பள்ளிக்கூடம் சென்று கொண்டிருந்தேன். வழியில் மைசூர் மகாராஜா சமஸ்தானத்து பேண்டு வாத்திய குழுவினர் இசைத் துக் கொண்டு இருந்ததைக் கண்டேன். இதில் ஒருவர் சாக்ஸ போன் வாசித்தார். முதல் இசையே என்னை ஈர்த்தது. சாக்ஸபோன் மீது கண்டதும் காதல். வயதோ 14தான்.
‘இதில் சரி கம பத நி வருமா? எங்கே அதை வாசிங்க பார்க்கலாம் ’ என்று சாக்ஸபோன் இசைஞரிடம் கேட்டேன். அவரும் வாசித்தார் , மெய் மறந்து போனேன் . ஆசையாக அதை தடவிப் பார்த்தேன், காதலியை முதன்முதலாக வருடுவதுபோல் உணர்ந்தேன். என் சிற்றுடல் சிலிர்த்து என்னவோ செய்தது.
‘இந்த சாக்ஸபோன் எந்த கடையில் விற்கிறது?’ என்று நான் கேட்டேன் . ஆனால் அந்த கலைஞர் வேண்டா வெறுப்புடன் தட்டிக் கழிப்பது போல பேசிக் கொண்டு இருந்தார்.
அப்போது பக்கத்தில் இருந்த மற்றொரு கலைஞர் தான் அபயகரம் நீட்டினார் . “தம்பி என்னோடு வா, வீட்டில் அட்ரஸ் வைத்து இருக்கிறேன் எடுத்து தருகிறேன்,” என்று நடந்தார். நானோ உணர்ச்சிப் பிழம்பாய் ஊர்ந்து சென்றேன்.
ஒரு வழியாய் அட்ரஸ் கிடைத்தது ஹைதராபாத் சார்மினார் அருகே உள்ள ஒரு கடைக்குக் கடிதம் எழுதினோம், வி.பி.பி தபாலில் சாக்ஸபோன் வந்து சேர்ந்தது , பார்சலைத் திறந்து பார்த்தபோது நான் ஆனந்தக் கூத்தாடினேன், ஆசையோடு மடியில் வைத்துக் கொஞ்சினேன் .
அன்றிலிருந்தே என் வாழ்க்கையை சாக்ஸபோன் இசைக்கு அர்ப்பணம் செய்துவிட்டேன்.
--------
நாரத கானா சபாவில் ஒரு கச்சேரி 2001 - 2002ல் இருக்கும் , மேடையில் நான் சாக்ஸபோன் வாசிக்க - எதிரில் அரங்கின் முன்வரிசையில் சினிமா டைரக்டர் கே.பாலசந்தர் , இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அமர்ந்து கேட்டுக் கொண்டு இருந்தனர். கச்சேரி முடிந்தது. இசைக்கருவிகளை பேக் செய்து கொண்டு இருந்தேன். அப்போது நாரதகானாசபா பொறுப்பாளர் கிருஷ்ணசாமி வந்தார். “சார் உங்களை சினிமா படத்துல இசைஅமைக்க வைக்கப் போறாங்களாம். இதுக்குத் தான் கே.பாலசந்தர் சாரும், ஏ.ஆர்.ரகுமான் சாரும் வந்திருக்காங்க” என்றார்.
“ஓ... பேஷா வாசிக்கலாமே. ஜனங்ககிட்ட ஈசியா சாக்ஸ போனை கொண்டு போகலாமே” என்றேன். அப்போது இசைக்கலை விமர்சகர் சுப்புடு அங்கு வந்திருந்தார்.
“சினிமாவுக்கெல்லாம் வாசிக்கப் போயிடாதீங்க..
கிளாசிக்கல்தான் உங்களுக்கு சூட் ஆகும்” என்றார்.
“சினிமாவுல வாசிச்சு வெகு ஜனங்களை ரீச் பண்றது ஒரு சவால் தான் அதையும்தான் பாத்துடலாமே” என்றேன்..
“சினிமாலேயே மாட்டிட்டா.. அப்புறம் கிளாசிக்கலுக்குதான் லாஸ்” என்று அவர் உதடுகளைப் பிதுக்கிப் பேசினார் .
“ஆனாலும் ஒண்ணுய்யா.. சாக்ஸபோன்ங்கறது யானை மாதிரி இசைகருவி, அதை பூனை மாதிரி பழக்கி வச்சிருக்கீங்க பாருங்க அதுதான் சாதனை” என்றார் சுப்புடு. அந்த மோதிரக்கை குட்டு இன்னும் என் நெஞ்சில் நிலைத்திருக்கிறது
--------
லஸ் கார்னர் முருடீஸ் லாட்ஜில் தான் வாசம். கே.பாலசந்தர் சாரை பார்த்தேன், பேசினேன். அவர் என்னை ஏ.ஆர்.ரகுமான் சாரிடம் அனுப்பி வைத்தார். ஏற்கனவே ஏ.ஆர்.ரகுமான் எனக்கு பரிச்சயமானவர்தான், எனவே பழகுவதில் பேதம் எதுவும் இல்லை.
