ஆனாலும் இந்தக் குசும்பு கூடாது இந்த அந்திமழை ஆட்களுக்கு. யார் எதைப் பற்றி எழுதுவது என்கிற விவஸ்தை வேண்டாமா? உழைப்பைப் பற்றி... அதுவும் நான்... எழுதினால் அவனவன் நிச்சயம் வாயில் சிரிக்க மாட்டான் என்பது மட்டும் உறுதி. எழுதப் போற தலைப்பைப் பற்றிச் சொன்னதுமே ஏற இறங்கப் பார்த்தார்கள் நண்பர்கள். “எழுத்தாளா... இந்தாய்யா டீ... குடிச்சுட்டு உழைப்பைப் பத்தி எழுது” என இரண்டு மணி நேரமாய் துணைவி எழுப்பிய பிற்பாடு எழுத உட்கார்ந்திருக்கிறேன் நான்.
உண்மையிலேயே இந்த உழைப்பு யாருக்குத் தேவைப்படுகிறது? அதுவும் கடும் உழைப்பு...? உழைப்புக்கேற்ற ஊதியம்... ஊதியத்துக்கேற்ற உழைப்பு... இது பலமுறை பலபக்கம் கேட்ட தாரக மந்திரம். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கிற இடத்தில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வேலை செய்யலாம்தான். ஆனால் ஊதியம் இவ்வளவுதான் என ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டு விட்ட இடங்களில் கை ஊனி கரணம் போட்டாலும் கிடைப்பதுதானே கிடைக்கும்.
இந்த முதல்வகை மனிதர்கள்தான் சகலருக்குமான டார்கெட். கழுதைக்கு முன்னால் குச்சியில் தொங்கவிடப்பட்ட கேரட் கணக்காய் மத்திய தர வர்க்கத்துக்கும்... உயர் மத்தியதர வர்க்கத்துக்கும் முன்னே தொங்க விடப்பட்டுள்ள கேரட்டுகள் ஏராளம். அவைகள் அதைப் பிடிக்க பாயும் பாய்ச்சல்தான் இன்றைய வாழ்க்கை(?) முறை. “பணத்தில் பல்லு விளக்கு-வது எப்படி?” “பணத்திலேயே பாடை கட்டலாம் வாங்க” என பப்பல பக்கமும் ஏகப்பட்ட லேகிய வியாபாரிகள்(பாஸ்...இதுல எதுவும் உள்குத்து இல்ல).
ஒரு மாநகரத்துத் தூய்மைத் தொழிலாளி பொருள் சேர்க்க படாதபாடு பட்டால் அதில் ஒரு நியாயம் இருக்கிறது. நிலையங்களில் நிற்கும் ரயில்களில் “இருந்துவிட்டுப்” போகும் “பண்பாளர்களது” மலத்தின் மீது நீரைப் பீய்ச்சி அடித்து துப்புரவு பணி மேற்கொள்ளும் ஒரு தாய் பொருளாதார மேம்பாட்டுக்காக நாய்பட்ட பாடுபட்டால் ஒரு நியாயம் இருக்கிறது. வாழும் காலத்திலேயே நரகத்தைப் பார்த்துவிட்ட அவர்கள் 24 மணி நேரம் அல்ல 30 மணி நேரம் உழைத்தாலும் அவர்கள் மீள வழி கிடைக்குமா? கிடைக்காது ஏனெனில் அவர்களுக்கு விதிக்கப்பட்டது ஊதியத்திற்கான உழைப்பு. மகனுக்கோ மகளுக்கோ வந்த காய்ச்சலுக்காக கந்துவட்டிக்கு வாங்கிய மூன்றாயிரம் ரூபாயை அடைப்பதற்குள் அவர்களுக்கு மூன்று யுகங்கள் கடந்து போகும். ஆனால் மேற்கத்திய நாடுகளில் இருந்து இந்தியா போன்ற நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளுபவர்கள் இயற்கை உபாதைகளை தீர்த்துவிட்டு பணம் செலுத்தாமல் வர ஒரு சாப்ட்வேர் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். அந்த சாப்ட்வேர் என்ஜினீயருக்கான ஊதியமோ உழைப்புக்கேற்றது.
எமது நண்பர் சதீஷ் டேவிட் ஒருமுறை கேட்டார்...”ஏன் நம்ம நண்பர்கள் எல்லாம் இப்படியே இருக்கீங்க?” என்று. எங்கள் மீதும் சமூகத்தின் மீதும் அக்கறை கொண்ட மிக நல்ல மனிதர்தான் அவர். ஒருவேளை ஜிப்பை சரியாகப் போடவில்லையோ என்கிற சந்தேகத்தில் ஒரு முறை சரிபார்த்து விட்டு “ஏன் எங்களுக்கென்ன?” என்றேன்.
