நாவல் எழுத அட்வான்ஸ் 5 கோடி ரூபாய்

நாவல் எழுத அட்வான்ஸ் 5 கோடி ரூபாய்
Published on

ஓர் எழுத்தாளரது புத்தகங்களின் விற்பனை 40 கோடியைத் தாண்டிவிட்டது.’

‘அப்படியா அந்த எழுத்தாளர் எந்த நாட்டை சார்ந்தவர்? எத்தனை புத்தகங்கள் எழுதியிருக்கிறார்?’

‘இந்தியா தான், இது வரை மூணு புத்தகம் வெளிவந்துள்ளது.’

‘என்னப்பா காதுல பூ சுத்துற. இந்தியாவில ரிலீஸ் ஆகிற சினிமா படங்கள்ள முக்கால்வாசி படங்கள் நாற்பது கோடிக்கு விற்பனை ஆக மாட்டேங்கிறது. மூணு புத்தகம் எப்படி அவ்வளவு தொகைக்கு விற்பனை ஆகும்?’

இது கடந்த மாதம் சென்னை வந்திருந்த போது நண்பர்களுடன் நிகழ்ந்த உரையாடலின் ஒரு பகுதி.

40 கோடிக்கு மேல் விற்பனையை தாண்டியுள்ள மூன்று புத்தகங்களை எழுதியவர் அமிஷ் திரிபாதி. 40 கோடி விற்பனை என்பது கிசு கிசு அல்ல. வெளியீட்டாளரின் அதிகாரபூர்வமான தகவல்.

‘தமிழில் எழுதுவது டயரியில் எழுதுவது போன்றது. எக்ஸைல் நாவல் ஒரு லட்சம் பிரதிகள் விற்கும் என்று எதிர்பார்த்தேன். 3000 விற்றது. என் நாவல் லட்சம் பிரதி விற்கவேண்டும் ஐயா. லட்சம் பிரதிகள். எட்டுகோடி மக்கள் இருக்கும் தமிழ் நாட்டில் லட்சம் பிரதி விற்க வேண்டாமா?’சாருநிவேதிதா தன்னுடைய இணையதளத்தில் எழுதியிருக்கும் இந்த வார்த்தைகளில் கோபம் மட்டுமல்ல, தமிழ் எழுத்துலகின் இன்றைய நிலவரமும் தெரிகிறது.

தமிழ் கூறும் நல்லுலகு அமிஷ் திரிபாதியின் வெற்றியிலிருந்து கற்றுக் கொள்வதற்கு நிறைய இருக்கிறது. அந்திமழை சார்பாக அமிஷிடம் பேச 26 நாட்கள் தொடர்ந்து துரத்தியதற்குப்பின் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரிடமிருந்து அழைப்பு வந்தது.

இனி அமிஷ்:

‘என்னுடைய முதலாவது நாவலை எழுதி முடித்துவிட்டு வெளியீட்டாளர்களைச் சந்தித்தேன். புராணங்களை அடிப்படையாக கொண்டு சிவனை மனிதனாக உருவகப்படுத்தி எழுதிய அந்த நாவலை இருபது வெளியீட்டாளர்கள் நிராகரித்தனர்.

அனேகர் சொன்ன காரணம் நாவல் மதரீதியாக இருக்கிறது. இளைஞர்களுக்கு இது பிடிக்காது என்பதாகும். மிகவும் சோர்ந்து போனேன். என் குடும்பம் எனக்கு ஆறுதலாக இருந்தது. ஐடிபிஐ போர்டிஸ் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பார்த்து வந்த வேலையால் வாழ்க்கை அது போக்கிற்கு நடந்தது. தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருந்த போது இலக்கிய ஏஜெண்டான அனூஜ்ஜின் அறிமுகம் கிடைத்தது. எனது நாவல் மேல் நம்பிக்கை கொண்ட அனூஜ் சில முயற்சிகளைத் தொடர்ந்தார். வெஸ்ட் லாண்ட் நிறுவனம் எனது புத்தகத்தை வெளியிட சம்மதித்தது. முதல் நாவலான த இம்மார்ட்டல்ஸ் ஆப் மெலூஹா (The Immortals of Meluha) வெளியானது. வெறுமனே புத்தகத்தை வெளியிட்டு விட்டு தேமே என்று உட்கார்ந்திருப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. எனது மார்க்கெட்டிங் அனுபவம் புத்தகத்தை பிரபலப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டுமென்றது. நாவலின் முதல் அத்தியாயத்தை மட்டும் தனியாக இலவசமாக விநியோகித்தோம்.

