நிம்மதியா இருக்கேன்

நிம்மதியா இருக்கேன்
Published on

“அடிமையாக இருப்பதை பெருமையாக சொல்வது நம்முடைய இந்திய மனப்பான்மை. பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு கம்பெனிக்காக இரவு பகலாக உழைப்பார்கள். பெற்றோர், மனைவி, குழந்தை யாரையும் கவனிக்க நேரம் கிடையாது. கம்பெனிக்கு நான் ரொம்ப உண்மையா உழைக்கிறேன்னு சொல்றாங்க. எங்க உண்மையா இருக்கணுமோ அங்க இருக்கறதில்ல” அதிரடியாக ஆரம்பிக்கிறார்

சென்னையைச் சேர்ந்த சீனிவாசன். கடைசியாக துபாயில் ஒரு விளம்பர ஏஜென்சியில் மீடியா டைரக்டராக இருந்தவர். இப்போது உழைப்பை வெறுத்து ஒதுக்கி ஓரமாக வைத்திருப்பவர்.

“நான் வெளி நாடுகளில் வேலை பார்த்த போது 5 மணி ஆனால் போதும்.அங்குள்ளவங்க கிளம்பி போய்டுவாங்க. நியூசிலாந்தில் வியாழக்கிழமை சாயந்திரமே கொண்டாட்டம் ஆரம்பமாயிடும். வாரக்கடைசிய குடும்பம் குழந்தைங்களோட ஜாலியா கொண்டாடுவாங்க. விடுமுறை நாட்கள்ல வரும் ஆபிஸ் கால்கள் எல்லாமே வாய்ஸ் மெயிலுக்குத்தான் போகும். அங்கயும் நம்முடைய இந்தியர்கள் தான் விடுமுறை நாட்களிலும் வேலை பார்த்துக்கொண்டு,வெளி நாட்டினரை திட்டிட்டு இருப்பாங்க. நான் விளம்பரத்துறையில் வேலை பார்த்திட்டு இருந்தேன். துபாய்ல வேலை பார்க்கும்போது மேலே சொன்ன அத்தனை பைத்தியக்காரத்தனத்தையும்  நானும் செஞ்சிருக்கேன். ஒரு கட்டத்துல இது போதும்னு தோணிச்சு. அம்மா இந்தியாவிலே தனியா இருந்தாங்க. அவங்க கூட இருக்கணும்னு விரும்பினேன். கல்யாணம், குழந்தைங்க இதிலெல்லாம் விருப்பமே இல்லை. என்னுடைய தேவைக்கு என்ன பணம் தேவையோ அதை சேர்த்த உடன் வேலைய விட்டுட்டு வந்திட்டேன். சின்ன வயசுல இருந்து மியூசிக்   கத்துக்கணும்னு ஆசை. இப்ப ஜாலியா மியூசிக் கத்துட்டு இருக்கேன்” என்கிறார் புன்னகையுடன்.

பிடிச்ச வேலையைச் செய்யுங்கன்னு சொல்வாங்களே? என்று கேட்டோம்.

“நான் ஒரு கிரிக்கெட் பைத்தியம். காலேஜ் முடிச்சிட்டு ரெண்டு வருசம் கிரிக்கெட் மட்டுமே ஆடிட்டு இருந்தேன். எந்த மேட்ச் யார் விளையாடினாலும் பார்ப்பேன்.   சரி, நமக்கு பிடிச்ச வேலை பார்க்கலாம்னு, கிடைச்ச தொடர்பு மூலமா கிரிக்கெட் வீடியோ அனலைசரா இருந்தேன். ஒவ்வொரு பாலையும் விடாம பார்க்கணும், அதை சரியா ரிப்போர்ட் கொடுக்கணும்கிறப்ப, கிரிக்கெட் பார்க்கிற சந்தோசமே போயிடுச்சு. அது வேலைன்னு ஆன பிறகு என்னால ரசிச்சு கிரிக்கெட் பார்க்க முடியல. அந்த வேலைய விட்டுட்டேன்.” சீனிவாசனின் பதிலில் யதார்த்தம்.

“வசதி வாய்ப்புகளற்ற குழந்தைகளுக்கான   தன்னார்வ அமைப்புகளுக்காக நிதி திரட்டுவதற்காக நானாக சில முயற்சிகள் செய்தேன். பிரசன்டேசன் தயார் செய்யறது, எல்லாருக்கும் லெட்டர் எழுதறதுன்னு ஏறக்குறைய முழு நேர வேலை மாதிரி பார்த்தாலும் எதிர்பார்த்த மாதிரி பணம் திரட்ட முடியல. இதுக்கு நாமே வேலை பார்த்து பணம் கொடுத்திடலாம்னு முடிவு செய்து, கொஞ்ச காலம் வேலை பார்த்து அவங்களுக்கு பணம் கொடுத்தேன்.

அடுத்த வேலை சாப்பாடு,குழந்தைங்க பீஸ்,ஹாஸ்பிட்டல் செலவு போன்ற விஷயங்களுக்கு கண்டிப்பாக பணம் வேணும்.ஆனா அதையெல்லாம் தாண்டி மூணு நாலு தலைமுறைக்கு சொத்து சேர்த்த பிறகும் எதுக்கு நிக்க நேரமில்லாம ஓடணும்? இதுதான் எனக்கு நம்ம ஊர் ஆளுங்க கிட்ட புரியவே இல்லை” என்கிற சீனிவாசன் இப்போது திருவான்மியூரில் இசை கற்றுக் கொண்டு தன் தாயுடன் வசிக்கிறார்.

 வெளிநாட்டில் இருந்து திரும்பியவுடன் ஆரம்பத்தில் பணத்தை மார்க்கெட்டில் முதலீடு செய்தார். தினமும் காலைல மார்க்கெட் என்னாகிறது என்று பார்த்து பிரஷர்தான் அவருக்கு எகிறியிருக்கிறது.  பிறகு இது சரிபடாதுன்னு முடிவு செய்து பணத்தை இப்போ எப்.டி ல போட்டுவிட்டு நிம்மதியாக இருக்கிறார்.

  “இப்படித்தான் இருக்கணும்னு நான் எதுவும் சொல்லல. எனக்கு இது பிடிச்சிருக்கு. மியூசிக் கத்துக்கறேன். கொஞ்ச காலமா யோகா கிளாசும் போறேன்.  உடம்புல ஒரு பிரச்சனையும் இல்ல, நிம்மதியா இருக்கேன்.” முடிக்கிறார் சீனிவாசன்.

நவம்பர், 2012.

logo
Andhimazhai
www.andhimazhai.com