பெயரில் என்ன இருக்கிறது?

Published on

நீலச் சிறுகுயிலை நீடு இசையால் அன்றியே கோலத்து அறியவருமோ கூறு -என்கிறது

நீதி வெண்பா 87. அண்மைக் காலமாக தமிழக சுற்றுச்சூழல் துறையில் புதிய புதிய சொற்கள் புழங்கத் தொடங்கியுள்ளமை ஒரு ஆச்சரியமே. அதிலும் பட்டாம்பூச்சிகள் - வண்ணத்துப்பூச்சிகளுக்கு சூட்டப்படும் பெயர்கள் வேடிக்கையானது. இதில் காட்டப்படும் அவசரமும் காரணமறியாத, கருத்தியலறியாத விதத்தில் இருப்பது கவலையளிக்கிறது. ஏனென்றால் இது தமிழ் மரபுக்கு முரணானது.

எடுத்துக்காட்டாக  “பாறு” என்று பழங்குடிகள் பிணந்தின்னிக் கழுகுகளைக் குறிப்பிடுவதாக பிரபலப்படுத்தப்படுகிறது. இன்னும் அலங்கு, சோலை மந்தி என்றெல்லாம் பெயர்ச்சொற்கள். இப்பிரச்சினையில் பாறு என்று எதற்காக எடுத்துச் சொல்லவேண்டும்? பிணந்தின்னிக் கழுகை ரசிப்பதற்கா? காப்பாற்றுவதற்கா? அல்லது பாரம்பரியத்தை மீட்டெடுக்கவா? இதில் முக்கிய விசயமானது இந்தியப் பாரம்பரியங்களின் அடிக்கட்டுமானமானது இந்துத்துவம் என்பதே. காப்பாற்றப்படுவது மட்டுமே காரணம் என்றால் ஒன்றை எந்த மொழியில் எப்படி அழைத்தால் தான் என்ன? அதற்கான ஒரே தேவை விஞ்ஞான அணுகுமுறை தானே? பாறு போன்ற பழைய சொற்களால் குறிக்கப்பட்ட பறவைகளின் தமிழ்ப் பெயர்களால் ஒருவேளை மொழியை வளப்படுத்தலாம். அறிவியலை வளப்படுத்த முடியுமா? தமிழ் தெரியாத ஆங்கில மருத்துவரிடம் ஆங்கிலம் அறியாத ஒரு நோயாளி தனக்குக் காய்ச்சல் என்றால் நலம் அடைய முடியுமா? ஊஞுதிஞுணூ என்றால் நலம் அடைய முடியுமா?

எத்தகைய பாரம்பரியத் தேடல்களும் அறிவியலுக்கு வழிகாட்டுவதில்லை. பாரம்பரியப் பித்தால் ஒருபுறம் தமிழ் மயமாக்கல் நடைபெறலாம். ஆனால் அது அறிவியல் மயமாவது எப்போது? காரணம் அறிவியல் தான் மனிதனை வாழவைக்க முடியும். வெள்ளைக்காரன் கண்டுபிடித்துக் கொண்டெ போவான். நாம் அதற்கு தமிழ்ப் பெயர் சூட்டிக் கொண்டே இருப்போமானால் அது எதற்குப் பயன்படும்? எழுதி எழுதி வைத்துக் கொள்ள வேண்டியது தானேயொழிய அவனிடம் எப்போது போட்டி போடப்போகிறோம்?

 தற்கால அரசியல் தமிழுக்குகேற்ப பல பெயர்களை மாற்றித் தான் தீர வேண்டியிருக்கிறது. பழைய சமஸ்கிருதச் சொற்களுக்கு பதிலாக புதிய புதிய கலைச்சொற்கள் சாதாரண நாளிதழ்களில் கூட வெளிப்படுவது அருமையான போக்காகும். எடுத்துக் காட்டு பிரச்சாரம் = பரப்புரை! இது போன்றவை மக்களால் மாறுகிறது என்பதை விட அறிவியலால் என்பதே சாலப்பொருத்தம். அறிவியல் மாற்றம் கூடாது என்பதன் போக்கு மதவாத கலாச்சார அடிப்படைவாதத்துடன் தான் இணையும். எவ்வளவு ஆழமான அழகான இலக்கியத்தாலும் மனித சமூகம் முன்னேறியதாக வரலாறு இல்லை. அண்மையில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் கூறினார். “ இலக்கியம் அறிந்தால் தான் எந்த வார்த்தைகளையும் பிழையின்றி எழுத முடியும்” என்று. இலக்கியம் எவ்வளவு மலிவாகிவிட்டது!

எந்தப் பொருளின் பெயரும் உயிரின் பெயரும் அதன் தன்மை உருவம் நடத்தை இயங்கியலைப் பொறுத்தமைவதே முக்கியம். மேற்சொன்ன சில பாரம்பரிய பெயர்ச்சொற்களுக்கு அப்படிப் பட்ட அம்சங்கள் என்ன இருக்கிறது?  எவ்வளவு தான் நம் அறிவியல் என்று பேசினாலும் அவ்வளவும் ஒரு வகை மொழிப்பெயர்ப்பகவே இருக்கிறது, எதுவும் மூலச்சுரப்புள்ள புதிய கண்டுபிடிப்பாக ஒரு போதும் இருந்ததில்லை. இவை மாறிட பாரம்பரிய அழுக்குகள் நீக்கப்பட்டு நமது பண்பாட்டை தூய்மையாக்க வேண்டும்.

உள்ளீடற்ற படைப்பிலக்கியத்தை பின்புலமாகக் கொண்டு ஒரு மொழி அழகானது, அறிவுவளம் கொண்டது என்றால் அது உண்மையானதுதானா? மேலைத்துவ அறிவியல் கருத்துகளை மட்டும் பயன்படுத்த ஆலாய்ப்பறக்கும் நாம், நமது மொழியை மட்டும் அறம், அரசியல், ஆன்மீகத்திற்கு மட்டுமே பயன்படத்தக்கதாக இருப்பதை நினைத்துக் கவலையே படுவதில்லை. மொழியில் புதிய கலைச்சொற்களைக் கண்டுபிடிக்காமல், அவற்றை ஏற்படுத்தவேண்டுமே தவிர ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு சொல்லிக் கொண்டிருக்கும் பெயர்களையும் வழக்காறுகளையும் உயர்த்திப்பிடிப்பது கதை, கற்பனை, காவியம், சாதி, சமயங்களைத்தான் வளர்க்கும். சமத்துவத்தையோ நவீனத்தையோ அல்ல. மீண்டும் சிந்திப்போம்; இங்கு பாரம்பரியம் என்றால் அது இந்துமத அல்லது வடஇந்தியப் பாரம்பரியம்தான், பொதுவில் வைக்க அதற்கு எந்த தகுதியும் இல்லை, அது அறிவியலுக்கு எதிரானது. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கூறுகிறார் அறிவியல்வாதியும் இலக்கியவாதியும் ஒன்றுதான் என்று. நான் நம்பத்தயாராக இல்லை.

logo
Andhimazhai
www.andhimazhai.com