பணக்காரர்களிடம் ஏமாறும் வங்கிகள், ஏழைகளை நசுக்குகின்றன!

பணக்காரர்களிடம் ஏமாறும் வங்கிகள், ஏழைகளை நசுக்குகின்றன!
Published on

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, ஜம்புக் குட்டப்பட்டி கிராமத்தினைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மூத்த பிள்ளை கண்ணதாசன் அர்மேனியா நாட்டில் மருத்துவப்படிப்பிற்கான இடத்தினைப் பெற்றார். அங்கே படிக்கையில் நான்காம் ஆண்டுக்கு கல்விக்கட்டணம் செலுத்த வங்கிக்கடன் கிடைக்கவில்லை. மனம் வெறுத்துப் போய் அங்கேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்தவர் மாணவர் லெனின். சிவில் என்ஜினியரிங் படிப்புக்காக தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் லெனின் கடன் பெற்றார். கட்டவேண்டிய பணமோ ரூ.1.90 லட்சம். அதை உடனடியாக திருப்பிச் செலுத்த லெனின் பெற்றோருக்கு வங்கி நெருக்கடி கொடுத்தது. தனியார் வசூல் ஏஜென்ட் மூலம் லெனின் மதிப்பெண் சான்றிதழ்களையும் பறித்துச் செல்லப்பட்டன. இதனால் மனம் உடைந்த லெனின் தற்கொலை செய்துக்கொண்டார்.

இப்போது இந்தச் செய்திகளையும் படியுங்கள்.

பிரபல சர்வதேச வைர நகை வியாபாரி நிரவ் மோடியும் அவரது தாய்மாமனும் கீதாஞ்சலி நகை நிறுவன எம்டியுமான  மெஹுல் சௌஸ்கியும், பஞ்சாப் தேசிய வங்கியில் கோல்மால் செய்து அடித்துக்கொண்ட போன தொகை தலை சுற்ற வைக்கும் அளவுக்குப் பெரியது. 11,400 கோடி. அவர் மீது இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டு வழக்குப் பதியப்பட்டபோது அவர் நாட்டிலேயே இல்லை. குடும்பத்துடன் ஊரை விட்டுச் சென்றிருந்தார். என் தொழிலே இப்போது உன்னால் பாதிக்கப்பட்டுவிட்டது என்று பஞ்சாப் தேசிய வங்கிக்கு கடிதம் வேறு எழுதி இருக்கிறார். வங்கி அதிகாரிகள்தான் வரிசையாகக் கைதாகிக் கொண்டிருக்கிறார்கள்.

ரோடோமேக் பேனா கம்பெனி உரிமையாளர்  விக்ரம் கோத்தாரி, அவரது மகன் ராகுல் கோத்தாரி ஆகிய இருவரை சமீபத்தில் சிபிஐ கைது செய்தது. காரணம் அவர்கள் ஏழு வங்கிகளை சுமார் 3695 கோடி ரூபாய் (வட்டியும் சேர்த்து) அளவுக்கு ஏமாற்றி இருக்கின்றனர்.

சில ஆயிரங்கள், சில லட்சங்கள் கடன் வாங்கிய அல்லது கடன் வாங்க முடியாத ஏழைகள் தற்கொலை செய்துகொள்வதையும் பார்க்கிறோம். ஆயிரக்கணக்கில் நிறுவனங்கள் மூலமாக வங்கிகளுக்கு  தெரிந்தே திட்டமிட்டு அல்வா கொடுக்கும் மனிதர்கள் பெருந்தொழிலதிபர்களாக இருப்பதையும் காண்கிறோம். வங்கி அதிகாரிகளும் அரசியல் வர்க்கமுமே இந்த மோசடிக்கு உறுதுணையாக இருக்கின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவின் பொதுத்துறை வங்கிகள் மோசடிகளால் இழந்த தொகை மொத்தம் 66,000 கோடி ரூபாய் என்று  ரிசர்வ் வங்கி அறிக்கை சொல்கிறது.  2013 முதல் 2017 வரையிலான நான்கு ஆண்டு கால கட்டத்தில் 17, 504  வங்கி மோசடி வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆவணங்கள் கூறுகின்றன.   ஜனவரி 2015 முதல் மார்ச் 2017 வரையிலான காலகட்டத்தில் வங்கி அதிகாரிகள் மீது பதியப்பட்ட மோசடி வழக்குகள் 5200. அதாவது ஒவ்வொரு நான்கு மணி நேரத்துக்கும் ஒரு பொதுத்துறை வங்கி அதிகாரி மோசடியில் சிக்குகிறார் என்று இதற்கு அர்த்தம்.  

