போராடுவேன்! துணிச்சல் சமந்தா!

போராடுவேன்! துணிச்சல் சமந்தா!
Published on

தான் நடித்த யசோதா படத்துக் கான முன்னோட்டமாக நடிகை சமந்தாஅளித்த பேட்டியில் தனக்கு வந்திருக்கும் ‘மையோசைட்டிஸ்' என்கிற‘நோய்' பற்றி வெளிப்படையாக  பேசி இருக்கிறார். பளபளப்பான வாழ்க்கையையே முன் வைக்கவேண்டி போலியான முகங்களையே முன்வைக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் சினிமாத் துறையில் சமந்தாவின் இந்த  வாக்குமூலம் ஆச்சர்யத்தைத் தருகிறது.  


மையோசைட்டிஸ் என்பது உடல் தசைகளைத் தாக்கும் ஒருவித ஆட்டோ இம்யூன் நோய்.  நம் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு ரத்த அணுக்கள் வெளியிலிருந்து வரும் கிருமிகளைத் தான் எதிர்க்க வேண்டும். ஆனால் உடலிலுள்ளசொந்த செல்களையே தனதாக இனம்காண முடியாமல் எதிரியாகத் தவறாகக் கண்டு தாக்குவது தான் ஆட்டோ இம்யூன் நோய். இந்நோயினால் தாக்கப்படுபவர்களில் 78% பெண்கள் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. டைப் 1 டயாபிடிஸ், முடக்குவாதம், குடல் அழற்சி நோய் உட்பட 14 வகை நோய்கள் இதில் வருகின்றன.

இதில பல நோய்களும் நம் குடும்பத்தினரையும் பாதித்திருக்கக் கூடும். ஆனால் சமந்தா தனக்கு இந்நோய் இருப்பதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவிப்பதற்குப் பெரிதும் தயங்கியதாக ஒருபேட்டியில் கூறுகிறார். மேலும், அவரது திரைத்துறை நண்பர்களிடமிருந்தும் ரசிகர்களிடமிருந்தும் அன்பும் ஆதரவும் குவிந்தாலும், ஒரு நடிகை தனது உடல்நலக்குறைவு குறித்த தகவலைப் பகிர ஏன் தயங்க வேண்டும் என்கிற கேள்வி வருகிறது.

நம் சமூகத்தில் பெண்கள் பொதுவாகத் தங்கள் உடல்நலக் குறைவு குறித்துப் பேசுவதில்லை. என்ன உடம்புக்கு இருந்தாலும் எனக்கு ஒண்ணுமில்ல, என்று சொல்லி விட்டு வேலை பார்ப்பவர்களாகத் தாம் நமது அம்மாக்களும் பாட்டிகளும் இருந்துள்ளார்கள். ஒரு தலைவலின்னு படுத்ததில்லை எங்கம்மா என்ற பெருமை பேசும் மகன்களை நாம் அறிவோம்.பொது வெளியிலும் கூட, கடுமையான மாதவிடாய் வலிகளைப் பொறுத்துக் கொண்டு வெகுதூரம் பயணித்து வேலை பார்ப்பவர்களாகவும், வலி நிவாரணிகளை விழுங்கிச் சிரித்துப் பேசி நோயைக் கடப்பவர்களுமாகவே பெண்கள் இருக்கிறார்கள். ஆண்களை அதிகம் தாக்கக் கூடிய மூலம், பவுத்திரம், விரை வீக்கம், ஆண்மைக் குறைவு இவற்றுக்கான மருத்துவம் குறித்து தெருவெங்கும் போஸ்டர்களைப் பார்க்க முடியும்.
ஆனால் மாதவிடாய் வலியைப் போக்கும் மருத்துவம் குறித்தோ, பெண்களை அதிகம் தாக்கக் கூடிய இந்த ஆட்டோ இம்யூனிட்டி குறித்தோ இன்னும் அடிப்படை விழிப்புணர்வே இல்லை.
சமந்தாவின் திரைவாழ்க்கையும் மண வாழ்வும் ஊடகங்களில் அதிகம் கவனம் பெற்றவை. கடந்த பத்தாண்டுகளாகத் திரைத்துறையில் வெற்றிகரமாக முன்னணியில் இருந்து வருகிறார். கத்தி, மெர்சல், அஞ்சான், தெறி போன்ற கமர்ஷியல் படங்களில் வழக்கமான கதாநாயகியாக வந்தாலும், சூப்பர் டீலக்ஸ், நானி போன்ற படங்களில் நடிப்பில் தனி முத்திரையும் பதித்துள்ளார்.


