ஆயிரம் இருக்கு
சொல்ல..
அருமைமிகு ஆசானே
நின்னை -
நினைவில் நித்தமும்
கொள்ள!
தோன்றிற் புகழொடு
தோன்றிய ஆளுமை..
ஆன்றோரும் சான்றோரும்
அகமகிழப் பணியும்
மிதமிஞ்சிய மேதைமை!
எழுத்தும் எளிமையும்
ஏற்றிருந்த படைப்பாளி..
பொறுப்பும் பொதுநலனும்
பெற்றிருந்த பத்திரிகையாளன்..
விருப்பும் வெறுப்புமற்ற
நெருப்புநிற முதலாளி..
‘சிரித்து வாழ’ச் சொல்லித்தந்த
சிறப்பான சினிமாக்காரன்..
‘எல்லோரும் நல்லவரெ’ன்றே
இறுதிவரை இருந்த
எங்கள் கலா ரசிகன்!
நகரப் பரபரப்புக்கு
நடுவே வாழ்ந்தாலும்
அடையாளம் மிகுந்ததுன்
விவசாய விஞ்ஞானம்..
அதற்காக உனைத் தேடிவந்த
விருதுகளும் ஏராளம்!
சமையல் கலையிலும்
சகலமும் அறிந்தாய்;
சமைத்துப் பரிமாறுவதில்
நீயும் ஒரு தாய்!
‘அது
முடியாது’ என
முதலாளி சொன்னால்
முடங்கிப்போ என்பதே
சொல்லாத சேதி..
மாறாக -_
வினை முடித்து வரும்போது
பணமுடிப்போடு பாராட்டும்
பரிசாகத் தருவாய்!
தன் -
தோல்வியைப் புறம்தள்ளும்
பெருமானாய் வெல்வாய்!
வலியோருக்கும் எளியோருக்கும்
வாதம் வரும்போதெல்லாம்..
என்றும் நீ இருப்பது
எளியோரின் பக்கம்!
வாசகன் அனுப்பியது
ஒருவரி என்றாலும்..
வரிந்து கட்டிக்கொண்டு
பதில் தருவதுன் -
பத்திரிகை தர்மம்!
அந்த ஊரில்
அரிசிக் கடத்தல்..
என -
வந்தது செய்தி.
இருக்காதென்றீர் -
இங்கிருந்தே!
அறைக்குள் இருந்து
சொல்கிறீர் ஐயா..
காவலர்
கொடுத்த எஃப்.ஐ.ஆர்.
இருக்குதே மெய்யா
சொன்னான் செய்தியாளன்.
அந்த ஊரின்
மண்வளம் சொன்னீர்;
அரிசி அங்கே
விளையாதென்றீர்!
அதட்டிக் கேட்டதும்
சரண்டர் ஆனது ஏவல்துறை..
ஆமாம் அது பொய்யாய்ப் போட்ட
எஃப்.ஐ.ஆர். என்றது!
இதழியல் இலக்கணத்தை
முழுதும் அறிந்திருந்த
ஒப்பற்ற இலக்கியம் நீ..
எழுத்தோடு நின்றதில்லை
என்றுமே உந்தன்
பொதுநல வேட்கை!
வாசகர்களை வசீகரித்தாய்;
போராளியாக்கினாய்;
பொதுநல விரும்பிகளாக்கினாய்;
சமூக ஆர்வலர்களாகவும்
உருமாற்றினாய்!
பேனாக்களுக்கு
பெருமை கூட்டியது
உன் பிடிவாதம்..
காகிதத்துக்கும்
கௌரவம் சேர்த்தது
நீ போராடிப் பெற்றுத் தந்த
எழுத்துச் சுதந்திரம்!
தேசத்தின் வரைபடத்தில்
தெளிவாயிராத தெருக்களில்
இருந்தும்
சீடர்களைப் பெற்றெடுத்தாய்..
துணிவையும் பணிவையும்
அணியக் கொடுத்தாய்!
பாசத்துக்குரிய தகப்பனாக
உறுமீன் கொடுத்தாய்;
பெருமீன் பிடிக்கவும்
கற்றுக் கொடுத்தாய்!
சீரும் சிறப்பும் சேர்த்துப்பூசி
ஊடக உலகுக்கே
ஒப்படைத்தாய்!
பிள்ளைகள் போதாதென
பறவைக் கூட்டம் வளர்த்தாய்..
அவை
கொஞ்சிக் கொத்திக்
குதறும்போது
உதறித்தள்ளும் உணர்வையும் மறந்தாய்;
அவற்றின்
அன்பை மட்டுமே நீ அறிந்தாய்!
அவற்றுக்காக -
வெளிநாடுகளில் இருந்து நீ
வரவழைத்த மருந்துகளை
இரவல் பெற்று
இன்றும் உயிர்வாழும்
அரசுப் பறவைகளும்
வண்டலூரில் உண்டு!
வீடொன்று கட்டினாய்;
மனம் மகிழ ஒரு
திருமணமும் நடத்தி வைத்தாய்!
எவரால் முடியும்
இந்த அனுபவம்..
அகவை
எழுபதைக் கடந்த பின்னும்
நெஞ்சை
நிமிர்த்தி நின்ற அதிசயம்!
ஞானியாய்
ஞானத்தகப்பனாய்
ஏணியாய்
ஏறிச்செல்லும் தோணியாய்
எல்லோரும் இன்புற்றிருக்க
எல்லாமும் செய்த நீயே
என்னையும் செய்தாய்!
சென்ற இடமெல்லாம்
நான்
கண்டது சிறப்பு..
அதைத் தந்ததோ
உன் வளர்ப்பு!
தொழில் கொடுத்தாய்;
துவண்டிருந்த வேளைகளில்
தோள் கொடுத்தாய்..
உண்டி கொடுத்தாய்;
உலகம் சுற்றப் போனபோது
உடையும் வாங்கி
வந்து கொடுத்தாய்!
தொட்டுத்தாலி
எடுத்துக் கொடுத்தாய்..
என்
பிறப்புக்கும் இருப்புக்கும்
அர்த்தம் கொடுத்தாய்!
என்றும் என்றென்றும்
ஏழேழு தலைமுறைக்கும்
என் பேரன்
பசி தீர்க்கும் பருக்கையிலும்
உன் பேரே
எழுதியிருக்கும்!
வாரியணைத்துச் செல்லவந்த
வாகனத்துக்கு வழியில் சிக்கல்
நேரம் கடந்தும்
வரவில்லை வண்டி..
‘இந்நேரம் நம் எம்.டி.
இங்கே இருந்திருந்தால்
ஆம்புலன்ஸ் வந்துசேர்ந்து
ஆகியிருக்குமே வெகு நேரம்..’
இறுதி நிமிடங்களிலும்
பெரிதாகப் பேசப்பட்டது
ஒருநாளும் பிசகாத
உந்தன் செய்நேர்த்தி!
நாங்கள் படிக்க
இதழியல் பாடம்
நடத்திய தந்தையே..
நின் உடலால்
மருத்துவம்
போதிக்கச் சென்றாய்
போய் வா எந்தையே!
(ஜி. கௌதம், விகடன் குழுமத்தின் முன்னாள் பத்திரிகையாளர்)
ஜனவரி, 2015.