இ ருள், பனிமூட்டம் போலவே சாலையை மூடத்துவங்கியிருந்தது. எதிரில் தென்படும் உருவங்களைப் பார்க்க வெளிச்சம் தேவைப்பட்டது.
எங்கள் எல்லோரின் கவனத்தை சட்டென குவித்தது ஒரு கறுப்பும், செவலுமான காட்டெருமை. பாதையின் வலப்புறமிருந்து வெளிப்பட்டு, தார் சாலையில் நின்று எதனாலோ குதூகலப்பட்டு இரண்டடிக்கு எம்பிக் குதித்துத் துள்ளி தென்திசைப் புதரில் இறங்கிய காட்சி ஓர் உயிர் ஓவியம்.
நல்லவேளை நாங்கள் யாரும் செல்போன்களை எடுத்து அதை படம்பிடிக்க முயலாததொரு அநாகரிக விலகல்.
எங்கள் வண்டி ஆனைக்கட்டியை நெருங்கிக் கொண்டிருந்தபோது நான் என் ஸ்நேகிதி உமா பிரேமனை அழைத்தேன். வண்டியை அப்படியே வலப்புறமாத் திருப்புங்க பவா, எங்கள் மனிதர் ஒருவர் கறுப்பு சட்டையோடு நிற்கிறாரா?
நின்றார்.
மேடும், பள்ளமும், மரங்களும், ஓடையும், புதர்களும், கோழிகளும், மாடுகளும் நாங்களும் விதவிதமான மனிதர்களும் நிறைந்த அப்பிரதேசத்தில் நின்று உமா பிரேமன் எங்களை வரவேற்றார்.
இப்போது உமா பிரேமனின் சுயசரிதையை என் மனைவி ஷைலஜா ‘நிலாச்சோறு' என்ற தலைப்பில் தமிழாக்கிக் கொண்டிருக்கிறாள். அல்லது அதில் கரைந்து கரைந்து எழமுடியாமல் தத்தளிக்கிறாள்.
உமா பிரேமன் என்ற அந்த மனுஷியின் அறை நிரம்பி வழியுமளவிற்கு அவள் வாங்கின கேடயங்களும், பதக்கங்களும், விருதுகளும் அங்கே ஒழுங்கின்றிக் கிடக்கின்றன. ஒரு புகைப்படத்தில் அவர் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியோடு ஒரு உணவு மேசையிலமர்ந்து உணவருந்தும் காட்சி என்னைக் கவனிக்க வைத்தது.
தன் சொந்த தாயாலேயே ஒன்றரை லட்சத்திற்கு தன் அம்மாவின் புருஷனுக்கே ஐந்தாம் தாரமாக விற்கப்பட்ட சிறுமி உமா என்ற சாமான்ய மனுஷி எப்படி இந்த உயரத்தைச் சென்றடைந்தாள்?
ஒருவேளை திட மனம்கொண்டு ‘நிலாச் சோறு' வாசிக்கையில் உங்களுக்கு ஒரு சிறு விடை கிடைக்கலாம்.
இப்போது எங்களுக்காக உமா சேச்சி வாழையிலையில் வைத்து ஆவியில் வேகவைத்த நம்மூர் கொழுக்கட்டை மாதிரி இதுவரை நாங்கள் சுவைக்காத ஒரு உணவைத் தருகிறார். ஏனோ எங்கள் யாருக்கும் அதை சாப்பிடுகிற ஆர்வம் இல்லை. நாங்கள் பார்ப்பதில் ஆர்வம் கொண்டிருந்தோம்.
மனிதர்களின் மனதை வாசிக்கிற அம்மனுஷி ஒரு கதவை மெல்ல திறக்கிறாள். அது ஒரு நீண்ட ஹால். இருபதுக்கும் மேற்பட்ட படுக்கைகள். எல்லாவற்றிலும் மனிதர்கள். எல்லோரும் ஆண்கள். நான் கூர்ந்து பார்த்தேன். எவருமே இயல்பானவர்கள் அல்ல. நோயும், நோயிலான விளைவுகளும். பாதி கோமாவில் கண்கள் நிலைகுத்தி கூரையின் மேல் நிற்கும் ஒரு மலையாளி.
