போதி தர்மர்

போதி தர்மர்
Published on

ஆனி மாத முழுநிலவுக்கு ஒருநாள் கழித்து  கொடைக்கானலுக்கு 12 கி.மீ முன்பாக பெருமாள் மலையில் நான் இறங்கியபோது காலை பத்து மணி. ஒரு ஜீப்பை அமர்த்திக்கொண்டு மேல்நோக்கி வளைந்து வளைந்து செல்லும் பாதையில் 2 கி.மீ போனதும் போதிஜென்டோ தியான மையம்  வருகிறது. சுற்றிலும் மலைகள். பூக்கள் நிறைந்த அழகான மையம். வாசலில் கயிறு கட்டி ஒரு மணி. உள்ளே வராண்டாவில் சிறிய அழகான புத்தர். அவருக்கு மேல் ஜப்பானிய எழுத்துகள். பாதர் அருள் மரிய ஆரோக்கிய சாமி  (சுருக்கமாக ஆமா சாமி), ஜப்பானில் ஜென் பயின்று அதைப் போதிக்கும் தகுதி பெற்ற முதல் இந்தியர். ஜென்மாஸ்டராக அவர் தகுதி பெற்றதும் அவருடைய

ஜப்பானிய மாஸ்டர் சொன்னார்: ‘‘போதி தர்மர்  இந்தியாவில் இருந்து கிழக்கே ஜென்னை எடுத்து வந்தார். இப்போது இந்தியாவுக்கு நீங்கள் அதை திரும்ப எடுத்துச் செல்கிறீர்கள்’’ இப்போது  உலகெங்கும் இருந்து ஜென் தியானம் பழக இங்கே பாதரைத்  தேடி  ஆட்கள் வருகிறார்கள். பாதருக்கும் உலகம் முழுக்க சீடர்கள். நான் ‘செஷின்’ எனப்படும் மூன்று நாள்   தியானப்பயிற்சிக்குச் சென்றிருந்தேன். சுமார் 30 பேர் கொண்ட குழுவுக்கு காரென் என்கிற பிரிட்டிஷ் பெண்மணி அப்பயிற்சியை அளித்தார்.  காலை ஐந்தரை மணிக்கு தியான வகுப்பு ஆரம்பம். முதல் மாடியில் உள்ள தியானக்கூடம் அருகே  நீண்ட மொட்டை மாடியில் மிதமான குளிரில் மெல்ல நடக்கலாம். வானில் விடிகாலை நிலவு. பறவைகள் விழித்து ரம்மியமான காலையை இனிமையாக்குகின்றன. டம்...என  முரசு அதிர்ந்து தியான வகுப்பு தொடங்குவதை அறிவிக்கிறது. தூரத்தில் நீண்ட மெலிதான ரோஸ்நிற அங்கியுடன் காற்றில் மிதப்பதுபோன்ற நடையுடன் பாதர் வருகிறார். அவரது தாடி காற்றில் அலைகிறது. தியான அறையில் போய் அமர்கிறோம். உள்ளே புத்தர் சிலை. அதற்கு மேலாக ஒரு சிலுவை. ஊதுவத்தி ஏற்றி புத்தருக்கு வழிபாடு செய்துவிட்டு பாதர் நாற்காலியில் கண் மூடி அமர்கிறார். குடுவை போல் இருக்கும் மணியை காரென் ஒலிக்கிறார். தியானம் தொடங்குகிறது.

ஜென் தியானத்தில் உட்காரும்விதம் முக்கியம். முழங்கால்கள் தரையில் படுமாறும் உடலை நிமிர்த்தியும் அமரவேண்டும். இப்படி அமர வசதியாக

குஷன்கள், மர ஸ்டூல்கள் அங்கே உள்ளன. 

