தருமபுரி மாவட்டத்தில் தலித் மக்கள் மீது சாதி இந்துக்கள் சார்பில் ஒரு சிலர் தொடுத்துள்ள தீவைப்பு போன்ற வன்முறைத் தாக்குதல்கள் கண்டனத்துக்கு உரியவை. இந்த வன்முறையாளர்கள் எந்த சாதியிலும் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றவர்கள் இல்லை. பார்க்கப்போனால், இவர்கள் தத்தமது சாதி மக்களின் நலனுக்கே எதிரானவர்கள். இவர்களைத் தனிமைப்படுத்துவதன் மூலமே தமிழ்ச் சமூகத்தில் நல்லிணக்கத்தை, ஒற்றுமையை ஏற்படுத்தமுடியும். அண்மையில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள், கடந்த காலத்தில் நக்சலைட் இயக்கம் செல்வாக்கு பெற்றிருந்த ஒரு பகுதியில் நடந்துள்ளதே என்று பலரும் வியப்புடன் கேட்கிறார்கள். ஆனால், தமிழகத்தில் நக்சல் அல்லது மாவோயிஸ்ட் இயக்கம் குறிப்பாக செல்வாக்கு பெற்ற பகுதி என எதுவும் இல்லை என்பதே உண்மை.
ஒரு பகுதியில் இயக்கம் செல்வாக்கு பெற்றது என்றால், அப்பகுதி மக்கள் களம் இறங்கிப் போராடிய நீண்ட வரலாறு இருக்கவேண்டும். ஆயுதப் போராட்டத்தின் பெயரிலான ஓரிரு சாகசச் செயல்களோ ஒரு சில போராளிகளின் சிறைப்படுத்தலோ அவ்வப்போது ஒரு பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சி என்பதோ, எந்த ஒரு பகுதியையும் இயக்கத்தின் ஒரு கோட்டையாக மாற்றிவிட்டது என்பது வெறும் மாயை. பரபரப்புச் செய்திகளுக்கோ ஒருவகை தன்னாறுதலுக்கோ மட்டுமே இது பயன்படும். நக்சல் அல்லது மாவோயிஸ்ட் இயக்கம் என்பது அன்றும் இன்றும் வர்க்கச் சுரண்டலுக்கு எதிரானது மட்டுமல்ல, சாதிய ஒடுக்குமுறைக்கும் எதிரானது. ஆனால், அந்த இயக்கத்தில் பணியாற்றிய நாங்கள், மக்கள் இயக்கத்தின் தேவையைப் புரிந்துகொள்ளாமல், தனிமனித சாகசங்களுக்கு முக்கியத்துவம் அளித்த காரணத்தால் எந்தப் பகுதியிலும் ஒரு மக்கள் இயக்கத்தைக் கட்டியமைக்க இயலாது போயிற்று. அளப்பரிய ஈகங்களும் அயராது உழைப்பும் வீணாகிப் போயின.
இதைச் சரிசெய்யும் முயற்சிகள் இன்றும் முழுமையாக நடைபெறவில்லை. புரட்சிகர மிகைப் புனைவுவாதம் இன்னும் இந்த இயக்கத்தை விட்டகலவில்லை. எனவேதான், தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் ஒரு மக்கள் இயக்கமாக இவர்களால் ஆகமுடியாது போயிற்று. கீழத்தஞ்சையில் நாங்கள் இதை பட்டு உணர்ந்தோம். தருமபுரியிலும் இதே நிலைதான். இதைப் புரிந்து கொள்ளாமல்தான், நக்சலைட் கோட்டை நாய்க்கன் கொட்டாயிலும் சாதிவெறியா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
அந்தப் பகுதியைப் பற்றி எனக்கு நன்கு தெரியும். அந்தப் பகுதியைச் சேர்ந்த தோழர்களில் சிலர் ஆண்டுக்கணக்கில் என்னோடு சிறையில் இருந்துள்ளனர். அவர்களிடம் இருந்து அந்தப் பகுதியைப் பற்றி தெரிந்துகொண்டுள்ளேன். அந்த அடிப்படையில்தான், அப்பகுதிகளில் இயக்கத்தின் வலிமை பற்றி, வரக்கூடிய செய்திகள் மிகைக் கூற்றுகள் என்று உறுதியாக சொல்கிறேன். அங்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிலும், இந்திய அளவிலும்கூட விதிவிலக்கான சில பகுதிகளை நீக்கிப் பார்த்தால், பெரிய மக்கள் இயக்கம் எதுவும் வளர்ந்துவிடவில்லை. அந்தச் சில பகுதிகளிலும்கூட, தனித்துவமான புறச் சூழல்களே, இதற்குக் காரணம்.
தமிழ்நாட்டு கிராமங்களில் இருக்கிற பொதுத்தன்மை- சாதி இந்துக்களுக்கும் தலித் மக்களுக்கும் இடையில் நிலவும் பகைமை, இந்தப் பகுதியிலும் உண்டு. இதுவரை எந்த இயக்கமும் இதை மாற்றிவிடவில்லை.
இன்றைக்கு அரச அடக்குமுறைக்கு எதிராக ஒன்றுபட்டுப் போராட வேண்டிய தேவை உள்ளது. இந்திய, தமிழக அரசுகளின் தவறான கொள்கைகளால், சீர்கெட்டுப் போன மக்களின் வாழ்வை மீட்டெடுக்கவும் ஒன்றுபட்ட போராட்டம் தேவைப்படுகிறது. தமிழர் என்ற உணர்வோடு ஒற்று-மையாய்ப் போராடுவதற்கு சாதியம் தடையாக உள்ளது.
தலித்துகளுக்கு எதிரான வன்கொடு--மைகளை உறுதியாக எதிர்த்துப் போராடுவதன் மூலமும் வன்கொடுமை-யாளர்களை தனிமைப்படுத்துவதன் மூலம்தான் இதைச் சாதிக்கமுடியும்.
தமிழ்ச் சமூகத்தில் சாதிச்சிக்கல், அதற்கான தீர்வு குறித்தும் தமிழ்த் தேசியத்துக்கும் சாதி ஒழிப்புக்கும் இடையிலான தொடர்பு குறித்தும் கோட்பாட்டு நிலையில் தெளிவாக இருந்தபோதிலும் நடைமுறை அளவில் அமைப்புவலிமையும் மக்கள் ஆதரவும் இல்லாத காரணத்தால் தமிழ்த் தேசிய இயக்கங்களால் பெரிதாக ஒன்றும் செய்துவிட முடியவில்லை என்பதைத் தயங்காமல் ஒப்புக்கொள்ள வேண்டும். இத்தகைய விமர்சனங்கள் எம்மை செயலுக்குத் தூண்டும் என்ற முறையில் வரவேற்கிறேன். கருத்தியலாக வேறுபட்டு நின்றாலும், தலித் இயக்கங்கள், அம்மக்களுக்காக களத்தில் நின்று பணியாற்றுவதைப் பாராட்டுவதிலும் எமக்குத் தயக்கம் இல்லை.
(தமிழ்க்கனலிடம் கூறியதிலிருந்து)
டிசம்பர், 2012.