பூட்டிய அறைக்குள் நாயுடன் மாட்டிக் கொண்டேன்!

பூட்டிய அறைக்குள் நாயுடன் மாட்டிக் கொண்டேன்!
Published on

அந்த செல்ல லாப்ரடார் நாயை மருத்துவமனைக்கு கொண்டுவந்தபோது அதன் உரிமையாளரான பெண்மணி மிகுந்த கவலையில் இருந்தார். சற்று தூரம் நடப்பதும் உடனே விழுந்துவிடுவதுமாக இருந்தது. இன்றைக்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது.

தற்போது போலிருக்கும் முன்னேற்றமடைந்த கண்டுபிடிப்புக் கருவிகள் ஏதும் இல்லாத சூழல். அதன் சர்க்கரை அளவு ஒரு நிலையில் இல்லாததைக் கண்டறிந்து மேலும் சிலபரிசோதனைகள் மூலம் அதன் கணையத்தில் கட்டி ஏற்பட்டிருப்பதையும் அதனால் ரத்த சர்க்கரை அளவைப் பொருட்படுத்தாமல் இன்சுலின் தொடர்ந்து சுரந்துகொண்டிருப்பதையும் கண்டறிந்தேன். இது இன்சுலினோமா என்ற நிலை என நான் சொன்னபோது அதன் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார். அத்துடன் ஆச்சர்யமும் அடைந்தார்.  அவர் சென்னையில் முக்கியமான விஐபிகளில் ஒருவர். ஆகவே இது உண்மையான நோய்க்கண்டுபிடிப்புதானா என அறிய அவரும் வெளிநாட்டு நிபுணர்கள், உள்நாட்டு வல்லுநர்களிடமும் ஆலோசனை கேட்டார். இது உண்மைதான் என நிரூபணம் ஆனது. அறுவை சிகிச்சை மூலம் கட்டியை நீக்கி பரிசோதனை செய்தபோது இந்த டயக்னோஸிஸ் மேலும் உறுதிப்பட்டது.

தன் செல்லப்பிராணி நீண்டநாள் வாழப்போவதில்லை என்றபோதும் அதன் நோயைக் கண்டு பிடித்ததற்காகவே ஒரு கணிசமான தொகையை கட்டணமாகக் கொடுத்தார் அவர்.

இந்த நிகழ்வு அவர் சார்ந்த வட்டாரங்களில் அவர் மூலம் பரவ, மேலும் பல விஐபிகள் வீட்டு செல்லப்பிராணிகளுக்கும் நான் மருத்துவம் பார்க்க வேண்டியதாயிற்று.  இம்யூன் மீடியேட்டட்  ஹீமோலைட்டிக் அனீமியா, இடியோபதிக் எபிலெப்சி போன்ற வியாதிகளை எல்லாம் கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடிந்தது. முதல்முதலில் இந்த பிராந்தியத்தில் நாய் ஒன்றுக்கு சிடி ஸ்கேன் செய்த மருத்துவராகவும் நான் ஆனேன்.

நோய் நாடி நோய் முதல் நாடி என்று வள்ளுவர் சொல்வதுபோல் முதலில் என்ன நோய் எனக் கண்டறிவதுதான் ஆரம்ப நிலை. இதுவே நமக்கு செல்லப்பிராணிகளின் உரிமையாளர்களிடம் சரியான மரியாதையைப் பெற்றுத்தரும்.

நாயோ பூனையோ நமது கிளினிக்கு வரும்போது அதை கையாளும் விதம், அதைக் கட்டுப்படுத்தும் முறைகள் மிக முக்கியம். சில நாய்கள் தெருவில் போகிறவர்களைக் கடிக்கும். சில நாய்கள் உரிமையாளரை மட்டும் தான் கடிக்கும்.  ‘சார் வீட்டுக்குப் பாதுகாப்பாக இருப்பதற்காகவும் திருடர்களிடமிருந்து பாதுகாப்பதற்காகவும் நாய் வளர்த்தால் அது என்னை மட்டும்தான் கடிக்குது' என்று புலம்பும் நாய் உரிமையாளர்கள் உண்டு. குடும்பத்தில் அம்மா, அப்பாவை விட்டுவிட்டு பிள்ளைகளை மட்டும் கடிக்கும் நாய்களும் உண்டு. ஏனெனில் இவை வீட்டுப் பிள்ளைகளை தங்களுக்கு சமமாகக் கருதிக்கொள்கின்றன. அவர்களுடன் எல்லாவற்றுக்கும் போட்டிபோட்டு சண்டையிடும். அம்மா மடியில் மகன் படுத்தால் அவனை தள்ளிவிட்டு தான் போய் படுத்துக் கொள்ளும் நாய்களும் உண்டு.

