பாட்டுக்கு நான் பாடுபட்டேன்!

முள்ளரும்பு மரங்கள் - 4
பாட்டுக்கு நான் பாடுபட்டேன்!
Published on

(சென்ற இதழ் தொடர்ச்சி)

நீ ங்க பாட்டுக் கச்சேரிக் குளுவா?''

‘‘ஆமாங் சேட்டா''

''அப்டீன்னா அந்தப் பக்கமே போகாதே. அங்கே பயங்கரமான அடிதடி நடந்திட்டிருக்கு.

நீங்க நேரகாலத்துக்கு வராததால இங்கே பெரும் கலவரமாகிப்போச்சு. அவங்க ஒங்களக் கொல்லாம விடமாட்டாங்க.. ''

உடம்பில் ஊசி துளைப்பதுபோன்ற கடும் இரவுக் குளிரில் இசைக்கருவிகளும் பெட்டிகளுமாக பாடகி ரோசா உட்பட அனைத்து கலைஞர்களையும் கோவிலின் முன்னால் வெறும் தரையில் குத்தவைத்து உட்கார வைத்தனர். பொருட்களை இறக்கிய பின்னர் எங்களது வாகனத்தை பலவந்தமாக அனுப்பி விட்டிருந்தனர். இருபதுக்கும் மேல் நபர்கள் எங்களைச் சூழ்ந்து நின்று கடுமையான கெட்டவார்த்தைகளில் திட்டிக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டநஷ்டங்களுக்கு நஷ்டீட்டுத் தொகையைக் கொடுக்காமல் எங்களை அங்கிருந்து நகரவிடமாட்டோம் என்று தீர்மானமாகச் சொன்னார்கள்.

ரோசாவைப் பார்த்து ‘‘இவள மாதிரி ஃபிகருக இன்னும் ரெண்டு மூண்ணு இருந்திருந்தா பாதிக் காசு வரவு வெச்சிருக்கலாம். இந்த ஒண்ண மட்டும் வெச்சுக்கிட்டு என்னத்தான் செய்றது'' என்றான் ஒருவன். ‘‘அப்படியெல்லாம் பேசாதே அண்ணாச்சீ'' என்று அவர்களிடம் மன்றாடிய ராஜுவை ‘‘தே** மவனே.. எல்லாத்துக்கும் காரணம் நீ ஒருத்தன் தான்டா'' என்று சொல்லி இரண்டுபேர் சரமாரியாக அடித்தனர். அதைத்தடுக்க முயன்ற எனக்கும் முகம் அடைத்து அடிவிழுந்தது. எனது தலை மரத்து கண்ணில் மின்மினிகள் பறந்தன. இந்த ஜென்மத்தில் இனிமேல் எனக்குப் பாட்டும் வேண்டாம் கூத்தும் வேண்டாம். பாட்டுக் கச்சேரி எனும் ஏற்பாட்டுக்குச் சாகும்வரை போக மாட்டேன் என்று அங்கேயே சபதம் எடுத்தேன்.

அடுத்த திருவிழாவிற்கு முற்றிலும் இலவசமாக ஒரு கச்சேரியை நடத்தித்தருகிறோம் என்று எழுதிவைத்து விடியற்காலையில் அங்கிருந்து ஒரு வழியாகத் தப்பித்தோம். இசைக்கருவிகளையும் பெட்டிகளையும் தலையில் சுமந்துகொண்டு, பெங்கால் அகதிகளைப்போல் பசியில் வாடி வறண்டு, தூக்கக் கலக்கத்தில் கண்கள் சுளுசுளுத்து தேயிலைத் தோட்டங்களின் மண்வழிகளினூடாக கைகால் திணறி நடந்தோம். வண்டிப் பெரியார் டௌனை அடையும்போது உச்சிவெய்யில் உறைத்திருந்தது.

ஒருநாள் கட்டப்பனையில் உள்ள புத்தகக் கடையின் முன் நின்றுகொண்டு புதிய சினிமா இதழ்களை புரட்டிப் பார்த்துகொண்டிருந்தேன். அப்போது ஜோஸுகுட்டி மாஸ்டர் பதற்றத்துடன் அங்கே வந்தார்.