கண்களை மூடி எளிமையாக மூச்சை அடிவயிற்றில் கவனிக்கலாம். இரு கை விரல்களையும் வட்ட வடிவில் இணைத்து அடிவயிற்றில் வைத்துக்

கொள்ளவேண்டும். பத்மாசனமிட்டு அமர்ந்தால் நன்றே. சுமார் 25 நிமிடம் கழித்து பாதர் எழுந்து ‘டொக்ஷன்’ என்று கூறிவிட்டுச் செல்கிறார். இது அவரை தனிப்பட்ட முறையில் சந்தித்து தங்கள் ஐயங்களைக் கேட்டுக்கொள்ளும் நேரம். சிலர் எழுந்து செல்கிறார்கள்.  ஒவ்வொரு அரைமணிக்கும் ஒரு முறை ‘கின்கின்’ உண்டு. இது சின்னதாக ஓர் இடைவேளை. எழுந்து வெளியே நடந்துகொண்டே தியானிக்கலாம். உள்ளேயும் குழுவாக நடந்துகொண்டே தியானிக்கலாம். தினமும் ஏழுமணி நேரம் தியானம். இதுதான் போதிஜென்டோவின் நடைமுறை. இடையில் இரண்டு முறை சின்னதாக பாதர் ஆமா சாமி ஜென் உரை நிகழ்த்துகிறார். யாரையும் மிரட்டாத எளிமையான  விளக்க உரை.

மூன்று வேளையும் அருமையான எளிமையான சாப்பாடு. இரவு உணவு ஏழு மணிக்கு. உறங்குவதற்கு முன்பாக ஒரு மணி நேரம் தியானம் உண்டு. இரவில்

மெலிதாக போதிஜெண்டோவை விட்டு வெளியே  நடந்தால் பூக்களின் நறுமணத்தை ரசிக்கலாம். இரவு ராணியின் மணம் அந்த வளாகத்தை கிறங்க அடிக்கிறது. சாமந்தி, ரோஜா என ஏராளமான பூச்செடிகள் மலர்ந்து போதிஜெண்டோவே ஒரு  பூங்கொத்துபோலத்தான் காட்சி அளிக்கிறது. சுற்றிலும் மலைகளில் மேகங்கள் தவழ்ந்து செல்கின்றன. தொலைவில் ஒரு மலை உச்சியில் ஒரு தேவாலயம். அதை மேகங்கள் நினைத்த நேரம் மூடுகின்றன.  திறக்கின்றன. மலைச்சரிவில் பேரிக்காய் மரங்கள் காய்த்துத் தள்ளியிருக்கின்றன. பட்டர் ப்ரூட் மரங்கள் காய்களுடன் பளபளக்கின்றன. டர்ர்..ட்ர்ர்ர்..உயரமான ஒரு மரத்தில் மரங்கொத்தி ஓசை யெழுப்பி  கொத்திக் கொண்டே இருக்கிறது. பல குருவிகள் ஜோடி ஜோடியாய் தோட்டத்தில் பறக்கின்றன. முள்ளங்கி, காரட், சௌசௌ, சலாட் வகைகள் என ஒழுங்கான

காய்கறித் தோட்டங்களை உள்ளேயே பரா மரிக்கிறார்கள். தியானப் பயிற்சிக்கு வருபவர்களுக்கு தினமும் காலை உணவு முடிந்ததும் ‘சாமு’ எனப்படும் சேவைப் பணிகள் ஒதுக்கப்படுகின்றன. தோட்ட வேலை, பாத்திரம் கழுவுதல் என வேலைகள் உண்டு. 

செஷின் நடக்கும் மூன்று நாட்கள்  அனைவரும் அமைதியைக் கடைபிடிக்கவேண்டும். சுற்றிலும்மலை; மெல்லிய கொடைக்கானல் குளிர். தியானம் செய்ய இதைவிட அருமையான இடம் வேறெதுவும் இருக்குமா என்று தெரியவில்லை. பாதர் ஆமா சாமி ஜென் பயிற்சி அளிப்பதற்கு காசு

வாங்குவதில்லை. உணவுக்கும் தங்குமிடத்துக்கும்தான்  கட்டணம். அது மிக மிக சொற்பமான அளவே. மலையை விட்டுக் கீழே இறங்குகையில் மனதில் எதையோ இழக்கும் உணர்வு பெருகியது.

செப்டம்பர், 2012.

logo
Andhimazhai
www.andhimazhai.com