பேரன்பின் குரல்

பேரன்பின் குரல்
Published on

அது ஒரு தெலுங்குச் சங்கம் நடத்தும் பாட்டுப் போட்டி. தொடர்ந்து மூன்றாண்டுகள் முதற்பரிசு பெறுகிறவருக்குப் பெரிய வெள்ளிக்கோப்பையும்

சேர்த்துத் தருவதாக அறிவித்திருந்தார்கள். அந்த இளைஞன் இரண்டாண்டுகள் முதல்நிலை பெற்றிருந்தான். குறிப்பிட்ட அந்த மூன்றாம் ஆண்டு, அவனை இரண்டாம் நிலைக்குரியவனாக நடுவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். அந்த முடிவை அவனும் முழுமனதாக ஏற்றுக்கொண்டான்.

பரிசளிப்பு விழாவுக்குப் புகழ்பெற்ற திரையிசைப் பாடகி ஒருவர் வந்திருந்தார். தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் அவருக்கு முன்னால் தங்கள் பாடலைப் பாடினார்கள். பாடகிக்குப் பரிசளிப்பின் தரவரிசையில் ஏதோ பிழை நேர்ந்திருப்பதாகத் தோன்றியது. ‘‘இரண்டாம் பரிசு பெற்றிருக்கும் இளைஞன், முதற்பரிசு பெற்றவனை விட மிக நேர்த்தியாகப் பாடியிருக்கிறான். எனவே போட்டியின் முடிவுகளில் எனக்குச் சம்மதமில்லை. இரண்டாம் பரிசு பெற்றவர்தான் முதல்பரிசுக்குரியவன்'' என்று முதல் பரிசையும் வெள்ளிக்கோப்பையையும் அவனுக்கே பெற்றுத்தந்தார்.

அந்த இளைஞன் தான் எஸ்.பி.பி.! அந்தப் பாடகி எஸ். ஜானகி! ஒன்று, இரண்டு, மூன்று என்பதல்ல; எஸ்.பி.பி&க்கு ஒன்று இசை; இரண்டு இசை; மூன்றும் இசைதான்.

எந்த நிலையென்றாலும் அதை ஏற்றுக்கொண்டு இசையோடு இசையாக, தான் கலந்திருப்பதையே தன் வாழ்வின் பயணமாகத் தொடங்கியவர் எஸ்.பி.பி. 16 மொழிகள், 42,000  பாடல்கள், 6 தேசிய விருதுகள், பல மாநில விருதுகள், பத்மஸ்ரீ, பத்மபூஷன்... அரை நூற்றாண்டுக்கும் மேலாக காலம் அவரது குரலை நான்கு தலைமுறைகளின் கதாநாயகக் குரலாக அடையாளம் கொள்ள வைத்திருக்கிறது.

அது கதாநாயர்களின் குரலாக மட்டுமல்ல.

‘ஹேய்... எவ்ரிபடி விஷ் யூ ஹாப்பி நியூ இயர்...

இளமை இதோ இதோ

இனிமை இதோ இதோ‘ என்று 80 களில் அவர் பாடிய பிறகு... இன்றுவரை அந்தக் குரல்தான் இளைஞர்களின் புத்தாண்டுக் கொண்டாட்டத்தைத் தொடங்கி வைக்கிறது.

‘காதல் ரோஜாவே... எங்கே நீ எங்கே‘ என்று அவர் பாடிய 90 களில் பிறந்த ஒருவன், அந்தக் குரலின் ஏக்கத்தையும் தேடலையும் இன்று தன்னுடையதாக உணர்கிறான். அதற்குக் காரணம், அவரது குரலின் வசீகரம் மட்டுமல்ல; அதில் குழைந்த உணர்வுகளின் வண்ணங்கள்.