‘‘எடா.. நீ இங்கே நிக்கிறியா? உன்னைத் தேடாத எடமே இல்ல. வா.. வேகம் வந்து வண்டியில ஏறு''.

‘‘என்னாச்சு மாஷே..? என்ன விசயம்?''

‘‘நீ எங்கூட வாடா... சொல்றேன்''

இசைக்குழு, கிட்டார் வாசிப்பு, இசைப் பள்ளி, ஒலி ஒளி அமைப்பு, பெண்களின் மார்பக உள்ளாடைகள் தயாரிக்கும் நிறுவனம் எனப் பல தொழில்களை நடத்திவந்த ஆள் ஜோஸுகுட்டி மாஸ்டர். அவரது இசைக் குழுவில் பாட என்னையும் முன்பு சிலமுறை அழைத்திருக்கிறார்.

‘‘இன்னிக்கு ஒரு கச்சேரி இருக்கு. கொச்சி ஸ்ரீராக் இசைக்குழு. டிக்கெட் புரோகிராம். வா.. நாம போலாம்''. கொச்சி ஸ்ரீராக்! அப்படியொரு இசைக் குழு இருப்பதாகக் கேள்விப்பட்டதே இல்லையே!

எதுவும் ஆகட்டும், கொச்சியிலிருந்து வரும் இசைக் குழு நடத்தும் கச்சேரியைக் கேட்க என்னைத் தேடிப்பிடித்து காரில் ஏற்றிக் கொண்டுபோகிறார் மனிதர்! இவரைப்போல் நல்ல மனிதர்கள் எங்கே இருக்கிறார்கள்? ஆனால் அவர் என்னைக் கொண்டு

சென்று நிறுத்தியது ஒரு பெரிய மூடிவண்டியின் முன்னே. அதன்மேல் ‘கொச்சி ஸ்ரீராக் இசைக்குழு' என்று பெரிதாக எழுதிய துணிப்பதாகை! நான் சந்தேகத்துடன் அவரைப் பார்த்தேன்.

‘‘என்னடா அப்படிப் பாக்கிறே? கொச்சி ஸ்ரீராக் நாம தான்டா. நான் பொறந்து வளந்தது கொச்சியில் தானே. வண்டியில இருக்கிறவங்க அத்தனபேரும் கொச்சிக் காரங்கதா.. தமிழு பாட மட்டும் ஆளு கெடைக்கல. நீதா இன்னிக்கு தமிழு பாடறே. வண்டியில ஏறு. போலாம்''.

இது என்ன கூத்து! கோட்டயம் ஊரின் பல்லவி இசைக்குழு என்று ஓர் இல்லா இசைக்குழுவின் பெயரில் கச்சேரிக்குப்போனதற்கு நடுமண்டையில் கிடைத்த அடியின் ரீங்காரம் இன்னும் காதைவிட்டு நீங்கவில்லை. வாழ்நாளிலே மறக்கமுடியாத அந்த சிவராத்திரிக்குப் பின் எந்தவொரு திரையிசை நிகழ்ச்சியிலும் நான் பாடவில்லை. இசை என்பது எனது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்றாக மாறி ஒவ்வொரு பாடலையும் நான் அணுவணுவாகக் கூர்ந்து ஆராயவும் ரசிக்கவும் தொடங்கிய காலம் அது. எனது பாடல் என்னாலேயே சகிக்க முடியவில்லை என்றாகிவிட்டிருந்தது.

நடுவே சிலநாள் செலவுப் பணத்துக்காக ‘றாந்நி' எனும் ஊரிலுள்ள ஒரு கிருஸ்துவ இசைக்குழுவில் தமிழ், ஹிந்தி பக்திப்பாடல்களைப் பாடப் போயிருந்தேன். அதோடு பாடுவதையே நிறுத்திவிட்டேன். புதிய தமிழ்த் திரைப் பாடல்கள் எதுவுமே எனக்குத் தெரியாது. ‘‘இந்த கச்சேரி எங்கே நடக்குது?'' என்று நான் ஜோஸுகுட்டி மாஷிடம் கேட்டேன். தூக்குப்பாலம் ஊரிலுள்ள பட்டம் காலனி எக்ஸெல் எனும் திரையரங்கில்தான் என்று அவர் சொன்னதும் எனது மனம் சஞ்சலப்படத் தொடங்கியது.   