‘திருமணத்துக்குப் பின் நடிப்பீர்களா?' என்று ஆண் நடிகர்களைப் பார்த்து ஒரு போதும் கேட்காத திரைத்துறையில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளும் படங்களும் வந்தபடி இருந்தாலும், இன்னும் பெரும்பாலும் நடிகைகளின் தோற்றத்துக்கு மட்டுமல்ல, அவர்கள் திருமணத்துக்கு முன்பும் பின்பும் எப்படி நடிக்க வேண்டும் என்று கூட அளவுகோல்கள் உள்ளன. ஜோதிகா திருமணத்துக்குப் பின்பு ஏற்று நடிக்கும் பாத்திரங்களை நோக்கினால் இது புரியும்.
ஆனால், திருமணத்துக்குப் பின்பும் எவ்விதச் சமரசமுமின்றித் தொடர்ந்து தன் இயல்புப்படி அனைத்துவிதமான பாத்திரங்களையும் ஏற்று நடித்து வந்தார் சமந்தா.
கடுமையான உணவுக் கட்டுப்பாடுகள், உடற்பயிற்சி, நடிப்பு, நடனப்பயிற்சி என்று நடிகையர் தங்களை எவ்வளவு வருத்திக் கொண்டாலும், அவை பேசப்படுவதைக் காட்டிலும் அவர்களின் காதல், மண வாழ்க்கை, மணமுறிவு போன்ற தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் குவிப்பதையே நோக்கமாகக் கொண்டு செயல்படும் ஊடகங்கள் உள்ளன. ஆங்கிலத்தில் டாப்ளாய்டுகள் என்று ஒரு வகைமையே உண்டு; நடிகைகள் ஏர்போர்ட் செல்வது, ஜிம்முக்குப் போவது இவற்றையே தேவுடு காத்துப் படம் பிடிப்போருக்குப் பாப்பரஸி என்றும் பெயர்.
பாப்பராஸிகளுக்குத் தீனி போடுவதற்கென்றே அவர்கள் படம் பிடிக்க வேண்டும் என்பதற்காகவே வீட்டை விட்டுக் கிளம்பும் பாலிவுட் நடிகர்கள் குறித்த பகடிகள் பரவலாகி வருகின்றன. இந்தச் சூழலில், புகழின் உச்சத்தில் இருந்த போது தான் கடுமையான மன அழுத்தத்தினால் பீடிக்கப்பட்டதையும் அதற்குச் சிகிச்சை எடுத்துக் கொண்டதையும் மனம் திறந்து பகிர்ந்தவர், தீபிகா படுகோன். மனநலம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வுப் பரப்புரையும் அவர் செய்து வருவது நேர்மறையான செயலாகவே பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சமந்தா மனம் உடல் இரண்டும் பாதிக்கப்பட்ட போதும், அழகும் கவர்ச்சிகரமான தோற்றமும் முக்கிய முதலீடாக இருக்கக் கூடிய திரைத்துறையைச் சார்ந்து இருந்த போதும் துணிச்சலுடன் தன் உடல்நிலை குறித்த தகவல்களை வெளியிட்ட விதம் அனுதாபம் தேடுவதாக இல்லாமல் எதார்த்தமாக இருப்பதை உணர முடிகிறது.
அவர் அளித்த உருக்கமான பேட்டியில் மேலும் கூறுகிறார். ‘பிரபலமாக இருப்பவர்களுக்கும், புகழ் வெளிச்சம், பணம், எல்லாவற்றையும் தாண்டி உடல் நலிவும், மோசமான நாட்களும் இருக்கும். புகழ்மிக்க இத்துறையில் இருப்பவர்கள் குறித்து மக்கள் மனதில் பலவித பிம்பங்கள் இருப்பது இயல்பு தான். நான் என் அழகையும், திறமைகளையும் வெளிச்சம் போட்டு, பலவித ஆடையணிகலன்கள் அணிந்து கவர்ச்சிகரமான ஒரு பிம்பத்தைக் கட்டி எழுப்பி இருக்கிறேன். மக்கள் என்னை அப்படி மட்டுமே அறிந்துள்ளார்கள். அது மட்டுமே முழு உண்மை என்று யாரையும் நம்பச் செய்வது சரியல்ல. என்னுடைய இந்தப் பக்கத்தையும் அறிந்து கொள்ளட்டும் என்று தான் உடல் நலம் குறித்துப் பதிவிட்டேன்,' என்று கூறுகிறார். ‘ நாளைக்கே நான் செத்துவிடமாட்டேன். அந்த  மாதிரி நோயல்ல அது. இதை எதிர்த்துப் போராடுவேன்' என்று அவர் கூறுகையில் குரலில் நோயின் வலி தெரிகிறது.


கலைஞர்கள் எதார்த்தவாதிகளாகவும் தங்களை ஆராதிக்கும் மக்களிடம் உண்மையுள்ளவர்களாகவும் இருப்பது ஆரோக்கியமான பண்பட்ட சமூகத்தை உருவாக்கும். தங்கள் கட் அவுட்டுக்குப் பாலாபிஷேகம் செய்ய வேண்டாம் நானும் மனிதன் தான் என்று மிகவும் தீனமான குரலில் சொல்லத் தொடங்கியுள்ள ஆண் நடிகர்களுக்கு மத்தியில் தங்கள் வலிகளையும் சந்தித்த சவால்களையும் வெளிப்படையாகப் போட்டு உடைக்கும் சமந்தா, தீபிகா, சீதா போன்ற நடிகர் கள் பெண்களின் அபிமானத்துக்கு உரியவர்களாய் இருப்பதில் வியப்பேதும் இல்லை.

நவம்பர், 2022

logo
Andhimazhai
www.andhimazhai.com