நிதானமே அவசியம்!

நிதானமே அவசியம்!
Published on

கனவில் கூட மகிழ்ச்சியை நாமாக வரவழைத்துக் கொள்ள முடியாது. மகிழ்ச்சி ஓர் அடிப்படை உணர்ச்சி. ஒரு நிகழ்வின் தாக்கம் புலன்களில் பதிவாகி மூளையின் கணிப்பில், மனத்தில் அனிச்சையாய்த் தோன்றும் உணர்ச்சிகளில் ஒன்று. இது சுகம் தரும், இது மனத்துள் மகிழ்ச்சி தரும் என்பதெல்லாம் நாம் கற்று வந்த வாழ்வின் அனுபவப்பாடங்களினால் உருவாக்கிக் கொள்ளும் எதிர்பார்ப்புகள்.

சில நேரங்களில் அந்த எதிர்பார்ப்புகள் நம் கணிப்புக்கேற்ற வகையில் இல்லாமல், ஏமாற்றங்கள் வரும். ஏமாற்றங்கள் கவலையை உருவாக்காவிட்டாலும், மகிழ்ச்சியின் தாக்கத்தைக் குறைக்கும். ஆகவே தான், காலங்காலமாக நம்மிடம் மேதைகளும் ஞானிகளும் ‘எதையும் எதிர்பார்க்காமல்' இருப்பதே நிம்மதியான வாழ்வுக்கு அடிப்படை என்று கூறி வந்திருக்கின்றனர்; அப்படிச் சொல்வது சுலபம். கருத்தளவில் இதை ஏற்றுக்கொள்வதும் சாத்தியம். ஆனால் நடைமுறையில் எதிர்பார்ப்பில்லாமல் வாழ்க்கை இல்லை.

எதிர்பார்ப்புகள் எப்போதுமே ஆசையின், அல்லது அச்சத்தின் வெளிப்பாடுகள் கனவுகளைப் போல. கனவு நாம் திட்டமிட்டு வரவழைப்பதில்லை, ஆனால் எதிர்பார்ப்புகளை நாம் கடந்து வந்த வாழ்வின் அனுபவங்களின் அடிப்படையிலேயே கணித்துக் கொள்கிறோம். நம் கணக்கு எங்கோ தவறாகும்போது, ஏமாற்றம் வரும். வெற்றியை மட்டும் நாம் எதிர்பார்ப்பதில்லை, வெற்றியின் அளவையும் வீச்சையும் சேர்த்துக் கணக்கிட்டுத் தான் எதிர்பார்ப்புகளை அமைத்துக் கொள்கிறோம். நூறு மதிப்பெண் வரும் எனும் சுயகணக்கு எதிர்பார்க்கும் மகிழ்ச்சி தொண்ணூற்று ஒன்பது வந்தாலும் கிடைக்காது. முழுமையான வெற்றியே நம் அடிப்படை எதிர்பார்ப்பு. அப்படி ஒன்று எல்லா நேரத்திலும் சாத்தியமில்லை என்று புரிந்தாலும் மனம் ஆசைப்படுவதை விட்டுவிடுவதில்லை.

இன்றைய காலகட்டத்தில் அனைவரது எதிர்பார்ப்பும் மீண்டும் பழைய நிலைக்குப் போய் விட மாட்டோமா என்பது தான். முன்னர் இருந்த நிலையில் மகிழ்ச்சியாய் இல்லாவிட்டாலும் நிம்மதியாய் இருந்தோம் என்பது நாம் அனைவரும் சொல்லிக்கொள்ளும் ஒரு சமாதானம். அன்றும் வியாபாரங்கள் தோல்விகளைச் சந்தித்தன, அன்றும் பணம் போதவில்லை, இப் பெருந்தொற்றுக்கு முன்னமேயே பொருளாதாரம் நிலைகுலைய ஆரம்பித்து விட்டது, அப்போதே வேலை வாய்ப்புகள் குறைந்து வந்தன, அன்றும் அடுத்து என்ன செய்யலாம் வாழ்வை எப்படி மேம்படுத்திக்கொள்ளலாம் என்ற கவலைகள் இருந்தன, ஆனால்..  இன்று இத்தனை விதமான அழுத்தங்க ளோடு மனத்துள் ஒரு பயம் கவ்வியுள்ளது. இதுதான் மகிழ்ச்சி என்பதைக் கிட்டத்தட்ட ஒரு கானல் கனவாக்கி வருகிறது. மேலும் அடைய ஆசைப்பட்ட மனம் இப்போது இருப்பதைத் தக்கவைத்துக் கொண்டால் போதும் எனும் பதட்டத்தில் இருக்கிறது. இதன் தாக்கம் வாழ்வின் பல்வேறு தளங்களில் சிக்கல்களை உருவாகும்.

