பொறியியல்: விருப்பமும் திறமையும் இருந்தால் படியுங்கள்!

பத்ரி சேஷாத்ரி
பத்ரி சேஷாத்ரி
Published on

தமிழ்நாட்டைப் பொருத்தவரை ப்ளஸ் 2 வில் மாணவர்கள் தாங்கள் படிக்க தெரிவு செய்யும் பாடப்பிரிவிலேயே சமச்சீரின்மை தொடங்கிவிடுகிறது. சுமார் 9 லட்சம் பேர் ப்ளஸ் 2 தேர்வு எழுதுகிறார்கள் என்றால் அதில் சுமார் ஐந்தரை லட்சம் மாணவர்கள் கணிதம், இயற்பியல், உயிரியல் பாடப்பிரிவைத் தேர்வு செய்கிறார்கள். சுமார் 2.5 லட்சம் பேர் வணிகவியல் எடுத்தால் தொழிற்கல்வி, கலைப்பாடப்பிரிவுகளைப் படிப்போர் ஐம்பதாயிரம்  முதல் ஒரு லட்சம் வரை இருக்கலாம். கேரளம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் இந்நிலை இல்லை. வட இந்தியா, மேற்கிந்தியாவிலும் இந்நிலை இல்லை. தமிழ்நாட்டில் மருத்துவம், பொறியியல் இரண்டின் மீதுதான் ஆர்வம் அதிகமாக உள்ளது. இதனால் தான் இந்தியாவிலேயே மிக அதிக எண்ணிக்கையில் சுமார் 600 பொறியியல் கல்லூரிகள் இங்கே அமைந்துள்ளன. இதில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் அவை சேர்க்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் தனிக்கதையாகப் பேசவேண்டியவை.

இவ்வளவு கல்லூரிகள் தயாரித்து வெளியே அனுப்பும் மாணவர்களின் திறன் எப்படி இருக்கிறது என்று பார்த்தால் அதிர்ச்சிதான். இண்டர்வியூக்களில் மாணவர்களைப் பரிசோதித்தவன் என்ற முறையில் சாதாரண கணிதத் திறன், ஆங்கிலம் மற்றும் தமிழில் உரையாடும் திறனே பலரிடம் இல்லை. 2008 வரை ஐ.டி, துறையில் ஏராளமான வேலைவாய்ப்பு இருந்தது. நிறைய பொறியியல் பட்டதாரிகளை டி.சி.எஸ், இன்போசிஸ் போன்ற நிறுவனங்கள் வேலைக்கு எடுத்தன. ஆனால் அதற்குப் பிறகு உருவான மந்த நிலையால் அதே நிறுவனங்கள் மெல்ல வேலைக்கு எடுத்தவர்களிடம் எப்படி நன்றாக வேலை வாங்குவது, எப்படி நன்றாகப் பயன்படுத்துவது என்ற திசையில் செயல்பட ஆரம்பித்தன. பிறகு ‘‘ எங்களுக்கு நிறைய ஆட்கள் தேவைதான். ஆனால் இப்போது வரும் பட்டதாரிகளை வேலைக்கு எடுத்து பயிற்சி அளிக்க முடியாது. எனவே இப்போது பணியில் பிற நிறுவனங்களில் இருப்பவர்களையே இழுத்துக்கொள்கிறோம்'' என்று சொல்ல ஆரம்பித்துவிட்டாரகள். கிட்டத்தட்ட 70 சதவீதம் பொறியாளர்களுக்கு வேலை தந்த ஐ.டி துறை கடந்த சில ஆண்டுகளாக அவர்களைக் கைவிட்டுவிட்டது. இது வேலை இல்லாத் திண்டாட்டம் பெருக ஒரு காரணம்.

ஐ.டி துறையில் ஒரு கட்டத்தில் மாறிக்கொண்டே இருக்கும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தன்னை வளர்த்துக்கொள்ளாதவர்கள்  ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பின் வேலையை விட்டு அனுப்பப்படுவது நடக்கிறது. எனக்குத் தெரிந்து இரண்டரை லட்ச ரூபாய் வரை மாத சம்பளம் வாங்கிய நண்பர்கள் வேலை போனபோது, திணறிப்போனார்கள். அதிகமாக சம்பாதிக்கும்போதும் அது ஓய்வுக்குப் பின், தான் பெற இருக்கும் ஓய்வூதியம் என நினைத்து சேமிக்கும் பக்குவம் தேவை.

பொறியியல் இடங்கள் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் தேவையா என்று கேட்டால் படிக்க விரும்புகிறவர்கள் இருக்கும்வரை இது தேவை என்றுதான் நான் சொல்வேன். அதே சமயம் இப்போது இருக்கும் மாணவர்கள் எண்ணிக்கையில் பெருமளவு பேர் கலைப்படிப்புகளைப் படிக்க விரும்பினால் அந்த அளவுக்கு கல்லூரிகளும் இடங்களும் உள்ளனவா என்றால் இல்லை. இதுவும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.

பொறியியல் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள் நல்ல பொறியியல் கல்லூரி கிடைத்தால் படிக்கலாம். சொத்தை விற்று அதிகம் கட்டணம் செலுத்திப் படிக்கவேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் இளங்கலைப் படிப்பு படித்துவிட்டு மேலே எம்.சி.ஏ போன்றவற்றைப் படிக்கலாம். முதலில் பொறியியல் படிக்க உணர்வும் விருப்பமும் உள்ளதா என்று பார்க்கவேண்டும். கணிதம், இயற்பியல் போன்ற பாடங்களில் திறன் உள்ளதா என்று பார்த்துக்கொள்ளவேண்டும். தேர்வுக்கு மட்டும் பயிற்சி அளித்து பட்டம் வாங்கிக்கொடுக்கும் கல்லூரிகளில் சேராமல் இருப்பது நன்று.

(பத்ரி சேஷாத்ரி, நியூ ஹரிசான் மீடியா, நமது செய்தியாளரிடம் கூறியது)

ஜூலை, 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com