நாலு பேருக்கு நல்லது!

கதையல்ல நிஜம்
ராமமூர்த்தி
ராமமூர்த்தி
Published on

ஒடிசாவில் இருக்கும் ஒரு பெரிய மருத்துவமனையில் நிகழ்கிறது இந்தச் சம்பவம்.

'ஆபரேஷன் நல்லபடியாக முடிஞ்சது.. உங்க பையனை எட்டி நின்று பார்த்துக்கங்க..' என்று கூறிவிட்டு, நடந்து செல்கிறார் அறுவை சிகிச்சை செய்து முடித்த மருத்துவர்.

ஆபரேஷன் தியேட்டரின் கண்ணாடி வழியே எட்டிப் பார்க்கிறார் வாசலில் காத்திருந்த தந்தை. உள்ளே மருத்துவ உபகரணங்களுக்கு மத்தியில் படுத்துக் கிடக்கிறான் மகன். இருபத்திரண்டு வயது இளைஞன். அறைக்குள் நுழைகிறார் அப்பா.

கண் விழிக்கிறான் மகன். உடலுக்குள் செலுத்தப்பட்டிருந்த மயக்க மருந்து முற்றிலும் தன் திறனை இழந்திருந்தது. வலி உயிரைக் குடிக்கிறது. உடலை லேசாக அசைக்க முயற்சி செய்கிறான் அந்த இளைஞன்.

ஐயோ கடவுளே! முயற்சி பலிக்கவில்லை! நெஞ்சுப் பகுதிக்குக் கீழே உணர்ச்சியே இல்லை!

''எப்படி இது ஆனது என்று தெரியவில்லை. ஓரிரு மாதங்களில் அதுவாகவே சரியாகி விடலாம்..'' என்று கூறி, கைகளைப் பிசைந்துகொண்டு நிற்கிறார்கள் மருத்துவர்கள்.

இத்தனைக்கும் மருத்துவமனைக்கு வரும்போது காலாற நடந்தபடியேதான் வந்திருந்தான் அவன். முதுகில் வலி.. தண்டுவடத்தை ஒட்டினாற்போல் சின்னதாக கட்டி.. கட்டியை அகற்றிவிட்டால் போதும்.. பயப்பட ஒன்றுமில்லை என்று மருத்துவர்கள் சொன்னதால் தமிழ்நாட்டில் சொந்த ஊரில் இருக்கும் அம்மாவைக் கூட வரவழைக்கவில்லை. அப்பா மட்டும் உடனிருக்கிறார்.

''கொஞ்ச நாள்ல சரியாகிடும் தானே டாக்டர்?'' - பதைபதைப்புடன் அப்பா கேட்கிறார்.

''உறுதியா சொல்ல முடியாது. கடவுளை வேண்டிக்கங்க..''- இதுதான் மருத்துவ நிபுணர்களின் பதில்.

*****

ராமமூர்த்தி
ராமமூர்த்தி

தூத்துக்குடி மாவட்டம். கோவில்பட்டி அருகே இருக்கும் சிறிய கிராமம் எம்.துரைசாமிபுரம். அங்கே தன் மூன்று பிள்ளைகளுடன் வசித்து வருகிறார் சண்முகத்தாய்.

கணவர் ராமசாமிக்கு ஒடிசாவில் உத்யோகம். மின்சார வாரியத்தில் வயர்மேனாக பணிபுரிந்து வருகிறார். மனைவி, மூத்த மகன், அதன் பிறகு பிறந்த இரண்டு பெண் குழந்தைகள்.. அனைவரையும்
ஒடிசாவுக்கு அழைத்துச் சென்று அங்கேயே குடும்பம் நடத்த இயலாத சூழல். தான் மட்டும் ஒடிசாவில் தங்கி பணிபுரிந்து வருகிறார் ராமசாமி.

பெண் பிள்ளைகள் நன்றாகப் படிக்கிறார்கள். முதல் பெண் நாகேஸ்வரி பி.எஸ்.ஸி. விவசாயம் படிக்கிறார். இரண்டாவது பெண் பரமேஸ்வரி எம்.பில். படிக்கிறார். இருவருக்கும் மூத்தவரான ராமமூர்த்தி படிப்பில் ஆஹா ஓஹோ ரகமில்லை. அளவான மதிப்பெண்களுடன் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் சேர்கிறார்

ராமமூர்த்தி  கல்லூரிப் படிப்பை நிறைவு செய்யும்போது, அப்பா ராமசாமி பணி ஓய்வு அடைந்து ஒடிசாவிலேயே ஒப்பந்த அடிப்படையில் வயரிங் பணிகளை எடுத்துச் செய்யும் கான்ட்ராக்டராக இருக்கிறார். தன் மகனை வேறு எங்கும் வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று கூறி, ஒடிசாவுக்கே அழைத்துச் செல்கிறார் அவர். 