அவர்கள் எல்லோரும் எங்களுக்கு வணக்கம் சொன்னார்கள்.
‘‘வாருங்கள் சகாக்களே, உங்கள் அன்றாடங்களை உங்கள் அலுவலகத்தை, உங்கள் லௌகீகத்தை, உங்கள் ஏ.சி. அறையை, உணவு மேசை சாப்பாட்டை, உங்கள் பொருளீட்டலை அதற்காக நீங்கள் தரும் நடிப்பை, எல்லாவற்றையும் மீறி வாழ்வில் பட்ட அடியில் இனி எழுந்திருப்போமா? என எந்த நம்பிக்கையுமற்ற எங்களை ஏதோ ஒரு பற்றுதலில் ஸ்பரிசித்து வைத்திருக்கும் இம்மனுஷியின் சொல்கேட்டு வந்த என் சோதரர்களே வருக'' என்பது போல அவர்களின் பார்வைகள் எங்கள் மீது நிலைகொண்டன.
கண்கள் எத்தனை மிருதுவானவைகள்? பார்வைகள் எத்தனை கனிவானவைகள்? ஆனால் அப்பார்வைகளின் துளைப்பைத் தாங்க முடியாமல் நாங்கள் மெல்ல விலகினோம்.
உமா சேச்சி எங்களை அவதானித்தார் போலும். இடைவெளி தராமல் திரைச் சீலையால் மூடப்பட்டிருந்த இன்னொரு படுக்கை மனிதனின் முன் எங்களை நிறுத்தினார். அவன் கண்களை உருட்டி எங்களை அளந்தான். நினைவுகள், சொற்கள், வாழ்வு எல்லாமும் கடந்த காலமாகி விட்ட ஒரு பீகாரி சகோதரன் அவன்.
அவன்தானே நமக்குச் சொற்பக் கூலிக்கு சல்லிசாகக் கிடைப்பவன்! அவன்தானே நம் பெண்களின் கழுத்துச் செயினை அறுப்பவன்! அவன்தானே நம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தறுப்பவன்! அவன் மட்டும்தானே நம் வீடு புகுந்து திருடி, மாட்டிக்கொண்டு கம்பத்தில் கட்டிவைத்து அடிப்பதற்கு வசதியானவன், கேட்பாராற்றவன், ஜாதியில்லாதவன், பிழைக்க வழி தெரியாமல் இன்னொரு மாநிலம் தேடி அலையும் உள்நாட்டு அகதி.
அவர்களில் ஒருத்தன்தான் அவன். பெயர் பிரதீப் உமா சேச்சியேகூட அவர் அழைப்பதற்கு ஒரு லகுவான பெயரை அவனுக்கு இட்டிருக்கலாம்.
ஒற்றை ஆளாய் அவன் ஒருவனின் பார்வையை எங்கள் எவராலும் தாங்க முடியவில்லை. உமா சேச்சி அவன் தலையை தடவிக்கொடுத்தாள். பிரதீப்பே, இவர்கள் நம் சோதரர்கள். அவன் முகம் இன்னமும் இறுகிக்கொண்டது. வாழ்நாள் முழுக்க அவன் எதிர்கொண்ட துரோகத்தின் மிச்சம், இம்மனிதர்களிடமும் இருக்கக்கூடும் என்ற கசப்பு.
‘‘மரித்தல் வரை ஒருவருக்கொருவர் துணையிருப்போம் நான் முந்திக்கொண்டால் இவனும் அவன் முந்தி கொண்டால் நானும்''
இதன்பிறகும் கொஞ்சம் நேரம் நாங்கள் அந்த வளாகத்தில் சொற்களின்றி அலைந்து கொண்டிருந்தோம்.
நான் உமா சேச்சியை அணைத்துக் கொண்டேன். என்னிலும் குள்ளமான அவர்கள் என் தோள்களில் சற்று நேரம் புதைத்தெழுந்தார். பார்த்த அந்த ஆண்கள், பார்க்கப் போகும் பெண்கள், பிரதீப்...
