உலகப் பணக்காரர்களை வரிசைப்படுத்தும் ஹுருன் அறிக்கை சமீபத்தில் வெளியானது. கொரோனாவால் உலகப் பொருளாதாரமே தடுமாறிக்கொண்டிருப்பதால் இந்த அறிக்கையில் யார் யார் முதலிடத்தில் இருக்கிறார்கள் என்பது ஆர்வத்துடன் பார்க்கப்பட்டது.
அமேசான் நிறுவனத் தலைவர் ஜெஃப் பெசோஸ் முதலிடத்திலும் அடுத்த இடத்தில் பில்கேட்ஸும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இருந்தனர். இதில் ஒன்றும் மாற்றம் இல்லை.
இந்தியாவை எடுத்துக்கொண்டால் இந்த கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பூனாவைச் சேர்ந்த ஒரு நிறுவன அதிபரின் சொத்துமதிப்பு கடகடவென உயர்ந்து, உலகில் 86 ஆவது பணக்காரர் ஆகி உள்ளார். அவரது சொத்து இந்த சமயத்தில் 25 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்தியாவின் மிக வேகமாக வளரும் பணக்காரர் ஆனதுடன் உலக அளவில் வேகமாக வளரும் முதல் ஐவரில் ஒருவர் ஆகிவிட்டார்.
இவரது நிறுவனம் சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா. தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனம். கொரோனா வைரசுக்கு தடுப்பூசிகள் தயாரிக்க பிரிட்டனில் உள்ள அஸ்ட்ராஜெனகா என்ற நிறுவனம் இவர்களுடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறது. அங்குள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கும் தடுப்பூசியை 100 கோடி டோஸ்கள் இந்த நிறுவனம் தயாரித்து அளிக்கும்.
ஏற்கெனவே உலகில் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனமான இது, இந்த கொரோனா ஆர்டரால் மேலும் வளர்ச்சி அடைந்துள்ளது.
தடுப்பூசி சக்கரவர்த்தி என்று அழைக்கப்படும் நம்நாட்டு தொழிலதிபரான இவர் பெயர் சைரஸ் பூனாவாலா.
இந்தியாவைப் பொறுத்தவரை சில காலம் முன்பு வீழ்ச்சியை சந்தித்திருந்த தொழிலதிபர் முகேஷ் அம்பானி, மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி நாட்டின் முதலிடத்தில் இருக்கும் பணக்காரர் ஆகிவிட்டார்.
கொரோனா பெருந்தொற்று ஆரம்பித்த காலத்தில் அவருக்கு இழப்பே ஏற்பட்டது. ஆயினும் தன் நிறுவன தொலைதொடர்புப் பிரிவான ஜியோவின் பங்குகளை பேஸ்புக்குக்கு விற்றதன்மூலம் இழப்பை நேர் செய்துவிட்டார்.
முதல் இரண்டும் மாதம் சரிவு. அடுத்த இரண்டு மாதத்தில் எழுச்சி. இதுதான் அம்பானியின் கதை.
இந்தியாவில் முதலிடம். உலக அளவில்? அம்பானி எட்டாம் இடத்தில் இருக்கும் பணக்காரர்!
உலகின் முதல் நூறு பணக்காரர்கள் பட்டியலில் அம்பானி, பூனாவாலா தவிர மேலும் இரண்டு பேர் மட்டுமே இருக்கிறார்கள். அவர்கள் அதானி, ஷிவ் நாடார்.
வாசகர் மைண்ட் வாய்ஸ்: யோவ் ஆசிரியரே, இந்த கொரோனா காலத்தில் அவனவன் தெருவில அலையறான்... நீர் என்னான்னா கோடீஸ்வரங்க பட்டியலைப் போட்டு எங்க வயித்தெரிச்சலைக் கொட்டுறீரே!
ஜூலை, 2020.