சிறந்த மாணவனாக தேர்ச்சி அடையும் ராமமூர்த்தி, சிறந்த எஞ்சினியர் ஆகும் கனவுகளுடன் ஒடிசாவுக்கு கிளம்பிப் போகிறார். அப்பாவின் ஒப்பந்தப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு அனுபவப் பாடத்தையும் படிக்கத் தொடங்குகிறார்.

சில மாதங்கள் ஆகியிருக்கும்.. முதுகில் திடீர் திடீரென வலி வந்து அவதிப்படுகிறார் ராமமூர்த்தி. வலி வேதனைக்கு காரணம் முதுகுப்பகுதியில் முளைத்திருக்கும் கட்டி தான் என்பது அவருக்குத் தெரியவில்லை. வேலை பளுவின் காரணமாக உடனடியாக மருத்துவரைப் பார்க்கவும் முடியவில்லை. அப்பாவும் மகனும் அயராமல் உழைக்கவேண்டி இருக்கிறது.

கவனிப்பாரற்று வளர ஆரம்பிக்கும் அந்தக் கட்டி தன் வேலையைக் காட்டத் தொடங்குகிறது. நெஞ்சுக்குப் பின்புறம் T6 எனப்படும் முதுகுத்தண்டுவடப் பகுதியை நெருக்கியடித்துக்கொண்டு வளர்கிறது.

அந்த வேண்டாத வஸ்து தண்டுவடத்தை அழுத்தத் தொடங்குகிறது. அதன் விளைவாக வலியின் வேதனையும் அதிகரிக்க ஆரம்பிக்கிறது.

அதனைத் தொடர்ந்து ஒடிசாவில் இருக்கும் அந்தப் பெரிய மருத்துவமனைக்கு தன் மகனை அழைத்துச் செல்கிறார் அப்பா.

கட்டியை நீக்கும்போது, முதுகெலும்பிலும் சேதாரம் ஏற்பட்டு விடுகிறது!

அதன் பிறகு நடந்த அலங்கோலம்தான் கட்டுரையின் ஆரம்பத்தில் நீங்கள் படித்தது!

*****

ராமமூர்த்தி
ராமமூர்த்தி

விஷயம் கேள்விப்பட்டு விழுந்தடிந்துக்கொண்டு ஒடிசாவிற்கு வந்து சேர்கிறார் அம்மா சண்முகத்தாய்.

மருத்துவமனையில் அதீத கவனத்துடன் ஆபரேஷன் செய்யாததனால்தான் இப்படி ஆகியிருக்கிறது என்பதை அரைகுறையாக புரிந்துகொண்டாலும் அதை நிரூபிக்க வழி தெரியவில்லை அந்த அப்பாவி பெற்றோருக்கு.  மகனை அள்ளிக்கொண்டு
சென்னைக்கு பறக்கிறார்கள்.

அதற்குள் படுமோசமாக ஆகியிருந்தது ராமமூர்த்தியின் உடல். பேசுவதும் கைகளை அசைப்பதும் மட்டுமே அவரால் இயலும் காரியங்கள். இயற்கை உபாதைகளைச் சமாளிப்பதற்கே மற்றவரின் உதவி தேவை எனும் கொடுமையான நிலை.

வேண்டாத தெய்வமில்லை.. போகாத ஊரில்லை.. பார்க்காத மருத்துவரில்லை.. மகனை குணமாக்குவதற்காக படாதபாடு படுகிறார்கள் பெற்றோர் இருவரும். எந்த வைத்தியமும் பலனளிக்கவில்லை.

வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனையில் சரியான வழிகாட்டுதல் கிடைக்கிறது. இந்தப் பிரச்சனையை சரி செய்யவே முடியாது. தொலைந்துபோன உணர்வுகள் தொலைந்ததுதான். இப்படியே வாழ்க்கையை நடத்த பழகிக்கொள்ள வேண்டும் என்று கூறி முற்றுப்புள்ளி வைக்கிறார்கள் வேலூர் மருத்துவர்கள்.

ஆனால்.. தன், தன்னம்பிக்கைப் பயணத்துக்கு முதல் புள்ளி வைத்துக் கொள்கிறார் ராமமூர்த்தி.