வேறு சில நாய்கள் உள்ளன. அவை பெரும்பாலும் ஊசிபோடும் மருத்துவரை மட்டும்தான் கடித்துவைக்கும். என் மருத்துவமனைக்கு வரும் நாய்கள் பல தொடை நடுங்கிக்கொண்டே வரும். மேசையில் ஏற்றி வைத்தால் பதறி, உமிழ்நீர் அதிகம் சுரந்து, தப்பி ஓடவே பார்க்கும். பல நாய்கள் டாக்டரிடம் போகலாம் என்றால் கடுமையாக மறுக்கும். ஊசி என்றால் அவ்வளவு பயம். சில உரிமையாளர்கள் நாய்க்கு ஊசி போடும்போது ஏதோ தங்களுக்குப் போடுவதுபோலவே நடுங்குவார்கள். அவற்றின் உடலில் சிறு ரத்தப்போக்கு சின்ன அறுவை சிகிச்சைகளில் ஏற்பட்டாலே, தொப்பென்று மயங்கிவிழுபவர்களை இப்போது அதிகமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்!

நாய்களிடமோ பூனையிடமோ கடிவாங்காத மருத்துவர் இருக்கமுடியாது. நானெல்லாம் எக்கச் சக்கமாகக் கடிவாங்கி இருக்கிறேன். சிகிச்சை பண்ண ஆரம்பித்த ஆரம்பகாலகட்டங்களில் கடிவாங்குவது வேறு. அது தெரியாமல் வாங்குவது. ஆனால் இவ்வளவு ஆண்டுகள் கழித்தும் கடி வாங்குகிறோம் என்றால் அதற்குக் காரணங்கள் வேறு. 

சின்னக்குட்டியாக இருக்கும்போதிருந்தே நாம் பார்த்துவரும் நாயிடம்தான் நாம் கடிவாங்குவோம். தெரியாத நாயிடம் கவனமாக இருப்போம் என்பதால் கடிவாங்கும் வாய்ப்புகள் குறைவு. ஒரு முறை நன்கு பழகிய நாய் ஒன்றிடம் மூக்கிலேயே கடி வாங்கி உள்ளேன். ரத்தம் கொட்டோ கொட்டென்று கொட்டி, நாயின் உரிமையாளர் அஞ்சி நடுங்கிவிட்டார். ப்ளாஸ்டிக் சர்ஜெரி பண்ணும் அளவுக்குப் போகவில்லை என்றாலும் கொஞ்சநாள் மூக்கில் பிளாஸ்திரி போட்டுக்கொண்டு போகவேண்டியதாகிவிட்டது. கேட்கிறவர்களுக்கு எதாவது பதில் சொல்லிவிட்டுப் போகவேண்டியதுதான்!

அறுவை சிகிச்சை, அல்லது வேறு ஏதாவது ஒரு விஷயத்துக்காக மயக்க மருந்து கொடுத்துவிட்டு வேலையைப் பார்த்துக்கொண்டு இருப்போம் அந்த சமயத்தில் சட்டென எழுந்துவந்து கடித்து தள்ளிவிடும் நாய்களும் உண்டு.

ஒரு சமயம் மிக கோபக்கார, கட்டுப்படுத்தமுடியாத நாய் ஒன்று வந்தது. எப்போது அது கிளினிக் வந்தாலும் முதலில் அதன் உரிமையாளர் இரண்டு பேரை பைலட் போல அனுப்பி வைப்பார். அவர்கள் வந்து எல்லோரையும் பயமுறுத்துவார்கள். வரப்போகும் நாய், யாராக இருந்தாலும் கடித்துவிடும். குழந்தைகள் இருந்தால் பத்திரமாக எட்டிப்போகச் சொல்லுவார்கள். வேறு நாய்கள் இருந்தாலும் அவற்றை தள்ளி கூட்டிப்போகச் சொல்லுவார்கள். அப்புறம் உரிமையாளரின் மகன் வருவார். ‘சார், யாரும் இல்லையே? நாயைக் கூட்டிவரலாமா?' என்பார். யாரும் இல்லை என உறுதியான பின் அது வரும். அதை மேஜை மீது ஏற்ற முடியாது. அறைக்குள் தள்ளி ஆளுக்கு ஒரு பக்கமாக கயிற்றை இழுத்துப் பிடிப்பார்கள். நாம் உள்ளே போய் ஊசி போட்டுவிட்டு பத்திரமாக, அதாவது முழுசாக வெளியே வரவேண்டும்.