நண்பர்களின் உதவியுடன் குறைந்த செலவில் புத்தகம் பற்றி டிரைலர் படம் தயாரித்தோம். புத்தக டிரைலரை யூட்யூபில் ஏற்றினோம். புத்தகத்திற்கு டிரைலர் என்பது இந்தியா இதற்கு முன் அறிந்திராதது. புத்தகம் பற்றிய தகவல்களை பேஸ்புக், ட்விட்டர் மற்றும் பல ஆன்லைன் மீடியாக்களில் வெளியிட்டோம். மார்க் கெட்டிங் முயற்சிகளுக்கு கை மேல் பலன். இலவசமாக முதல் அத்தியாயத்தை படித்து பிடித்தவர்கள் வாங்கினர். வெளியான ஒன்றரை வாரத்தில் புத்தகம் இந்தியாவின் பெஸ்ட் செல்லர் லிஸ்டில் நம்பர் ஒன் இடத்தை அடைந்தது.

முதல் நாவலிலும் அதன் தொடர்ச்சியான மற்ற இரு நாவல்களிலும் நான் கடவுளை மனிதனாக உருவகப்படுத்தி கதை வடித்திருந்தேன். கடவுள் நம்பிக்கை மிகுந்த குடும்பத்தில் பிறந்திருந்தாலும் சில காலம் நாத்திகனாக வாழ்ந்தேன். பின் மீண்டும் கடவுள் மீது நம்பிக்கை வந்தது. நான் கடவுளை நான்கு விதமாக உருவகப்படுத்தலாம் என்று நினைக்கிறேன்.

முதலாவது கருத்துரீதியான உருவமற்ற தன்மை, இரண்டாவது வகை கடவுளை பிரம்மா, விஷ்ணு என்று பார்ப்பது, அவதாரம் எடுத்து பூமிக்கு வருவது மூன்றாவது வகை... ராமன், கிருஷ்ணன் எல்லாம் இதில் அடங்குவர். நான்காவது வகை மனிதன் கடவுளாவது. கௌதம புத்தரை இதற்கு உதாரணமாக கூறலாம்.

எனக்கு பிடித்த வகையும் இது தான். இந்த நான்காவது வகையின் அடிப்படையில் பின்னப்பட்ட கதைகளே என் மூன்று நாவல்களும். 4000 ஆண்டுகளுக்கு முன் திபெத்தில் வாழ்ந்த சிவா என்கிற மலைவாழ் மனிதனின் சாகசங்களின் கதை.

முதல் புத்தகத்தின் வெற்றி என்னை அதன் தொடர்ச்சியாக இரண்டாவது நாவலை (தி சீக்ரெட் ஆஃப் தி நாகாஸ்) எழுதத் தூண்டியது.

இரண்டாவது நாவலின் வெற்றிக்கு பின் மிக முக்கியமான முடிவை எடுத்தேன். எனது மார்க்கெட்டிங் வேலையை ராஜினாமா செய்தேன். வெற்றி பெற்ற நாவலாசிரியரின் கதை என்று மமதையில் இருக்காமல் இதற்கும் உழைத்தோம். பொருளாதார சிக்கலில்லாததால் தேர்ந்த கலைஞர்களைக் கொண்டு சினிமா தரத்திற்கான டிரைலர் தயாரித்து தியேட்டர்களில் இடைவேளையின்போது திரையிட்டோம். மீண்டும் வெற்றிதேவதை முத்தமிட்டாள். ஊர் ஊராகப் போய் நாவல் சம்பந்தப்பட்ட விழாக்களில் கலந்து கொண்டோம். இரண்டரை வருடத்திற்குள் இரண்டு நாவல்களும் சேர்ந்து பத்து லட்சத்திற்கு மேற்பட்ட பிரதிகள் விற்று தீர்ந்தன.

அந்த வரிசையிலான மூன்றாவது நாவலான ‘தி ஓத் ஆப் தி வாயுபுத்ராஸ்’ (The Oath of the Vayuputras) 26, பிப்ரவரி, 2013 ல் வெளியிடப்பட்டது. வெளியிடும் போதே 5,00,000  பிரதிகள் அச்சடிக்கப்பட்டன. அதில் 3,50,000 பிரதிகள் வெளியீட்டிற்கு முன்னே விற்று தீர்ந்து போனது. ஜோ ப்ளெட்சர்ஸ் என்ற வெளிநாட்டு நிறுவனம் இந்தியாவைத்தவிர மற்ற நாடுகளில் வெளியிட முன்வந்தது.