தன்னைத்தானே முடிந்தவரை கவனித்துக்கொள்வது, வீல்சேரிலிருந்து கட்டிலுக்கு இடம்பெயர்வது, கட்டிலிலிருந்து வீல்சேரில் ஏறிக்கொள்வது போன்ற பயிற்சிகளை பாகாயத்தில் இருக்கும் மறுவாழ்வு
சிகிச்சை மையத்தில் கற்றுக்கொண்டு சொந்த ஊருக்குத் திரும்புகிறார்.

பெற்றோரின் கவனிப்பில், வளர்ந்த குழந்தையாக நாட்களை நகர்த்துகிறார் ராமமூர்த்தி.

துன்பங்களுக்கு இடையே அனுபவிக்கக் கிடைக்கும் இன்பங்களாக மகள்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறார்கள் தம்பதியர். முதல் மகளை சேலத்திலும், இரண்டாவது மகளை மதுரையிலும் திருமணம் செய்து கொடுக்கிறார்கள்.

மகள்களின் திருமணத்திற்காக வாங்கிய கடனை அடைத்தாக வேண்டிய நிர்பந்தம். வீட்டோடு முடங்கிவிட்ட மகனின் மருத்துவ செலவுகளை சமாளிக்கவேண்டிய கட்டாயம். இரண்டும்
சேர்ந்துகொள்ள மறுபடியும் உழைப்பதற்காக
ஒடிசாவுக்கு செல்கிறார் அப்பா ராமசாமி.

மதுரைக்கு குடிபெயர்கிறார்கள் சண்முகத்தாயும் ராமமூர்த்தியும்.

உடலில் முக்கால் பாகம் செயலிழந்து போய், கால் மனிதனாக உயிரைக் கைகளில் பிடித்துக் கொண்டு இருந்தாலும் சும்மா இருக்கப் பிடிக்கவில்லை ராமமூர்த்திக்கு. என்ன செய்யலாம் என யோசிக் கிறார். அவருக்காகவே வாழ்ந்துகொண்டிருக்கும் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஓரளவுக்கேனும் உதவ வேண்டும். அதற்காகச் செய்யும் பணியால் மற்றவர்கள் பயன்பெறவும் வேண்டும்.

மிகவும் யோசித்து ஒரு முடிவுக்கு வருகிறார்.

பள்ளிக்காலத்திலும் பொறியியல் கல்லூரியில் படித்த காலத்திலும் கணக்குப் பாடத்தில் சுமாரான மாணவனாகவே இருந்தார் ராமமூர்த்தி. ஆனால் அந்த ஏட்டுச்சுரைக்காயே கறிக்கு உதவுகிறது! வீல்சேரில் உட்கார்ந்தபடியே அக்கம்பக்கத்தில்
வசிக்கும் பள்ளி பிள்ளைகளுக்கு கணக்கு டியூஷன் எடுக்கத் தொடங்குகிறார் ராமமூர்த்தி.

வருமானம் பெரிதாக இல்லை. ஆனாலும் 'சொந்தக்கால்களில்' நிற்கும் மனமகிழ்ச்சி!

மகனின் வாழ்க்கை இப்படி ஆனதை நினைத்து, வேதனையில் உடல் நலிந்து, தனக்கு வந்த வியாதிகளையும் சரியாக கவனித்துக்கொள்ளாமல் இறந்துபோகிறார் சண்முகத்தாய்.

வேறு வழியில்லை.. ஒடிசாவில் அத்தனை பணிகளையும் நிறுத்திவிட்டு, மகனை கவனித்துக்கொள்வதற்காக மதுரை வந்து சேர்கிறார் அப்பா
ராமசாமி. தாய்க்குத் தாயாகவும் தந்தைக்குத் தந்தையாகவும் நிழல்போல கூடவே இருந்து தன் மகனைப் பார்த்துக்  கொள்கிறார்.

ராமமூர்த்தியிடம் ட்யூஷன் படிக்கும் பிள்ளைகள் கணக்குப் பாடத்தில் நல்ல மதிப்பெண்கள் எடுக்கவும், அவரைத் தேடிவரும் பிள்ளைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது.

அதேசமயம் பல மணி நேரம் வீல் சேரில் இருந்தபடியே உடலை வருத்திக் கொள்வதால் அவதிப்படுகிறார் ராமமூர்த்தி. குணமாக்கிக் காட்டுகிறேன் எனக் கூறி சவால் விடும் மருத்துவர் ஒருவர் கொத்து கொத்தாக வலி நிவாரணி மாத்திரைகளைக் கொடுக்கிறார்.

