இந்தியத் திரைப்பட மேதை சத்யஜித் ராய் பிரெஞ்சுத் தத்துவ-வாதியும் கவிஞரும் மொழிபெயர்ப்பாளரும் பத்திரிகை-யாளரு-மான பியரே ஆந்திரே போதாங்குக்கு அளித்த நேர்காணலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
“ உண்மையான ஒரு சினிமா இசை இல்லாமல் தனித்திருக்கவே விரும்பு-கிறது. நான் எடுக்க ஆசைப்படுவதும் அப்படியான ஒரு படத்தைத்தான். ஆனால் அது சாத்தியமில்லை. சினிமாவில் நான் சொல்லவிரும்புவதைப் பார்வையாளனிடம் வலுவாகச் சொல்ல இசையும் சில சமயங்களில் பாடல்-களும் தேவைப்படுகின்றன” .
ராயின் இந்த வாசகம் இந்திய சினிமாவின் ஓர் அம்சத்தைச் சுட்டிக் காட்டுகிறது. சினிமாவில் பாடல்கள் தவிர்க்கப்பட வேண்டியவை; ஆனால் தவிர்க்க முடியாதவை என்பதை உறுதிப்படுத்துகிறது. தமிழில் உருவாக்கப்-பட்ட முதல் பேசும் படம். ‘காளிதாஸ்’ ( 1931 ). அது வெளி யான காலத்தில் ‘சுதேசமித்திரன்’ நாளிதழில் வெளிவந்த விளம்பரம் ‘தமிழ், தெலுங்கு பாஷைகளில் பேசும்படக் காட்சியைக் கேளுங்கள்’ என்றே ரசிகர்களை அழைக்கிறது. பாருங்கள் என்றல்ல. கூடவே படத்தின் சிறப்பம்சங்களாக ‘உயர்ந்த கீர்த்தனங்கள், தெளிவான பாடல்கள்’ இடம் பெற்றிருப்பதையும் எடுத்துச் சொல்லுகிறது. சினிமா என்ற காட்சிக்கலையில் தவிர்க்கப் படக்கூடிய ஒரு கூறு தவிர்க்கவே முடியாத உறுப்பாக முதல் படத்திலேயே இடம் பெற்று விட்டது. அதன் தொடர்ச்சியையே நாம் இன்றும் காண்கிறோம்; அல்லது கேட்கிறோம்.
தமிழ் சினிமாவில் பாடல்கள் அலங்காரமாகவும் அங்கமாகவும் தொடர்ந்து இருந்திருக்கிறது. ஆரம்ப கால சினிமா, தெருக் கூத்திலிருந்தும் மேடை நாடகங்களிலிருந்தும் தனது கதைகளை எடுத்துக் கொண்டதன் விளைவு இது. கூத்திலும் நாடகத்திலும் பாடல்கள் காட்சி இடைவெளிகளை இட்டு நிரப்பவும் பார்வையாளனை பிடித்து உட்காரவைக்கவும் பயன்படுத்தப்பட்டன. அதே பயன்பாடு சினிமாவிலும் தொடர்ந்தது. ஆனால் சினிமாவில் பாடல்கள் வேறு ஒரு முக்கிய வேலையையும் செய்தன. படத்தில் சொல்லப்படும் கதையை முன்னோக்கிக் கொண்டு செல்ல உதவின. கதையின் மூடை வலுப்படுத்தவும் பாத்திரங்களின் மனநிலையை வெளிப்படுத்தவும் உதவின. படத்தின் தொய்வை ஈடு கட்டத் துணை புரிந்தன. இந்த முக்கியமான இசைக்கடமைகளைத்தான் இசை அமைப்பாளர்கள் செய்தார்கள். இந்த இதழ் அவர்களைப் பற்றியது.
சாதாரணத் தமிழ்க் குடிமகன் இன்று இசை என்று அறிமுகப்படுத்திக் கொள்வதும் கேட்பதும் திரை இசையைத்தான். அவன் காதுகளை மகிழ்விக்கும் இசையை அளித்த, அளிக்கும், அளிக்கப் போகும் எல்லா இசையமைப்பாளர்களையும் பற்றிய முன்னோட்டம் இந்த இதழ். ஜி. ராமநாதன் முதல் ஏ.ஆர்.ரஹ்மான் வரையான எல்லாரும் இங்கே அணிவகுக்கிறார்கள். இந்த இதழ் படித்து ரசிக்க மட்டுமல்ல; கேட்டு அனுபவிக்கவுமான இதழ். இந்த இதழின் பக்கங்களைப் புரட்டும்போது உங்களுடைய அபிமானப் பாடலை உங்களை அறியாமலேயே நீங்கள் வாய் விட்டோ மனதுக்குள்ளோ பாடிக் கொள்வீர்கள் என்பது நிச்சயம்.
ஜனவரி, 2014.