலசீமா மாவட்டங்களில் அறிவித்திருந்த முழு அடைப்புப் போராட்டமும் பிசுபிசுத்தது.

கர்நாடகத்துடனான காவிரிப் பிரச்னை பல போராட்டங்களைக் கடந்திருக்கிறது. அதில் ஒன்றுதான் 1993-ல் முதல்வர் ஜெயலலிதா நடத்திய உண்ணாவிரதப்போராட்டமும். சென்னையில் உள்ள அண்ணா சமாதியில் ஜூலை 18ந்தேதி வந்து உட்கார்ந்தவர் 22 ஆம் தேதிதான் முடித்தார். ஏராளமான பேர் வந்து அவரது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பான 205 டி.எம்.சி நீர் தமிழ்நாட்டுக்குத் தரவேண்டும் என்பதை நடைமுறைப் படுத்த ஒரு கண்காணிப்புக் குழு அமைக்கவேண்டும் என்பதே கோரிக்கை. பிரதமராக இருந்த நரசிம்மராவ் அப்போதைய நீர்வளத்துறை சுக்லாவை மூன்று நாள் கழித்து அனுப்பி வாக்குறுதி அளித்தார். அவர் கொடுத்த பழச்சாறை அருந்தி போராட்டத்தை அவர் முடித்துக் கொண்டார். சில மாதங்கள் கழித்து கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது.

நர்மதா அணைக்கட்டு விவகாரத்தில் இடம்பெயர்த்தப்பட்டவர்களுக்கு இழப்பீடு கோரி மேதா பட்கர் போராடியது நினைவிருக்கும். அவர் 2006-ல் இதற்காக 20 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். இந்நிலையில் மத்திய அரசு இதைப் பயன்படுத்தி நர்மதா அணைக்கட்டுப் பணிகளைத் தடை செய்ய விரும்புகிறது என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி புகார் கூறினார். இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கும் தினமான ஏப்ரல் 17 திங்கள்கிழமைக்கு முதல்நாள் ஞாயிறு அன்று மதியம் 2 மணியிலிருந்து  51 மணிநேரம் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக மோடி அறிவித்து அகமதாபாத்தில் சபர்மதி நதிக்கரையோரம் அமர்ந்தார். டெல்லி பாஜக தலைவர்கள் பரபரப்பானர்கள். பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அத்வானி போன் செய்தார். மறுநாள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு வந்தது. இடம் பெயர்ந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்று கடுமையாக கூறினாலும் உச்சநீதிமன்றம் நர்மதா அணையின் உயரத்தைக் கூட்டும் பணிகளுக்குத் தடைவிதிக்க மறுத்துப் பணிகள் தொடரலாம் என்று கூறியது. இதை அடுத்து ஒருபுறம் மேதா பட்கர் தன் உண்ணாவிரதத்தை முடிக்க மோடியும் 29 மணி நேரத்திலேயே தன் போராட்டத்தை முடித்துக் கொண்டார். பாஜக மூத்த தலைவர் ஓம் மாத்தூர் பழச்சாறு கொடுத்து முடித்துவைத்தார். மத்திய அரசு அணைக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை குஜராத்தின் சிப்பாயான தன்னால் சும்மா பார்த்துக் கொண்டிருக்கமுடியாது என்பதாலேயே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதாகக் கூறினார். இப்பிரச்னையை மக்கள் முன் வைக்கும் தன் நோக்கம் நிறைவேறிவிட்டதாகவும் அவர் சொன்னார்.

மாநிலசுயாட்சியை பல்லாண்டுகாலமாக வலியுறுத்திவரும் மு.கருணாநிதி சேதுசமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டது 2007-ல். ஆனால் அவர் போராட்டத்தைத் தொடங்கிய சில மணிநேரங்களிலேயே தலைமைச் செயலகத்துக்குச் சென்று பணியைக் கவனிக்க நேர்ந்தது. ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சார்பாக அக்டோபர்-1 ஆம் தேதி மாநிலந்தழுவி பந்த் நடத்தப்படும் என்று திமுக அறிவித்திருந்தது. ஆனால் ஆளும் அரசே எப்படி பந்த் நடத்தலாம் என்று அதிமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி பின்னர் உச்சநீதிமன்றமும் சென்று பந்துக்கு தடை பெற்றது. ஆனாலும் அக்டோபர் 1 அன்று கூட்டணிக் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் புடைசூழ சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே போராட்டப் பந்தலுக்கு வந்து அமர்ந்திருந்தார் முதல்வர். ஆனால் அன்று காலையே உச்சநீதிமன்றம் கடுமையான எச்சரிக்கை விடுக்கவே அவர் கிளம்பிச்சென்றுவிட்டார். மற்ற அமைச்சர்களும் கிளம்பிவிட்டனர். என்னதான் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற திமுக கடுமையாகப் போராடினாலும் இன்னும் அது கானல் நீராகவே தொடர்கிறது. ஈழப்போரின்போது முதல்வர் கருணாநிதி மேற்கொண்ட உண்ணாவிரதமும் சில மணிநேரங்களிலேயே மத்திய அரசு இலங்கை அரசு கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தாது என்று கொடுத்த வாக்குறுதியை அடுத்து கைவிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