தினமும் வெளியே போய், நண்பர்களோடு கொண்டாட்டமாக வாழ்க்கையை அனுபவித்த வர்கள் மிகவும் கொஞ்ச பேர்தான். அலுவலகம், போக்குவரத்து இறுக்கம், முன்னிரவிலோ நேரம் கழித்தோ வீட்டுக்கு வந்தாலும் குறைந்து போன உரையாடல்கள், கூடி வந்த எரிச்சல்கள் என்பதே பெரும்பான்மை யந்திரத்தனமான வாழ்க்கையாகப் பலருக்கும் இருந்தது. கொஞ்சநாள் வேலை எதுவும் செய்யாமல் வீட்டில் கிடந்தால் நன்றாக இருக்குமே என்பது தான் சராசரி மனத்தின் கணக்காகவும் கணிப்பாகவும் இருந்தது. ஆனால் வீட்டிலேயே முடங்க ஒரு நிர்ப்பந்தம் வந்த போது மனம் அதைத் தாங்க முடியவில்லை. ஆரம்பத்தில் இதை ஒரு விடுமுறையாகவும், தான் கனவில் மட்டுமே செய்ய நினைத்தவற்றைச் செய்ய வாய்ப்பாகவும் கருதி, எழுதலாம், வரையலாம், புதிதாய்ப் பலவும் கற்றுக் கொள்ளலாம் என்ற திட்டங்கள் எதுவும் முழுதாய் நடக்கவில்லை. வெறுமையும் விரக்தியுமே நாட்களைக் கழிப்பதில் சிரமம் கூட்டின. பலருக்கும் இதுவரை செய்ய அவகாசமில்லாமல் செய்யாதிருந்தோம் என்ற சுய சமாதானம் பொய் என்று தெரிந்து விட்டது. ஓர் இயந்திரத்தன்மை இயல்பாக இருந்ததையும், முன்னம் இருந்த ஆசைகள் அடிப்படையில்லாதவை என்றும் தோன்ற ஆரம்பித்தது. வருமானம் குறைந்தது,  வரவு&செலவுத் திட்டங்கள் குலைந்தன, மாதக்கணக்கில்

நீண்ட முடக்கம் சலிப்போடு வருங்காலம் குறித்த சலனங்களையும் உருவாக்கி விட்டது. இதன் நீட்சி, இன்று தடைகள் தளர்த்தப்பட்டாலும், விலக்கப்பட்டாலும் ஒரு சோர்வாகவே மனத்துள் படர்ந்துள்ளது.

