பயந்து பயந்து வரைவது கார்ட்டூன் இல்லை!

பயந்து பயந்து வரைவது கார்ட்டூன் இல்லை!
Published on

பிரபல கார்ட்டூனிஸ்ட், எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான மதனுடன் பேசிக்கொண்டிருப்பது மிகவும் சுவாரசியமான அனுபவம்.  உலகின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு வரலாற்றுப் படகில் நொடியில் பயணம் செய்வார்.  கிமு கிபி என்று கால எந்திரம் ஏறுவார். வந்தார்கள் வென்றார்கள் என்று இந்திய வரலாறு சொல்வார்.  அந்திமழை-கார்ட்டூன் போட்டியில் பரிசுக்குரிய கார்ட்டூன்களைத் தெரிவு செய்தபிறகு கார்ட்டூன் கலை பற்றி அவர் அளித்த பேட்டியிலிருந்து சில பகுதிகள் இங்கே. கார்ட்டூனிஸ்ட் ஆக விரும்புவர்கள் கட்டாயம் படிக்கவேண்டிய கருத்துகள் இதில் உள்ளன.

இப்பெல்லாம் கேலியா கார்ட்டூன் போட்டா அரசியல் தலைவர்கள் தாங்கிக்க மாட்டேங்கறாங்க.. இதை எப்படிப் பார்க்கறீங்க?

ரொம்ப வருத்தமான விஷயம்தான். இப்போ கார்ட்டூனிஸ்டுகள் அதிகம் வராததுக்குக் காரணம் உயிர் பயமாகக் கூட இருக்கலாம். கத்தியைத் தீட்டாதே; புத்தியைத் தீட்டுன்னு சொன்ன காலம் உண்டு. ஆனா இப்ப கத்தியை மட்டும்தான் தீட்டிட்டிருக்கோம். ஒரு கார்ட்டூனிஸ்ட் வரைஞ்ச தன்னோட கார்ட்டூனை ஆவடியில காங்கிரஸ் மாநாடு நடந்தப்ப நேரு பார்த்தார். அதை வாங்கி தன் மூக்கை நீளமாக நீட்டி வரைஞ்சு கொடுத்தார். இப்ப இப்படிப்பட்ட தலைவர்கள் உண்டோ? டேவிட் லோ சர்ச்சிலை புல் டாக் (Bull Dog) மாதிரி போட்டப்ப பிரிட்டன் பிரதமர் சர்ச்சில் அதை ரசித்து அதோட ஒரிஜினலைக் கேட்டார். அதை பிரேம் பண்ணி அவருக்கு அனுப்பினாங்க. பிரதமர் அலுவலகத்தில் தன் இருக்கைக்கு மேலே அதை அவர் மாட்டிவைத்தார். நம்நாட்டில் இது நடக்குமா? ஜனநாயகம் ஒரு நாட்டுல எப்படி இருக்குதுங்கறத்துக்கான அளவுகோலா கார்ட்டூன்களை எடுத்துக்கலாம். பயந்து பயந்துபோடுவது கார்ட்டூன் கிடையாது. அதைவிட கார்ட்டூனிஸ்ட் ரிடையர்டு ஆகிடறது மேல்.

ஒரு கார்ட்டூனிஸ்டை உருவாக்க முடியுமா?

நல்ல நகைச்சுவை உணர்வு, கிண்டல் கேலி உள்ள ஒருவருக்கு படம்வரையக் கற்றுக்கொடுத்து கார்டூனிஸ்ட்டா மாத்திட முடியும். ஆனால் நல்லா படங்கள், ஓவியங்கள் வரையும் திறமை மட்டும் இருப்பவரை என்னிடம் அனுப்பினால் அவருக்கு நகைச்சுவை உணர்வைக் கற்றுக்கொடுக்க முடியாது. அது இல்லையெனில் அவர் கார்ட்டூனிஸ்ட் ஆகமுடியாது!

கார்ட்டூனிஸ்ட் ஆவது எப்படி என்று விளக்கமாக சொல்லுங்கள்?