“இல்ல நாம நெனச்சா நல்லா மேல வரலாமில்ல...”
புரியல...நல்லான்னா என்ன? என்றேன்.
“இப்ப நீங்க எல்லாம் டூ வீலர்தான் வெச்சிருக்கீங்க... ஏதாவது பிசினஸ் செய்தா ஒரு கார் வாங்கலாம் இல்லியா...”
அதான் நீங்க வெச்சிருக்கீங்களே... என்றேன்.
“இருந்தாலும் உங்களுக்கூன்னு ஒண்ணு இருந்தா நல்லா இருக்குமில்ல” இது சதீஷ்.
அப்புறம்...?
“அப்புறமென்ன சின்னதா ஒரு சொந்த வீடு...”
சரி வாங்கீரலாம்...அதுக்கப்புறம் என்றேன்.
“பியூச்சர்ல்ல ஏதாவது நோய் நொடின்னா பாத்துக்கறதுக்கு பேங்க் பேலன்ஸ்?”
ஓகே வெச்சுக்கலாம் அப்புறம் என்றேன் மீண்டும்...
மீண்டும் ஏதேதோ சொல்லிக் கொண்டே போனார். ஒருகட்டத்தில் இடைமறித்து சதீஷ் வெறும் கமாவாவே போட்டுட்டுப் போறீங்களே... எப்ப புள்ளி வைக்கப் போறீங்க? என்றேன். அவருக்குத் தலை சுற்றி விட்டது.
“ச்சே... உங்க கூட பேசீட்டு இருந்தா நானும் உங்க மாதிரி ஆயிருவேன்” எனக் கிளம்பிவிட்டார் நண்பர்.
எனக்கு பார்த்ததுமே சிரிப்பு வருவது இந்த “சொந்த” வீட்டுக்காரர்களைப் பார்த்துத்தான். மத்தியதர வர்க்கத்தின் ஒரே இலக்கு இதுதான். இதை அடைய வங்கி வங்கியாய் அலைந்து கண்டவர்களிடம் பல்லிளித்து முதலில் பேஸ்மெண்ட்க்கு முதல் தவணை... கதவு, ஜன்னல் வைத்த பிற்பாடு இரண்டாவது... எனக் கடன் வாங்கிக் கட்டி... முப்பது வருட இன்ஸ்டால்மெண்ட்டில் மொத்தத்தையும் வாங்கி... கட்டி முடித்த பிற்பாடாவது ஓய்வார்கள் எனப் பார்த்தால் அதுதான் அவர்களது அகராதியிலேயே இல்லாத விஷயம் ஆயிற்றே... புதுமனை புகுவிழா வைக்காவிட்டால் சொந்தபந்தங்கள் என்ன சொல்லும்? வாங்கு அதற்கும் ஒரு கடன். அதுக்கப்பறம் வெறும் ஊறுகாயை நக்கீட்டு உட்கார்ந்திருக்க வேண்டியதுதான்.
சொந்த வீடு... சொந்த வாகனம்... என லட்சிய வெறி பிடித்து அலைகின்றவர்களைப் பார்க்கும்போதெல்லாம் “அண்ணே! இந்த உலகமே ஒரு வாடகை வீடு. இது புரியாம “சொந்த” வீட்டுக்கான ஓட்டம் வேறு” என்று தம்பி நா.முத்துக்குமார் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.
அப்பா பல்கலைக் கழகத்தின் கணக்கு அலுவலர் ஆன போதும் அவரது 24 இஞ்ச் சைக்கிளில்தான் இறுதிவரை சென்று வந்தார். அவர் பயணப்படும் வரை சொந்த வீட்டில்தான் சாக வேண்டும் என்கிற வெறியெல்லாம் ஒருபோதும் அவருக்கு இருந்ததில்லை. வாடகை வீட்டில் இருந்துதான் அவரைத் தூக்கிக் கொண்டு போனோம். ஆனால் அவர் வாழ வேண்டிய வாழ்க்கையை வாழ்ந்தார். பிழைப்பின் நிமித்தம் வாழ்க்கையைத் தொலைக்கவில்லை. அத்தியாவசியம் எது? ஆடம்பரம் எது என்கிற துல்லிய வேறுபாடு அவருக்குத் தெரிந்திருந்தது. அதனால்தான் அவரது வாழ்க்கை நதியில் விழுந்த இலையைப் போல இலகுவாக இருந்தது. நானோ வேலைக்குப் போன முதல் மாதத்திலேயே பைக் இருந்தால்தான் ஆயிற்று என்று கடனில் துவங்கினேன் எனது ஈனப்பிழைப்பை. அஞ்சு ரூபா வட்டியில் ஆரம்பித்து…. கிரெடிட் கார்டில் பயணித்து... கார்டுக்குப் பணம் கட்ட மீண்டும் கடன் வாங்கிக் கழித்து... வீட்டில் வைத்திருந்த பாட்டி காலத்து வெள்ளி டம்ளர்களை சத்தமில்லாமல் விலைக்கு விற்று எனத் தொடர்ந்து கடைசியில் ஐம்பது பைசா பிராங்கோடேப் மாத்திரையைக் கூட கடன் கொடுக்க முடியாது என மருந்துக்கடைக்காரர் சொன்னபோது புரிந்தது அப்பாவின் எளிய வாழ்க்கை. அவ்வேளைகளில் கள்ளம் கபடமற்ற என் நண்பர்கள் மட்டும் இல்லாது போயிருந்தால் என்றோ செத்திருப்பேன் நான்.
