தமிழகத்தில் தலைவர்களின் குருபூஜைகளையொட்டி நடைபெறும் நிகழ்வுகளைப் பார்க்கும்-போது தமிழகம் மீண்டும் கற்காலத்தை நோக்கிப் பயணப்படுகிறதோ என்ற ஐயப்பாடு எழுகிறது. தென் மாவட்டங்களில் அடிக்கடி அமைதியற்ற சூழல் ஏற்படுவதாலும் இயல்பு வாழ்க்கைப் பாதிப்ப-தாலும் தென் மாவட்டங்களில் தொழிற்சாலைகளையோ தொழிற்கட்டமைப்புகளையோ உருவாக்க எவரும் முன்வருவதில்லை. ஏற்கெனவே திட்டமிடப்பட்ட தொழில்நுட்ப பூங்காங்களும் மென் பொருள் நிறுவனங்களும் மதுரையில் மட்டுமல்ல மதுரைக்கு அப்பாலும் வருவதற்கான சாத்தியக்-கூறுகள் தெரியவில்லை. தொழில் தொடங்க முன்வந்த நிறுவனங்களும் ஒரு கட்டத்தில் தேக்கநிலையை எட்டி மதுரையை விட்டு வெளியேறிய நிலையைத் தான் பார்க்கிறோம். தென் மாவட்டங்களில், வர்த்தகம் என்றால் புரோட்டா கடை தொடங்குவதும் தொழில் என்றால் கந்து-வட்டியும் என்றநிலை தான் இன்னும் நிலவுகிறது.
இத் தருணத்தில் தமிழக அரசுக்கு சில கோரிக்கைகளை நாம் முன் வைக்கலாம். குரு பூஜைகள் எந்த சாதியினர் நடத்தினாலும அதை தயவு தாட்சணியமின்றி தடை செய்யவேண்டும். அவ்வாறு தடை செய்வதால் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படுவதாக சிலர் கூக்குரலிடலாம். பெரும்பான்மை தமிழக மக்களின் நலனை முன்னிட்டும் பொது அமைதி-யைக் காக்கவும் சாதிய ரீதியாக மக்கள் பிளவுபடுவதை தவிர்க்கவும் இதுபோன்ற கடும் நடவடிக்கை அரசு மேற்கொள்ள வேண்டும்.
ஒருவேளை குருபூஜைக்கு அனுமதி கொடுத்தால் அங்கு வரும் வாகனங்களுக்கு பெர்மிட் முறையை அமல்படுத்திட வேண்டும். அதாவது, குருபூஜைகளில் ஆயிரக்கணக்கான லாரிகள், பேருந்துகள் வேன்-களில் ஆட்கள் வருகிறார்கள். வாகனங்களுக்கு பெர்மிட் முறையை ஏற்படுத்தி கணிசமான தொகையை பெர்மிட் கட்டணமாக வசூலிக்-கவேண்டும்.ஒவ்வொரு வாகனமும் குறைந்தபட்சம் ரூ இருபத்தைந்தாயிரம், ஐம்பதாயிரம் என முன்வைப்புத் தொகை செலுத்தினால் தான் பெர்மிட் வழங்கமுடியும் எனக் கட்டுப்பாடு விதிக்-கவேண்டும். விதிகளை மீறும் வாகனங்களின் முன்வைப்புத் தொகைகளை அரசு கையகப்படுத்திக் கொள்ளவேண்டும்.
குருபூஜை நடத்த அனுமதி கோரும் அமைப்புகள், அரசிடம் குறைந்தது ஐந்து கோடி ரூபாய் முன்பணம் செலுத்தி அனுமதி பெறவேணடும். வன்முறை ஏற்பட்டு பொதுஅமைதி சீர்குலைந்தால் அந்தப் பணம் அரசு கருவூலத்துக்கு சென்றுவிடவேண்டும்.
பல்வேறு சாதிய கலவரங்களை ஆராய்ந்த விசாரணைக் கமிஷன்கள் தென் தமிழகத்தை தொழில் மயமாக்கவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளன. அரசு அதில் உடனடி கவனம் செலுத்திட வேண்டும்.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை பெருக்கவேண்டும்.
சாதீய முத்திரை குத்தப்பட்ட தலைவர்களின் விழாக்களை அரசு நடத்திடக்கூடாது.
அரசுப் பணியிலிருக்கும் ஊழியர்கள் சாதிய விழாக்களில் பங்கேற்பதையோ அதை முன்னின்று நடத்துவதையோ அரசு தடை செய்யவேண்டும்.
டிசம்பர், 2012.