வாய்ப்புகள் நம் முன்னே வந்துகொண்டேதான் இருக்கின்றன. அந்த வாய்ப்பு ஒரு யானை போடும் சாணமாகவும் இருக்கலாம். ஆம். ஒரு முறை ஹாத்தி சாப் நிறுவனத்தின் வெற்றிக்கதையை படித்தால் உங்களுக்குப் புரியும்.
ஜெய்ப்பூரிலிருந்து சென்று டெல்லியில் கைவினைப் பொருட்கள், தாள்கள் வியாபாரத்தை நடத்தி வந்த மஹிமாவும் அவருடைய நண்பரான விஜயேந்திர செகா-வத்தும் ஜெய்ப்பூரிலுள்ள ஆம்பர் கோட்டையை சுற்றிப் பார்க்க ஓர் ஓய்வுநாளில் சென்றனர். இருவரும் கைவினைத்தாள் வியாபாரத்திலிருப்பவர்கள். அதனைத் தயாரிக்கத் தேவைப்படும் நார் மூலப்பொருளை வித்தியாசமான பொருட்களிலிருந்து பெற நிறைய
சோதனை முயற்சிகளை செய்துகொண்டே இருப்பவர்கள்.கீழேயிருந்து மலை மேல் உள்ள ஆம்பர் கோட்டைக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்ல யானைச் சவாரி உண்டு. செகா-வத்-திற்கு யானை என்றாலே பயம். அதனால் நடந்தே மலை ஏறுவோம் என்ற முடிவில் இருவரும் நடக்க தொடங்கியிருக்கிறார்கள். நடக்க தொடங்கிய பின்புதான் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது, வழியில் சிதறிக் கிடந்த யானை சாணத்தை மிதிக்காமல் மலை ஏறுவது எவ்வளவு கடினமென்று.சிறிது தூரம் நடப்பதற்குள் காய்ந்த யானை சாணத்தை உற்று பார்த்துக்கொண்டே வந்தவர்களுக்கு சட்டென்று மூளையில் பல்ப் எரிந்திருக்கிறது. கைவினை தாள் தயாரிப்பதற்கு அதிக நார்ப்பொருள் கொண்ட யானை சாணத்தை ஏன் கச்சாப்பொருளாக பயன்படுத்தக் கூடாது? அன்று ஜெய்ப்பூர் ஆம்பர் கோட்டையில் உதயமான அந்த யோசனைதான் அவர்களை இன்று ‘ஹாத்தி சாப்’(யானையின் அச்சுகள்) என்ற வெற்றிகரமான நிறுவனத்தை நடத்த வைத்திருக்கிறது.அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.இந்தியாவெங்கும் ஏறக்குறைய 40 கடைகள், அனைத்து முக்கிய நகரங்களிலும் ஹாத்தி சாப் இருக்கிறது.விஜயேந்திர செகாவத் தயாரிப்பு வேலைகளை கவனித்து கொள்கிறார். வியாபாரத்தை கவனிப்பது மஹிமா.
எப்பொழுதும் எதாவது ஒரு ஊரில் பயணம் செய்து கொண்டே இருக்கும் ஹாத்தி சாப்பின் நிறுவனர் மஹிமாவை விரட்டிப் பிடித்தோம். அந்திமழைக்காக அவருடன் உரையாடியதில் புதிய விஷயங்களை முயற்சிசெய்து கொண்டேயிருக்கும் ஆர்வலர் தென்படுகிறார்.
“ஆம்பர் கோட்டையில் ஐடியா தோன்றியது உண்மைதான்.ஆனால் இதைச் சொன்னால் யாருமே ஏற்கவில்லை, எங்கள் குடும்ப உறுப்பினர்கள் உட்பட. யானை சாப்பிடும் உணவில் 40 சதவீதத்தை மட்டுமே செரிக்ககூடியது. தாவர உண்ணி என்பதால் அதில் மிக அதிகமான நார்ப்-பொருள் அதன் சாணத்தில் இருக்கிறது. இந்த விஷயம் எங்களை மிகவும் ஈர்த்துவிட்டது. 2004 ஆம் வருடம் உடனடியாக வேலைகளை ஆரம்பித்துவிட்டோம். முதலில் சுத்தப்படுத்தப்பட்ட யானைச் சாணத்தை வழக்க-மான கைவினைத் தாள் தயாரிப்பு முறையில் கலந்து முயற்சித்-ததில் தொடங்கி, யானைச் சாணத்தைக் கொண்டு தாள்கள் தயாரிக்க முடியும் என்ற நிலையை அடைய சரியாக ஒரு வருடம் பிடித்தது.”
முதல் எதிர்ப்பு இன்னொரு நிறுவனரான செகாவத்தின் குடும்பத்தினரிட மிருந்துதான். ‘இப்படிப்பட்ட தொழிலில் இறங்கினால் உனக்கு கல்யாணமே நடக்காது. யாரும் பெண் கொடுக்கமாட்டார்கள்’ என்று முட்டுக்கட்டை போட்டிருக்கிறார்கள். இவர்களை சமாளிக்க செகாவத் பயன்படுத்திய ஆயுதம் ஆன்மீகம். இந்து கடவுளான வினாயகர் யானை முகம் கொண்டவர். யானை நம்முடைய வழிபாட்டு சின்னம்.அதுவுமில்லாமல் பசுவின் சாணத்தை புனிதமாக கருதும் நம்முடைய மதத்தில் யானைச் சாணத்தை புனிதமாக கருதும் பிரிவினரும் உண்டு. இவ்வாறு அடுக்கடுக்காக மத விஷயங்களைக் கொண்டே அவர்களின் மனத்தை கரைத்துள்ளார். இன்று செகாவத், அவருடைய மனைவி மற்றும் செகாவத்தின் சகோதரர் என்று குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சிறு சஞ்சலமுமின்றி தயாரிப்பு வேலையில் ஈடுபட்டுள்ளார்கள். குடும்ப உறுப்பினர்கள் தவிர மூன்றே வேலை ஆட்கள். இன்றும் சாணத்தை சேகரிக்க செகாவத் நேரடியாக செல்கிறார்.ஒரே வித்தியாசம் முன்பெல்லாம் சேகரித்த சாணத்தை சைக்கிளில் கொண்டுவந்தவர் இப்போது டிராக்டரில் கொண்டுவருகிறார்.
