அறுபதுகளில் பிரபல அமெரிக்க கார் நிறுவனமான ஃபோர்ட் விற்பனையை உயர்த்த என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்கிறது.
அமெரிக்கர்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஃபோர்ட் கார் குடும்பத்திற்கானது. ஆனால் இளைஞர்களை கவர பெராரி போன்று கார் ரேஸில் நாம் ஜெயிக்க வேண்டுமென்கிறார் விற்பனைப் பிரிவு தலைவர். 'பெராரி வருடம் முழுக்க தயாரிக்கும் காரின் எண்ணிக்கையை நாம் ஒரு நாளில் உற்பத்தி செய்கிறோம், அவர்களுடனா நமக்கு போட்டி' என்கிறார் நிறுவன தலைவர் ஹென்றி ஃபோர்ட் 2. ஆனாலும் ஏற்றுக் கொள்கிறார்.
சரிவிலிருக்கும் பெராரி நிறுவனத்தை விலைக்கு வாங்கி ரேஸில் இறங்கலாம் என்று ஃபோர்ட் முயற்சிக்க, பெராரி நிறுவனம் பியட் கார் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை முடிப்பதோடல்லாமல் ஃபோர்டை அவமானப்படுத்தி திருப்பி அனுப்புகிறது. அடிபட்ட புலியான ஃபோர்ட் உலகின் பிரபலமான பிரான்ஸ் லீ மான்ஸ் ரேஸில் பெராரியை தோற்கடித்தாக வேண்டுமென கங்கணம் கட்டிக் கொண்டு களத்திலிறங்குகிறது. இந்த 'ஃபோர்ட் வெர்ஸஸ் பெராரி' உண்மைக் கதையை ஒரு கோணத்திலும் ரேஸ் கார் என்ஜினியர் கரோல் ஷெல்பி (மேட் டாமன்), ரேஸ் ஓட்டுநரான கென் மைல்ஸ் ( கிரிஸ்டியன் பாலே) என்ற இரு நண்பர்கள் கார்ப்பரேட் அரசியல், அதன் உள்ளடி வேலை அத்தனையையும் தாண்டி ஃபோர்டின் கனவை எப்ப்படி நிஜமாக்கினார்கள் என்ற கோணத்திலும் அழகாக சொல்லியிருக்கிறது Ford Vs Ferrari திரைப்படம். மேட்டும் பாலேயும் தங்களுடைய திறமையான நடிப்பினால் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறார்கள்.
ரேஸ் காதலர்களான ஷெல்பியும் மைல்ஸும் சேர்ந்து ஃபோர்டின் ரேஸ் காரில் உள்ள பிரச்னைகளை ஒவ்வொன்றாக சரி செய்கிறார்கள். ஆனால் மைல்ஸுக்கு பதிலாக வேறொரு டிரைவரை வைத்து போட்டிக்குச் செல்கிறது ஃபோர்ட். தோல்வி. அடுத்த சந்திப்பில் ஃபோர்ட் தலைவரிடம் ‘ பணத்தால் வெற்றியை வாங்க முடியாது' என்பார் ஷெல்பி. அதை ஷெல்பி சொல்லும் இடமும் முறையும் அத்தனை சிறப்பு. ரேஸ் காரில் சும்மா ஒரு ரவுண்ட் போய் வரலாம் என்று ஃபோர்ட்டை அமர வைத்து ஷெல்பி அவருக்கு ரேஸ் என்பது என்ன என்று சொல்லாமல் புரிய வைப்பார். மைல்ஸ் ஓட்டினால் வெற்றி நிச்சயம் என்று சொல்லி அதற்காக தன்னுடைய சொந்த நிறுவனத்தையே பணயமாக வைக்கிறார் ஷெல்பி. அமெரிக்கன் டேயடோனா ரேஸில் மைல்ஸ் ஜெயித்தால் அவர் ஃபோர்ட் சார்பில் லீ மான்ஸில் பங்கேற்கலாம், இல்லையெனில் ஷெல்பி அவர் நிறுவனத்தை ஃபோர்டுக்கு கொடுத்துவிட வேண்டியதுதான். இந்த சவாலை நண்பர்கள் இருவரும் இணைந்து தாண்டுகிறார்கள்.
நிஜ கதையை கொஞ்சம் கூட போரடிக்காமல் விறுவிறுப்பாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர் ஜேம்ஸ் மேன்கோல்ட். ரேஸ் காட்சிகளில் காரில் நம்மையும் அமர வைத்து ஓட்டுவது போல கேமராவும் இசையும் பரவசப்படுத்துகிறது. படம் முடியும்போது இரண்டு கார் நிறுவனங்களுக்கான படமாக இல்லாமல் ரேஸ் கார் ஓட்டுபவரின் வாழ்க்கை சித்திரமாக நம் மனதில் படம் பதிவாவதில் இயக்குநர் வெற்றி பெறுகிறார்.
இந்த வருட ஆஸ்கர் ரேஸில் ஃபோர்ட் வெர்ஸஸ் பெராரியை எதிர்பார்க்கலாம்.
ஜனவரி, 2020.