பட்டதாரிகளைத்தான் உருவாக்குகிறோம்; பொறியாளர்களை அல்ல

ஈ.பாலகுருசாமி
ஈ.பாலகுருசாமி
Published on

இந்தியாவில் ஆண்டுதோறும் பதினாறு லட்சம் பேர் பொறியியல் பட்டதாரிகள் உருவாகிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 2 லட்சம் பேர். நாட்டின் தேவையை விட மிக அதிகமான பொறியியல் பட்டதாரிகளை நாம் உருவாக்குகிறோம். இதனால் வேலைவாய்ப்பின்மையை அவர்கள் சந்திக்க நேருகிறது. இன்னொருபுறம் தரம்வாய்ந்த அதாவது வேலைக்குத் தேவையான திறன்களைக் கொண்ட பொறியியல் பட்டதாரிகளை உருவாக்குவதில் கல்லூரிகள் பின் தங்கி உள்ளன. பொறியாளர் ஆவதற்கான படிப்பறிவை அரைகுறையாகச்

சொல்லித் தருகிறோமே தவிர அதற்குரிய திறனை வளர்ப்பதில்லை. இந்தியாவில் உருவாகும் பொறியாளர்களில் 80 சதவீதம் பேர் வேலை செய்வதற்கு லாயக்கற்றவர்கள். பலருக்கு வேலை கிடைக்கவில்லை என்றால் அதற்கு காரணம் அவர்களுக்கு வேலை செய்யும் திறன் இல்லை! ஒரு பக்கம் நிறைய பொறியாளர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள்! இன்னொரு பக்கம் தரமான பொறியாளர்கள் வேலைக்குக் கிடைப்பதில்லை என்று தொழில்துறையினர் கூறுகின்றனர்.கடந்த இருபது ஆண்டுகளில் தயாரிப்புத்துறை வளரவில்லை! அங்கு வேலைவாய்ப்புகளும் உயரவில்லை. இதுவும் ஒரு முக்கியக் காரணம்.

தரம் என்று வருகையில் சர்வதேச தரத்துக்குக் கீழ்தான் பொறியாளர்களை உருவாக்குகிறோம் என்றுதான் சொல்லவேண்டும். தரமான ஆசிரியர்கள் தனியார் பொறியியல் கல்லூரிகளில் இல்லை. ஏனெனில் சம்பளம் குறைவு. வேறெங்கும் வேலை கிடைக்காதவர்கள்தான் அங்கு செல்கிறார்கள். (இதற்கு விதிவிலக்கான ஆசிரியர்கள் இருக்கலாம். நான் அவர்களைச் சொல்லவில்லை!) பாஸ் மார்க் வாங்கினால் போதும். பொறியியல் சேரலாம் என ஏ.ஐ.சி.டி.இ அனுமதித்துவிட்டது! இவ்வளவு குறைவாக மதிப்பெண் வாங்குகிறவர்களின் திறமையும் குறைவாகத்தானே இருக்கும்? கணிதம் உள்ளிட்ட பாடங்களில் திறமையும் வேண்டும் அல்லவா? ப்ளஸ் டூவில் அதிகம் மதிப்பெண் வாங்குகிறவர்கள்தான் விருப்பத்துடன் படிக்கும் போது திறமையான பொறியாளர்களாக உருவெடுக்க முடியும். இப்போது நிறைய கல்லூரிகள் இருப்பதால் எளிதாக இடம் கிடைக்கிறது. ப்ளஸ் டூவில் பாஸ் பண்ணினாலே போதும்! பொறியியல் சேர்ந்துவிடலாம். தனியார் கல்லூரிகளுக்கு இப்படி தகுதி மதிப்பெண்ணைக் குறைத்தால்தானே மாணவர்கள் கிடைப்பார்கள்! எல்லாம் ஊழல்தான் என்று சொல்லவேண்டும்!

நாம் பொறியியல் பட்டதாரிகளைத்தான் உருவாக்குகிறோம்; பொறியாளர்களை அல்ல என்று நான் சொல்வதுண்டு! தேவையான திறன், அறிவு இருந்தால்தான் பொறியாளன் ஆகமுடியும்! இது இல்லாமல் வெறும் தேர்வுகளை மட்டும் பாஸ் செய்தால் அவன் பட்டதாரி மட்டுமே! இது ஒரு சமூகப்பிரச்னையாக உள்ளது.

பொறியியல் கல்லூரிகளின் கட்டமைப்பு, கல்வி, அதில் சேரும் மாணவர்கள் ஆகிய மூன்று அம்சங்களிலும் தரத்தை உயர்த்தவேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். அகில இந்திய அளவில் மத்திய மாநில அரசுகள் சேர்ந்து தயாரிப்புத்துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கினால்தான் இவ்வளவு பேருக்கும் ஒரளவுக்கு வாய்ப்புகளை உருவாக்க முடியும்.

தமிழ்நாட்டில் உள்ள பொறியல் கல்லூரிகளில் 40 சதவீதம் கல்லூரிகள் போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் மூடப்படும் தகுதியில் இருக்கின்றன.

ஒரு ப்ளஸ் டூ மாணவன் பொறியியல் படிக்க ஆசைப்பட்டால் அவனுக்கு கணிதம், அறிவியல் இரு பாடங்களும் நன்றாக வருமா என்று பார்க்கவேண்டும். ஆசைப்பட்டால் மட்டும்போதாது. உங்கள் திறமையைப் பொறுத்து படிப்பைத் தேர்வு செய்யவேண்டும். பொறியியல் அதில் ஒன்று. பெற்றோரின் பேராசைதான் மாணவர்களைப் பொறியியல் கல்லூரிகளுக்குத் தள்ளுகிறது. மாணவர்களின் திறன், ஆர்வம் இவற்றைப் பார்ப்பது முக்கியம்.

 (ஈ.பாலகுருசாமி, முன்னாள் துணைவேந்தர், அண்ணா பல்கலைக்கழகம், நமது செய்தியாளரிடம் கூறியது)

ஜூலை, 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com