250 கிலோ சாப்பிடும் யானை சராசரியாக 100 கிலோ சாணமிடுகிறது.100 கிலோ சாணம் காயவைத்தபிறகு 15 கிலோவாகிறது. இந்த 15 கிலோவிலிருந்து கடைசியாக 22/30 இஞ்ச் தாள்கள் 800 தயாரிக்கலாம். சாணத்தின் நிறம் யானை சாப்பிடும் உணவை பொறுத்து வருடத்தின் வெவ்வேறு மாதங்களில் மாறுபடுகிறது. ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரை அடர்த்தியான பச்சை நிறத்திலும் மற்ற மாதங்களில் நிறம் குறைவாகவும் கிடைக்கிறது. சாணத்தின் நிறத்தை மாற்ற வெவ்வேறு வகையான உணவுப்பொருட்களை கொடுத்து முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் பெரிய அளவில் மாற்றம் கிடைக்கவில்லை.அதனால் தற்போது காய்கறிகளிலான இயற்கை வண்ணங்களை சேர்க்-கிறார்-கள். சாணம் முழுவதுமாக தண்ணீரால் கழுவப்பட்ட பின்னர் எஞ்சும் நார்ப்-பொருள்தான் மூலப்பொருள். இதனை கூழாக்குவதற்கு 4 மணி நேரம் சோடா-வினால் கொதிக்கவைக்கப்பட்டு பின்னர் கிருமிகளை நீக்க ஹைட்ரஜன் பெராக்சைடினால் கழுவப்படுகிறது. பின்னர் வடித்து காயவைத்து தேவையான நார்ப்பொருளைப் பிரிக்- கிறார்கள். பிறகு இது கூழாகப்பட்டு திரும்பவும் சுத்திகரிக்கப்படுகிறது. பின் மரம் அல்லது சிமெண்டா-லான பலகையில் தாள்களுக்கு தேவையான அளவு ஏடுகளாக எடுத்து தயாரிக்கிறார்கள்.
“2007 வரை இதன் விற்பனை பெரிய போராட்டமாகத்தான் இருந்தது. எங்களுடைய முதல் ஆர்டர் ஜெர்மனியிலிருந்து வந்தது. பின்னர் இங்கிலாந்து. ஓரளவிற்கு ஏற்றுமதி செய்ய தொடங்கிய பிறகு நம்மூரிலும் வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்தது. முதலில் எல்லோரும் முகர்ந்து பார்க்க தொடங்கினார்கள். பின்னர் படிப்படியாக டெல்லி,மும்பை,சென்னை பெங்களூருவில் நல்ல வரவேற்பு கிடைத்தது’ என்றவர் ‘ஹாத்தி சாப்’ என்ற பெயர் நிறுவனத்திற்கு வைத்ததற்கு முக்கியமான காரணமாக பெயரிலுள்ள இந்தியத் தன்மையைக் குறிப்பிடு கிறார். தாள்கள் மட்டுமில்லாமல் நோட்டுகள், அழைப்பிதழ் அட்டைகள், பைகள், பொம்மைகள் என்று இதிலிருந்து தயாரிக்க முடியக்கூடிய அத்தனை பொருட்களையும் செய்திருக்கிறார்கள்.
தற்போது ஏறக்குறைய ஆண்டுக்கு 40 லட்சரூபாய் லாபம் தரும் இந்த நிறுவனத்தின் அடுத்த கட்டத்தைப் பற்றி பேச்சு வந்தது.“வழக்கமாக மழை காலங்களில் யானை ச் சாணத்தை சேகரிக்க முடியாது.அதனால் எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு சரியான நேரத்தில் எங்களால் சிலசமயங்களில் டெலிவரி கொடுக்கமுடிந்ததில்லை.அதனால் வேறு மாநிலங்களிலிருந்தும் சாணத்தை சேகரிக்கலாம் என்ற திட்டம் ஒன்றை வைத்திருந்தோம். ஆனால் அதில் நிறைய நடைமுறை சிக்கல்கள் வந்தது. இப்போது ராஜஸ்தானிலேயே வேறு பகுதிகளிலிருந்தும் சாணம் சேகரிக்க திட்டமிட்டு வருகிறோம். உடனடியாக வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்தும் எண்ணம் எதுவுமில்லை,எங்களுடைய உற்பத்தியை பொறுத்து மெதுவான படிகளாக செல்வதே எங்களுடைய திட்டம்” என்கிறார்.
முற்றிலும் இயற்கையான முறையில் சூழலுக்கு கேடு விளைவிக்காத தொழில் இது. யானையின் அச்சுகள் வருங்காலத்தில் இன்னும் பெரிய வரவேற்பை பெறும் என்பது அவரது நம்பிக்கை. நம்முடையதும்தான்.
டிசம்பர், 2012.