‘‘எம்.எஸ். சுப்புலட்சுமியின் பாடலைக் கேட்கிறபோது கடவுளுக்கு நெருக்கமாகச் செல்கிறேன்'' என்றார் மகாத்மா காந்தி. அப்படித்தான் எஸ்.பி.பி - யின் குரலைக் கேட்கிற ஆண்கள், பெண்கள் எல்லாரும் அவரவருக்குப் பிடித்தமான -  பிரியமான - விருப்பமான - நெருக்கமான - இரகசியமானவர்களின் கைகளைப் பிடித்துக் கொள்கிறார்கள்; அவர்களின் தோள்களிலும் மடியிலும் சாய்ந்துகொண்டு அந்தக் காலத்தைக் காதலித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களது காதலை, காமத்தை, கனவை, காயத்தை, துயரத்தை அவரது குரல் முத்தமாகவும் கண்ணீராகவும் பழச்சாறாகவும் மூலிகைச் சாறாகவும் ஆற்றிக்கொண்டிருக்கிறது.

இசைஞானி இளையராஜா இசையில், ‘‘மடைதிறந்து தாவும் சிறு அலை நான் மனம்திறந்து கூவும் சிறு குயில் நான்'' என்றொரு பாடல். வாலி எழுதியிருப்பார்.

‘‘விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம் அமைப்பேன் நான்

இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜியம் எனக்கேதான்''

இந்த வரிகள் இளையராஜா, எஸ்.பி.பி. இவருக்குமான வாழ்வியல் வரிகளாகிவிட்டன. இசையிலும் குரலிலும் இருவரும் செய்த மாய விநோதங்கள் மகத்தானவை. எம்.எஸ்.வி. அவரது குரு; இளையராஜா அவரது தோழன்.நட்பைக் கற்பைப் போல எண்ணிய உள்ளார்ந்த உறவு அது.

எஸ்.பி.பி&க்கு ஒவ்வொரு நாளும் சங்கீதத் திருநாள்தான். ஆனால் அவர் தன்னை ஒரு வித்தைக்காரரென யாரிடமும் எப்போதும் விதந்தோதியது இல்லை; அவரது குரலினிமையால் & திறமையால் அதை அனைவரும் உணர்ந்தார்கள். அதை இன்னும் பேரழகாய் எல்லாரையும் கொண்டாட வைத்தது அவரது கனிந்த அன்பும் குழைந்த பணிவும். இவை அந்தக் கலைஞனின் உண்மையான இயல்புகள் என்பதை அவரோடு பழகிய ஒவ்வொருவரும் உணர்ந்தார்கள்.

மேடைக் கச்சேரிகளில், தொலைக்காட்சி இசை நிகழ்ச்சிகளில் அவர் சக பாடகர்களையும் கலைஞர்களையும் தட்டிக்கொடுப்பதும்

பரவசத்தில் கட்டித் தழுவிக் கண்ணீர் வடிப்பதும் நெகிழ்வான சம்பவங்களாக இருக்கும். இந்த அழகான அன்பையும் தாலாட்டும் தருணங்களையும் கண்டுணர்ந்த ஒவ்வொரு இதயமும் அவரைத் தனது குடும்பத்தில் ஒருவராக உணர்ந்து ஆத்மார்த் தமாக அவரை நேசிக்கத் தொடங்கியது.

ஒரு பாடலாசிரியாக எனது பல பாடல்களை அவரது குரல் அணி செய்திருக்கிறது.

‘நந்தா‘  படத்தில் நான் எழுதிய ஒரு பாடல்.   பாடலை எழுதிக்கொண்டு ஒலிப்பதிவு அறைக்குள்  அவருக்குள்ளேயே பாடிப் பார்த்துக் கொண்டிருந்தார் எஸ்.பி.பி. அந்தப் பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா மேல்ஸ்தாயியில் மெட்டமைத்திருந்தார். அதனால் யுவனிடம் அவர், இந்த ஸ்தாயியில் பாடினால் அது கொஞ்சம் உரத்த குரலாகக் கேட்கும்;  நீங்கள் சொல்வது மாதிரியும் சிறிய மாற்றத்தோடும் இரண்டு விதத்தில் பாடுகிறேன். எது தேவை என்று

சொல்லுங்கள்‘ என்றார். அவரது பாணியில் பாடியதுதான் யுவன் உட்பட எல்லோருக்கும் பிடித்திருந்தது. அந்தப் பாடல்தான் -‘முன்பனியா முதல் மழையா‘ என்று இன்றுவரை எல்லாருடைய இதயங்களையும்   நனையவைத்துக் கொண்டிருக்கிறது. அந்தப் படத்தின் - கதாநாயகனின்  உயிர்த்துடிப்பை அந்தக் குரல் காற்றோடும் கடலோடும் கலந்து எதிரொலிக்கும்.