ஓவியம் வரைய வேண்டுமெனில் வெறும் ஓவியத்திறமை இருந்தா போதும். நீங்க எந்த விதமான படிப்பறிவும் இல்லாமல் கூட உலகின் மிகச்சிறந்த ஓவியர்களில் ஒரு-வராக ஆகமுடியும். ஆனால் கார்ட்டூன் என்பது அடியோடு வேறுபட்ட விஷயம். ஓவியம் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்-களிலும் ஓவியம் என்கிற வார்த்தை வரும். இம்ப்ரஷனிஸ்ட் ஓவியம், நவீன ஓவியம், தஞ்சாவூர் ஓவியம் இப்படி. ஆனா கார்ட்டூனுக்கு மட்டும் ஓவியம்கிற வார்த்தையைச் சேர்க்காம தனிப்பெயர்கொடுக்கிறோம். ஓவியம் என்பது கார்ட்டூனில் பெரிய முக்கியத்துவம் பெறுவதில்லை. கார்ட்டூனிஸ்டுக்கு ஓவியத்திறமை ஒரு கூடுதல் தகுதியே. முக்கியமான விஷயம் மெசேஜ் தான் கார்ட்டூன். நீங்கள் எதாவது ஒன்றைச் சொல்லவேண்டும். ஒரு கருத்தைச் சொல்லவேண்டும்.எந்தஒரு துறையை எடுத்துக்கொண்டாலும் ஓர் அரசியல், சமூக, பொருளாதார எல்லாவிஷயங்களைப் பற்றியும் ஒரு கருத்து இருந்து அந்த கருத்தைப் படம் வரைவதன் மூலம் தெளிவாக விளக்கிவிட்டால் அது கார்ட்டூன்தான். ஓவியம் அவ்வளவு நல்லா இல்லையே இதில் என்று சொல்ல மாட்டார்கள். அதே சமயம் கார்ட்டூனில் நல்ல ஓவியம் இருப்பது தப்பா என்று என்னிடம் கேட்காதீர்கள். அது போனஸ்தான் என்று சொன்னேன் அல்லவா? சிலபேருக்கு அசாத்தியமான ஓவியத்திறமை இருக்கும். கார்டூன்களின் தந்தை என்று சொல்லப்படுகிற டேவிட் லோ (David Low) என்கிற பிரிட்டிஷ்  கார்ட்டூனிஸ்டோட ஓவியங்களைப் பார்த்தீர்கள் என்றால் அவர் சொல்லும் மெசேஜையும் ரசிக்கலாம். வெகுநேரம் அவரது கோடுகளையும் ரசிக்கலாம். அவரால் சில கோடுகளிலேயே சைபீரியாவில் உள்ள பனியையும் வரையமுடியும். சகாராவில் உள்ள வெப்பத்தையும் வரைய முடியும். அது அவரது திறமை. இதெல்லாம் ரசிக்கணும். எந்தக் கலையாக இருந்தாலும் மற்ற கலைஞர்களைப் பார்த்து இன்ஸ்பைர் ஆகித்தான் நம்மை அதில் வளர்த்துக்க முடியும். என்னையே எடுத்துக்கொண்டால் டேவிட் லோ, ஆர்.கே.லட்சுமண்- ஆகி-யோருடைய கார்ட்டூன்கள் பார்த்தவுடனே என்னை வா..