‘‘நான் பிரதீப்பை முதன்முதலில் துபாயில் பார்த்தேன் பவா, எல்லோராலும் கைவிடப்பட்ட ஒருவனாய் முழு கோமாவில் கிடந்தான். யாருக்கும் அவன் உயிர்த்தலின் மீது நம்பிக்கையில்லை, என்னைத் தவிர.
அவனை விமானத்தில் அழைத்து வந்தேன். ஒரு நள்ளிரவில் அவனை இவ்விடத்திற்கு அழைத்து வரும் வழியெங்கும் மூன்று நான்கு யானைகளை கண்டேன். பாதையின் ஒரு புறத்திலிருந்து எதற்காகவோ ஒரு யானை தும்பிக்கை தூக்கி எங்களை ஆசிர்வதித்தது..'' அதன்பிறகு உமா சேச்சியால் பேசமுடியவில்லை. எங்களாலும்தான்.
ஐந்தாவது கிலோமீட்டரில் ‘‘சத் தர்ஷனி'' என் நண்பர்கள் ஆனந்தும் மஞ்சுவும் அதைப் பராமரிக்கிறார்கள். அங்கிருந்து சில மைல்கள் தூரத்தில் தான் சிறுவாணி தன் உயிர்ப்பித்தலைத் துவங்குகிறது.
சத்தர்ஷனில் அது குளிரில் தவழ்கிறது. ஒரு பெண்ணின் சில்லிடுதலைப்போல அது தன்னில் அமிழ வேண்டி மனிதர்களை நோக்கிக் கரம் நீட்டுகிறது.
தன்போக்கில் வளர்ந்த மரம், செடி, புதர்களுக்கிடையே ஆனந்த் தன் குடில்களை நிர்மானித்திருக்கிறார். சிவப்புத்தரை போடப்பட்ட ஒரு பெரிய தியான மண்டபம் உங்களை அமைதியாக்கி ஒரு மூலையில் உட்கார வைக்கிறது.
உன் எதிரில் அமைதியாய் ஒடுவதைப்போல ஏமாற்றும் இச்சிறு நதியைவிட, எதிர்பக்க மரச் செறிவில் அசைவற்ற கற்பாறையைப் போல நின்றிருக்கும் ஒரு கொம்பனைவிட, இயற்கையில் சகல அகங்காரத்தோடும் நிமிர்ந்திருக்கும் இப்பெரும் மரத்தின் நிமித்தலைவிட, நீ ஒன்றும் பெரிய ஆளில்லை மானிடா.. அப்படி ஒரு பக்கமாய் உட்காரென அது நம் தோள் அழுத்தி உட்கார வைக்கிறது.
கோவையிருந்தும், ஈரோட்டிலிருந்தும், எர்ணாகுளத்திற்கு வந்திருந்த என் வாசகர்களுக்காக நான் கதை சொல்ல வேண்டும்.
நான் என்ன கதைசொல்லும் இயந்திரமா? சொற்களை உதடுகள் திருப்பி அனுப்புகின்றன. இடையே உமா பிரேமன் என்ற அந்த மனுஷியை உதறிவிட்டு அக்காட்டெருமையின் துள்ளலிருந்து நான் என் கதை சொல்லலைத் துவங்கி மிக அற்பமாகத் தோற்கிறேன்.
வண்ணநிலவன் என்ற என் மனதின் மிக அருகாமைத் தோழனின் எஸ்தர், நாகம், பலாப்பழம்
ம்ம்... எதுவும் எனக்குக் கைகூடவில்லை. பிரதீப்பும், உமாவும், கோமாவிலிருந்து மீளும் ஆயிரம் கண்களும் என்னை அலைக்கழிக்கின்றன. என் வாசகர்களை நான் ஏமாற்றித் திருப்பி அனுப்புகிறேன்.
தன் எழுபத்தியைந்து வயதில் இதற்காகவே ஈரோட்டிலிருந்து வந்திருந்த ஜீவாவை நான் ஏறெடுத்துப் பார்க்கிறேன்.
அவர் என் கையிலிருந்து எதையோ கடத்த முயல்கிறார். சொற்களால் அலைகழிக்கப்பட்ட உடல் மௌனத்தை உதறுகிறது.