ஒவ்வொரு ராகமாகவே வாசிக்கச்சொன்னார். நானும் வாசித்துக் காட்டினேன்.அவருக்கு எதிலும் நாட்டம் ஏற்படவில்லை, இறுதியில் நான் ஒரு ராகத்தை வாசித்தபோது ஏ.ஆர்.ரகுமான் துள்ளிக்குதித்தார்.” இது.. இதுதான் நான் எதிர்பார்க்கும் ராகம்.”
”இது கல்யாண வசந்த ராகம்” என்றேன் “தெரியும் நம்ம சிச்சுவேசனுக்கு இந்த ராகம் தான் பொருத்தமா இருக்கும் . வாசிங்க “ என்றார். நானும் வாசித்து முடித்தேன். மறுநாள் வரச்சொன்னார். நானும் போனேன் .
முதல் நாள் நான் வாசித்த ராகத்தை எடுத்து, தன் இதர இசைக்கருவிகளின் இசையையும் கலந்து பிரமாண்டப்படுத்தி இருந்தார். “நான் வாசித்த ராகம் தானா?” என்று எனக்கே ஆச்சர்யம், இந்த இசையைத் தான் டூயட்’ படத்தில் டைட்டிலில் வைத்தார்கள், கடலோசையுடன் சேர்ந்து அலைகளுடன் விளையாடுவது போல அந்த இசை அமைந்திருந்தது.
ஏ.ஆர்.ரகுமானும் பெருந்தன்மையோடு டைட்டிலில் என் பெயரையும் போடச் செய்து பெருமைப்படுத்தினார்.
இத்துடன் ஒரு பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியனுடன் சேர்ந்து கம்போஸிங் செய்திருந்தோம். அந்தப் பாடலுக்கு ஏற்ப சாக்ஸபோன் வாசிக்க வேண்டும். அதற்குரிய பாவங்களை காட்டவேண்டும் என்பது தான் டைரக்டர் கே.பாலசந்தர் சாரின் எண்ணம்.
ஆனால் கடைசியில் “கொஞ்சும் சலங்கையில் ஜெமினி சாரும் தில்லானா மோகனாம்பாளில் சிவாஜியும் நாதஸ்வரம் வாசித்தார்கள், காட்சிகள் தத்ரூபமாக அமைய வேண்டும் என்பதற்காக அவர்கள் பல நாட்கள் பயிற்சி எடுத்துக் கொண்டார்கள். இப்போது அதுக்கெல்லாம் நேரம் இல்லை, பாட்டையே படத்தில் சேர்க்கவேண்டாம்” என்று கே.பி.சார் கூறிவிட்டார். ஆடியோவில் இருக்கும் இந்தப்பாட்டு, படத்தில் இல்லாமல் போனது, ஆனாலும் டூயட் படம் என்னை உயர்ந்த இடத்தில் உட்கார வைத்துவிட்டது.
-----------------
அமெரிக்காவில் ஒரு முறை கச்சேரி நடத்தி முடிந்து மங்களம் பாடி முடித்துவிட்டோம் . மங்களம் பாடிவிட்டால் அடுத்ததாக வேறு எதுவும் இசைக்ககூடாது என்பது மரபு. ஆனால் சில தமிழ் ரசிகர்கள் மன்றாட தொடங்கினர்.“ஏழு மணிநேரம் டிராவல் பண்ணி வந்திருக்கோம் . எங்களுக்காக அஞ்சலி பாட்டு வாசிங்க” என்று அவர்கள் கெஞ்சினர்.
ரசிகர்கள்தான் எங்களை போன்ற கலைஞர்களின் நிஜமான எஜமானர்கள். எனவே மீண்டும் இசைக்கருவிகளை எடுத்து வாசித்தோம். ரசிகர்கள் நெஞ்சுருகிப் போனார்கள்.
-------
நான் எங்கு கச்சேரி பண்ணபோனாலும் ஒரு மனிதர் முன் வரிசையில் அமர்ந்து லயித்துக் கேட்டுக் கொண்டு இருந்தார். ஒரு முறை நானே அவரை மேடைக்கு அழைத்தேன். “உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? என் கச்சேரியிலேயே ஏன் காலத்தைக் கழிக்கிறீங்க...?” என்று கேட்டேன். அவரின் பதிலோ என்னைத் திகைக்க வைத்தது. இது தான் இசைக் கலையின் மகிமையோ என்று கரங்களை குவித்தேன்.
அந்த மனிதர் கூறியது இதைதான் “எனக்கு மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை எடுத்து வரேன். உங்க மென்மையான இசையை ரசித்துக் கேட்கக் கேட்க.. எனக்கு ஏதோ மருந்து சாப்பிட்ட மாதிரி தெரியுது. முதல்ல 1 மாத்திரை உட்கொண்டு வந்தேன். அப்புறம் பாதியாக்கினேன். இப்போ கால் மாத்திரைதான் சாப்பிடுகிறேன்” என்றார்.
பிப்ரவரி, 2013.