வா! என்று அழைச்சுது. அதிலேர்ந்து நான் கார்ட்டூன் மட்டும்தான் போட்டேன். இந்த உணர்வுதான் அடிப்படை. கார்ட்டூனிஸ்ட்களைப் பொறுத்தவரை ஓவியம், சிற்பம் போன்ற கலைகள் தொடர்பான கல்லூரி-களில் படித்தவர்கள் ஒரு ரெண்டு மூணு சதவீதம்தான் இருப்பாங்க. மத்தவங்கெல்லாம் வேறெங்கோ இருந்து வந்தவங்களா இருப்பாங்க. நான் கல்லூரியில் பௌதிகம் படித்தேன்(படிக்கலைன்னு சொல்லலாம்!). மெசேஜ் வேண்டும் என்று சொன்னேன் அல்லவா? கருத்துகளைச் சொல்ல உங்களுக்கு விஷயம் தெரிஞ்சிருக்கணும். நல்ல அரசியல் கார்டூ-னிஸ்ட் ஆக அரசியல் தெரியணும். உங்க கார்ட்டூன்களைப் பார்த்தா நீங்க அரைவேக்காடா.... அல்லது நல்லா விஷயம் தெரிஞ்சவரான்னு கண்டுபிடித்துவிட முடியும். கார்ட்டூன்ல பொடிவெச்சு பண்ற விஷயம்லாம் முக்கியம். ராஜாஜியோட கைத்தடி, சர்ச்சிலோட சுருட்டு, இதிலெல்லாம் கார்ட்டூன் ஐடியாக்கள் இருக்கு. பிடிவாதமா ஒர் கருத்தை சர்ச்சில் பிடிச்சிட்டிருக்காருங்கறதை அவரது சுருட்டு எரிஞ்சு உதடுவரைக்கும் வந்துடுது.. கீழே போடாமல் இருக்காரு...எப்பவேணும்னாலும் அதை அவர் வாயைச் சுட்டுடும்னு நீங்க போடலாம். இதெல்லாம் பயன்படுத்த அந்த அரசியல்வாதியைப் பற்றித் தெரியணும். அரசியல்ல எல்லாமே வருது. விஞ்ஞானம், குற்றங்கள்... எல்லாமே அரசியலுக்குள் வரும்போது அது எல்லாத்த பற்றியும் தெரியணும். ஜல்லிக்கட்டை தமாஷா வரைந்தால் அது கார்ட்டூன் கிடையாது. அதுல ஒரு அரசியலைப் புகுத்தினால்தான் அது கார்ட்டூன். மாட்டு தலைக்குப் பதிலா ஒரு தலைவரின் தலையைப் போடலாம். ஒருத்தரை அடக்க முடியாம தவிக்கறாங்கன்ற ஐடியா உடனே வந்துடும்! கார்ட்டூன் என்பது ஓர் அரசியல்தலைவரின் ஓவியம் இல்லை. அவரை தமாஷா வரைவது முக்கியம்! இந்திராகாந்தியின் மூக்கை வரைய ஆரம்பித்தவுடனேயே நீங்கள் அது இந்திரா என்று கண்டுபிடித்துவிடுவீர்கள். ஓவியத்தில்  இப்படிச் சொல்லமுடியாது! ஒரு கூலிங் கிளாஸ் போடும்போதே கலைஞர்னு சொல்லிடலாம். இப்படி கிண்டலா போடறது ஒரு திறமை. இதுவேணும். சில கோடுகளிலேயே இதைப் போடக்கூடிய திறமை வேண்டும். பொதுஅறிவு ரொம்ப முக்கியம். ஒருத்தர் ஒரு சிக்கல்லே போய் மாட்டிகிட்டாரு. அதுலேர்ந்து வரமுடியலைங்கற தைக் காண்பிக்க மகாபாரதத்தில் அபிமன்யூ சக்கரவியூகத்தில் மாட்டிகிட்டதைப் போடலாம். ஆக உங்களுக்கு மகாபாரதம் வரை எல்லாம் தெரிஞ்சாதான் இதை எதுல பொருத்திப் பார்த்து அதை கார்ட்டூனா போடமுடியும்னு யோசிக்கும் போது ஐடியா வரும். இதுக்குன்னு உங்களுக்குன்னு ஒரு ஐடியா டிக்க்ஷனரி வேணும்.