அதனை சாப்பிட ஆரம்பித்த சில நாட்களில் படுத்த படுக்கையாகிறார் ராமமூர்த்தி. உடலின் பின்புறம் முழுவதும் படுக்கைப் புண்கள் வந்து கூடுதல் அவதியும் சேர்ந்துகொள்கிறது. ஏறக்குறைய ஆறு மாதங்கள் குப்புற படுத்தபடியே கிடக்கிறார்.

உடனடியாக இரண்டு முடிவுகளை எடுக்கிறார்.

முதலாவதாக.. இனி எவ்விதமான மருந்துகளையும் எடுத்துக்கொள்வதில்லை, வலியும் வேதனையும் நிரந்தரம் என்பதால் இனி அவற்றை அனுபவிக்கப் பழகிக்கொள்ள வேண்டும் என்ற முடிவு.

இரண்டாவதாக.. பள்ளிக் குழந்தைகளுக்கு மட்டும் பாடம் எடுத்துக்கொண்டிருந்தவர் இப்போது கல்லூரி மாணவர்களுக்கும் பாடம் எடுக்கத் தயாராகிறார்.

கலைக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்களும் ராமமூர்த்தியிடம் ட்யூஷன் எடுத்துக் கொள்ள வருகிறார்கள். அனைவரும் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுகிறார்கள். ராமமூர்த்தியின் பெயரும் புகழும் பரவுகிறது.

ஒரு கட்டத்தில், எம்.ஈ. படிக்கும் மாணவர்களுக்கும் பாடம் எடுக்கும் பட்டம் பெறாத பேராசிரியராக உயர்கிறார் ராமமூர்த்தி.

கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வந்து ஏதோ ஒரு பொறியியல் கல்லூரியில் படித்து, முப்பது அரியர்களுடன் கல்லூரியைவிட்டு வெளியேறும் மாணவன் ஒருவன் ராமமூர்த்த்தியைத் தேடி வருகிறான். கணிதம் உட்பட தனக்குத் தெரிந்த பாடங்கள் அனைத்தையும் அவனுக்கு போதிக்கிறார் ராமமூர்த்தி. மற்ற பாடங்களை அவனாகவே படித்துக் கொள்ளும் தன்னம்பிக்கையை அவனுக்குள் விதைக்கிறார்.

அந்த மாணவனின் பெற்றோரும் கல்லூரிப் பேராசிரியர்களும் அவனுக்குக் கொடுத்திருக்கும் அட்வைஸ்.. 'அத்தனை அரியர்களையும் ஒரே சமயத்தில் எழுதி தேர்ச்சியடைய உன்னால் முடியாது, ஐந்தைந்து பாடங்களாக எழுதி பாஸ் ஆகும் வழியைப் பார்!'.

ஆனால் ராமமூர்த்தியோ, முப்பத்தோரு தேர்வுகளையும் ஒரே செமஸ்டரில் எழுதும் மனவலிமையை அவனுக்குக் கொடுக்கிறார். முப்பது பாடங்களில் ஒரே முயற்சியில் தேர்ச்சி அடைகிறான் அந்தக் கேரளத்து இளைஞன். ராமமூர்த்தியிடம் பாடம் படிக்கச் சென்றால் எத்தனை அரியர்கள் இருந்தாலும் ஒரே முயற்சியில் தேர்ச்சி அடையலாம் என்ற நம்பிக்கை மாணவர்கள் மத்தியில் பரவுகிறது. மதுரையில் பொன்மேனிப் பகுதியில்
வசிக்கும் ராமமூர்த்தியின் வீட்டைத்தேடி அரியர்ஸ் வைத்திருக்கும் மாணவர் கூட்டம் ஓடி வருகிறது.

இந்நிலையில்..பதிமூன்று வருடங்களாக உடனிருந்த அப்பா இறந்துபோகிறார். நிலைகுலைந்து போகிறார் ராமமூர்த்தி. ஆனாலும் நிமிர்ந்து எழத்தானே வேண்டும்! எழுகிறார். தன் வாழ்க்கைப் பயணத்தை தனி ஆளாகத் தொடர்கிறார்!

