பழைய நினைவுகளில் மூழ்குவது நல்ல பழக்கமா, இல்லையா? அறுபதாண்டு இங்கே உயிர்த்து இருந்தாலும் இன்னும் சரியாகத் தெரியவில்லை. நனவிடை தோய்தல் என்று கவித்துவமாகச் சொன்னாலும், ‘நினைவுச் சந்து வழியே நடை' என்று ஆங்கிலத்தில் அனுபவம் பகிர்ந்தாலும் அதேபடிதான்.
'அந்தக் காலத்திலே' என்று ஆரம்பித்தால் ஃபேஸ்புக், சினிமா, நாடகம், பத்திரிகைக் கதையெல்லாம் களைகட்ட ஆரம்பித்து விடும். ஆயிரம் பேர் அந்தக் காலம் பற்றிப் பேசியிருந்தாலும், எழுதியிருந்தாலும், படம் பிடித்துக் காட்டியிருந்தாலும், புதுக் குரல் கேட்டதும் உற்சாகமாக ஓடி வந்துவிடுவோம்.
நாஸ்டால்ஜியாவில் ஒரு பிரிவு நாம் இல்லாமல் போன பழைய காலத்தையும் ஆதூரத்தோடு நினைத்து, 'அதெல்லாம் பொற்காலம்' என்று ஏங்குவது. 1943-ஆம் வருட கல்கி தீபாவளி மலரை டிஜிட்டலாகப் புரட்டும்போது, மயிலாப்பூர் காத்தாயி ஜவுளிக்கடை விளம்பரம் போதும், பங்குபெறாத காலத்தின் ஊகங்கள் கவிந்து கதகதப்பாக அணைத்துக் கொள்ள. அதே மலரில் நாலு பக்கம் தள்ளி ஆபீஸர்ஸ் மூக்குத்தூள் விளம்பரம் பார்த்ததுமே அடுக்குத் தும்மல் போட வைத்துவிடும். மூக்கு குறுகுறுவென்று அரிக்க, அந்தப் பொடி மொத்தமாகவும் சில்லறையாகவும் எனக்குச் சொந்தமில்லாத நினைவாகக் கடந்து நாசிக்குள் வரும்போது அது மூக்கு சம்பந்தமான 'நோஸ்'டால்ஜியா.
விழாக் காலம் நாஸ்டால்ஜியா விரைவாகப் பரவும் நேரம். அதுவும் முகநூல் வந்த பிறகு தீபாவளிப் பண்டிகைக்கு ஒரு வாரம் முன்பிருந்தே சகலருக்கும் கால யந்திரத்தில் பயணம் ஆரம்பமாகிறது. எழுதுகிறவரின் வயதைப் பொறுத்து அமைவதில்லை இந்த நாஸ்டால்ஜியா. எழுத்து வன்மை உருவாக்கும் சித்திரம் இது. நாற்பது வயதுக்காரரின் பத்து வயது நினைவுகள் எழுபது வயதுக் காரரின் எட்டு வயது நினைவுகளோடு ஒரே தட்டில் உட்கார்ந்து வரும். பலரும் சித்திரிக்கும் பழைய உலகங்களில் மருந்துக்குக் கூட கெட்டவர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். ஒலி ரூபமாகவும், வாடையாகவும், கற்பனை விரித்துக் கொடுத்த காட்சிகளுமாக இந்த நாஸ்டால்ஜியா எழுதி முடித்து வெளியிட்டதும், நூறு பேர் அதே மனவெளியில் உடனே கடந்து போய் 'லைக்' போட்டு அந்த அனுபவத்தையும் அதற்கு மேலும் உள்வாங்கி, இன்னும் விரிவாக நினைவுக் கேசரி கிளறுவார்கள்.
நண்பர் உலக நாயகர் சொன்னார் - ‘‘இந்த நாஸ்டால்ஜியா கண்ணை இருட்ட வச்சு கற்பனையை நிசம்னு காட்டி, நேரம் பறிக்குது. அதோட சங்காத்தமே வேணாம்னு தான் நான் சொந்த ஊர்லே வீட்டையே வித்துட்டேன்''. விற்றால் வராதா நினைவுகளின் ஊர்வலம்? நடு ராத்திரிக்கு கனவாக வந்து வாசல் தாண்டி நடக்க வைத்து சமையல்கட்டு நிலையில் தலை இடிக்க வைத்துப் போகிற நாஸ்டால்ஜியா எனக்கு மட்டுமா அனுபவமாகிறது? அவர் உலகச் சிந்தனையாளர். என்றாலும் சந்தித்துப் பேசும்போது ஒரு முறையாவது எங்கள் செம்மண் பூமிக்கும் அவரது முகவை மண்ணுக்கும் வரலாற்று ரீதியாக ஏற்பட்ட மருதநாயகம் காலத்து உரசலை நினைவு கூராமல் இருக்க மாட்டோம். ‘வரலாறும் நாஸ்டால்ஜியாதான். அதை சரியாக எழுதாவிட்டால் தப்பும் தவறுமாக தானே எழுதிக் கொள்ளும்' - அவர் தான் சொன்னார். இன்னும் இருபது வருடம் கழித்து இது என் நாஸ்டால்ஜியாவாகலாம்.
டிசம்பர், 2018.