ஏ டு இசட் உங்களுக்கு மேம்போக்காவாது எல்லாம் தெரியணும். ஒரு மிகச்சிறந்த ஓவியருக்கு அரசியலே தெரியலைன்னா அவர் கார்ட்டூனிஸ்ட் ஆகமுடியாது. சங்கிலி அறுப்பு பற்றி செய்தி படிக்கும்போது ஓகோ காலம் கெட்டுக்கிடக்குதுன்னு நீங்க யோசிச்சா கார்ட்டூனிஸ்ட் ஆக முடியாது. இதுக்கு எப்படி கார்ட்டூன் போடலாம். இது அதிகமாயிட்டே போனா என்னவாகும்? ஒவ்வொரு பெண்ணுக்கும் காவலா ஒரு கான்ஸ்டபிள் போடலாமா அப்படின்னும் யோசிக்கலாம். ஒரு பெண் கழுத்துல நான் அணிந்திருப்பவை அனைத்தும் கவரிங்தான் அப்படின்னும் எழுதி மாட்டிட்டு போறமாதிரி போடலாமா? இப்படி யோசிக்கணும்! அதுதான் கார்ட்டூன்!

ஏன் கார்ட்டூனிஸ்டுகள் அதிகம் உருவாவதில்லை?

இதெல்லாம் இல்லாததால்தான். இதில ஒண்ணு குறைஞ்சாலும் நல்ல கார்ட்டூனிஸ்டா ஆக முடியாது. பிரமாதமாக ஓவியம் வரைவது பெருமை என்றாலும் கார்ட்டூனில் கருத்துன்னு ஒண்ணு வேண்டும் அல்லவா? சிந்தனையாளராக இருக்கணும். ஒரு கார்ட்டூனிஸ்ட்டை சிந்தனையாளர்னு சொல்லலாம்!

கார்ட்டூன்களில் வண்ணம் சேர்ப்பதை நீங்கள் ஆதரிப்பதில்லை. ஏன்?

கார்ட்டூன்களில் வண்ணம் சேர்க்கும்போது அதை அலங்காரம் பண்ண ஆரம்பிச்சிடுறீங்க... கார்ட்டூன்கிறது எளிமை. படத்தை பயன்படுத்தி ஒரு கருத்தைச் சொல்லவே கார்ட்டூன். வண்ணம் சேர்க்கச் சேர்க்க மெல்ல மெல்ல கார்ட்டூன் தன் தகுதியை இழந்து ஓவியமாக மாறிவிடுகிறது.

ஆனால் நீங்கள் ஒருமுறை வண்ணம் சேர்த்திருக்கிறீர்கள் அல்லவா?.

ஈழம் பற்றி போட்ட ஒரு கார்ட்டூனில் ஒரு முறை செய்துள்ளேன். எவ்வளவோ விஷயம் வரையும்போது நீங்கள் இதை ஞாபகம் வைத்திருக்கிறீர்கள் அல்லவா? இதைக் கவனிக்கவேண்டும் என்பதற்காக நான் செய்தது தான் அதில் சேர்த்த வண்ணம்!

நீங்கள் எப்பவாவது பெயிண்டிங் செய்திருக்கிறீர்களா?

ம்.. என்னுடைய வாழ்க்கையே பெயிண்டிங்கில் தான் ஆரம்பித்தது. கல்லூரியில் படிக்கையில் பரிசெல்லாம் வாங்கி உள்ளேன். தஞ்சை பெரியகோயிலை அதன் முன்னால் அமர்ந்து அதன் முகப்பை ஓவியமாகத் தீட்டினேன். அதன் பின்னர்தான் எனக்கு ஆர்கே லட்சுமண், டேவிட் லோ காதல் மலர்ந்தது. ஓவியங்களை அந்தரத்திலேயே விட்டுவிட்டு கார்ட்டூனுக்கு வந்துட்டேன். கட்சி மாறுவதுபோல!