இப்படியுள்ள சூழலில், மனத்தை மகிழ்ச்சியாய் வைத்துக் கொள்வது எப்படி எனும் கேள்விக்கு விடை எளிமையான வழிமுறைகளைப் பட்டியலிடுவது போல் அமையாது, அப்படி ஒன்று சொல்லப்பட்டாலும் அது யதார்த்தத்திற்கு ஒப்ப அமையாது. வெகு பரவலாக ‘யோகா செய், தியானம் செய், புத்தகங்கள் படி, இசை கேள், படம் பார்‘ என்று வாய்களும் வலைத்தளங்களும் சொன்னாலும், இறுக்கமான நிலையில் இருப்பவருக்கு இவ்விஷயங்களில் ஈடுபடுவதும் சிரமமாகவே இருக்கும். ஒருவருக்கு உதவக் கூடிய யுத்தி அடுத்தவர்க்கு உதவுவதும் இல்லை. ஆகவே, மனத்தை மகிழ்ச்சியாக வைத்திருப்பது எப்படி என்பதை விடவும், மகிழ்ச்சிக்குக் கேடு விளைவிப்பவற்றை எப்படி விலக்கலாம், தவிர்க்கலாம், குறைக்கலாம் என்பதில் கவனம் இருந்தால் அது தினசரி வாழ்முறைக்கு உதவும்.

சிலருக்கு மது அல்லது வேறு போதைகள் மகிழ்ச்சி தருவது போல் தோன்றும். ஆரம்பத்தில் இறுக்கத் தளர்வுக்கும், ஓரளவு சுகமான அனுபவத்துக்கும் உதவக்கூடிய மது, நாளடைவில் ஒரு பெரும் பிரச்னையாக மாறிவிடும். தாற்காலிகமாக ஒரு தப்பித்தல் எனும் நிலையிலிருந்து அது வேறெதுவும் செய்ய இயலாத, விரும்பாத காலச்செலவாக வாழ்வை வீணாக்கும். உடலுறவில் கிடைக்கும் மகிழ்ச்சியும் தாற்காலிகம் தான் என்றாலும் அதிலும் சில சிக்கல்கள் வரும். இவ்வளவு இறுக்கம் அழுத்தம் தரும் போது, உடலுறவிலும் ஈடுபாடும் செயல்பாடும் குறையும். இதனால் உறவுகளிலும் சில குழப்பங்கள் தோன்றும். தற்காலிகமாகச் சமாளிக்கலாம் எனும் திட்டங்கள் பெரும்பாலும் உதவு வதில்லை, ஆகவே தொலைநோக்குடன், யதார்த்தங்களைக் கணக்கில் கொண்டு முறையான திட்டமிடலோடு செயல்பட்டால் தான் வாழ்வில் நிம்மதியும் நிதானமும் அமையும்.

செய்யும் வேலையில் நிரந்தரமின்மை, வரவு&செலவு தீர்மானிப்பதில் நிச்சயமின்மை, உடல் ஆரோக்கியத்திலும் பாதுகாப்பின்மை மிகுந்த இக்காலகட்டத்தில், நிம்மதியின்மையே மனத்தின் பொதுநிலையாக மாறிவிட்டது. இதிலிருந்து மீள நிதானமான அணுகுமுறையே உதவும். நிதானமாய் இருப்பது வழக்கம் என்றாகிவிட்டால், வரக்கூடிய சிக்கல்களை எதிர்நோக்க தைரியமும் வரும். விடையில்லாத கேள்விகள் வரும்போது மிரண்டு உடைவதற்குப் பதிலாகக் காலம் கனியட்டும் எனும் காத்திருப்புக்கு மனம் தயாராகும். ஒவ்வொரு நாளையும் அதன் தேவைகளுக்கேற்ப அணுகி, அடுத்து என்ன செய்வது என்று திட்டமிட நிதானம் அவசியம். நிதானமாய் இருக்கப் பழகிவிட்டால்,  வருத்தங்களைப் புரிந்து கொண்டு வாடிவிடாமல் தப்பிக்க முடியும், மகிழ்ச்சியான தருணங்கள் அமையும் போது அவற்றை முழுமையாக அனுபவிக்கவும் முடியும்.

