ஆக... கள்ளம் கபடமற்ற இரு உள்ளங்களின் காதல் இரு ஊர்களையே கருக்குவதில் போய் முடிந்திருக்கிறது. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு பதிவுத் திருமணமும் செய்து கொண்ட திவ்யா - இளவரசன் இணையைப் பிரித்தே தீருவது என்பதில் தொடங்கிய சாதி வெறியாட்டம் நூற்றுக்கணக்கான தலித் மக்களது வீடுகளைக் கொளுத்தி... அவர்களது வாழ்வாதாரங்களை நிர்மூலமாக்கி... சொந்த மண்ணிலேயே அந்நியராக்கி... கையறு நிலையில் கையேந்தி நிற்க வைத்திருக்கிறது.
காரணம் திவ்யா“உயர்ந்த” சாதியாம். இந்த உயர்ந்தது.. தாழ்ந்தது. இவர்கள் மேலானோர்.. இவர்கள் கீழானோர்.. என்கிற கருமாந்திரங்களையெல்லாம் காறி உமிழ்ந்துவிட்டு கண்ணியமாகக் கரம் கோர்த்த இவர்களது வாழ்வைப் பிரிக்க இங்கு எவனுக்கு யோக்யதை இருக்கிறது? அல்லது உரிமை இருக்கிறது?
கேட்டால்... இப்படித்தான் ஒவ்வொரு ஊரிலும் செய்கிறார்களாம்.. தங்கள்
சாதிப் பெண்ணை மயக்கி திருமணமும் செய்து கொண்டு பின்பு நட்டாற்றில் கழற்றி விட்டு விடுவார்களாம்... இது நாடகக் காதலாம்... தருமபுரிப் பக்கம் வன்னியர்களில் சிலர் இப்படித் திருவாய் மலர்ந்தால்.. கொங்குநாட்டுப் பகுதியில் உள்ள கவுண்டர்களில் சிலரும் இப்படித் திருவாய் மலர்ந்தருளுகிறார்கள்.
சரி “தங்கள் சாதிப் பெண்களை” மயக்கி.. திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி விடுகிறார்கள் தங்களுக்குக்“கீழ்” உள்ளவர்கள்” என்று குமுறுகிறார்களே.. அப்படியானால் இவர்களை விட“உயர்ந்ததாக”ச் சொல்லிக் கொள்ளும் ஆற்காட்டு வெள்ளாளர் வீட்டிலோ அல்லது சைவப் பிள்ளைமார் வீட்டிலோ பிறந்த பெண்களை இவர்களது ஆண்கள் காதலித்தால் அதை என்னவென்று அழைப்பார்கள்? முன்னது “நாடகக் காதல்” என்றால் இதை காவியக் காதல் என்றழைக்கலாமோ...?
ஒவ்வொரு சாதியும் தனக்குக் கீழாக ஒரு சாதி இருப்பதை எண்ணிப் பெருமிதம் கொள்ளும் அதே வேளையில் தனக்கு மேலாகவும் ஒரு சாதி ஆதிக்கம் ஒளிந்திருக்கிறது என்பதை வசதியாக மறந்து விடுகின்றது. இப்படிப் பெருமிதம் கொள்ள இயலாத சாதியாக... சாதி மூட்டைகளிலேயே அடிமூட்டையாக அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் சாதி அருந்ததியர் சாதி மட்டும்தான்.
