பல கதைகள் தமிழ் சினிமாவுக்காக காத்திருக்கின்றன - கரு. பழனியப்பன்

பல கதைகள் தமிழ் சினிமாவுக்காக காத்திருக்கின்றன - கரு. பழனியப்பன்
Published on

தமிழ் சினிமாவில் இயக்குநர்களே இப்போது கதை, திரைக்கதை, வசனம் எழுதிக் கொண்டிருப்பதால் எழுத்தாளர்கள் இருக்கிறார்களான்னு தேட வேண்டியிருக்கு. இருக்கின்ற எழுத்தாளர்களையும் நாம வசனகர்த்தாக்களாக மாத்திக்கிட்டிருக்கோம்.

வங்காளத்திலும், மலையாளத்திலும் நல்ல கதைகளை வாங்கி படமெடுக்குறாங்க. ஆனால் இங்கே தமிழ்ச் சினிமாவில் எழுத்தாளர்களை வெறும் வசனகர்த்தாக்களாக மட்டுமே நாம் பயன்படுத்தி வருகிறோம்.

நான் படித்தவரையில் தமிழ்ச் சினிமாவில் பயன்படுத்தக் கூடிய நல்ல கதைகள் ஏராளமாக உள்ளன. அதில் தலையானதாக நான் கருதுவது ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’. இதையேன் படமாக்கணும் என்றால் அதில் வரும் ஹென்றி என்ற கேரக்டர். இந்தக் கதை வெளியாகி 30 வருடங்களுக்கு மேலானாலும்கூட அந்தக் கதாபாத்திரம் இன்னமும் என் மனதுக்குள் நெருக்கமாக நிற்கிறது.

இதைவிடவும் சின்ன பட்ஜெட் படத்திற்கான ஒரு கதையைத் தேர்வு செய்யச் சொன்னால் சுஜாதாவின் ‘திருப்பிச் சொன்ன பொய்கள்’ என்ற கதையைத்தான் சொல்வேன். காரணம், நாம் எல்லோருமே ஒரு பொய் சொல்ல விரும்புகிறோம் என்கிற உண்மையை அந்தக் கதை சொல்வதுதான். ஒரு பொய் சொல்லாம். ஆனால் எந்தவிதத்தில், எந்த இடத்தில், எப்படி சொல்ல வேண்டும் என்பதும் இருக்கிறது என்கிறது அந்தக் கதை.

இது போல பல கதைகள் தமிழ்ச் சினிமாவுக்காக காத்திருக்கின்றன.

ஜனவரி, 2016.

logo
Andhimazhai
www.andhimazhai.com