ஏழு கட்டை எட்டு கட்டை தெரிஞ்சா நான் படிச்சேன்?

இடுக்கி மாவட்டத்தின் ஆரம்பகால சினிமாக் கொட்டகைகளில் முக்கியமானது பட்டம் காலனி எக்ஸெல். எங்களூரின் முன்னோடி சினிமா வெறியர்கள் படம் பார்த்து வளர்ந்த திரையரங்கு அது. நானும் அங்கிருந்து பல படங்களைப் பார்த்திருக்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கே 'இளமை ஊஞ்சல் ஆடுகிறது' பார்த்து அதை மீண்டும் பார்க்க ஆசைப்பட்டு இரண்டாம் ஆட்டத்திற்கும் ஏறினேன். அன்றிரவு முழுவதும் ஓயாமல் பெய்த பேய்மழையில் வெளியே வரமுடியாமல் அந்த அரங்கின் வாசலிலே குத்தவைத்து விடியலுக்குக் காத்திருந்தது நினைவுக்கு வந்தது.

சத்தியனும் நஸீரும் எம்ஜிஆரும் சிவாஜியும் கமலும் ரஜினியுமெல்லாம் மின்னி விளங்கிய அந்தத் திரைச்சீலைக்கு முன்னால் நின்று திரைப் பாடல்களைப் பாடுவதை எண்ணிப்பார்த்தபோது எனக்கு லேசாக மெய் சிலிர்த்தது. ஆனால் தமிழ்நாட்டு எல்லையில் இருக்கும் ஊர் அது. புதிய தமிழ்த் திரைப்பாடல்களைச் சிறப்பாகப் பாடினால் மட்டும்தான் அங்கே எடுபடும். இல்லை. இது நமக்கு ஒத்து வராது.

‘‘நான் வரல மாஷே. என்ன விட்டிடுங்க''

‘‘அப்படிச் சொல்லாதே, ஒன்ன நான் எத்தன மேடை ஏத்தியிருக்கே? இன்னிக்கி ஒருநாள் நீ எனக்கு உதவித்தான் ஆகணும்''

‘‘அப்டீன்னா நான் இந்தி பாடட்டுமா? இந்தீன்னா கொஞ்சம் பழைய பாட்டானாலும் பிரச்சினையில்லையே!''

‘‘இந்தி பாட ஆளிருக்கு. நீ தைரியமா தமிழு பாடு. நீ பின்னிடுவ. நான் சொல்றேன்''

அவர் என்னைப் பிடித்து இழுத்து மூடிவண்டிக்குள் ஏற்றினார். கசாப்புக் கடைக்கு இழுத்துச் செல்லப்படும் ஆட்டைப்போல் நான் சுற்றுமுற்றும் பார்த்தேன். வண்டிக்குள்ளே கீ போர்ட் இசைக்கருவியை இசைப்பவரான ப்ரைஸ் அமர்ந்திருந்தார். எனக்குப் பரிச்சயமானவர். சிறு ஆசுவாசம். ‘‘ப்ரைஸூ,

நீங்களும் இருக்கீங்களே.. தப்பிச்சேன்.. கொஞ்சம் பழசானாலும் நாம முன்னாடி பாத்து வெச்சிருக்கிற தமிழ்ப் பாட்டுகள் பாடலாமே''.

‘‘ஐயோ.. நான் இன்னிக்கு வாசிக்க வரல. ரோட்டோரமா ஒக்காந்திருந்த என்ன மாஷ் சும்மா இழுத்திட்டு வந்தாரு. நான் சும்மாதான் வந்தே''

‘‘என்னோட பாட்டுக்காவது தயவு செஞ்சு நீங்க வாசிங்க..''