நிதானமாய் இருக்கக் கற்றுக் கொள்ள முதலில் நம் ஆசைகளை அச்சங்களை அறிந்து கொள்ள வேண்டும் அவற்றைத் துல்லியமாய் அளவிடவும் வேண்டும். எதைச் செய்யலாம் என்று முடிவெடுப்பதை விடவும் எதையெல்லாம் தவிர்க்கலாம் என்பதில் கவனம் செலுத்தித் தீர்மானிக்க வேண்டும். நன்றாக கவனித்து நோக்கினால், நம் செயல்களில் பலவும் அவசியமில்லாதவை என்பது புரியும். அவற்றைத் தவிர்ப்பதே முதலில் செய்ய வேண்டிய காரியம். அடுத்து, நம் நேரத்தை நிம்மதியில்லாமல் ஆக்கும் காரியங்களைத் தவிர்க்கப் பழக வேண்டும். கணினியிலும் கைப்பேசியிலும் செலவாகும் நேரம் இக்காலகட்டத்தில் கூடியிருக்கிறது. அந்த நேரத்தைக் குறைத்து, நம் கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவருவது மிகவும் அவசியம். வேலை/கல்வி  நிமித்தமாக வலையிலும் திரையிலும் அதிக நேரம் எடுத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பவர்களும் அந்த நேரத்தைச் செலவழிப்பதைப் பற்றி ஒரு நேர்மையான கணக்கீடு செய்தால், விரைவாகவே பணியும் முடியும், விழிகளுக்கும் ஓய்வு கிடைக்கும். வலையில் பரவும் பொய்களால் வரும் பதட்டமும் குறையும்.

நிதானமாய் இருக்க மனம் பழகும்போது உடலிலும் சோர்வும் நோயும் இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம். இன்று ஒரு பெருந்தொற்று யாரையும் எப்போது வேண்டுமானாலும் தாக்கும் என்பதே உண்மை. இன்னும் இதற்கு ஒரு தடுப்பு மருந்து இல்லை, இப்போதைக்கும் அது வரப்போவதில்லை. பாதிக்கப்பட்டால் உடல் சோர்வுடன், மனமும் சோர்ந்து விடும். உற்றார் உறவினருக்குக் கவலை வரும், குடும்ப உறுப்பினர்களுக்கு மனவுளைச்சல் கூடும், மருத்துவச் செலவும் கணக்குகளை மீறி நெருக்கும். சிகிச்சைக்குப் பின் மீண்டாலும் நோயின் பாதிப்பு வெவ்வேறு வகைகளில் நீடிக்கும். உடற்சோர்வு, தடுமாற்றம், குழப்பம் ஆகியவற்றுடன் முன்போல் இயங்கும் வேகமும் வலிமையும் சற்றே குறையும். நோயுற்றிருந்த காலத்தில் செய்யாமல் விட்டவை ஒரு சுமையாக முன் நிற்கும். மனத்துள் நிதானம் குறையும். ஆகவே, நோய்வாய்ப்படாமல் இருக்க எச்சரிக்கையுடன் இருத்தல் மிகமிக அவசியம். எச்சரிக்கை உணர்வோடு பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றினால், நோய் வராமல் தடுக்கும் சாத்தியம் அதிகம்.

வாழ்வில் மகிழ்ச்சியை அடையவும் அனுபவிக்கவும் நிதானம் முக்கியம். நிதானமாய் மனத்தைப் பக்குவப்படுத்திக் கொள்ள அதைப் பாதிக்கும் விஷயங்களை வாழ்முறையிலிருந்து நீக்க வேண்டும் - வருமானத்தைக் கூட்ட முடியாவிட்டால் செலவுகளைக் குறைக்க வேண்டும், என்பது போல. அப்போதுதான் வாழ்வுக்குத் தனக்கான அவகாசம் கிடைக்கும். மகிழ்ச்சியை அடிக்கடி வாழ்வில் நாம் அனுமதிக்க, அது உள்நுழைய நாமே ஏற்படுத்தியுள்ள தடைகளை முற்றிலும் விலக்க வேண்டும். இது முடிந்தால், நம் வாழ்வில் நம் சிக்கல்களை நாமே அவிழ்த்து அடுத்தக் கட்டத்தை நம்பிக்கையோடு எதிர்பார்க்கலாம்.

நவம்பர், 2020.

logo
Andhimazhai
www.andhimazhai.com