இயக்கத்தின் தந்தை மறைமலை அடிகளாரோடும் தமிழ்த் தென்றல் திருவிகவோடும் நான் நெருங்கிப் பழகியதில்லை. ஆனால் இவர்கள் அனைவரையும் நம் இனமானபேராசிரியர் அவர்களில் திருவுருவில் கண்டு இன்புறுகிறேன்'' – இது பேராசிரியர் அன்பழகன் அவர்களைக் குறித்து கலைஞர் அவர்கள் கூறியது.
பேரறிஞர் அண்ணா அவர்களால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கண்டறியப்பட்ட நல்முத்து பேராசிரியர். குடந்தை மாணவர் மாநாட்டில் மாணவர் ராமையா (பழைய பெயர்) ஆற்றிய உரை தமிழா கேள் என்பது. அதைக் கேட்டு அண்ணாவே அசைந்தார். அந்த உரையை தம் திராவிட இதழிலே வெளியிட்டு அழகு பார்த்தார். 1944 முதல் 1957 வரை பதின்மூன்று ஆண்டுகள் பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராக இருந்தார் அன்பழகன். கூடவே திராவிடர் இயக்க பிரச்சாரகர், இதழாளர், நூலாசிரியர், இலங்கைக்குப் பயணித்து அங்கே திருக்குறள் மாநாட்டில் உரை நிகழ்த்தியவர் என அரசியலுக்கு அப்பால் தமிழ் முகங்கள் பல பெற்றவர்.
அன்பழகன் திராவிடர் கழகத்தில் செயல்பட்டாலும் பெரியாரின் கோபத்துக்கு ஆளாகவேண்டிய நிகழ்வும் நடைபெற்றது. ‘‘கரந்தை தமிழ்ச் சங்கத்தில் மாணவர் நடத்திய விழாவில் கலந்துகொண்டு பேசுவதற்கு நானும் கலைஞரும் அழைக்கப்பட்டிருந்தோம். அவ்விழாவில் கலைஞர் இயல்பாகப் பேசுகையில் பட்டுக்கோட்டை அழகிரி அவர்களைப் பாராட்டிப் பேசினார். பெரியார் அவர்களோ கல்லூரிப்படிப்பு முக்கியமல்ல. திராவிட நாடு அடைவதுதான் முக்கியக் குறிக்கோள் என்று பேசி இருந்தார். அந்தக் கூட்டத்தில் பேசுகையில் படிப்பு முக்கியம். திராவிட நாடு அடைகையில் அதை நிர்வகித்திட நாம் படித்தவர்களாக இருக்கவேண்டும் என்று பேசினேன். அது இயல்பான பேச்சு. ஆனால் பெரியாரை மறுக்கவேண்டும் என்னும் பேச்சு அல்ல. ஆனால் எங்கள் இருவரின் பேச்சு பற்றி கழகப் பற்றாளர் நீடாமங்கலம் ஆறுமுகம் சென்று பெரியாரை மறுத்துப் பேசப்பட்டதாக பொய்த்தகவல் சொல்லி விட்டார். எங்கள் இருவரையும் கூட்டங்களுக்கு அழைக்கக்கூடாது என நடவடிக்கை எடுக்க முடிவெடுக்கப்பட்டது. அண்ணா, நடவடிக்கை எடுக்கட்டும் அப்போதுதான் பிரச்னையில் உண்மை தெரியும் என்று கூறிவிட்டார். பெரியாரும் குடி அரசில் எங்களை யாருமே அழைக்கக்கூடாது என கட்டம் கட்டி அறிவிப்பு வெளியிட்டார். பெரியாரின் திருமண ஏற்பாட்டினால் மாறுபட்டு 1949&ல் திமுக உருவாகிற்று. இத்துடன் இப்பிரச்னை இணைந்து ஒன்றாகிவிட்டது'' என பேராசிரியர் குறிப்பிடுகிறார்.
இனமானப் பேராசிரியர் வாழ்வும் தொண்டும் என்ற நூலை நான் எழுதி இருக்கிறேன். இந்நூலில் பேராசிரியர் திருக்குறளுக்கு உரை எழுதி இருப்பது பற்றியும் 480 குறள்களுக்கு அவர் எழுதி உள்ளார் என்பதையும் குறிப்பிட்டிருந்தேன். இதைக் கவனித்த அவர், இந்த தகவலே நூலில் இடம் பெறக்கூடாது எனத் தடுத்துவிட்டார். இதற்கு அவர் என்னிடம் விளக்கமும் தந்தார். ‘‘கலைஞர் ஏற்கெனவே குறளுக்கு உரை எழுதி உள்ளார். இப்போது நான் எழுதி இருக்கும் உரை அவருக்குப் போட்டியாக எழுதி இருப்பதாக சொல்லப்படும். என் உரையையும் கலைஞர் உரையையும் எங்கேனும் ஒப்பிட்டு வீண் பிரச்னை கிளப்புவார்கள். எனவேதான் இதைப் பற்றி எங்கும் தகவல் வெளியிடக்கூடாது'' என்று சொன்னார். அந்த அளவுக்கு கவனமாக இருந்தவர்.
