பேஸ்புக்கில் விவசாயம் செய்கிறீர்களா?

பேஸ்புக்கில் விவசாயம் செய்கிறீர்களா?

Published on

எடுத்த எடுப்பிலேயே ஒரு பஞ்ச் டயலாக் உடலாமா?

“வானம் பார்த்த விவசாயி இனிமே லாப்டாப் பார்க்கணும்.” -நல்லா இருக்கா? இந்த கட்டுரையில் விவசாயத்துக்கு எப்படியெல்லாம் தகவல் தொழில்நுட்பம் பயன்படுகிறது என்று சொல்லலாம்னு இருக்கேன்.

இப்போது நமது மக்கள் தொகை 120 கோடியைத்தாண்டி விர்ரென்று பயணித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அவ்வளவு பேருக்கும் உணவு உற்பத்தி செய்து தரவேண்டிய விவசாயத் துறையில் ஈடுபடுகிறவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது. இன்னும் இருபது ஆண்டுகள் கழித்து எவ்வளவு அதிகமாக உணவு உற்பத்தி செய்ய வேண்டி இருக்குமோ தெரியாது. ஏனெனில் மக்கள் தொகை பலமடங்கு பெருகியிருக்கும்.

ஆக இந்த விஷயத்தில் உணவு உற்பத்தியைப் பெருக்க விவசாயிகள் நிறைய தகவல்களைத் தெரிந்தவர்களாக, நல்ல நெட்வொர்க்கால் இணைக் கப்பட்டவர்களாக இருக்கவேண்டும். நவீன தொழில் நுட்பங்கள் தெரியவேண்டும். சின்ன இடத்தில் நல்ல மகசூல் எடுத்து, அதில் லாபம் பெற முடிந்தவர்களாக இருக்கவேண்டும்.

அந்தக் காலத்தில் ஏற்றம் இறைத்து விவசாயம் நடந்த காலம் போய் மோட்டார் பம்புகள் வந்தன; பின்னர் தண்ணீரைச் சேமிக்க வேரடியில் தண்ணீர் சேர்க்கும் சொட்டுநீர்ப் பாசனம் வந்தது. இப்போது மோட்டாரை செல்போன் எஸ்.எம்.எஸ் மூலம் கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி, ஆப் அல்லது ஆன் செய்துகொள்கிற அளவுக்கு முன்னேறி விட்டார்!

விவசாயம் செய்வதற்கு என்ன தேவை? விவசாய அறிவு. பாரம்பரியமாக வாய்வழியாக எப்போது தண்ணீர் பாய்ச்சணும்? எப்போது உரம் போடணும் என்ற அறிவு வந்து கொண்டிருந்தது. இப்போது ஐடி உதவியால் எல்லாமே ஆவணமாக விவசாயிக்குக் கிடைக்கிறது.

மண்ணின் தன்மை என்ன? அதில் என்ன போடலாம்? எவ்வளவு விளையும்? சந்தையில் விற்க முடியுமா? என்று தெரிந்துகொள்ள மென்பொருள்கள் வந்துவிட்டன.

இயற்கை விவசாயம் செய்பவர்களுக்கும் இந்த விவரங்கள் தெரிந்துதான் ஆகவேண்டும்.

செயற்கைக் கோள்கள் மூலம் பூமியில் நிலத்தில் எங்கே தண்ணீர் இருக்கிறது? என்ன பயிரிடலாம்?  என்று கண்டுபிடித்துவிடுகிறார்கள். பழங்காலம் போல கையில் குச்சி பிடித்து தேடவேண்டியதில்லை. புவி தகவல் அமைப்பு அதாவது geo informations system(GIS)  என்கிற ஒரு மென்பொருள், எல்லா தகவல்களையும் ஆராய்ந்து முறையாக விவசாயம் செய்ய உதவுகிறது. இது தரும் வரை படங்கள் விவசாயத்தில் எதையும் முறையாகச் செய்வதற்கு உதவுகின்றன.

ஐபேட் குறுஞ்செயலிகள் விவசாய காப்பீட்டைக் கணக்கிட உதவுகின்றன. டிரிம்பிள் என்ற நிறுவன விவசாய பண்ணைகளுக்கு சரியான விவசாய முறைகளை மேற்கொள்ள மென்பொருட்களைத் தருகிறது.