‘தமிழரசன்‘ படத்தில், இசைஞானி இளையராஜா இசையில்,   நான்  எழுதிய ‘நீதான்  என் கனவு...மகனே, வாவா கண்திறந்து...

தேயும் வான் பிறைதான் மகனே நாளை முழு நிலவு‘என்கிற பாடல் சமீபத்தில் வெளியானது.  பாடலைப் பாடி முடித்ததும், அங்கிருந்த  எல்லோரும் அவருடன் படம் எடுத்துக் கொண்டோம். நான் உயரம் குறைவு என்பதால், அவர் தன் உயரத்தைக் குறைத்துக் கொண்டு என்னளவில் நின்று, என் தோள்மீது கைபோட்டுக்கொண்டு படம் எடுக்கச் செய்தார்.  இப்படி ஒரு பாடகர்... இனிய மனிதர்... இவருடன் நாம் இருந்திருக்கிறோம்... பணி புரிந்திருக்கிறோம் என்ற நெகிழ்வும் மகிழ்வும் நிலாவைப் போல நினைவின் நெடும் பாதையெங்கும் கூடவே வருகிறது. வரத்தானே செய்யும்.

 ‘‘இயற்கையெனும் இளையகன்னி ஏங்குகிறாள் துணையை எண்ணி'' என்று தமிழில் 60&களில் பாடத்தொடங்கியவர், கடைசியாக டோக்கியோ தமிழ்ச்சங்க ‘ஆன்லைன்' நிகழ்ச்சியொன்றில் வாழ்த்திப் பேசியது எஸ்.பி.பி&யின் வாழ்வின் செய்தியாக முக்கியத்துவம் பெறுகிறது.

‘‘இயற்கையை நாம் மிகவும்  வஞ்சனை செய்துவிட்டோம். அதற்குக்  கொடுக்க வேண்டிய மரியாதையை நாம்  கொடுக்கவில்லை. இதை நான் பல நிகழ்ச்சிகளில் சொல்லிவிட்டேன். நம் பெரியவர்கள் நமக்கு அழகான பூமி, சுத்தமான காற்று, அழகான நீர் நிலைகளையெல்லாம் கொடுத்துவிட்டுப் போனார்கள். ஆனால் நாம் என்ன செய்தோம்? சுடுகாடு போன்ற ஒரு இடத்தை அடுத்த தலைமுறைக்குக் கொடுக்கிறோம். என்ன நியாயம் இது? இதன் பலனை நாம் அனுபவித்துத்தான் ஆக வேண்டும்''.

இந்த கொரோனா தொற்றுக்காலம் ஈவிரக்கமற்றது. ஆனால் எஸ்.பி.பி. அதையும்கூட ‘‘நாம் செய்த தப்புக்கான தண்டனைதான் கொரோனா. அதைக் கொடுமை, ராட்சசி என்றெல்லாம்  சொல்லாதீர்கள்'' என்றார். விழிப்புணர்வு பாடல்களைப் பாடினார். தொற்று அவரையும் விடவில்லை.

 ‘உங்களுடைய மிகவும் துயரமான நேரம் எது?‘ என்று ஒரு முறை எஸ்.பி.பி யிடம் கேட்கப்பட்ட போது, ‘கண்டசாலா, முகமது ரஃபி, முகேஷ், கிஷோர் குமார் போன்ற நீண்ட நாட்கள் வாழ்ந்திருக்க வேண்டிய பாடகர்களின் மறைவு' என்று குறிப்பிட்டிருந்தார். இன்று அந்தப் பெயர்களோடு அவருடைய பெயரும்  சேர்ந்துகொண்டது.

தாமரைப்பாக்கத்தில் மரங்களும் செடிகளும் நீர்நிலைகளும் பறவைகளும் சூழ்ந்த தனது பண்ணை நிலத்தில், இயற்கையின் மடியில் மௌனமாக உறங்குகிறார் எஸ்.பி.பி. ‘இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்' என்கிற அவரது குரல் காற்றில் மிதந்துகொண்டிருக்கிறது.

அக்டோபர், 2020.

logo
Andhimazhai
www.andhimazhai.com