பொதுத்துறை வங்கிகள் பல பெருநிறுவனங் களுக்கு சுரங்கம், உள் கட்டமைப்பு போன்ற தொழில்களுக்கு கடன் வழங்குகின்றன. ஆனால் அரசின் கொள்கை முடிவுகள், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் போன்றவற்றால் தொழில் முடங்கும்போது பணப்புழக்கமும் குறைந்து வங்கிகள்  கடனை வசூலிக்க முடியாமல் இழப்பை எதிர்கொள்கின்றன. இது ஒரு புறம் இருக்கையில் தெரிந்தே கடன் வாங்கி மோசடி செய்யும் போக்கும் அதிகரிக்கிறது. சிபிஐ முன்னாள் இயக்குநர் ஒருவர் 2013&ல் அளித்த அறிக்கையில் கடந்த மூன்று ஆண்டுகளில் வங்கி மோசடிகளில் தொடர்புடைய தொகை 324 சதவீதம் அதிகரித்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். 50 கோடிக்கும் அதிகமான தொகைகளை மோசடி செய்வது பத்து மடங்கு அதிகரித்திருப்பதாகவும் அவர் கூறுகிறார். பொதுத்துறை வங்கிகளில் 3 கோடிக்கும் மேல் மோசடி என்றால் அந்த வழக்கு சிபிஐ வசம்தான் வந்து சேரும்.

வங்கிகளைப் பொறுத்தவரை இவ்வளவு அதிகமான தொகையில் மோசடி நடக்க மேலதிகாரிகளின் கண்காணிப்புப் போதாமை, வங்கி அதிகாரிகளே மோசடிக்கு உடந்தையாக இருப்பது, பலவீனமான கட்டுப்பாட்டு முறைகள், மோசடி நடக்கப்போகிறது என்பதை ஆரம்பத்திலேயே கண்டறியும் வழிமுறைகள் இல்லாதது இந்தியாவிலும் வெளிநாட்டிலும் இருக்கும் வங்கிகளிடையே ஒத்துழைப்பு இன்மை போன்றவற்றை  இதுபற்றி ஆய்வு செய்த பெங்களூரு ஐஐஎம்  குழு ஒன்றின் ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அத்துடன் நிதி மோசடியில் சம்பந்தப்பட்டவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுப்பதற்காக ஆதாரங்களைத் திரட்டுவது பெரும் சிரமம் என்றும் அதற்கான தனித்திறமை வாய்ந்த காவல் அதிகாரிகளே குறைவு என்றும் இந்த அறிக்கை கூறுகிறது. இப்போது தெரிகிறதா நாட்டில் வங்கிகளை ஏமாற்றியதாக நிதி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் எல்லாம் வெளியே சுற்றிக்கொண்டிருப்பதன் ரகசியம்?

மோசடிகள் ஒருபுறம் இருக்க, வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிக்கட்டாதவர்கள் அல்லது கட்ட முடியாதவர்கள்  இன்னொரு பக்கம். இதில் 57 பேர் மட்டும் மொத்தமாக சுமார் 87,000 கோடி ரூபாயைத் திருப்பிச் செலுத்தாமல் இருக்கிறார்கள்.  இது ரிசர்வ் வங்கியின் கணக்கீடு. ஒரு பொதுநல வழக்கில் உச்சநீதிமன்றம் 2016&ல் கேட்டது, இவ்வளவு கோடி ரூபாயை திருப்பிச் செலுத்தாமல் இருக்கிறார்களே.. இவர்கள் எல்லாம் யார் யார் என்று பெயர்களை வெளியிட வேண்டியதுதானே என்று. ரிசர்வ் வங்கி இவர்கள் எல்லாம் வேண்டுமென்றே கடனை திருப்பிச் செலுத்தாமல் இருக்கிறார்கள் என்று சொல்லமுடியாது.. அதனால் பெயர்களை வெளியிடவில்லை என்று!  கடைசியில் இந்த பெயர்களை வெளியிடுவதால் ஒன்றும் பலன் விளையப்போவதில்லை. கடனை வசூலிக்கும் முறைகளை மேம்படுத்துங்கள் என்று சொல்லி அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

கடைசியாக 2017 - ல் ரிசர்வ் வங்கி சொன்னபடி இந்திய பொதுத்துறை வங்கிகளின்  வாராக்கடன் தொகை 7.34 லட்சம் கோடிகளாக உயர்ந்து நிற்கிறது. இதில் பெரும்பங்கு பெரு நிறுவனங்கள் வாங்கிக்கொண்டு திருப்பி செலுத்தாத தொகை!