உங்களைப் பாதித்த கார்ட்டூனிஸ்ட்கள் பற்றிச் சொல்லுங்க

அமெரிக்காவில் சிறந்த கார்ட்டூனிஸ்டுகள் இருப்பினும் அதற்கு முன்னோடியா இருந்தவர்கள் பிரிட்டிஷ்காரர்கள்தான் என்றாலும் கார்ட்டூன் கலையைக் கண்டுபிடித்து அதை கொண்டுவந்தது பிரெஞ்சு, டச்சு போன்ற ஐரோப்பியர்கள்தான். பெயிண்டிங்கில் இருந்துதான் கார்ட்டூன் வந்துச்சு. லியனார்டோ டாவின்சி கார்ட்டூன் போட்டிருக்கிறார். கார்ட்டூன் என்கிற வார்த்தையே இத்தாலியிலேர்ந்து வந்ததுதான். அதற்கு அர்த்தம் வேற. முதலில் ஓவியம் வரையும் முன்பா ஒரு கரித்துண்டை வெச்சு டாவின்சி ஒரு ஸ்கெட்ச் போட்டுப்பார்த்திருப்பார் இல்லையா? அதுக்குப் பெயர்தான் கார்ட்டூன். கோயா போன்ற ஓவியர்கள் அப்பவே தங்கள் ஓவியங்களில் மெசேஜ் சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. மைக்கேல் ஆஞ்சலோவே ஒவ்வொரு மனிதனுக்கும் மிருக முகங்களை போட்டுப் பார்த்திருக்கார். உலக அளவில் நிறைய பெயர்களைச் சொல்ல முடியும். தமிழ்நாட்டைப் பொருத்தவரை இந்தியாவுக்கே கார்ட்டுன்களுக்கு தலைமைச் செயலகம் என்று சொல்லலாம். நமக்குப் பக்கத்துல வர்றவுங்க கேரளாகாரங்க. சங்கர்ஸ் வீக்லியோட சங்கர் மலையாளி. ஆர்.கே.லட்சுமண் தமிழர். வடக்கே போகப்போக இது குறையும். ஏன்னா அவங்க கொஞ்சம் அக்ரெசிவ்வா இருப்பாங்க. அந்நிய நாட்டு விரோதிகளை எதிர்கொண்டு போராடினவங்க அவங்க. தாக்குதல் எதிர்த்தாக்குதல் எல்லாத்துக்கும் தயாரா இருக்கவேண்டிய கட்டாயத்துல இருந்தவங்க. அதனால் கார்ட்டூனுக்குத் தேவையான கிண்டல் அவங்களுக்கு குறைச்சலா இருக்கும். தமிழ்நாட்டில் முரட்டுத்தனம் இருக்காது. நாம் எல்லாரும் கொஞ்சம் பலவீனமான உடல் கொண்டவர்கள். அதை வார்த்தையில் சரிக்கட்டுவோம். தலைய வெட்டி தஞ்சாவூரில் போட்டுடுவோம் என்போம்... அதுவே கார்ட்டூன்தான்.

நீங்க வரைய வந்தபோது இருந்த சூழலுக்கும் இப்ப இருக்கிற சூழலுக்கும் என்ன வித்தியாசம் பாக்கறீங்க?

நான் தப்பிச்சவன்னு சொல்லலாம்! சகிப்புத்தன்மை இருந்த காலம், சகிப்புத்தன்மை இல்லாத காலம்னு பாத்தா நான் சகிப்புத் தன்மை இருந்த காலத்துல பிறந்தவன். தைரியமாக கார்ட்டூன் போட்ட கடைசி கார்ட்டூனிஸ்ட்களில் நானும் ஒருத்தன். இப்ப பயந்து பயந்து போடற கார்ட்டூன்கள் உங்களுக்குப் பழகிட்டதால என்னோட பழைய கார்ட்டூன்களைப் பாத்தா இவ்வளவு தைரியமா போட்டுருக்காரேன்னு தோணும். அந்தகாலத்துல தமிழ்நாட்டில் சிறந்த கார்ட்டூனிஸ்டுகள் பலர் இருந்தாங்க. மாலி, ராஜு, தாணு, கோபுலு, ஸ்ரீதர், ராக்கி, செல்லம்.. திராவிட இயக்க இதழ்களிலும் நல்லா கார்ட்டூன்கள் வரும். அது கார்ட்டூனிஸ்டுகளுக்கு ஒரு பொற்காலம் என்பது உண்மை!

பிப்ரவரி, 2013.

logo
Andhimazhai
www.andhimazhai.com