சி ங்கள கடற்படை கொமோடாராக பதவி வகித்த அஜித் போயகொட ஒரு நூல் எழுதியிருக்கிறார். அதன் பெயர் ‘நீண்ட காத்திருப்பு' நான் அந்த நூல் பற்றி ஒன்றும் இங்கே எழுதப் போவதில்லை. அதில் மனதை தொட்ட ஒரு சம்பவத்தை சொல்லலாம் என நினைக்கிறேன்.
புலிகளுடன் ஏற்பட்ட சண்டையில் இவருடைய கப்பலை அழித்து புலிகள் இவரை சிறையில் அடைத்துவிடுகிறார்கள். எட்டு வருடம் கழித்து விடுதலையான பின்னர் இவர் தன் வீட்டுக்கு திரும்புகிறார். வீட்டிலே ஒரே பரபரப்பு. எல்லோரும் பதற்றத்தில் இருக்கிறார்கள். இவருடைய கடைசி மகனை இவர் பார்த்தது கிடையாது. அவனுக்கு 8 வயது நடக்கிறது. அந்தச் சிறுவன் ஆண்களை எல்லாம் ‘அங்கிள், அங்கிள்' என்றே அழைத்துப் பழகிவிட்டான். எங்கே அவனுடைய அப்பாவை இவன் ‘அங்கிள்' என்று அழைத்துவிடுவானோ எனப் பயந்து முதல்நாள் முழுக்க அவனுக்கு பயிற்சி அளிக்கிறார்கள். அவன் ‘அப்புச்சி, அப்புச்சி' என்று நாள் முழுவதும் மனனம் செய்கிறான்.
எனக்கும் அப்படி ஒரு பெயரை மனப்பாடம் செய்ய வேண்டிய தேவை சமீபத்தில் வந்தது. முன்பின் தெரியாத ஒருவரிடமிருந்து கம்ப்யூட்டரில் ஒரு தகவல் வந்தது. என்னுடைய தொழில்நுட்ப அறிவு மிகவும் குறைச்சலானதால் நான் இப்படி வரும் செய்திகளுக்கு பதில் அனுப்புவது கிடையாது. வந்த தகவல் இதுதான். ‘நான் உங்கள் புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிறேன்.' ஏதோ ஆர்வம் பிடித்து உந்த அன்றைக்கு அதிசயமாக ‘என்ன புத்தகம்?' என்று எழுதினேன். பதில் இல்லை. இரண்டு மணி நேரம் கழித்து பதில் வந்தது. ‘எங்கே இருக்கிறீர்கள்?' என்று கேட்டு எழுதினேன். மறுபடியும் நீண்ட மௌனத்தின் பின்னர் ‘பாரிஸ்' என்று பதில் வந்தது. ஆச்சரியமாயிருந்தது. உங்கள் பெயர் என்ன என்று எழுதினேன். அன்று முழுக்க பதில் இல்லை. அத்தனை நீளமான பெயரா? எழுத இவ்வளவு நேரம் எடுக்கிறதே! கம்ப்யூட்டரை மூடிவிட்டு படுத்தேன்.
அடுத்த நாள் காலை பார்த்தேன். பதில் கிடையாது. மூன்றாவது நாள் பதில் வந்தது. இப்படி பத்து கேள்விகளுக்கு பதில் பெற மூன்று நாட்கள் எடுத்தன. எல்லாம் விசித்திரமாயிருந்தது. ஒவ்வொரு முறையும் வேறு வேறு பெயரில் பதில் எழுதினார். நான் களைத்து ஓய்ந்து போனபோது திடீரென்று ஒரு கேள்வி அவரிடமிருந்து வந்தது. ‘ரொறொன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு எப்படி பணம் அனுப்புவது?' இதற்கு பதில் எழுதினால் இரண்டுநாள் கழித்துதான் அலுப்பான பதில் வரும். எனினும் torontotamilchair.ca இணையதளத்துக்கு சென்று பணம் அனுப்பலாம் என்று எழுதிவிட்டு மறந்துபோனேன். அன்று மாலையே ஒரு சொல் பதில் வந்தது, ‘அனுப்பிவிட்டேன்.' ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தை அழைத்து பாரிசிலிருந்து பணம் வந்ததா என்று கேட்க, அவர்களும் அதை உறுதிசெய்தார்கள், ஆனால் வேறு பெயரில் பதிவாகியிருந்தது. எல்லாமே புதிர்தான். இவருடைய உண்மையான பெயர் இதுதான் என்று புரிந்தது. பல பெயர் குழப்பங்கள் இருந்ததால் கடைசியாக வந்த பெயரை நான் மனப்பாடம் செய்தேன். உங்களுடன் பேசவேண்டும், டெலிபோனில் அழையுங்கள் என்று செய்தி அனுப்பினேன்.