மகாராஷ்டிராவில் வரானா கிராமத் திட்டம் என்கிற திட்டம் மூலம் அந்த வரானா என்கிற கிராமத்தைச் சுற்றியுள்ள சுமார் 70 கிராமங்கள் கணினி மூலம் இணைக்கப் பட்டுள்ளன. கரும்பு மற்றும் பால் உற்பத்தியாளர்களுக்கு ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள கணினி மையங்கள் தகவல்களைத் தருகின்றன. ஒவ்வொரு விவசாயியும் எவ்வளவு பால் கொடுத்தார்? அதன் கொழுப்பு அளவு என்ன? எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டுள்ளது? மீதி உள்ளது எவ்வளவு? இதைத் தெரிந்து கொள்ளலாம். கரும்பு விவசாயிகள் எப்போது கரும்பு வெட்டுகிறார்கள்? எவ்வளவு கொடுக்கிறார்கள்? எவ்வளவு பணம் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்? எல்லாம் கிராமத்தில் உள்ள கணினிக்கே வந்துவிடும்.

www.oneprosper.org என்று ஒரு இணையதளம். இவர்கள் மானிய விலையில் சொட்டுநீர்ப் பாசனத்துக்கு கருவிகள் தருகிறார்கள். உங்களிடம் ஒரு ஏக்கர் நிலம் இருக்கிறது. ஆனால் அதில் விவசாயம் செய்ய முதல் போட முடியவில்லை என்றால் அதற்கும் இணைய தளத்தில் ஆட்களைப் பிடித்து முதல் போட வைக்க வழிகள் உள்ளன.

குழந்தைகளுக்கு விவசாயத்தை எப்படிச் சொல்லித் தருவது? பேஸ்புக்கில் ஒண்டர் வில்லேஜ் போன்ற விவசாய குறுஞ்செயலிகள் உள்ளன. விளையாட்டுக்கு விளையாட்டும் ஆச்சு. விவசாயம் செஞ்சதாகவும் ஆச்சு.(ஆடு மேச்சதாகவும் ஆச்சு; அண்ணனுக்கு பொண்ணு பாத்ததாகவும் ஆச்சு.. என்று ஊர்ப்பக்கம் சொல்வாங்களே.)

நான் சொல்ல விரும்புவதெல்லாம் விவசாயத்து உதவக் கூடிய விஷயங்கள் எக்கச்சக்கமாக ஆன்லைனில் வந்துள்ளன என்பதுதான்.  http://aaqua.persistent.co.in/  என்கிற இணைய தளத்துக்கு விவசாயிகள் கேள்விகளை அனுப்பலாம். 24- 72 மணி நேரத்தில் பதில் கிடைக்கும்! http://agmarknet.nic.in/arrivals1.htm  என்பது  விவசாய உற்பத்திப் பொருட்களின் சந்தை விலைகளைத் தெரிந்துகொள்ள நல்ல இணைய தளம்.

www.digitalgreen.org என்ற இணையதளம் விவசாயி களால் விவசாயிகளுக்காக உருவாக்கப்பட்ட வீடியோ காட்சிகளைக் கொண்டிருக்கிறது. மெலிந்தா கேட்ஸ்(பில் கேட்ஸ் மனைவி) இது உலகையே மாற்றக் கூடிய நான்கு சிறந்த ஐடியாக்களில் ஒன்று என்று கூறினார்.

பால் உற்பத்தியில் அதன் விற்பனை நிர்வாகத்துக்கு ஆகாஷ்கங்கா என்ற மென்பொருள் இப்போது புழக்கத்தில் உள்ளது. ஜிபிஆர்எஸ் மூலம் உங்கள் பால் இப்போது எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்று ட்ராக் பண்ணுவதிலிருந்து, எவ்வளவு லிட்டர் பால் இன்று விற்பனைக்கு அளிக்கப்பட்டது என்று விவசாயிக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புவது, கணக்கு வழக்கு பட்டியல்களை முறைப்படுத்துவதுவரை முழுமான ஐ.டி. தீர்வு கிடைக்கிறது.

நாட்டில் 65 விவசாயப் பல்கலைக் கழகங்கள் இருக்கின்றன. 99 ஐசிஏஆர் நிறுவனங்கள் இருக்கின்றன. இவற்றில் விவசாயத்துடன் இணைந்து தகவல்தொழில் நுட்பமும் பயன்பாட்டுக்கு கொஞ்சமாக இந்தியாவில் வந்து கொண்டிருக்கின்றன. ஐடி பயன்பாடு விவசாயிகள் தற்கொலையைக் குறைக்கும் அளவுக்கு அவருக்கு முழுமையான தகவல்களை வெளிப்படையாக தரும் அளவுக்கு வளர்ச்சி அடைய வேண்டும். பரவலாக்கப் படவேண்டும். இதற்கு உதாரணமாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் பரிசோதனை முயற்சியாகச் செய்யும் இ-வேளாண்மை திட்டத்தைச் சொல்லலாம். இதில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு இணையம் மூலம் தகவல்கள் அளிக்கப் படுவதுடன் ஒரு போன் செய்தால் ஒருங்கிணைப்பாளர்கள் விவசாயியின் வயலுக்கே  சென்று டிஜிட்டல் படம் எடுத்து நிபுணர்களுக்கு அனுப்பி ஆலோசனை பெற்றுத்தருவார்கள்.

விவசாயி வயலில் மண்வெட்டி கொண்டுபோவது போல் ஐபேட் கொண்டு செல்லும் காலமும் வந்தேவிட்டது!

ஜூன், 2013.

logo
Andhimazhai
www.andhimazhai.com