அப்போது ஒரு ரகசியம்போல் ப்ரைஸ் என்னிடம் ‘‘அந்த நீல ஜிப்பாக்காரர பாத்தியா? அவுருதா கீ போர்ட் ஸ்ரீபாலன். ஒரு மார்க்கமான ஆளு. அவுரு வாசிக்கிற கீபோர்டுல யாரையும் தொடக்கூட விடமாட்டாரு''.

நீளமான தனது கருப்புத் தாடியைச் சொறிந்தவாறு கீ போர்ட் ஸ்ரீபாலன் இழுத்துப் புகைக்கிறார். அந்த புகைக்குக் கஞ்சாவின் காட்டவாசம். ‘இன்றைக்கு தமிழ் பாடப்போகும் பையன்' என்று மாஸ்டர் என்னை ஸ்ரீபாலனுக்கு அறிமுகம் செய்தார்.

‘‘புதிய எந்தெந்த தமிழ்ப் பாட்டு தெரியும் ஒனக்கு?''

‘‘புதிய பாட்டு எதுவுமே தெரியாது''

‘‘பின்ன என்ன பாடப்போறே நீ? அபூர்வ சஹோதரங்ஙளில் வரும் 'அண்ணாட்ட ஆடுறா' தெரியுமா?''

‘‘இல்ல''

‘‘அதுகூடத் தெரியலன்னா நீ பின்ன என்ன தமிழு பாட்டுக்காரன்?''

‘‘அந்த படத்தோட 'ராஜா கைய வச்சா' கேட்டிருக்கேன்..''

‘‘அப்பொ அத மொதல்ல பாடு. மத்ததெல்லாம் மேடயில பாத்துக்கலாம்''.

மேற்கொண்டு எதுவுமே பேசாமல் ஸ்ரீபாலன்

கஞ்சாப் புகையில் மூழ்கினார். ‘ராஜா கைய வச்சா' கமல்ஹாஸன் சொந்தக் குரலில் பாடிய பாடல். ஆண்கள் பாடுவதற்கு மிகவும் கடினமான 6 கட்டை சுருதியில் இளையராஜா இசையமைத்த பாடல் அது. கமல்ஹாஸனே சிரமப்பட்டுத்தான் அதைப் பாடியிருக்கிறார் என்று கேட்டால் தெரியும். முறையான இசைப் பயிற்சி எதுவும் இல்லாத,

சராசரிக்கும் கீழான என்போன்ற ஒரு பாடகன் அதை எப்படிப் பாட முடியும்?

திரையரங்கின் முன்னால் நாங்கள் சென்றிறங்கும்போது அங்கே ஏராளமானோர் குழுமியிருந்தனர். என்னை நன்கு அறிந்த சில நண்பர்களும் அங்கிருந்தனர். கொச்சி மாநகரிலிருந்து வந்த ‘மாபெரும்' இசைக் குழுவுடன் நானும் இருப்பதை அறிந்து அவர்கள் மட்டற்று மகிழ்ந்தனர். ‘‘கச்சேரி கேக்க நம்ம குரூப்புப் பயலுகளே நெறய வந்திருக்காங்க. நீ கலக்கு மாப்ள''. ஆமா! இனி கலங்குவதற்கு என்ன இருக்கு? எனக்கு நெஞ்சில் நெருப்பு எரிந்தது. யாரிடமும் சொல்லாமல் அங்கிருந்து ஓடிப்போய்விடலாமா என்றுகூட யோசித்தேன். எதுவுமே செய்ய முடியவில்லை.

மேடையின் பின்னாலிருக்கும் சிறு திண்ணையில் பிரைஸும் நானும் பேசிக்கொண்டிருந்தோம். ரஜினிகாந்த் படமான ‘ராஜாதிராஜா'வின் ‘மலையாளக் கரையோரம் தமிழ் பாடும் குருவி' பாடலின் இசைக் குறிப்புகள் அவருக்குத் தெரியும். எனக்கும் அப்பாடல் ஓரளவு தெரியும். பிரைஸை கீ போர்ட் வாசிக்க அனுமதித்தால் எனது முதல் பாடலாக அதைப் பாடலாம். நான் ஸ்ரீபாலனிடம் பலவீனமாக அதைச் சொன்னேன். அவர் எதுவுமே காதில் வாங்கவில்லை. இசை நிகழ்ச்சி தொடங்கியது. ஓரிரு மலையாளப் பாடல்கள் பாடப்பட்டன. ‘‘அடுத்து வருவது ஒரு தமிழ்ப் பாடல். கமலாஹாஸனின் புத்தம்புதிய படமான ‘அபூர்வ ஸஹோதரங்ஙள்' படத்தின் ‘ராஜா கை வெச்சால்' பாடுவதற்காக கொச்சி ஸ்ரீராகின் தமிழ் பாடகரும் உங்கள் ஊர்க்காரருமான ஷாஜி கட்டப்பனையை மேடைக்கு அழைக்கிறேன்''.