எப்படி வாழக்கூடாது என்பதை நான் என்னில் இருந்துதான் கற்றுக் கொண்டேன். “ஒருவன் தனது திருமணத்துக்கு வாங்கிய கடன் அவனது மூன்றாவது பிள்ளை பிறக்கும்போது கூட தீராமல் இருக்கும்” என்றார் தந்தை பெரியார். இன்றைய மத்திய தர வர்க்கம் செலவழிப்பது எல்லாமே இந்த ரகம்தான். மொட்டைக்கு... காதுகுத்துக்கு... ஞானஸ்தானத்துக்கு.. பூப்பு நன்னீராட்டுக்கு... கல்யாணத்துக்கு... கருமாதிக்கு என எல்லாமே ஆடம்பரமாயிற்று இங்கே. அதனால்தான் மீண்டும் மீண்டும் பணத்தைத் தேடி ஓட வேண்டியிருக்கிறது. உழைக்கும் நேரம் போதாது போகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக ஒருபக்கம் செல்வச்செழிப்பு... மறுபக்கம் இல்லாமை... என்பவற்றுக் கெல்லாம் பிரதான காரணம் இந்த நாட்டின் அமைப்புமுறை. அதை அடியோடு தகர்க்க வேண்டும் என்கிற அரசியல்
அரிச்சுவடி நம் முன்னே நிற்கிறது. அதற்கு ஊடான பயணத்திற்கு இடையேயும் அத்தியாவசியம் எது? ஆடம்பரம் எது? எனப் பிரித்துப் பார்த்து தீர்மானிக்கும் புத்தியும் நமக்குத் தேவையாய் இருக்கிறது. விலை குறைவாகக் கிடைக்கிறது என்பதற்காக எதையும் வாங்கிக் குவிக்க வேண்டியதில்லை. பாதிப்பணத்துக்குக் கிடைக்கிறது என்பதற்காக “அந்தப் பத்து யானையையும் பந்தல்காலில் கட்டி வைத்து விட்டுப் போ” என்கிற டாம்பீகமும் அவசியமில்லை. வாழ்க்கை முறை எளிதாகும்போது தேவைகள் குறையும். தேவைகள் குறையும் போதுதான் பிழைப்புக்கான ஓட்டம் குறைந்து நமக்கான வாழ்க்கையை வாழத்துவங்குவோம் நாம்.
அந்த வாழ்க்கையை வாழத் துவங்குவதற்கு...
24 செக் லீப்... ரெண்டு சாட்சிக் கையெழுத்து...
ரெண்டு சூரிட்டி என எதுவும் தேவையில்லை.
ஒரே தேவை : “போதும்” என்கிற மனசு.
---
விமான நிலையத்தில் வந்திறங்கும் ஒவ்வொரு முறையும் கூடங்குளம் இன்னும் 13 நாளில் இயங்கும்... முப்பத்தி மூணு மணி நேரத்தில் செயல்படும்... 17 வினாடிகளில் கரண்ட் கிடைக்கும் என ஓயாமல் சொல்லிக் கொண்டிருக்கும் அமைச்சர் நாராயண
சாமிக்குக் கொஞ்சம் ஓய்வு கொடுக்கலாம் என்பது அடியேனது ஆசை.
மக்கள் சேவையை ஆத்தோ ஆத்துன்னு ஆத்தி களைத்து வந்திறங்கும் அவர் மேலும் களைப்படையாமல் இருக்க கையோடு ஒரு கிளிப்பெட்டியைத் தூக்கி வந்தால் என்ன? அவர் பேசுவதை அது பேசினால் இன்னும் அம்பத்து அஞ்சு வருசத்துக்கு கேட்டுகிட்டே இருக்கலாமில்ல?(என்ன கிளி பாடுதான் கொஞ்சம் கஷ்டம்).
நவம்பர், 2012.