பத்து பர்சண்ட் பாபா

பத்து பர்சண்ட் பாபா
Published on

ராம்பால் என்ற ஹரியானா சாமியார் பெயரை நம்மில் பெரும்பாலானோர் சமீபத்தில் அவரது ஆட்கள் போலீசோடு மோதிய சம்பவம் தலைப்புச் செய்தி ஆனபோதுதான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ராம்பால் வட இந்தியாவில் பலருக்கு வாழும் கடவுள்போல இருந்திருக்கிறார். மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம் எனப் பலபகுதிகளில் இருந்து நடுத்தர, அடித் தட்டு மக்கள் இவரது பக்தர்களாக இருந்துள்ளனர். ராம்பால், கைபட்டால் நோய் குணமாகிவிடுமென்பதுதான்  இவர்கள் நம்பிக்கை.

19 ஆண்டுகளுக்கு முன் மாநில நீர்ப்பாசனத் துறையில் இளநிலை பொறியாளராக இருந்தவர் ராம்பால். அதற்கு முன்னால் அவர் ஒரு சாதாரண விவசாயியின் மகன் மட்டுமே. படிக்கும் காலத்தில் இருந்தே ஹனுமான் பக்தராக இருந்தார். வேலையை விட்டுவிட்டு ஸ்ப்ளெண்டர் பைக்கில் ஊர் ஊராகப் போய் மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மெல்ல பைக், வசதியான ஜீப் ஆக மாறியது. 2000-த்தில் இவரது பக்தராக மாறிய ஒரு தொழிலதிபர் மூன்று ஏக்கர் நிலத்தை ஆசிரமம் கட்ட அளித்தார். அதுதான் இன்று 12 ஏக்கராக மாறியுள்ளது.

உங்கள் ஆசிர்வாதத்தில் என் தொழிலில் நல்ல லாபம் கிடைத்தது என்று சொல்லிக் கொண்டு வருபவர்களிடம் ‘கொடு 10 சதவீதம்’ என்று வாங்கிகொள்வாராம்.

கபீர், குருநானக் போன்றவர்களைப் பின்பற்றுபவராகச் சொல்லிக்கொண்ட இவர் சைவ உணவு உண்ணுதல், மது விலக்கு, முறைகேடான பாலுறவைத் தவிர்த்தல் ஆகியவற்றைப் போதித்தார். மது அருந்துபவன் 70 தடவை நாயாகப் பிறப்பான் என்பார் அவர். நாஸ்ட்ராமஸ் என்ற தீர்க்கதரிசி உலகின் தலைவனாக சிரன் என்பவன் தோன்றுவான் என்று கூறியிருக்கிறார். அந்த சிரன் நான்தான் என்று தன் பக்தர்களிடம் கூறுவது ராம்பாலின் வழக்கம்.

இவர் ஜாட் இனத்தைச் சேர்ந்தவர். இந்த பகுதியில் சக்திவாய்ந்த சாதியாக உள்ள ஜாட்களிடம் ஒடுக்கப்பட்டவர்களாக இருக்கும் பிற சாதியினர் ராம்பாலிடம் வந்துசேர்ந்தனர். அத்துடன் இவருக்கு ஜாட் மக்கள் ஆதரவும் உண்டு.

2006-ல் ஆசிரமம் ஒன்றுக்கும் இவரது ஆதரவாளர்களுக்கும் இடையிலான மோதலில் முதல் வழக்கு இவர் மீது போடப்பட்டது. அந்த ஆசிரமத்தில்தான் இவர் முதல்முதலாக கபீரைப் பின்பற்றுபவராக ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஆசிரமத்தைக் கைப்பற்றுவதில் தோற்றுப்போனதால் அங்கிருந்தவர்கள் மீது இவர் வைத்திருந்த வஞ்சமே தாக்குதலுக்கான காரணம் என்கிறார்கள்.  அத்துடன் தயானந்த சரஸ்வதி தொடங்கிய ஆர்ய சமாஜம் என்கிற சக்தி வாய்ந்த அமைப்பைச் சேர்ந்தவர்களையும் இவர் பகைத்துக்கொண்டார். மீண்டும் ஒரு மோதல் நடந்து ஒருவர் இறக்கவே கொலை வழக்கில் ராம்பால் கைது செய்யப்பட்டு 22 மாதங்கள் சிறைவாசம் இருந்தார்.

பின்னர் பிணையில் வெளியே வந்ததும் ஆசிரமத்தில் தனக்கென்று கறுப்புபூனைப் படையைப் போல ஆயுதம் தாங்கிய பாதுகாப்புப்படையை உருவாக்கினார். அவர்கள் நவீன துப்பாக்கிகளையும் வைத்திருந்தனர்.

நான்கு ஆண்டுகளில் 44 சம்மன்களுக்கு ராம்பால் கோர்ட்டில் ஆஜர் ஆகவில்லை. எனவே கடைசியாக உயர்நீதிமன்றம் அரசைப் பிடிபிடியென பிடித்தபின்னர்தான் 6000போலீஸார் குவிக்கப்பட்டு அவர் பிடிபட்டார். அவரைக் கைது செய்வதைத் தவிர்க்க 20,000 பக்தர்கள் ஆசிரமத்துக்குள் முன்கூட்டியே குவிந்திருந்தனர். இந்த பிரச்னையில் சிலர் இறந்தும்போயினர். அவரது சத்லோக ஆசிரமம் 12 ஏக்கர் பரப்பிலானது. ஆசிரமத்தில் பெட்ரோல் குண்டுகள் கிடைத்ததாகவும் மகளிர் கழிவறைகளில் காமிராக்கள் பொருத்தப்பட்டிருப்பதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது. ராம்பால் சொல்வதெல்லாம் ஒன்றுதான். ‘நேரம் சரியில்லை”.

டிசம்பர், 2014.

logo
Andhimazhai
www.andhimazhai.com