என்னை அறிந்திருந்த நண்பர்கள் ஏற்பாடு செய்த ஆரவாரங்களுக்கும் கைதட்டல்களுக்கும் நடுவே நடுங்கும் கால்களுடன் நான் மேடைக்குச் சென்றேன். அரங்கம் நிரம்பி வழியும் கூட்டம். அரங்கில் வெளிச்சம் குறைவு என்பதனால் எதையுமே சரிவரப் பார்க்க முடியவில்லை. பாடலின் முதல் வரி ஒரு சின்ன உரையாடலும் சிரிப்பும்தாம். ‘ராஜா கைய வெச்சா, அது ராங்கா போனதில்ல, ஹ ஹ ஹ ஹா...'. அது முடிந்தவுடன் ‘தகதம் தக்கத் தகதம்' என்ற டிரம் தாளக்கட்டுடன் பாடல் ஆரம்பம். நான் மைக்கைக் கையிலெடுத்தேன். ‘‘ரெடி.. ஒன் டூ த்ரீ ஃபார்..''

நான் முதல்வரியைப் பேச ஆரம்பிக்கும்முன் ‘தக்கம் தகதம்' என்று தப்பாக டிரம் தாளம் வந்தது. அந்தக் குழப்பத்தில் சரியான இடத்தில் பாடலை ஆரம்பிக்க என்னால் முடியவில்லை. சற்றே தாமதமாகத் தொடங்கினாலும் முதல் நான்கு வரிகளை ஒருவழியாகப் பாடி முடித்தேன். அப்போதுதான் அந்தத் திடுக்கிடும் உண்மை எனக்கு விளங்கியது. அப்பாடலின் இயல்பு சுருதியான A அதாவது 6 சுருதியில் அல்ல, அதிலும் உயர்ந்த B அல்லது 7 சுருதியில்தான் ஸ்ரீபாலன் வாசித்துக்கொண்டிருக்கிறார்! சாதாரணமாக யாராலுமே நெருங்க முடியாத சுருதி. கருவியிசை ஓடிக்கொண்டிருக்கிறது. வரப்போகும் சரணம் எட்டமுடியாத மேல்ஸ்தாயியில்தான் இருக்கிறது. எனது கண்கள் இருட்டாயின.

மூச்சுமுட்டிகண்கள்தள்ளிசரணத்தின்முதல்வரியைப்பாடினேன். அங்கிருந்துமேலேறும் ‘வாழ்ந்திடத்தான்பொறந்தாச்சு' எனும்இடம்வந்தபோதுஒருபசுமாட்டுக்கன்றுபிராணவேதனையில்கதறிக்கூவுவதுபோல்எனதுகுரல்உடைந்துபிசிறடித்துஓர்அலறலாகமாறியது. நாலாபக்கமும்பார்வையாளர்களின்ஓங்கியகத்தல்களும்கூச்சல்களும். எனதுஉடல்வெந்துஆவியாகிப்போவதுபோன்றஓர்உணர்வுஎன்னைத்தாக்கியது. இங்கேவிழுந்துஇந்தகணமேநான்ஏன்இறக்கக்கூடாது? மைக்கைக்கீழேபோட்டுவேகமாகமேடையிலிருந்துவெளியேறிஓடினேன். எங்கும்இருட்டுமட்டுமேபரவிக்கிடந்தது.

நவம்பர், 2021.

logo
Andhimazhai
www.andhimazhai.com