ஆந்திரபிரதேசத்தில் கொஞ்சகாலம் முதல்வராக இருக்க வாய்ப்புப் பெற்ற இப்போதைய தமிழக கவர்னர் ரோசையாவும் போராட்டக்களத்தில் ஒரு முதல்வராகவே இறங்கி இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகுதியைப் பெறுகிறார். 2010-ல் ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சன் சோனியா காந்தியைப் பற்றிச் சொன்ன ஒரு கருத்தை எதிர்த்து நாடுமுழுக்க காங்கிரஸ்காரர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஹைதராபாத்திலும் நவம்பர் 12-ஆம் தேதி அப்படியொரு ஆர்ப்பாட்டம் நடந்தபோது அதில் முதல்வரான ரோசையா கலந்துகொண்டதுமில்லாமல் சோனியாவைப் பற்றி தவறாகப்பேசியவர்களை எச்சரித்துப் பேசவும் செய்தார். முதல்வராக இருந்த நிலையில் அவர் இப்படிபோராட்டத்தில் பேசியது அங்கே எதிர்க்கட்சித் தலைவர்களால் கண்டனத்துக்கு ஆளானது. அத்துடன் ஆர்ப்பாட்டம் நடந்த இடம் தலைமைச்செயலகத்துக்கு அருகே தடை செய்யப் பட்ட இடம் அங்கே யார் போராடினாலும் உடனே போலீஸ் கைது செய்யும். முதல்வரே இதை மீறலாமா என்று கண்டனம் எழுந்தது. ரோசையா கூலாக இரண்டுமணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கிளம்பிச் சென்றார். அதன் பிறகு போலீஸ் சிலரைக் கைது செய்ததுதான் வேடிக்கை. காங்கிரஸ் தெரிவித்த எதிர்ப்புக்குப் பின்னர் சோனியா பற்றிய கருத்துக்கு ஆர்.எஸ்.எஸ். வருத்தம் தெரிவித்தது.

இது மிகவும் குறைந்த நேரம் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம். 20 நிமிடங்கள். நடந்தது 2011 பிப்ரவரி 13 ஆம் தேதி. மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மத்தியபிரதேச மாநிலத்தின் பிரச்னைகளைக் கண்டுகொள்வதில்லை. விவசா யிகளுக்கு நிவாரணம் வழங்குவதில்லை என்று கூறி காலவரையற்ற உண்ணாவிரதத்தில் உட்கார்ந்தார் மத்தியபிரதேச பாஜக அரசின் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான். உடனே டெல்லியிலிருந்து அதிசயமாக பிரதமர் மன்மோகன் சிங் போனில் அழைத்து பிரச்னைகளைத் தீர்க்கிறோம் என்றார். திட்டகுழுத் துணைத்தலைவருடன் கூட்டம் ஏற்பாடு ஆனது.

சௌஹான் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.

இவர்கள் எல்லோரும் போராடி இருக்கிறார்கள் என்கிறபோது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சும்மா இருந்திருப்பாரா? எரிபொருள் விலை உயர்வை கண்டித்து மே 26, 2012 பெரிய ஊர்வலம் ஒன்றை நடத்தினார். மாலை 5.15க்கு இந்த கண்டன ஊர்வலம் கொல்கத்தாவின் ஜாதவ்பூர் காவல் நிலையம் அருகே தொடங்கியது. ஏழு மணிக்கு ஹஸ்ரா கிராசிங் அருகே முடிவடைந்தது. ஊர்வலத்தின் முனையில் முதலமைச்சர் மம்தா தலைமையேற்று நடந்துவந்தார். 6.5 கிமீ தூரம் நடந்த இந்த நடைபயணத்தில் 5000 திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்துகொண்டனர். எதிர்க்கட்சிகளான காங்கிரஸும்  கம்யூனிஸ்டும் முதலமைச்சரே இப்படி போராட்ட களத்தில் இறங்குவதைக் கண்டித்தன. இத்தனைக்கும்  அவர் அப்போது  மத்திய அரசுக்கு ஆதரவளித்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே ஆண்டு செப்டம்பர் கடைசியில் மத்திய அரசுக்கு தன் கட்சியில் 19 எம்பிகள் ஆதரவை விலக்கிய கையுடன் அக்டோபர் 1, 2012 அன்று டெல்லிக்கும் போய் ஜந்தர் மந்தரில் கூட்டம் போட்டு மத்திய அரசின் விலை உயர்வு நடவடிக்கையைக் கண்டித்தார் முதல்வர் மம்தா.

 ஒரு முதல்வர் தான் தலைமையேற்று நடத்தும் அரசின் அமைச்சரையே எதிர்த்து மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருந்த காலத்தின்கோலமும் இந்திய ஜனநாயகத்தில் உண்டு. அந்த அபாக்கியசாலி முதல்வர் அஜாய்குமார் முகர்ஜி, மேற்குவங்கம். வங்காள காங்கிரஸ் என்ற கட்சியின் தலைவரான அவர் சிபிஎம் மற்றும் வேறு கட்சிகளுடன் சேர்ந்து 1969-ல் ஆட்சி அமைத்திருந்தார். அரசின் காவல்துறை மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஜோதிபாசுவிடம் இருந்தது. ஆரம்ப கட்ட கூட்டணி ஆட்சி அல்லவா? கட்சிகளுக்குள் முரண்பாடு ஏற்பட்டது.

சட்டம் ஒழுங்கு மாநிலத்தில் சரியில்லை என்று முதல்வர் அஜாய்குமார் முகர்ஜியே கர்சன் பூங்காவில் போய் தன் கட்சி அமைச்சர்களுடன் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார். மாநிலம் முழுக்க அவரது கட்சிக்காரர்களும் உண்ணாவிரதம் இருந்தனர். சில மாதங்களிலே அந்த கூட்டணி ஆட்சி கவிழ்ந்து விட்டது. அதன் பின்னர் நடந்த தேர்தல்களில் மார்க்சிஸ்ட் தலைமையிலான கூட்டணி ஜெயிக்க ஆரம்பித்து ஜோதிபாசு தொடர்ந்து முதல்வர் பதவியில் நீடித்து வரலாறு படைத்தார்.

பிப்ரவரி, 2014.

logo
Andhimazhai
www.andhimazhai.com