நான் பணம் சம்பாதிப்பதற்காக மட்டும் எழுதவில்லை. பிறருக்கு சொல்வதற்கு என்னிடம் சில விஷயங்கள் இருப்பதாக நினைக்கிறேன். அவற்றை சொல்வதற்கு எழுத்து ஒரு வழி. நாவலை எழுதி முடிக்கும் வரை எழுதுவதில் மட்டுமே கவனம் இருக்கும்‘. அதற்கு பின் தான் மார்க்கெட்டிங் பற்றிய சிந்தனைகளுக்கு வழி வகுப்போம். வாங்குபவர்களுக்கு புத்தகம் பற்றிய தகவல்கள் போய் சேராத பட்சத்தில் விற்பனையாகிற வாய்ப்புகள் குறைவு.

ஐ.டி,மார்கெட்டிங் மற்றும் வங்கித் துறைகளில் பணம் சம்பாதிப்பதற்கான நிச்சய சாத்தியக்கூறுகள் உள்ளன. ஆதலால் பணத்தை எதிர்பார்த்து இளைஞர்கள் யாரும் எழுத வர வேண்டாம். சில அதிர்ஷ்டக்காரர்கள் இருக்கலாம் எழுத்தாளராக. பணத்துக்காக என்பதை விட்டுவிட்டு உங்களுக்காக எழுதுங்கள். வெற்றியடைந்தாலும் அடையாவிட்டாலும் பரவாயில்லை என்ற நிலையிலிருந்து எழுதும் போது சமரசம் செய்து கொள்ள தேவையில்லை. என்னுடைய முதல் இரண்டு நாவல்களையும் வேறு வேலை பார்த்துக் கொண்டே தான் எழுதினேன். எல்லாரையும் போல் எழுத்தாளர்களுக்கும் மாசம் பிறந்தவுடன் கமிட்மெண்டுகள் இருக்கத்தானே செய்யும்” என்கிறார் அவர்.

அடுத்த நாவலை எழுதப் போகும் அமிஷ் திரிபாதிக்கு முன்பணமாக ரூபாய் ஐந்து கோடியை வெஸ்ட்லாண்ட் கொடுத்துள்ளது. இப்படியான சூழல் தமிழில் வருவதற்கான சாத்தியமிருக்கிறதா என்ற கேள்வி எழலாம். பொதுவாக இல்லை. எனவேதான் எழுத்தாளர்கள் டிவிக்கும் சினிமாவுக்கும் சென்று விடுகிறார்கள். பொதுவாக சாதாரண எழுத்தாளர் கதை  கொடுத்தால் டிவி மினிதொடருக்கு 10,000 ரூபாய்; மெகா தொடருக்கு- 25000-40,000 ரூபாய்; வசனம் எழுதினால் ஓர் எபிசோடுக்கு 3000-4000 ரூபாய் என்ற வீதத்தில் கிடைக்கிறது.

சினிமாவுக்குப் போகும் புகழ்பெற்ற எழுத்தாளர்களுக்கு ஒரு படத்துக்கு 4-ல் இருந்து 10 லட்சம் வரைக்கும் கிடைப்பதாகத் தகவல். பெரிய நிறுவனம் என்றால் எழுத்தாளரின் கறார்த் தன்மையைப் பொறுத்து அதிகமாகக் கிடைக்கும்.

டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கிலப் பத்திரிகையின் சராசரி விற்பனை 40 லட்சம் பிரதிகள் இருக்கலாம். அமிஷின் ஆங்கில நாவல் 20 லட்சம் பிரதிகள் விற்கிறது. தமிழின் முதன்மையான செய்தித்தாள் 14 லட்சம் பிரதிகள் தினசரி விற்பனை ஆகும்போது நிச்சயமாக ஒரு தமிழ் நூலும் தாராளமாக 7 லட்சம் பிரதிகள் விற்பனை ஆகும் வாய்ப்பு இருக்கிறது அல்லவா? நம்புவோம்.

என்றும் உங்கள்,

அந்திமழை இளங்கோவன்

மே, 2013 அந்திமழை இதழ்

logo
Andhimazhai
www.andhimazhai.com