நான் எதிர்பார்க்கவே இல்லை இந்த மர்மமான மனிதரிடம் இருந்து தொலைபேசி வரும் என. இவர் 17 வயதில் ஈழத்திலிருந்து அகதியாக பாரிசுக்கு வந்து 18 வருடமாக அங்கே வாழ்கிறார். ஈழத்தில் வாழ்ந்த நாட்களிலும் பார்க்க அதிக நாட்களை பாரிசில் கழித்துவிட்டார். ஆனாலும் அவருக்கு பிரெஞ்சு மொழி கொஞ்சம்தான் தெரியும். ஆங்கிலமும் அப்படியே. நல்ல தமிழில் பேசுகிறார். முதலில் உணவகத்தில் கோப்பை கழுவும் வேலை பார்த்தார். அதிலே சம்பளம் குறைவு; சுதந்திரமும் கிடையாது. இப்பொழுது டாக்சி ஒட்டுகிறார். டாக்சி ஓட்டும்போது குறுஞ்செய்தி தகவல் அனுப்ப முடியாது. ஆகவே சவாரி முடிந்து ஓய்வாக இருக்கும்போது பதில் எழுதுவார் அல்லது ஏதாவது படிப்பார். சிலவேளைகளில் காரில் பயணி இருக்கும்போதே சிக்னல் விளக்கில் நிற்கும்போது அவசரமாக ஒரு வார்த்தை செய்தி அனுப்புவார். அது சட்டத்திற்கு விரோதம்.
‘உங்களுக்கு பெரிதாக பிரெஞ்ச் மொழி தெரியாது, எப்படி சமாளிக்கிறீர்கள்?' ‘இதிலே என்ன பிரச்சினை? எங்கே போகிறீர்கள்? காசா கிரெடிட் கார்டா? என்று கேட்கத் தெரியவேண்டும். வேறு ஒன்றும் தேவையில்லை. தமிழ்தானே என் மொழி. பிழைப்புக்காக இரண்டு பிரெஞ்சு வசனத்தை பாடமாக்கி வைத்திருக்கிறேன்.'
‘டாக்சி ஓட்டுவதற்கு உரிமம் பெறுவது கடினம் என்று சொல்கிறார்களே?' ‘உண்மைதான். ஒருவருடமாக 2000 யூரோ கட்டிப் படித்த பின்னர் நடந்த பரீட்சையில் பெயிலாகிவிட்டேன்.' ‘எப்படி?' ‘டாக்சி ஓட்டுநருக்கு எல்லா ரோட்டுப் பெயரும் தெரிந்திருக்கவேண்டும். அதிலே சின்னப் பிழை விட்டுவிட்டேன்.' ‘அடுத்த தடவை சித்தியடைந்தீர்களா?' ‘இல்லை, வருமான வரி கேள்வியில் பெயிலாகிவிட்டேன்.' ‘வருமான வரியா? டாக்சி ஓட்டுவதற்கும் வருமான வரிக்கும் என்ன சம்பந்தம்?' ‘டாக்சி ஓட்டினால் என் தொழிலுக்கு நானே முதலாளி. ஒரு முதலாளிக்கு எவ்வளவு வருமானத்துக்கு எத்தனை வரி என்ற கணக்கு தெரிந்திருக்க வேண்டும். அடுத்த தடவை வெற்றி பெற்றுவிட்டேன்.'
‘கொரோனா சமயத்தை எப்படி சமாளிக்கிறீர்கள்?' ‘மிகவும் மோசம், வாடிக்கையாளர்கள் பாதியாக குறைந்துவிட்டார்கள். ஆனாலும் கிரமமாக உரிமக்காரருக்கு நான் காசு கட்டவேணும்.' ‘உங்கள் மனைவி வேலை செய்கிறாரா?' ‘அதிலே ஒரு பிரச்சினை. என் மகனுக்கு அபூர்வமான வியாதி. நானும் மனைவியும் மாறி மாறி பார்க்கவேணும். மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று பயிற்சியளிக்கவேணும்.'
‘ஓ, அப்படியா? மன்னியுங்கள். கொரோனா சமயம் உங்கள் வருமானம் குறைந்துவிட்டது. செலவும் அதிகம். மகனுடன் மருத்துவமனையில் நேரம் செலவழிக்கவேணும். இந்த சமயத்தில் நீங்கள் தமிழ் இருக்கைக்கு நிதி கொடுக்கவேண்டிய அவசியம் என்ன?' ‘அது முக்கியம் ஐயா. தமிழ் இருக்கை அமைவது பெரிய விசயம். பாரிசில் ஓர் இருக்கை உருவானால் நான் காசு கொடுப்பேன் அல்லவா? இருக்கை எங்கே இருந்தால் என்ன? மொழிக்காகத்தானே நான் நாட்டைவிட்டு துரத்தப்பட்டேன். எங்கள் மொழிக்கு கிடைக்கும் கௌரவம் எனக்கு கிடைத்தது மாதிரித்தான். கொடையாளர் பட்டியலில் என் பெயரும் இருக்கவேணும்.'
தொலைபேசியை வைத்தபின்னர் யோசித்தேன். இந்த அருமையான மனிதருடைய மகன் பெயரை கேட்க மறந்துவிட்டேன். உடனேயே குறுஞ்செய்தி அனுப்பி அவருடைய மகன் பெயர் என்னவென்று கேட்டேன். அது நேற்று. ‘அப்புச்சி, அப்புச்சி' என நாள் முழுக்க மனனம் செய்த சிறுவனின் வயதுதான் இவருடைய மகனுக்கும். அதிகாலை ஐந்து மணிக்கே திறந்து வைத்த கம்புயூட்டர் வழியாக அவருடைய பதில் இன்று வரும் எனக் காத்திருக்கிறேன். சிலவேளை நாளை வரலாம்.
ஜூன், 2020.