அதிகாலை நான்கு மணிக்கு தினமும் எழுகிறார். அரை மணி நேரம் அன்றைய நாளை எதிர்கொள்ள ஆயத்தமாகிறார். நாலரை மணியிலிருந்து பாடம் படிக்க மாணவர்கள் வர ஆரம்பிக்கிறார்கள். எட்டரை வரை ட்யூஷன் நேரம். அதன் பிறகு ஒரு மணி நேரம் குளிப்பதற்கும் சாப்பிடுவதற்கும் எடுத்துக்கொள்கிறார். பத்து முதல் மறுபடியும் வகுப்புகள். பகல் ஒன்றரை முதல் மாலை நான்கு மணிவரை மதிய உணவுக்கும் ஓய்வுக்கும். மறுபடியும் நான்கு மணிக்கு ஆரம்பிக்கும் வகுப்புகள் இரவு பத்து வரை தொடர்கிறது.  அதற்குப் பிறகு மறுநாள் நடத்த வேண்டிய பாடங்களுக்காகத் தன்னை தயார்படுத்திக்கொண்டு உறங்கச் செல்கிறார்.

இதுதான் அவரது நிகழ்காலம். அவரால் அழகாகிக் கொண்டிருக்கின்றன எண்ணற்ற மாணவர்களின் எதிர்காலம்.

*****

வீல் சேரில் மட்டுமே வாழ்க்கை என்றாலும் வீறு கொண்ட உழைப்பின் உதாரண புருஷனாக வாழ்ந்துவரும் ராமமூர்த்தி வசிப்பது மதுரையில் பொன்மேனி பகுதியில் ஈ.எம்.எஸ். நகரில். சந்தித்தேன்.

''எப்படிக் கற்றுக் கொண்டீர்கள் உங்களை
நீங்களே செதுக்கிக் கொள்வதற்கு?'' என்றேன்.

''பிறந்தது 1976ல். ஆபரேஷன் செய்து கொண்டது 1999ல். அதன்பிறகு அனுபவித்த இந்த இருபது வருட வாழ்க்கைதான் எல்லாமே கற்றுக்
கொடுத்தது. ஆரம்பத்தில் ஒவ்வொரு நாளுமே போராட்டம்தான். அனுபவத்தால் சமாளிக்கக் கற்றுக்கொண்டேன். ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியாக அலைவதிலேயே வாழ்க்கை முடிந்து விடும் என தோன்றியது. அப்போதுதான் இனி சிகிச்சை தேவையில்லை. வலியுடன் வாழப் பழகிக் கொள்ளலாம் என முடிவெடுத்தேன்..'' என்றார்.

பொதுவாக சின்னக் குழந்தைகளுக்கு ட்யூஷன் நடத்துவதற்கே ஆயிரக்கணக்கில் மாதக்கட்டணம் வாங்குகிறார்கள். ஆனால் தன்னிடம் ஆறு மாதம் படித்து அரியர் பாடங்களில் தேர்ச்சி பெறும் மாணவர்களிடம் மொத்தக் கட்டணமாக வெறும் மூவாயிரம் ரூபாய்தான் வாங்குகிறார் ராமமூர்த்தி.

கட்டணம் கொடுக்க இயலாமல் கஷ்டப்படும் பல மாணவர்களுக்கு இலவசமாகவும் பயிற்சி கொடுக்கிறார் இவர்.

'ஒடிசா மருத்துவர்களின் அஜாக்கிரதைதான் உங்களை இப்படி வீல்சேரிலேயே முடக்கிடுச்சுங்குற வருத்தமோ கோபமோ உங்களுக்கு இல்லையா?' என்று கேட்டதும், ''எனக்கு இப்படி ஆகணும்னு முன்கூட்டியே முடிவு பண்ணிக்கிட்டு அவங்க ஆபரேஷன் பண்ணியிருக்க மாட்டாங்க தானே. அப்புறம் அவர்கள் மேல கோபப்பட்டு என்ன ஆகப்போகுதுங்க..'' என்றார் அதே புன்னகையுடன்.

ராமமூர்த்திக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது. அவரது வீட்டில் பல இடங்களில் கடவுள் படங்கள்.

''சரி. உங்களை இந்த நிலைக்கு ஆளாக்கிய கடவுள் மீது கூட உங்களுக்கு கோவம் இல்லையா?'' என்றதும் துளி நேரமும் யோசிக்காமல் பதில் சொன்னார் ராமமூர்த்தி..

''இல்லவே இல்லைங்க! நாலு பேருக்கு நல்லது செய்யும் நிலையில் என்னைப் படைச்சிருக்கும் கடவுளுக்கு நான் நன்றிதானே சொல்லணும்!''.

டிசம்பர், 2019.

logo
Andhimazhai
www.andhimazhai.com