மதுரை அவனியாபுரம் லெனின்கள் கல்விக் கடனை செலுத்த முடியாத நிலையில் தற்கொலை செய்துகொள்கின்றனர்!  கடன் வாங்கிவிட்டு மோசடி செய்யும் பெருநிறுவன முதலாளிகள் எல்லா வசதிகளுடன் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிடுகிறார்கள் இது தான் இன்றைய நிலவரம்!

இதனிடையே இன்னொரு முக்கியமான பிரச்னையும் உள்ளது. அது விவசாயிகளுக்குக் கொடுக்கப்படும் கடன் தள்ளுபடி.  2015 -ல் தேசிய குற்ற ஆவணக்காப்பகத் தகவல்படி தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளில் 80 சதவீதம் பேர் வங்கிகளிலும் சிறு கடன் நிறுவனங்களிலும் கடன் வாங்கி நொடித்துப்போனவர்களே. ஐக்கிய ஜனதா தள மாநிலங்களவை உறுப்பினர் பவன் வர்மா 2016 ஆம் ஆண்டு மாநிலங்களவையில் கூறியதை  இந்த இடத்தில் நினைவூட்டுவது பொருத்தமாக இருக்கும். ‘‘ இந்த நாட்டில் ஒட்டுமொத்தமாக விவசாயிகள் திருப்பிச் செலுத்தவேண்டிய பயிர்க்கடன் 74000 கோடிகள். ஆனால் ஐந்தே ஐந்து பெரு நிறுவனங்கள் மட்டும்  இதை விட சுமார் இருமடங்கு அதாவது 1.4 லட்சம் கோடிகளை திருப்பிச் செலுத்தவேண்டி இருக்கிறது.''

மாதவராஜ்
மாதவராஜ்

”இந்த அயோக்கியத்தனத்தை பற்றி பேசக் காணோம்!”

மாதவராஜ்

பஞ்சாப் நேஷனல் வங்கிக் கொள்ளைக்காரன் நீரவ் மோடி வெளிநாடு தப்பித்துச் சென்றதும் அல்லாமல், ‘வங்கிக்கு செலுத்த வேண்டிய தொகையை திரும்பச் செலுத்துவதற்கு இருந்த வாய்ப்புகளை வங்கி அடைத்து விட்டது. எனது பிராண்டுகளின் மீது இருந்த நன்மதிப்பை கெடுத்து விட்டது' என தெனாவெட்டாக குற்றம் சாட்டுகிறான். இந்த அயோக்கியத்தனத்தை பற்றி பேசக் காணோம்.

ஆட்சியில் இருக்கும் பிஜேபி அரசின் அனுமதியோடு நடந்த கொள்ளை என்பதையும், பிரதமர் மோடி இதுகுறித்து வாயைத் திறக்காமல் இருப்பது குறித்தும் பேசக் காணோம்.

ஆனால் ஊடகங்களோ, ''அதில் சம்பந்தப்பட்ட வங்கி ஊழியர்கள் மீது நடவடிக்கை'' என்பதையே முக்கியச் செய்திகளாய் வெளியிடுகின்றன. கோடிக்கணக்கில் நடந்திருக்கும் பரிவர்த்தனைகளில் அந்த மோசடி ஃOக்களில் சம்பந்தப்பட்டது வங்கியின் ஒரு சில உயரதிகாரிகளே. ஆனாலும் ‘ஊழியர் , ஊழியர்' என்றே பொதுவெளியில் அறிவிப்பது, சாதாரண வங்கி ஊழியர் மீது வெறுப்பை ஏற்படுத்த அல்லது கட்டமைக்க முயற்சிப்பதே ஆகும்.

அதுபோலவே ‘பஞ்சாப் நேஷனல் வங்கியின் 18000 ஊழியர்கள் பணி மாற்றம் செய்ய அதிரடி உத்தரவு' என்று வெளியிடப்படும் செய்திகளில், ‘‘எதோ இந்த ஊழியர்களால்தான் இவ்வளவு பெரிய மோசடி'' நடந்திருப்பது போல சித்தரிப்பதே ஆகும்.

கார்ப்பரேட் கிரிமினல்களை அம்பலப்படுத்தாமல், அப்பாவித் தொழிலாளர்களை இப்படி மோசமாக முன்னிறுத்துவதை முழு நேரப் பணியாகச் செய்கிறது இந்த முதலாளித்துவ அமைப்பு.

மாதவராஜ்  (பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள்  சங்கப் பொதுச்செயலாளர்) முகநூலில்

மார்ச், 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com