அப்படி ஒருமுறை அந்த நாய் வந்தது. அதற்கு  ஒரு சிகிச்சைக்காக மயக்க ஊசி போட்டேன். ஆட்கள் கயிறை இழுத்துப் பிடிக்க, நான் ஊசியைப் செலுத்தினேன். இவர்கள் இழுத்த இழுப்பில் கயிறு பிய்த்துக் கொண்டு வந்துவிட்டது! சரி விடுங்க.. மயக்க ஊசிதானே.. அது அமைதியாகிவிடும் என்று நினைத்துக்கொண்டு கையைக் கழுவிக்கொண்டிருந்தேன். ஏதோ உந்துதலில் திருப்பிப்பார்த்தால், வாயைத் திறந்துகொண்டு என்னை நோக்கிப் பாய்ந்து வந்துகொண்டிருக்கிறது! எதோ தைரியத்தில் அதை ஒருபுறம் தள்ளி விட்டேன். அருகில் இருந்த வாளி இன்னொருபுறம் உருள, நான் ஒருபுறம் உருள, ஏக களேபரம்! தள்ளிப்போய் விழுந்த அந்த நாய், எழுவதற்குள் அதற்கு மயக்கம் வந்துவிட்டது! அதற்குப் பின்னர்தான் எல்லோருக்கும் போன உயிர் திரும்பி வந்தது!

பூனை ஒன்றுக்கும் அறுவை சிகிச்சைக்காக மயக்க மருந்து செலுத்தினேன். அதன் உரிமையாளர்,   ‘குட்டியாக இருக்கும்போதிருந்து இதை வளர்க்கிறேன். நீங்கள் தைரியமாக ஊசி போடுங்கள், நான் பிடித்துக்கொள்கிறேன்' என்றார். கதவை தாழ் போடுங்கள் என்றேன் முன்னெச்சரிக்கையாக. எப்போதும் பூனைகளை சிகிச்சை செய்யும்போது கதவை மூடுவது வழக்கம். ஏனெனில் அவை எகிறிக்குதித்து ஓடிவிடும். அவற்றை பின்னர் உரிமையாளர்களாலும் பிடிப்பது மிக சிரமம். இந்த பூனையின் உரிமையாளர் கதவை எல்லாம்  மூடவேண்டாம். என்னை மீறி எதுவும் செய்யாது என துணிச்சல் ஊட்டினார். அதனால் கதவு திறந்திருப்பதைப் பொருட்படுத்தாமல் மயக்க ஊசியை செலுத்தினேன். எங்கிருந்துதான் அதற்கு பலம் வந்ததோ? சட்டென்று அவர் பிடியில் இருந்து தப்பி ஓடிவிட்டது!. அதன் பின்னால் உரிமையாளர் ஓட, உதவியாளர் ஓட, பூனை மாயமாகிவிட்டது! ஒருமணி நேரம் கழித்தபின் பூனையுடன் வந்தனர். தப்பி ஓடிய பூனை ஓரிடத்தில் மயக்க மருந்தின் உபயத்தால் நன்றாகத் தூங்கிவிட்டது! அது எழுந்து நடமாடிய பின்னரே இவர்களுக்குத் தெரிய வந்து, பிடித்திருக்கிறார்கள்!

நாய்களுக்கு கழுத்தில் அணிவித்திருக்கும் பெல்ட் முக்கியம். அது எளிதில் கழலாத வண்ணம் போடப்பட்டிருக்க வேண்டும். நைந்துபோயிருக்ககூடாது. ஒரு வீட்டுக்குப் போயிருந்தேன். வெறிநாய் தடுப்பூசி போட அழைத்திருந்தார்கள். நாயைப் பார்த்தால் சிங்கம்போல இருந்தது. உரிமையாளர்கள் இல்லை. வேலைக்காரர்கள் தான் இருந்தனர்.

‘ சார் நீங்க தைரியமா போடுங்க.. நாங்க பிடிச்சிகிறோம்' என்றனர்.