பச்சையப்பன் கல்லூரியில் பணியாற்றியபோது பேராசிரியர் சைக்கிளில் சென்று வந்தார். பின்னர் ஸ்டாண்டர்டு கார் ஒன்றை தன் உழைப்பில் வாங்கினார். பெரும்பாலும் அவரே 1033 எனும் எண்ணுள்ள அக்காரை ஓட்டுவார். விடுமுறை நாட்களில் சிதம்பரம், வைத்தீஸ்வரன்கோவில், திருவாரூர், மயிலாடுதுறை, என் தம் குடும்பத்தினரின் இல்லங்களுக்கு அழைத்துச் செல்வார். வள்ளலார் கொள்கை மீது பிடிப்புள்ளவர். சனிக்கிழமைதோறும் எண்ணெய்தேய்த்துக் குளித்துவிடுவார். தனக்குத் தானே முடிவெட்டிக்கொள்வதும் உண்டு. 98 ஆண்டுகள் நிறைவாழ்வு வாழ்ந்தவர் இவருக்கு சோதனையாக அமைந்த நிகழ்வுகள் இரண்டு. முதலாவது அறிஞர் அண்ணாவின் மறைவு. அந்த துயரிலிருந்து விடுபடும் முன்பாக அதே ஆண்டில் (1969) அவரது வாழ்விணையர் வெற்றிச்செல்வி மறைந்தார். அவரது இரு மகள்களும் மருத்துவம் பயின்ற வேளை அது.
பேரறிஞர் அண்ணா மறைந்தபோது பேராசிரியர் நாடாளுமன்ற உறுப்பினர். நாவலர் நெடுஞ்செழியன் பொறுப்பு முதல்வர், அதுமட்டுமல்ல திமுகவின் பொதுச்செயலாளரும்கூட. நாவலரையே அண்ணாவும் தம்பி வா தலைமையேற்க வா என்று அழைத்ததும் உண்டு. எல்லோரும் நெடுஞ்செழியன் தான் முதல் அமைச்சர் ஆவார் என்று கருதிக்கொண்டிருந்தனர். ஆனால் அப்போது கலைஞர் முதலமைச்சர் ஆக ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. எம்ஜிஆரும் அதற்கு உதவிக்கொண்டிருந்தார். தந்தை பெரியாருக்கும் அதில் ஆர்வம் உண்டு. பேராசிரியருக்கு நாவலரே முதல்வர் ஆகவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அவர் அதற்காக எந்த அணிதிரட்டலிலும் இறங்கவில்லை. ஆனாலும் நாவலரை நேரில் சந்தித்து முதல் அமைச்சர் ஆவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என விரும்பி, ஒருநாள் மாலையில் நண்பருடன் அவர் இல்லத்துக்குப் போனார். அன்று கூவம் இல்லம் என்று அழைக்கப்பட்ட இல்லத்தில் நாவலர் இருந்தார். வாயிலில் இருந்த பாதுகாவலருக்கு அன்பழகனைத் தெரியவில்லை. ‘நாவலர் உறங்குவதாகச் சொன்னார். ‘‘அன்பழகன் வந்திருக்கேன்னு சொல்லி எழுப்புய்யா'' என உரக்கச் சொன்னார். அதற்குள் நாவலரின் துணைவியார் மாடியிலிருந்து இறங்கிவந்து வரவேற்று, லேசாக தலைவலி என படுத்துள்ளார், எழுப்பவா? எனக் கேட்டார். அன்பழகன் எழுப்புமாறுக் கேட்டுக்கொண்டார். நாவலர் இறங்கிவந்து நலம் விசாரித்து அமர்ந்தார். அவரிடம் முதலமைச்சர் ஆவதற்கான ஏற்பாடுகள் பற்றி அன்பழகன் கேட்க நாவலர் அலட்டிக்கொள்ளாமல், ‘‘அண்ணாவே வழி மொழிந்துள்ளார். நான் தான் அடுத்து முதல்வர்...'' என்று சொன்னார். அன்பழகனுக்கு சுர்ரென்றிருக்கிறது. எழுந்தவர் அவரது வீட்டுச் சுவர்களில் எழுதி இருக்கும் ஒரு திருக்குறளைக் காட்டி அதைப் படியுங்கள் என்று சுட்டிக்காட்டினார்: அது தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலனாள்பவர்க்கு என்ற குறள். இப்படி ஒரு குறளை எழுதி வைத்துக்கொண்டு தூங்குகிறீர்களே.. என்று கேட்டுவிட்டு திரும்பிவிட்டார்!
அண்ணா 1967&ல் திமுக வென்றபோது அன்பழகன் இல்லத்தில் இருந்துதான் அமைச்சரவைப் பட்டியல் தயாரித்தார். பேராசிரியர் மீது அன்புகொண்ட சில தமிழாசிரியர்கள் அவருக்கு கல்வி அமைச்சர் பதவி கொடுக்கவேண்டும் என்று அண்ணாவிடம் கோரிக்கை மனு கொடுக்க விரும்பினார்கள். அதை அறிந்த பேராசிரியர்,''அண்ணாவுக்கு யாருக்கு எதைக் கொடுப்பது எனத் தெரியும். நீங்கள் இப்படி கோரிக்கை அளிக்கக்கூடாது'' எனத் தடுத்துவிட்டார்!
ஏப்ரல், 2020.