அடுத்தநாள் அதிகாலை ஆற்றுக்குளியல். அதனூடே ஒரு அற்புதமான காலை உணவு. கயிறுக்கட்டி தொங்கவிடப்பட்ட வாழைக் குலையிலிருந்து நாங்களே பறித்து கொண்ட சுவையான சிறு பழங்கள்.
மூன்று கார்களில் ஆனைக்கட்டியிலிருந்து குட்டிப்புறம் நோக்கி நாங்கள் பயணித்தோம். சிறு குளிரா, வெயிலா என வரைப்படுத்த முடியாததொரு மலைப்பயணம் அது.
‘‘இங்கிருந்து மன்னார்காடு வரை இப்படியேதான் பவா சார், அப்புறம் தேசிய நெடுஞ்சாலை,'' பிரேம் பயணத்தின் முதல் வரியை இப்படி ஆரம்பிக்க,
‘‘தேசிய நெடுஞ்சாலை, தேசிய டோல்கேட், தேசிய கீதத்திற்கு மட்டும் எடுத்து நிற்பது எல்லாம் குமட்டுகிறது பிரேம்''
பிரேமுக்கு மெல்லச் சிரிக்க மட்டும்தான் தெரியும். ஆனைக்கட்டியிலிருந்து மன்னார்காடா? எனக்கு சட்டென, நாஞ்சில் நாடனின் ஒரு கதை நினைவுக்கு வருகிறது. இதே பாறைதான். குண்டும், குழியும் மேடும் பள்ளமும், கட்டஞ்சாயாவும், பழம் போளியும், பரோட்டாவும் பீஃப் கறியும், மத்திமீனும் சிவப்பரிசிச் சோறுமாய் நீளும்பாதை.
ஆனால் ஒரு எழுத்தாளனுக்கு இது எதுவும் நினைவிலில்லை. கேரள சிவப்புநிற பேருந்தும், பயணிகளின் சலசலப்பின் மீது எரிச்சலுற்று அவர்களை மலையாளக் கெட்டவார்த்தைகளில் திட்டித் தீர்க்கும் அதன் ஓட்டுநரும்தான் நாஞ்சில் நாடனின் உயிர்ப்புகள்.
எரிந்து விழும் அவன் வார்த்தைகள் பயணிகள் ஒவ்வொருவரையும் அச்சமுற வைக்கிறது. அமைதியைக் கோருகிறது. பெரும் கூச்சலோடு கிளம்பும் வண்டி சட்டென நடுரோட்டில் நிற்கிறது. இதுவரைப் பயணிகளைப் பார்த்து கத்திக் கொண்டிருந்த அந்த டிரைவர் தன் இருக்கையிலிருந்து வெளியே தலை நீட்டி யாரிடமோ,
‘‘பெட்டெந்நு போய்க்கோ மகளே... ‘‘பெட்டெந்நு போய்க்கோ மகளே...'' என்கிறார்.
இத்தனைக் கனிவானதொரு குரலும் இந்த ஓட்டுநருக்கு தெரியுமாவென பயணிகள் ஆளாளுக்குத் தலைத் திருப்பிப் பார்க்கிறார்கள்.
அளவுக்கு மீறி இரையுண்டு, சாலையை மெல்லக்கடக்கும் ஒரு மலைப்பாம்பு. இத்தனை கனிவான, பொறுப்பான, பாதுகாப்பான ஒரு தகப்பன் இருக்கையில் அதற்கென்ன? இன்னும் மெல்ல நகரலாம். அப்பாதையெங்கும் எனக்கு அந்த பேருந்து ஓட்டுநரின் குரலே கேட்டுக் கொண்டிருந்தது.
எத்தனை யோசித்தும் ஆண்களுடனான பயணங்கள் வெறுமை நிறைந்தவைதான். அடையும் தூரத்தை கணக்கிடவைப்பவை. பெண்கள்தான் பயணத்தை சுவாரஸ்யமாக்குகிறார்கள். சொற் களாலும், கண்களாலும் உயிர்ப்பூட்டுகிறார்கள்.
எங்கள் பயணங்கள் உயிர்ப்புள்ளவை.
பிப்ரவரி, 2018.