 ‘என்னய்யா ஒழுங்கா பிடிப்பீங்களா?‘

“சார், சின்ன வயசுலேர்ந்து பாக்கிறோம்.. ஒண்ணும் ஆகாது'

வாசலுக்கு வெளியே வைத்து ஊசியை செலுத்தினேன். அந்த சமயம் பார்த்து கழுத்துப் பட்டை அறுந்துவிட்டது. வேலைக்காரர்கள் எல்லாம் தெறித்து ஆளுக்கொரு பக்கம் ஓடிவிட, நான் வீட்டுக்குள் ஓடிவிட்டேன். அது தானாகச் சாத்தும் கதவு. சாத்திக்கொண்டது. அப்பாடா என்று நினைத்தால் உள்ளே நாயும் நுழைந்து இருப்பது தெரிந்தது. பூட்டிய வீட்டுக்குள் நானும்,  கடிக்கத் துடிக்கும் நாயும் மட்டும். அது என்னை நோக்கிப் பாய, நானும் சில பல வித்தைகள் செய்து தப்பி, இன்னொரு அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டு தப்பினேன்! அந்த அறைக்கு வெளியே இருந்த ஜன்னல் வழியாக வேலைக்காரர்கள் எட்டிப்பார்த்தார்கள்! மருத்துவர் சிங்கிள் பீஸா இருக்கிறாரா? என்ற கேள்வி அவர்கள் கண்களில் தெரிவதைப் பார்த்தேன்!

ஒரு லாசா ஆப்சோ வகை நாயைக் கூட்டிக்கொண்டு மருத்துவர் ஒருவர் என்னிடம் வந்தார்.  “திடீரென சில நாட்களாக வயிறு உப்பிப்போய் இருக்கிறது‘‘ என்றார். சாப்பாடு எல்லாம் நன்றாக சாப்பிட்டுக் கொண்டு தான் இருக்கிறது. வேறு எந்த பிரச்னையும் இல்லை. வயிறைத் தடவி, தட்டிப்பார்த்தால், உள்ளே திரவம் ஏதோ நிரம்பி இருப்பதுபோல் தெரிந்தது. இதய நோயா, கல்லீரல் நோயாகக் கூட இருக்கலாமா என யோசித்தேன். சிறுநீர்க் குழாயில் கல் அடைத்து, சிறுநீர்ப்பை நிரம்பி உப்பினாலும் இப்படி இருக்கும். ஆனால்  நாய் சிறுநீர் கழிப்பது எப்போதும் போல் தான் இருந்தது மாற்றம் இல்லை! இது பெண் நாய் வேறு. எனவே இதற்கு அந்த வாய்ப்பும் குறைவே. வேறு எந்த அறிகுறியும் இல்லாமல் போன நிலையில், சிறிய ஊசியை எடுத்து வயிற்றில் போட்டுப் பார்த்தேன்.  வயிற்றில் இருந்து சீழ் வந்தது. அவர் வந்த காலகட்டத்தில் நமது கிளினிக்கில் அல்ட்ரா சவுண்ட் போன்ற கருவிகள் இல்லை. பக்கத்து ஆய்வகத்துக்கு எக்ஸ் ரே எடுக்க அனுப்பினேன். அதைப் பார்த்தால் கருப்பை தொடர்பான நோயினால் சீழ் நிரம்பி இருப்பது தெரிந்தது. இவ்வளவு மோசமான நிலையில் எப்படி அந்த நாய் தாக்குப் பிடித்து  சகஜமாக இருந்தது என்றே தெரியவில்லை! பொதுவாக இந்த நிலையில் நாய்கள் சாப்பாடு சாப்பிடாமல் மிக துன்பமான நிலையில் இருக்கும்!

உடனே அவசர அறுவை சிகிச்சை செய்யவேண்டிய கட்டாயம். ஆகவே செய்து முடித்தோம்.

என்ன ஆகுமோ என்ற கலக்கம் எங்களுக்கு இருந்தது. ஆனால் சில நாட்களிலேயே முழுக்குணம் பெற்றதுடன் மேலும் எட்டு ஆண்டுகள்  கூடுதலாக உயிர்வாழ்ந்து ஆச்சரியப்படுத்தியது!

(மரு. பா.நாகராஜன் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் பனிபுரிந்து ஓய்வுபெற்ற பேராசிரியர்)

மார்ச் 2021

logo
Andhimazhai
www.andhimazhai.com