இன்று இறுமாப்போடும் கர்வத்தோடும் நெஞ்சை நிமிர்த்திக் கொள்கிற பல பிற்பட்ட சாதிகள் ஐம்பது, அறுபது வருடங்களுக்கு முன்னர் தங்கள் சாதி பெயரை சொல்லக்கூட வெட்கப்பட்டுக் கொண்டு கூனிக் குறுகி நின்ற சாதிகள்தான். இன்றைக்கு இவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களைப் பார்த்து என்னென்ன இழிவுகளையும், குறைகளையும் சொல்கிறார்களோ... அதே இழிவுகளை.. அதே குற்றச்சாட்டுகளை ஐம்பது வருடங்களுக்கு முன்னர் இவர்களும் சுமந்து நின்றவர்கள்தான். அன்று ஒடுக்கப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் சுமந்து நின்ற சமூக இழிவை கண்டு மனம் குமைந்து.. பொங்கி எழுந்து.. அவர்களுக்கான சமூக நீதியை சகல துறைகளிலும் பெற்றுத்தந்தவர்கள்
சாதியாளர்கள் அல்ல. சாதி மறுப்பாளர்கள்.
ஆம். ஒவ்வொரு சமூக மாற்றத்-திற்குப் பின்னாலும் ஒரு சுயமரியாதைக்-காரனின் ரத்தம் ஒளிந்திருக்கிறது. ஆக... இதில் நாம் யார் என்பதைக் காட்டிலும்.. நாம் யாருக்காக நிற்க வேண்டும் என்பதுதான் மிக முக்கியமானது.
கலப்பு மணத்திற்கு அரசு ஊக்கம் அளிப்பதை விடவும்..“யாரேனும் இனி
“சொந்த” சாதியில் திருமணம் செய்தால் பத்தாண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை” என்றொரு சட்டம் கொண்டு வர வேண்டும்.
பச்சையாகச் சொன்னால் இந்த சாதிமதம்... போன்ற கண்றாவி-களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள் உண்மையிலேயே பெண்கள்தான். பெண்களைப் போன்ற ஜனநாயகப் பூர்வமான உயிரினம் உலகில் வேறெது-வும் இல்லை. மதத்தின் பேரால்... சாதியின் பேரால்.. இனத்தின் பேரால். என சகலத்தின் பேராலும் நடத்தப்படும் யுத்தங்களால் மூர்க்கமாகப் பாதிக்கப்படுபவள் பெண் மட்டும்தான். சாதியும். மதமும். ஆண்களுக்கானவை. இம் மண்ணில் பிறந்த எந்தப் பெண்ணும் தன் பெயருக்குப் பின்னால் செட்டியார் என்றோ... முதலியார் என்றோ.. கவுண்டர் என்றோ போட்டுக் கொள்வ-தில்லை. தன் வீட்டில் தன்னை அடக்கி ஒடுக்கும் ஆண் என்ன நினைத்துக் கொள்வானோ என்கிற சூழலிலேயே பெண்ணும் சாதியை.. மதத்தை நம்புபவராக நடிக்கிறார். உண்மையில் எவ்விதப் பாகுபாடும் அற்று மனித குலத்தை அணு அணுவாய் நேசிக்கும் உள்ளம் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒளிந்திருக்கிறது. ஒவ்வொரு சாதிக்-காரனும் பெண்ணை தன் வீட்டில் வளரும் ஒரு கால்நடையாகவே கருதிக் கொள்கிறான். சுருக்கமாகச் சொன்னால் அவனுக்கு பெண் ஒரு அஃறிணைப் பொருள் அவ்வளவே.
இந்த வரலாறு மாற்றி எழுதப் பட்டேயாக வேண்டும். தங்களுக்கு எதிராக இந்தச் சகல சாதி ஆண்களும் தொடுக்கும் யுத்தத்தை முறியடித்து வருங்கால வரலாற்றை எழுதப் போவது நமது பெண் இனமாகத்தான் இருக்க வேண்டும்.
ஏனெனில் இதுவரை எழுதப்பட்ட வரலாறெல்லாம் ஆண்களால். ஆண்களுக்காக.. ஆண்களே எழுதிய வரலாறு.
(குறிப்பு: சொதப்பல் பக்கம் கொதிப்பு பக்கம் ஆகிவிட்டதால் அப்பாடக்கர் ஆலோசனை சொல்வதில் இருந்து இந்த மாதம் லீவுங்கோ..)
டிசம்பர், 2012.